சனி பகவான் சுபஸ்ரீ சார்வாரி வருடம் மார்கழி மாதம் 12ம் தேதி அதிகாலை 4:49 மணியளவில் (27.12.2020) உத்ராடம் நட்சத்திரம் 2ம் பாதத்தில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கு 16.03.2023 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார்.
மேஷம்
சனி யார்?
ஏன் இந்த மிரட்சி அவர் பெயர்ச்சியில்...
ஸ்ரீ சிவ ஆதிபத்ய கிரகமான சூரியனின் பிள்ளை சனிபகவான். இவர் 21/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவேசிக்கத் தொடங்குகிறபோது, இந்த உலக மக்கள் அனைவரையும் மிக மிக சைலண்ட்டாக சலனப்படுத்தி விடுகிறார். இனம்புரியாத மிரட்சிகளுக்கு உள்ளாக்கி விடுகிறார். கிரக வீதியில் நீள்வட்டப் பாதையில், நவக்கிரகங்களுடன் சேர்ந்து இவரது சுழற்சிக் காலம் 29 ஆண்டுகள் 48 தினங்கள்தான்.
இவர் பனிரண்டு ராசிகளையும் கடந்து செல்கிற மொத்த ஆண்டுகள். இதனையே 30 ஆண்டுகள் என்று சனியின் காலத்தை வரையறுத்து வைத்துள்ளனர் ஜோதிட ஞானிகள்.
சூரியனிடமிருந்து 1,427.6 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிரகம் இந்த பிரபஞ்சத்தின் மீது ஏற்படுத்துகிற தாக்கங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 20 துணைக்கோள்களை தன் வயதே கொண்டுள்ள இந்த கிரகம் சனியின் பிள்ளையான மாந்தி, குளிகன் என்றழைக்கப்படும் ‘டைட்டன்’ என்ற விஞ்ஞான வார்த்தையில் பிரதிபலிக்கிறது.
காலப்புருஷ ராசிகளை மேஷ ரேகை முதல் மீன ரேகை வரை அடங்கிய பாகங்களில் இந்த சனிக்கிரகம் மகர ரேகையையும், கும்ப ரேகையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
கருங்கோள், நீலன் தமன், மந்தன், சனைச்சரன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற சனிபகவான் 2017ம் ஆண்டு இறுதி முதல் தனக்கு சம நட்பு வீடான தனுசு ராசிக்குள் 35 மாதங்கள் சுழன்றுவிட்டு, இப்போது தனது ஆட்சி வீடான மகர ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
பொதுவாக சனிபகவான் எப்போதெல்லாம் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிகளான நான்கு ராசிகளுக்குள் பிரவேசிக்கிறாரோ அப்போதெல்லாம் தேவையற்ற சச்சரவுகள் இந்த உலகத்துக்கு உண்டு, ஏற்பட்டுவிடும் இது கால நியதி.
ஆக மூன்று ஆண்டுகள் தனுசு ராசிக்குள் பிரவேசித்து விட்டு இந்த உலக மக்களின் பல இடர்ப்பாடுகளையும் விரட்டுவதற்காக இந்த 2020, மார்கழி மாதம், 12ம் தேதி, (ஆங்கிலத் தேதிப்படி) டிசம்பர் 27ம் தேதி கால புருஷ ராசிக்கு 10வது வீடான, தனது ஆட்சி வீட்டுக்கு பெயர்ச்சியாக இருக்கிறார் சனி. எனவே இந்தச் சனிப்பெயர்ச்சி அனைத்து நலன்களையும் கண்டிப்பாக வழங்கும்.
தனுசு, மகரம், கும்பம் ராசியினர் 40 முதல் 46 வயதுக்குள் இருப்பின் கலங்க வேண்டாம். அருமையான யோகங்களையே வழங்கும். காரணம் 7 1/2 சனி என்று இவர்கள் பயம் கொள்வது வீணான ஒன்று.
மேஷத்துக்கு தொழில், பதவி, உத்தியோகம் மேன்மையடையும்.
ரிஷபத்துக்கு புதிய அதிர்ஷ்டம்.
மிதுனத்துக்கு அஷ்டமச்சனி அகலக்கால் திட்டம் வேண்டாம்.
கடகத்துக்கு கண்டகச்சனி, பொறுமை தேவை.
சிம்மத்துக்கு அமோகம்.
கன்னிக்கு புதிய உயர்வு திருப்பம்.
துலாமுக்கு அர்த்தாஷ்டமச் சனி உழைப்பு அதிகரிக்கும்.
விருச்சிகத்துக்கு அனைத்திலும் வெற்றி
தனுசுவுக்கு குடும்ப சந்தோஷ இரட்டிப்புகள்.
மகரத்துக்கு உடல் நல கவனம் தேவை.
கும்பத்துக்கு விரய காலம்.
இந்த சனிப்பெயர்ச்சி மாற்றங்களை தந்து மீன ராசியினரை பெரியளவில் உயர்த்தப் போகிறது.
ஏழரைச் சனி என்றால் என்ன?
ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!
அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்சனியாகும்.
இரண்டரை ஆண்டு கணக்கு?
அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு சுற்று சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள். அதை ராசிக்கணக்கிற்குக் கொண்டு வர 30 ஆண்டுகள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.
எத்தனை முறை அவர் வலம் வருவார்?
80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர் விருந்தின ராக வந்து தங்கிவிட்டுப்போவார்.
முதல் சுற்று: மங்கு சனி. மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி! இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!
சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள். ஒரு குழந்தை அந்த வயதுக்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்தான் அனுபவிக்க நேரிடும்.
அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும். பனிரண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது.
ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை ஆண்டுகளை) ‘விரையச்சனி’ என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ம் இடம். ஆகவே அது விரையச் சனி காலம். பணநஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதை களால் நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை ஆண்டுகளை) ‘ஜென்மச் சனி’ என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை ஆண்டுகளை) ‘கழிவுச் சனி’ என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விட தொல்லைகள் சற்று குறைந்ததாக இருக்கும். அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள் சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்னை என்று போராட்டமாக இருக்கும். இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன் கைதூக்கி விடுவான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் துாக்கி உட்கார வைப்பான்.
மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி மேலே அனுப்பி வைத்து விடுவார். ஆனால் அது எல்லாருக்கும் பொதுவானதல்ல! மூன்று சுற்றுக்களையும் கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்களும் உண்டு!
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
மேஷம் ராசி வாசகர்களே,
இந்த 2020 டிசம்பர் 27ம் தேதிக்குப் பிறகு, தொழில் ஜீவன காரிய ஸ்தானத்துக்கு வரப்போகும் சனிபகவானால் 70 சதவீத நன்மைகளே! மேஷ ராசி அதிபதிகளான உங்களுக்கு, இதுவரை அதாவது 2014ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு பாதக அதிபனும், ஜீவன தொழில் ஸ்தானாதிபதியுமான அதே நேரம் லாப அதிபதி யுமான சனிபகவான் அஷ்டமச்சனியாகவும், பாக்கியஸ்தான சனியாகவும் நின்றிருந்தார். இப்போது மார்கழி மாத 12ம் தேதி சனிக்கிழமை அதிகாலை ஆங்கில தேதிக்கு 27.12.2020 அன்று பெயர்ச்சியாகி ஜீவன ஸ்தான சனியாக வந்து அமரப்போகிறார்.
உங்கள் ராசியை பொறுத்தவரை 60 சதவீதம் முக்கியமானவர் இந்த சனி! அதோடு கடந்த நவம்பர் மாத 15ம் தேதி உங்கள் ராசிக்கு மிக யோக கிரகமான குருபகவான் பெயர்ச்சியாகி 10வது வீட்டில் வந்து அமர்ந்து விட்டார். அவர் சூரியனது சாரத்தில் இந்த சனிப்பெயர்ச்சி யின்போது நின்று கொண்டிருக்கிறார். உங்கள் ராசிக்கு எப்போதுமே குரு-சனி சேர்க்கை எந்த இடத்தில் நிகழ்ந்தாலும், இவர்கள் இருவரும் இணைந்து நிற்கிற காலம் வரை ஏகப்பட்ட விசேஷ, சவுகரிய உயர்வு, அதிர்ஷ்ட பலன்களை செய்து கொடுக்க தவற மாட்டார்கள். அதோடு ராசிக்கு 9,10க்குடைய தர்மகர்மாதிபதிகளாக இவர்கள் இருப்பதால் இந்த இரு கிரக சேர்க்கை என்பது சிறப்பு அதிர்ஷ்ட உயர்வுகளை கொடுக்கக்கூடிய ஒன்று!
அந்த வகையில் இப்போது பெயர்ச்சியாகிற சனிபகவான், குருவுடன் இணையப் போகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து 4ம் இடம், 12ம் இடம், 2ம் இடம், 6ம் இடம், 7ம் இடத்தை பார்க்கப் போகிறார்கள். இந்த இடங்கள் உங்களது ராசிக்கு மிக முக்கியமான விசேஷ இடங்கள் என்பதால், இப்போது பெயர்ச்சியாகிற சனிபகவானின் மூலம் 4 ½ ஆண்டுகள் தொல்லை, தொந்தரவு, கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் மிக எளிதாக விரட்டப்பட இருக்கிறது.
இதுவரை உங்களது எந்த ஒரு விஷயமும் வைத்தது விளங்காமல், தொட்டது துலங்காமல், காரண காரியமின்றி உங்களது அத்தனை சேமிப்புகளும் உங்கள் கையை விட்டு கரைந்து போயின! நம்பியவர் கைவிட்டார்! நல்லவராக நடந்துகொண்டிருந்தவர் திடீரென்று விரோதம் பாராட்டினார், உறவுகள் வீணாக வந்து உங்களிடம் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உங்களது மனதை சஞ்சலப்படுத்தி விட்டு சென்றன. உங்கள் மூலமே எல்லா நன்மைகளையும் அனுபவித்துக்கொண்டு, உங்களையே தேவையற்ற விமர்சனம் செய்தார்கள் சில நபர்கள். வாரிசுகளால் அநாவசிய மனசஞ்சலத்திற்கும் ஆளாகி நின்றீர்கள்.
போதாக்குறைக்கு உத்தியோக இடத்திலும் அவ்வளவு பெரிய விசேஷ அந்தஸ்துகள் கிடைக்காமல் உங்களது தகுதிக்கு குறைவான பணியில் நீடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அடிக்கடி வீட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல், வாழ்க்கைத்துணையால் எந்த ஒரு அங்கீகாரமும், சந்தோஷமும் கிடைக்காமல் ஏனோதானோவென நகர்ந்தது. இதுவெல்லாம் நீங்கள் சந்தித்த அநாவசிய மனக்கசப்புகள். ஆகவே இனி இல்லத்துக்குள் நிலவி வந்த தேவையற்ற அநாவசிய தொல்லை, தொந்தரவு, மனசஞ்சலத்திற்கெல்லாம் ஒரு வழியாக நிம்மதியான சூழல் ஏற்படப் போகிறது.
இனி எதிரி, எதிர்ப்புகளே நமக்கு இல்லை என்றபடி 6ம் இடத்தை பார்க்கப் போகிற குருவும், சனியும் சேர்ந்துக் கொண்டு செய்யப் போகிறார்கள். அத்துடன் தர்மகர்மாதி பதிகள் இணைந்து எந்த இடத்தை பார்க்கிறார்களோ, அந்த இடத்தால் மிகப்பெரிய விசேஷ லாபங்கள் மனதிருப்திகள், உயர்வுகள், சந்தோஷங்கள், எதிர்பாராதவிதமாக எளிதாக கிடைக்கக்கூடிய உன்னதமான சூழல்.
எனவே இந்த சனிப்பெயர்ச்சி ஆனப்பிறகு குருபகவான் 10ம் இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய கெடுபலன்களை எல்லாம் இந்த சனிப்பெயர்ச்சி ஆன உடன் கூட்டணி வைக்கப் போகிற இந்த இரு கிரகங்களாலும் ஏகப்பட்ட திருப்பங்கள் நன்மைகரமாக நடக்கப் போகிறது.
வீடு வாங்குகிற திட்டம், கட்டடம் கட்டுகிற திட்டம், பழைய வீடு கட்டடம் வாங்குகிற யோசனை போன்றவைகள் மிகச் சிறப்பாக பலிதமாகிவிடும். வாழ்க்கைத்துணையுடன் நீடிக்கிற அத்தனை மனக்கசப்புகளுக்கும் நல்லதொரு தீர்வு ஏற்பட்டுவிடும்.
அஸ்வினியினர் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு தங்களது உடமைகளையோ, வீட்டையோ, சொத்தையோ இழந்திருக்கக்கூடும் அல்லது களவுக்கொடுக்க நேர்ந்திருக்கும். இந்த நிலைமையின் சங்கடமெல்லாம் ஒரு வழியாக இந்த நட்சத்திரத்தினருக்கு சனிப்பெயர்ச்சியாகி 41 தினங்கள் கடந்த பிறகு சனிபகவான் திருவோண நட்சத்திர சஞ்சாரத்திற்கு உள்ளே வந்த பிறகு ஏகப்பட்ட திருப்பங்களை, உயர்வுகளை, சந்தோஷ லாபங்களை கூடுதலாக கொடுக்கப் போகிறார் இந்த 10ம் இட சனி!
இருந்தாலும் மேஷ ராசிக்கு சனியின் பெயர்ச்சி உடனடியாக எல்லா நன்மைகளையும் செய்து தரும் என்று நினைத்து விடக்கூடாது. ஆனாலும் எந்த பாதகமும் ஏற்பட்டுவிடாமல் நினைத்தது, நினைத்தப்படி மெல்ல நிறைவேறிக்கொண்டுதான் இருக்கப் போகிறது. வருகிற 2021 ஏப்ரல் மாத 7ம் தேதி வரை இந்த நட்சத்திர இளம் இருபாலரும் தங்களுக்கு வேண்டப்படாதவர்களிடம் நெருக்கத்தை சற்றே குறைத்துக் கொள்வதும், நட்பிலிருந்து கொஞ்சம் விலகியிருக்க வேண்டியதும் அவசியம். தவறும்பட்சத்தில் தேவையற்ற விமர்சனத்திற்கும், அவதுாறுகளுக்கும் ஆளாக்கிவிடுவார் சனிபகவான்!
கார்த்திகை நட்சத்திரத்தாரருக்கு கடந்த 2019, நவம்பர் மாதத்திலிருந்தே அவ்வளவு நல்லபடியாக இல்லை. தொட்டது அனைத்தும் துலங்காமல் போனது.
இதற்கெல்லாம் இந்த சனிப்பெயர்ச்சி தொடங்கி வருகிற 2021, ஜனவரி 9ம் தேதி முதல் அற்புதமான யோகத் திருப்பங்கள் ஒவ்வொன்றாக நடக்கப் போகிறது.
பரணி நட்சத்திரத்தினருக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரியளவு விசேஷ நன்மைகள் ஏற்படாமல் இருந்தாலும், ஏதோ நினைத்தது மாதிரி சொற்ப அளவாவது ஒருவித சந்தோஷங்களையும், திருப்தி களையும், லாபங்களையும் கொடுத்துக்கொண்டுதான் வருகிறார் சூரிய சாரத்தில், தனசம்பத்து தாரையில் நிற்கிற சனிபகவான்!. வாரிசுகளாலும், இல்லத்தாராலும் நல்லபடி யான சந்தோஷங்கள் கரைபுரண்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வருகிற 63 தினங்கள் இன்னும் சற்று அதிரடியான அதிர்ஷ்ட வளர்ச்சிகளோடு இருக்கப் போகிறது.
மற்றபடி தொழில், வியாபார சம்பந்தமான நடவடிக்கை கள் நல்லபடியாக கைக்கூடப் போகிறது. இதுவரை தொழிலே இல்லாத, அமையாத அன்பர்களுக்கு புதிய தொழிலில், புதிய முதலாளியாக அமரப்போகிற அதிர்ஷ்ட காலக்கட்டம் துவங்கிவிட்டது. பணம், காசு பற்றாக்குறை விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகப் போகிறது.
இந்த ராசி விவசாயிகளுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சியால் உழைப்பு கூடுகிற அளவுக்கு பெரிய அளவு லாபங்களையும், சனிபகவான் கொடுக்கப் போகிறார். அஸ்விணியினருக்கு தொடர் யோகங்களை நிலபுலன் ரீதியாகவும், லாபங்கள் வகையிலும் அள்ளிக்கொடுக்கப் போகிறார். கார்த்திகை யினருக்குத்தான் அபரிமித சந்தோஷத்தைக் கொடுக்க ஆரம்பிப்பார்.
திருமணம் அமையாத இழுபறியில் இருக்கும் இளம் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட இருக்கிறது. புத்திர பாக்கிய கவலைக்குத் தீர்வு உண்டு. வாழ்க்கைத் துணைரீதியிலான சங்கடங்களுக்குத் தீர்வு உண்டு. கல்வி தகுதிக்கு ஏற்ற உத்தியோகம் கிட்டும்.
தொழிலதிபர்களுக்கு
இந்தச் சனிப்பெயர்ச்சிதான் மிகப்பெரிய உயர்வு மாற்றங்களை எண்ணற்ற வகையில் கொடுக்கப் போகிறது. அயல்தேச சம்பந்தமான தொழில் முயற்சிகளிலும், பட்ஜெட் விஷயங்களிலும் லாபகரமான திருப்பங்களை வழங்கப் போகின்றன. புதிய வி.ஐ.பி. கூட்டாளிகள் தொழில் கூட்டணிக்காக வந்து இணையப் போகிற காலக்கட்டம் துவங்கியிருக்கிறது.
மாணவ, மாணவிகள்
தங்களது கல்வி நிலைமைகளில் தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய யோக காலம் ஆரம்பமாகியிருக்கிறது. கல்வி ஸ்தானத்தை 9, 10க்குடையவர்கள் இணைந்து பார்ப்பதால் விருது, பரிசு, பாராட்டு, முதலிடம் போன்றவற்றிற்கு பெரிய அதிர்ஷ்ட அறிகுறிகள் உருவாகி இருக்கிற உன்னதமான உயர்வுகாலம் ஆரம்பமாகியிருக்கிறது இவர்களுக்கு.
உத்தியோகஸ்தர்கள்
பெரிய பணி, பொறுப்பு, பதவிகளில் இருப்பவர்களுக்கு மேலும் பல உயரிய பொறுப்புகள் கிடைக்கக்கூடிய உன்னத காலம் ஆரம்பமாகியிருக்கிறது.
இந்தச் சனிப்பெயர்ச்சி காலம் தொடங்கி அடுத்து வருகிற பங்குனி, ஆனி, புரட்டாசி, தை மற்றும் மாசி மாதங்கள் ஏக சந்தோஷமாக அனைத்து பொருளாதார வளர்ச்சிகளையும் மேன்மையுடன் கொடுக்கப் போகிறது. இந்த 2½ ஆண்டுக்குள் வருகிற சித்திரை மற்றும் வைகாசி, ஆடி மாதங்களில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டுமென்று சனிபகவான் சொல்கிறார்.
இந்த 2½ ஆண்டு காலத்திற்குள் மேஷ ராசியினர் அனைவருக்கும் வருகிற பூசம், அவிட்டம், மிருகசீரிஷம், பூரட்டாதி நட்சத்திரங்கள் பெரிய அற்புத விசேஷ நன்மைகளை பணம், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளை ஏற்படுத்தி தரப்போகிறது பயன்படுத்திக்கொள்ளணும்.
2021ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் எதிர்பாராத பரிசு, பண, ஆபரண, வாகனச் சேர்க்கைகள் வெகு அற்புதமாக கிடைக்கப் போகிற காலக்கட்டமிது!
இந்த 2½ ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக ஸ்ரீ காலபைரவரையும் தெற்கு பார்த்த ஸ்ரீ அம்பாளையும் வழிபட நினைத்தது பலிக்கும்.
ரிஷபம்
ரிஷபம்
(கார்த்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிஷம் 1,2,ம் பாதம்)
ரிஷபம் ராசி வாசகர்களே,
2014ம் ஆண்டு, நவம்பரிலிருந்து மிகப்பெரிய நெருப்பு வளையத்துக்குள் சிக்கிக் கொண்டதுமாதிரி ஏகப்பட்ட தொல்லை, தொந்தரவுகளையெல்லாம் சந்தித்திருப்பீர்கள். கடந்த கண்டகசனி மற்றும் அஷ்டமச் சனி காலமான ஐந்து ஆண்டுகளும் அதாவது 2014 இறுதி முதல் நீங்கள் சந்தித்த துயரங்களை இந்த உலகத்தில் எவருமே சந்தித்திருக்க முடியாது என்று கூட சொல்லி விடலாம்.
ரிஷப ராசியினரே இந்தச் சனிப்பெயர்ச்சி ஆவது ஒரு புறம், மிகப்பெரிய விசேஷ உயர்வுகளை மட்டுமே உங்களுக்கென கொடுக்கப் போகிறது. எதிர்த்தவர்களை கால அவகாசம் பார்த்திருந்து முறியடித்தீர்கள். பிறரை உங்கள் வழிக்கு கொண்டு வந்தீர்கள் அல்லது அவர்களது வழியிலேயே சென்று அவர்களை முறியடித்தீர்கள், குடும்ப கலக்கத்தை உங்களது சாதுரியத்தால் அமைதி யாக்கினீர்கள்.
எந்த கஷ்டத்தையும், பொருளாதாரப் பிரச்னையையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தை சந்தோஷகரமாக வைத்துக் கொண்டீர்கள். இருந்தாலும், உங்களுக்கு கடந்த காலத்தில் மிச்சப்பட்டது எல்லாம் அவதுாறும், விமர்சனமும், கெட்டவர் என்ற பெயரும்தான்! இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டு கசப்புகளை 8ம் இட குரு, 8ம் இட கேது, 2ம் இட ராகு மற்றும் 7,8ம் இட சனிபகவான் கொடுத்ததையெல்லாம் இன்னும் பல காலத்துக்கு உங்களால் மறக்க முடியாதுதான் என்றாலும், இப்போது சனிபகவான் என்ன சொல்கிறார் 9ம் இடத்துக்கு அவர் வந்துவிட்டதால் என்றால் அதையெல்லாம், பழசை யெல்லாம் ஒரு வழியாக மூட்டைக்கட்டி துாக்கி ஓரமாக வைத்துவிட்டு இனி நான் கொடுக்கப் போகிற சந்தோஷங் களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அனுபவிக்க தொடங்குங்கள் என்று சொல்கிறார்.
இனி அதிர்ஷ்டம் உங்களை நாடி தேடி வரும். குடும்ப ரீதியான அலைக்கழிப்புகள் எந்த வண்ணத்தில் இருந்தாலும் அதையெல்லாம் ஒரு வழியாக ஒழித்துக் கட்டிவிடலாம். குதர்க்கமான விஷயங்கள் எல்லாம் ஒரு வழியாக தீரப்போகின்றன.
வாழ்க்கைத்துணைக்கும், உங்களுக்குமான நெருக்கமும், பாசமும், அன்யோன்யமான பரஸ்பரமும் இதுவரை பழுதாகிப் போய் கிடந்ததற்கு ஒரு வழியாக நிம்மதியை, புதிய சந்தோஷத்தை ஒற்றுமையை ஏற்படுத்த வந்திருக்கிற உயர்வான பெயர்ச்சி இது! வாழ்க்கைத்துணை எதன் காரணமாகவோ பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருப்பதற்கு தீர்வை கொடுத்து மீண்டும் உங்களுடன் இணைத்து வைக்கப் போகிற பெயர்ச்சி இது!
இப்போது சனிபகவானும், குருபகவானும் இணைந்து பாக்கியஸ்தானமான 9ம் இடத்தில் மகர ராசிக்குள் நிற்கப் போகிற இந்த 2 ½ ஆண்டும் அற்புதமான உயர்வு திருப்பங்கள் ஏற்படப் போகிறது. பல லட்சம் ரூபாய் விரயங்களையெல்லாம் மீண்டும் வேறொரு ரூபத்தில் ஈடுகட்டி கொடுக்கப் போகிறது.
2 ¾ ஆண்டுகளாக கோர்ட், போலீஸ், பஞ்சாயத்து, வழக்கு என்று நடையாய் நடந்து கால்தேய்ந்து போனதற்கெல்லாம் இந்த சனிப்பெயர்ச்சி வலிமையான திருப்தியைக் கொடுத்து, இந்த விஷயங்களில் வெற்றியை ஏற்படுத்தி திருப்பங்களை சந்தோஷகரமாக கொடுக்கப் போகிறது. அதோடு குருவும், சனியும் இணைந்து 9ம் இடத்தில் நின்றாலும், ராசிக்குள் ராகுபகவானும், 7ம் இடத்தில் கேதுபகவானும் நின்று கொண்டு உங்களை தலைகால் புரியாத குழப்பத்திற்கு சிற்சில நேரம் ஆளாக்கி வருவதற்கு இப்போது குருவும், சனியும் இணைந்து இந்த ராகுவை பார்க்கப் போவதால், இனி ஜென்ம ராகுவால் ஏற்படுகிற அலைக்கழிப்புகள் எல்லாம் 13 மாதங்களுக்கு காணாமல் போய்விடும்.
எல்லாரையும் விட ரிஷபராசிக்குத்தான் சனிப் பெயர்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்று சொல்லிவிடலாம். காரணம் அவ்வளவு தொல்லை, தொந்தரவுகளை, சங்கடங்களை, இழப்புகளை, எதிர்ப்பு களை, பிரச்னைகளை, பண ரீதியான பற்றாக்குறை யை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கியவுடன் பெரிய எதிர்பார்ப்புகளை சற்றே வருகிற 2021 மார்ச் மாத 19ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டியது அவசியம்.
ஆனாலும் மார்ச் 19ம் தேதி 2021க்கு பிறகு 7 ¼ மாதங்களுக்குள் ஏகப்பட்ட உயர்வுகளையும், வளர்ச்சி களையும் நிச்சயமாக இந்த நட்சத்திரத்தினர் சந்தித்து நிச்சயமாக பெரியதொரு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறார்கள். சுப விஷயத்தில், திருமணத்தில் இருக்கிற, நீடிக்கிற தடைகள் அனைத்தும் உடைந்து ஒரு பெரிய மகிழ்ச்சி உருவாகிவிடும். வாரிசுகளையும், மனைவி, மக்களையும் தவிக்க விட்டு விட்டு காப்பாற்ற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிற சூழல்களுக் கெல்லாம் விமோசனம் பிறந்துவிடும். தீர்க்க முடியாத சிக்கல்கள் தானாக தீரும். உத்யோக இழப்பு சரி செய்யப்படும். பணி, பொறுப்பு, பதவிகளில் ஏற்பட்ட பாதகங்கள் விலகிவிடும்.
ரோகிணியினருக்கு நிறைய நிறைய பண சரளம் இப்போது ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும், அத்தனையும் இவர்களுடையது அல்ல என்று சொல்லலாம். பணம் வரும், போகும். ஆனால் கைகளில் நின்றிருக்காது. மற்றவர் தொகையைப் பெற்று குட்டிக்கும், வட்டிக்குமாக செலவழிந்து கொண்டிருக்கும்.
அதனால் இப்போது 8ம் இடத்தை விட்டு, இந்த 2020 டிசம்பர் 27ம் தேதிக்கு பிறகு 9ம் இடத்தில் வந்து அமர்ந்த பிறகு எல்லா கஷ்டமும் ஒரு வழியாக தொலைய இருக்கிறது. பணத்தை, பெரிய தொகையை மிச்சப்படுத்தி கைகளில் வைத்துக்கொள்ள முடியும். இல்லப் பிரச்னைகள் அனைத்தையும் முறியடித்து, நிம்மதி பாதையை சந்திக்க முடியும். வீண் விவகார தொல்லை, விவகாரங்களில் இருந்து வெளிவரமுடியும்.
இவர்களது தொழில், வியாபாரக் கடன்களுக்கும், இழப்புகளுக்கும் லாப பற்றாக்குறைகளுக்கும் இனிமேல் தான் சுபிட்ச காலம் என்று சொல்லிவிடலாம்.
இந்த நட்சத்திர இளம் இருபாலருக்கும் திருமணக் கனவு பூர்த்தியாகப் போகிறது. அதோடு இந்த நட்சத்திர இளைஞர்கள் மட்டும் வருகிற 2021 மே மாதத்திற்கு பிறகு சற்றே வண்டி, வாகன விஷயங்களில் கவனமாக இருக்கணும்.
மிருகசீரிஷ நட்சத்திரத்தினருக்கு சனிபகவான் பாதி நல்லவர், பாதி கெட்டவர் என்பதால், பெரிய அளவு யோகங்களை, வளர்ச்சிகளை கொடுக்கவில்லை இப்போது என்றாலும், சொற்ப அளவிலாவது பணம், காசு நிவர்த்திகளைக் கொடுத்து 2020 மார்ச் மாதத்தி லிருந்து இவர்களை திருப்தியாக்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலைமை இன்னும் 4 ¼ மாதங்களுக்கு ரொம்பவே தொடரும். புதிய யோகங்கள் உண்டாகும். அதிர்ஷ்டம் கைக்கூடும், இல்ல விஸ்தீரணங்கள் நடக்கும், போட்டி எதிர்ப்பு, பொறாமை விஷயங்களிலிருந்து மீண்டு விட முடியும். வழக்கில் ¾ பங்கு வெற்றியை சந்திக்க முடியும். இந்த நட்சத்திர இளம் இருபாலருக்கும் எவ்வித தங்கு தடையுமின்றி வருகிற 2021 மார்ச் மாத 21ம் தேதிக்குள் திருமணம் நடந்தேறிவிடும்.
பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் 3 ½ ஆண்டு பிரச்னைகளும், மணவாழ்க்கை ரீதியான கஷ்டங்களும் தீரப் போகிறது. இல்லத்தரசிகளுக்கு ஏற்பட்டிருந்த அத்தனை உடல்நல கெடுபிடிகளும் தீரப் போகிறது. ஆபரணங்கள் அனைத்தையும் இழந்ததற்கு இந்தச் சனிப்பெயர்ச்சி புதிய உயர்வு அதிர்ஷ்ட தீர்வை கொடுத்து மீண்டும் புதிய பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகளை வழங்கப் போகிறது.
இந்த ராசி பொதுவாக தொழிலதிபர்களுக்கு இனிமேல்தான் 80 சதவீத லாப செழிப்பு காலம் என்று சொல்லிவிடலாம். கூட்டுத்தொழில் பிரச்னை, லாப பங்கு பாக சிக்கல், பிற கூட்டாளிகள் விலகியிருக்கிற சூழல், புதிய கூட்டாளி வந்ததால் ஏற்பட்ட நிர்வாக சிக்கல் போன்றவற்றிற்கும் தீர்வு காத்திருக்கிறது.
விவசாயிகளுக்கு இதுவரை ஏற்பட்ட நஷ்டம், இழப்பு, சொந்த நிலத்தை பிறரது பொறுப்பில் விட வேண்டிய சூழல், பங்கு பங்காளி ரீதியாக நிலபுலனில் ஏற்பட்டிருக்கிற சிக்கல்கள் எல்லாவற்றிற்கும் விடிவுகாலம் ஏற்பட்டு விடும்.
இந்த ராசி மாணவ, மாணவிகளின் கல்வி சார்பான அத்தனை தடைகளும் மனரீதியான சந்தேகங்களும் இந்தச் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்லபடியாக சரியாகப் போகிறது. அதோடு உயர்க்கல்வி மற்றும் நுணுக்கக் கல்வி சார்பான விருப்பங்களுக்கு எந்த தடையுமின்றி நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை கட்சிரீதியாகவும், பொதுஜனத் தொடர்பு ரீதியாகவும் எந்த ஒரு மேன்மையும், திருப்தியும் கிடைக்காத போக்குக்கு எல்லாம் இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு சிறப்பு உயர்வுகள் அதிரடியாக கிடைத்து கட்சியின் மூலம் அனுகூலங்களை சந்திக்கக்கூடிய உன்னதமான பெயர்ச்சி இது!
இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு வருகிற தை, மாசி, பங்குனியும் அடுத்ததாக ஆடியும் அடுத்து வருகிற 2 ½ ஆண்டு காலத்திற்குள் இந்த மாதங்களெல்லாம் மிக சிறப்பான மேன்மைகளை எதிர்பாராத விதத்தில் கொடுக்கப் போகிறது.
இந்த 2 ½ ஆண்டில் 9ம் இட சனிக் காலத்தில் வருகிற திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், அனுஷம், திருவோணம் நட்சத்திர நாட்களில் எல்லாம் பணம், பொருள் சேர்க்கைகள் உபரியாக கிடைக்கப் போகிறது. இந்த 2 ½ ஆண்டு காலமும், சிவாலயத்தில் உள்ள தனி ஸ்ரீ சூரியனையும், சனிபகவானையும் தொடர்ச்சியாக வணங்கி வருவது நலம். ஸ்ரீசிவதட்சிணாமூர்த்தியை வியாழன் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வணங்குவது மிகப்பெரிய மனத்திருப்தி சந்தோஷங்களைக் கொடுக்கும்.
ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயலாத ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளையும், பொருட்களையும் தான தர்மங்களையும் செய்து வர தடையாகிக் கொண்டு வருகிற விஷயங்களெல்லாம் நல்லப்படியாக முடிந்து ஏற்றங்களை உண்டாக்கும்.
இதுவரை அனுபவித்த தர்மசங்கடமான சூழல்களிலிருந்தும், நோய் தொந்திரவு பிரச்னைகளிலிருந்தும் பலவிதமான உத்தியோக தொழில், நெருக்கடிகளிலிருந்தும் ஒரு வழியாக வெளிவந்து நிம்மதியான பாதையை அமைத்துக் கொள்ளப் போகிற அற்புதமான சூப்பர் பெயர்ச்சி இது!
மிதுனம்
மிதுனம்
(மிருகசீரிஷம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்)
மிதுனம் ராசி வாசகர்களே!,
எப்போதுமே நீங்கள் முடிவு செய்துவிட்டால் அந்த கொள்கையை விட்டு, சிறிதளவும் பின் வாங்காமல் அவருக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்கக்கூடியவர்கள். சில நேரம் இந்த ராசிக்காரர்களை இந்த ராசிக்கு கெட்டவர்களான செவ்வாயும், சனியும் மிகப்பெரிய உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி, மிகப்பெரிய சுகபோக சொகுசு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விடுவார்கள். தன்னுடைய பாதையை, தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட பின் அதில் எவ்வளவு பெரிய இன்னல்கள், சங்கடங்கள், இடையூறுகள், குறுக்கீடுகள், தடைக்கற்கள் குறுக்கிட்டாலும் அதனை விட்டு சிறிதளவும் விலகாத இலக்கு ஒன்றே குறிக்கோளாக கொண்ட புதனின் முழு ஆதிக்க சக்தியை அடைந்தவர்களான நீங்கள் நல்லவருக்கு நல்லவர்! கெட்டவருக்கு கெட்டவர்! பிறருக்கு ஏணியாக நாம் இருக்க வேண்டுமென!
வாழ்நாள் முழுவதும் கோர்ட், போலீஸ் தொடர்பான சஞ்சலங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு சனி, செவ்வாயால் ஏற்பட்டுவிடுவதுண்டு! பொதுவாக இந்த ராசியினருக்கு இவர்கள் இருவரும் இணைந்து நிற்கிற பட்சத்தில் வாழ்வில் மறக்க முடியாத உயர்வுகள், தடாலடி அதிர்ஷ்டங்களை கொடுத்துவிடுவதுண்டு. அதே நேரம் இந்த ராசிக்கு இந்த சனி, செவ்வாய் கிரகங்கள் முழு கெட்டவர்கள்! ஒரு புறம் செவ்வாய், லாபாதிபதி என்ற முறையில் நல்லவரா கிறார், மற்றொரு புறம் சனிக்கிரகம் 9க்குடைய பாக்கியாதி பதி என்ற வகையில் யோகாதிபதியாகிறார்.
இவர்களது சொந்த ஜாதக அமைப்பு சரியாக இருக்கும் பட்சத்திலேயே வேண்டப்பட்ட உயர்வு பலன்களை எளிதாக அடையக்கூடியவர்கள். பொதுவில் பார்க்கப் போனால் மிதுன ராசியினருக்கு மட்டும் விதி சற்று கடுமையாகவே இவர்களது வாழ்வில் விளையாடும். இது ஒருபுறமிருக்கட்டும்!
இப்போது அஷ்டமச்சனி மிதுன ராசியினருக்கு தொடங்கியிருந்தாலும், இந்த ராசியின் மூன்று நட்சத்திரக் காரர்களில் இப்போது திருவாதிரைக்கு மட்டும் கொஞ்சம் சரியில்லாதபடி 2020, பிப்ரவரி மாத 2ம் தேதியிலிருந்து போய்க் கொண்டிருக்கிறது. இவர்களது நிலைமை வருகிற 2021, ஏப்ரல் மாத 3ம் தேதியிலிருந்து சிறப்பு சந்தோஷங்கள் ஏற்பட போகிறது. அடுத்து இந்த ராசியின் மிருகசீரிஷம் மற்றும் புனர்பூச நட்சத்திரத்தினருக்கு 2020 ஜனவரி 17ம் தேதியிலிருந்து சுபிட்சமான அதிர்ஷ்டங்களும், எந்த வித தொல்லைகளும் இல்லாத சூழல்களும் பெரியளவில் அஷ்டமச்சனியையும் தாண்டி நடந்து வருகிறது. ஒரு வகையில் பார்க்கப் போனால் நடைபெறப் போகிற இந்த 2020, சனிப்பெயர்ச்சியை விட, 2018 முதல் தற்காலம் வரை இவர்களுக்கு நடைப்பெற்ற கண்டகசனி தான் மிகப்பெரிய கடுமையான சனிக்காலம் என்று சொல்லிவிடலாம். அதாவது 7ம் இட சனி! இவர்கள் என்பதால் அதாவது புதனின் நுணுக்க ராசியைக் கொண்டவர் என்பதால், இந்த 7ம் இட சனியின் தாக்குதல்களை, பிரச்னைகளை மிகப்பெரிய சச்சரவு பிரயோகங்களை சனிபகவான் சளைக்காமல் இவர்கள் மீது விட்டெறிந்த போதும் தாக்குப்பிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதைத்தவிர்த்து இப்போது 2020, டிசம்பர் 27ம் தேதி, சனிபகவான் கண்டக சனியை மிதுன ராசிக்கு முடிக்கிறார். ஆனால் அடுத்த துவக்கமான அஷ்டமச்சனிக் காலத்தை ஆரம்பிக்கிறார். இருந்தாலும், 2020, செப்டம்பர் மாதம் 6,12-ஆக ராகு-கேதுக்கள் வந்து அமர்ந்து ஓரளவு இவர்களது வாழ்வில் சிற்சில திருப்பங்களை கொடுத்துக் கொண்டு வருகின்றன.
மிதுன ராசியினருக்கு பொதுவாக இந்த சனியும், குருவும் ஒரு வகையில் கெட்டவர்கள்! ஒரு பக்கம் மாரக, பாதக அதிபதியாக குருவும், மற்றொரு பக்கம் 8ம் இடத்து அதிபதியாக சனிபகவானும் வரக்கூடிய சூழலால் இவர்களது வாழ்வில் சில நேரம் சூறாவளியை வீச செய்து விடுவார்கள். ஆக இவர்களது ராசிக்கு சனி, குரு மறைகிற போதெல்லாம் மிகப்பெரிய நற்பலன்களை வழங்கக்கூடிய பக்குவத்திற்கு ஆளாகி விடுவார்கள். அடுத்ததாக 9,10க்குடையவர்களாகவும் இந்த குரு, சனி கிரகங்கள் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தினை வழங்கக்கூடிய நிலைமைக்கு ஆளாகி விடுகிறார்கள். அந்த வகையில் இப்போது 8ம் இடத்தில் குரு, சனி சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது. அதனால் மிகப் பெரிய கஷ்டங்கள் சனிபகவானால் ஏற்பட இருந்தது விலகிவிட்டது என்றே சொல்லிவிடலாம்.
அடுத்ததாக இடையிடையே மிதுன ராசியினருக்கு தேவையற்ற தொல்லைகள் நீடித்தாலும், அதிரடியான உயர்வுகளும் ஒரு பக்கம் நடக்கக்கூடிய யோகமான சூழலே! எனவே எதை நினைத்தும் இவர்கள் பெரிய அளவில் கலங்க வேண்டாம் என்றே சொல்ல வேண்டும். காரணம் கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் வந்து அமர்ந்து விட்டது. ஆனாலும் அவசர குணம் கூடாது. உடல்நல ஆரோக்கிய கவனத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு மட்டுமே பணம், கைகளுக்கு வரும். சில நேரங்களில் பெரியதாக கடன்பட நேரிடும். பெரிய தொகையாக கடன் கிடைக்கும். ஆனால் சொன்னபடி அந்த கடனை தீர்க்க முடியாமல் போகலாம். வருமானமின்றி கடன்களின் உயர்வு ஒரு புறம் ஏற்பட்டுக்கொண்டே இருக்க, அதனை கேது கிரகம் முடிக்க வைத்து மீண்டும் புதிய பெரிய கடனாக ஏற்படுத்தப் போவதும் நடக்க இருக்கிற காலக்கட்டம் ஆரம்பித்திருக்கிறது. அதனால் சர்வ கவனம் நிச்சயம்!
ஆகவே! இந்தச் சனிப்பெயர்ச்சி காலம் முழுவதும் ஏற்படுகிற இடர்ப்பாடுகளை 15 மாதங்களுக்கு 12ம் இட ராகுவும், 6ம் இட கேதுவும்தான் சரிசெய்து உங்களை காப்பாற்றப் போகிறார்கள். எனவே தாம்துாம் நடவடிக்கை களை குறைக்க வேண்டியது அவசியம்.
குடும்பத்துக்குள்ளும் தேவையற்ற கூச்சல் குழப்பங்கள் இடையிடையே ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும். வாரிசுகள் உங்களது கட்டளைகளை மீறலாம். வாழ்க்கைத்துணை அவரது போக்குக்கு செயல்படலாம். உங்களது ஆலோசனைகளை கேட்க மறுக்கலாம். இருப்பினும் பெரிய வகை சந்தோஷங்களும் இடையிடையே ஏற்படும். திடீர் பொருளாதாரம் கிடைக்கும். கிடைக்க வேண்டிய சொத்துக்கள் சார்பான இடம், மனைக்கு பதிலாக பணமாக சனிபகவான் கைகளில் கொடுத்து, அதனை கரைப்பதற்கு துாண்டுவார்.
உத்தியோக இடத்தில் சக ஊழியர் உங்களது குறைகளையே பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டி ருப்பார். எப்போது நீங்கள் அசறுவீர்கள் என்று அவர் விழித்துக்கொண்டிருப்பார். அடுத்ததாக தொழில், வியாபார, நிர்வாக வகைகளில் எல்லாம் உங்களது திட்டத்தை மீறி கசக்கல்கள் உண்டு. உழைப்பு அதிகரிப்பு உண்டு. லாபம் இல்லாத இடத்திற்கு வேகமாக ஓட வேண்டியிருக்கும். லாபம் கிடைக்கக்கூடிய இடத்திற்கு அலட்சியமாக சென்று காரிய பலிதத்தை இழக்க வேண்டியிருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களது ஜனன சுய ஜாதகத்தில் சனிபகவான் விருச்சிகத்திலோ, மேஷத்திலோ, சிம்மத்திலோ, மீனத்திலோ அமர்ந்திருப்பின், இந்த மேலே சொல்லப்பட்ட அத்தனை கெடுபிடி பலன்களை யெல்லாம் தாண்டி ஏகபோகமான சுபிட்சமான சந்தோஷங்களை மட்டுமே கண்டிப்பாக அனுபவிக்கலாம். அடுத்து உத்தியோக பதவி, பணி, பொறுப்பு விஷயங்களையெல்லாம் சர்வ கவனத்துடன் பார்க்க வேண்டும். உத்தியோக நிர்வாக இடத்தில் பணம் சம்பந்தப்பட்ட துறையில் இந்த ராசியினர் செயல்படுகிற பட்சத்தில் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.
சுபகாரிய திருமண சம்பந்தமான முயற்சிகள் வருகிற தமிழ் வருடமான பிலவ ஆண்டு துவங்கிய பிறகு வரக்கூடிய சித்திரை மாதம் 12ம் தேதிக்கு பிறகே நல்லபடியான வெற்றி நிவர்த்தியைக் கொடுக்கப் போகிறது. இந்த ராசி கர்ப்பிணிகள் மிகுந்த கவனமாக தங்களது உடல்நலனை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த ராசி இளம் பெண்களான அனைத்து நட்சத்திரத்தினரும் தங்களது குடும்பத்தை மீறிய செயல்பாடுகளில் அறவே இறங்கி விடக்கூடாது. இளைஞர்கள் இரவு நேர பயணங்களில் விழிப்பாக இருக்கணும் என்று 8ம் இட சனிபகவானும், குருவும் சேர்ந்து அறிவுறுத்துகிறார்கள்.
இந்த ராசியினருக்கு எதிர்பாராத 2 ,3 பெரிய தொகைகள் அதிர்ஷ்டமுடன் வருகிற 2021, நவம்பருக்குள் தடாலடியாக கிடைக்கப் போகிறது. கடன் பெற்று சொத்து வாங்குவதற்கான சூழல் இருக்கிறது.
இந்த ராசி திருவாதிரை நட்சத்திரத்தினர் மட்டும் சனிப்பெயர்ச்சி தொட்டு 2020, மார்ச் மாத 27ம் தேதி வரை சற்றே கவனமாக இருக்கணும்.
பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இந்தப் பெயர்ச்சி நல்லதொரு அதிர்ஷ்டமான உன்னதப் பெயர்ச்சி தான் என்றாலும், அக்கம் பக்கத்தாரிடமும், சக பாலினத்தவர்களிடமும் கவனமாக பேச்சுவார்த்தை பழக்கவழக்கம் வைத்துக்கொள்ளணும்.
தொழிலதிபர்கள் தங்களது தொழில் சார்ந்த அனைத்து வட்டத்திலும், சர்வ நிதானமாக செயல்பட்டால்தான் விரயம் இல்லாத லாபத்தை அடையக்கூடிய காலக்கட்டம் துவக்கமாகியிருக்கிறது. அடுத்து அயலுார், அயல்தேச, அயல்மாநில சம்பந்தமான பட்ஜெட், நிர்வாகம், பெரிய முதலீடு, பிற நபர் கூட்டணி போன்றவைகளில் கொஞ்சம் விழிப்புடன் இருக்கவும்.
விவசாயிகள் குறிப்பாக இப்போது மிருகசீரிஷம் மற்றும் புனர்பூசத்தாருக்கு ஏகப்பட்ட விசேஷ நற்பலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
மாணவ - மாணவிகள் கல்வியில் அதிக விருப்பத்தைக் காட்டாமல் நடைபோடுவார்கள். அதே நேரம் மிருகசீரிஷம் மற்றும் புனர்பூசத்தார் மட்டும் கல்வியில் விடாப்பிடியான சிரத்தைக் கொண்டு தாங்களை யாரென்று நிரூபிக்கப் போகிற பெயர்ச்சி காலம்தான் இது!
அரசியல்வாதிகள் இந்த காலக்கட்டத்தை சற்றே யோசிக்க வேண்டும். பதவிக்காரகனான சனிபகவான் இப்போது ஆட்சி வீட்டில் இருந்தாலும், 8ம் இடத்தில் நின்றிருப்பதால் திடீரென்று வெற்றி நழுவுவதோ, சக கட்சியினராலேயே அவதுாறுகள் ஏற்படுவதோ நடக்கக்கூடும். ஆக யோசிக்கணும்.
இந்த 2 ½ ஆண்டு காலத்திற்குள் அஷ்டமச்சனியிலும், வருகிற பூசம், பூரம், உத்திரம், சுவாதி, விசாகம், கேட்டை, மூலம் மற்றும் அவிட்டம் நட்சத்திரம் வருகிற தினங்களெல்லாம் ஏகப்பட்ட சுபயோக அதிர்ஷ்ட பலன்களும், பொன், பொருள், ஆபரண வாகன சேர்க்கைகளும் நிகழக்கூடிய யோகம் உண்டு.
வருகிற 2 ½ ஆண்டும், மாதம் ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ திருநள்ளாறு சென்று வருவது அவசியம். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீசிவபெருமானை காலை வேளையில் அர்ச்சனை செய்து வழிபட்டுக் கொண்டிருக்க அனைத்தும் சந்தோஷத்தையும் தரும்.
கடகம்
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கடகம் ராசி வாசகர்களே!
இந்த ராசிக்குள் சனிபகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரம் மட்டும் இல்லையெனில் இந்த ராசிக்காரர்களின் திறனே வேறு! இருப்பினும் எப்படி பார்த்தாலும், இந்த ராசியினர் ஒரு மகா ஞானியே என்று சொல்லிவிடலாம்.
தெரிந்தோ, தெரியாமலோ ஏன் தான் கடவுள் உங்கள் ராசிக்குள் சனியின் நட்சத்திரத்தையும், புதனின் நட்சத்திரத்தையும், குருவின் நட்சத்திரத்தையும் வைத்தாரோ தெரியவில்லை. இந்த மூன்று நட்சத்திரங்களும், சந்திர கிரகத்தின் ஆளுமை ஆட்சி வீடான கடகத்துக்குள் இருப்பதால்தான் ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் பெரியதொரு அந்தஸ்து, இன்னொரு பக்கம் எவராலும் புத்தியால் ஈடுகொடுக்க முடியாத சாதுரிய நுணுக்கங்கள் என்றபடி உங்களை ஒரு முக்கோண வளையத்துக்குள் சிக்க வைத்து, எந்த ஒரு விஷயமுமே இந்த உலகத்தில் ஒழுங்காக, உருப்படியாக நீங்கள் விருப்பப்படுவது மாதிரி எதுவுமே அமையாமல் உங்களை உரலுக்குள் சிக்கிய கூழாங்கல்லாக போட்டு ஆட்டிப்படைத்து விடுகிறது!
ஆக! இவர்களது ராசி இந்த சனிப்பெயர்ச்சியால் பரிகார ராசி என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. என்றாலும், பரிகாரம் ஒன்றும் அவ்வளவாக தேவைப்படாது. தேவைப்பட வேண்டிய அவசியமும் கிடையாது என்று தான் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் கடகராசியினருக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. எவரோ வருகிறார், எதையோ கொடுக்கிறார், எப்படியோ இவர்களது நிர்வாகமும், தொழிலும், குடும்பமும், குடும்பத்தைச் சார்ந்தவர்களும் நல்லபடியாக ஏதோ அமைதியாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
இருந்தாலும் 2018 முதல் இந்த 2020 முடியும் வரை 6ம் இடத்தில் சனிக்கே உரித்தான ஸ்தானத்தில் குருபகவானின் வீட்டில் சனிபகவான் அமர்ந்து செய்ய வேண்டிய நன்மைகளுக்கு பதிலாக அடாவடியான அநாவசியப் பிரச்னைகளையே உண்டாக்கினார். காரணம் சாயாகிரகமான கேதுவோடு இணைந்த கோளாறால் இவர் 6ம் இடத்தில் நின்றிருந்த போதும், அவரால் அதிர்ஷ்டப் பலன்களை செய்ய முடியாமல் சிக்கிக்கொண்டார். இந்த நிலைமையில் குருபகவான் இவருடன் சேர்ந்த பிறகு 6ம் இட பலன்களான சுபிட்ச அதிர்ஷ்ட பலன்களை ஏதோ கொஞ்சம் கொடுத்தார். ஆனாலும் மத்திமமாகத்தான் வைத்திருந்தார். குடும்பத்திற்குள்ளும் அமைதியை சற்றே குறைத்தார். ஒவ்வொரு வீடாக மாறிக்கொண்டே இருப்பதற்கு வாடகை வீட்டை மாற்றினார். சொந்த வீட்டை பூட்டிப் போட வைத்தார். தொழிலை முடக்கினார், வியாபாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தார், இதுவெல்லாம் கடந்த கால சோதனைகள்!
ஆக இனிமேல் 2020, டிசம்பர் 27ம் தேதிக்கு பிறகு கண்டக சனியாக வந்து மகர ராசியில் அமர்ந்து, ராசியைப் பார்க்கப் போகிறார் சனிபகவான். இதனால் 30சதவீதம் மட்டும் கடக ராசியினருக்கு ஒரு வித குறை ஏற்படுமே தவிர, பெரியளவு சோதனைகளோ, தொல்லைகளோ, இழுபறிகளோ ஏற்படாது. இந்த 30 சதவீதமும், மனைவியின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கெடுபிடிகளை சனிபகவான் ஏற்படுத்தியே தீருவார்! இதற்காக கலங்கிவிடக்கூடாது. இந்த சனிப்பெயர்ச்சியால் 6,8ம் இடத்து அதிபதிகள் சேர்க்கையும், நீசபங்க ராஜயோகமும் நிகழப்போவதால் நினைத்ததைத் தாண்டி, யோகமான விசேஷ நற்பலன்கள் கண்டிப்பாக காத்திருக்கிறது. இதுவரை நல்லது செய்கிற மாதிரி அனைத்தையும் அமுக்கி வைத்துக்கொண்டு எந்த ஒரு நிவர்த்தியையும், கொடுக்காமல் 2 ¾ ஆண்டினை கடத்தி விட்ட சனிபகவான், இந்த 7ம் இடத்துக்கு வந்து அமரும்போது மிகப்பெரிய யோகப் பலன்களையும் கொடுத்தே தீர வேண்டும் என்பது கட்டாய விதி!
அதோடு “பாவிகள் கேந்திரத்தோனாகின் தீயப் பலனை கொடான்” என்பது ஜோதிட சுருதி அந்த வகையில் 8ம் இடத்து அதிபதியுமான இவர் வலிமையான சப்தம கேந்திரத்தில் அமரப் போவது சிறப்பே! பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் கேது கிரகம் உச்சமாக நின்றுக் கொண்டு, அப்பிரதட்சணப் பார்வையாக சனியையும், குருவையும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதால், சனிபகவானால் ஏற்படக்கூடிய கெடுதல் பலன்கள் தங்கு தடைகள், அநாவசிய இடையூறுகள் போன்றவற்றையெல்லாம் நீங்களே ஆச்சரியப்படும்விதத்தில் தடையாக்கி விடுவார்.
விபரீத ராஜயோக சேர்க்கை ஏற்படப்போவதாலும், அடுத்து வருகிற செவ்வாய்க்கிரகத்தின் நகர்ச்சி இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு, 4 ½ மாதங்களுக்கு யோககர மாகவும் இருக்கப் போவதால், அடுத்தடுத்து உங்களது எல்லா முயற்சிகளும், திட்டங்களும் பலிதமாகிவிட இருக்கிறது. அதே நேரம் 7ம் இட சனி, அவரது போக்கில் செய்யக்கூடிய பலன்கள் என்னவெனில் கண்மண் தெரியாத விரயங்களை திடீரென்று ஏற்படுத்தி விடுவார்! கடக ராசியினரின் சொந்த ஜனன ஜாதகத்தில், மகர ராசியில் சுக்கிர கிரகம் அமர்ந்திருப்பின் பொருளாதார வகையில் இனிமேல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிறருக்கு ஜாமீன் கூடாது! அவசரப்பட்டு எந்த ஒரு காரியத்திலும் இறங்கிவிடக்கூடாது.
இருந்தாலும் குருவோடு சேர்ந்து நிற்கப் போவதால் அதாவது 13 மாதங்கள் இவரது சேர்க்கை நிகழ்ந்து கொண்டிருக்க போவதால் எவ்விதத்திலும் பெரிய வித தொல்லைக்கோ, பாதகத்துக்கோ ஆளாகி விட மாட்டீர்கள் என்றும் சொல்ல வேண்டியுள்ளது.
மேலும் சனிப்பெயர்ச்சி ஆனது தொட்டு 11 தினம் கழித்து சனிபகவான் அஸ்தமன நிலைமைக்குச் சென்று 26 தினங்கள் சூரியனின் பிடியில் இருக்கப் போவதால் இந்த காலக்கட்டத்தில் உயர்வு பலன்கள் மேன்மையாக உண்டு. தொழில், வியாபாரம், நிர்வாகம், பட்ஜெட், முதலீடு போன்ற விஷயங்களில் கண்ணும் கருத்துமாக நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால் விரயங்களையோ, இழப்புகளையோ சந்திக்காமல் காலத்தை நகர்த்தி விட முடியும். உத்தியோகம், பதவி, பணி, பொறுப்பு விஷயங்களி லெல்லாம் மெல்ல சில உயர்வு மாற்றங்கள் எதிர்பாராத தருணத்தில் நடந்து முடியும்.
இந்த ராசி பூச நட்சத்திரக்காரர்களுக்கு சனிபகவான் சூரிய சாரத்தில் அதாவது உத்திராட நட்சத்திரத்தில் அனுஜென்ம நட்சத்திர தாரையில் சஞ்சார கதியில் இருக்கிறார். ஆகவேதான் இவர்களுக்கு எல்லா விதத்திலும் ஒரு வித கிலேசம், தடை, தாமதம், பற்றாக்குறை, வேண்டாத விரோதம், குடும்பத்துக்குள் சலசலப்பு என்று நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை வருகிற 2021, மார்ச் மாத 8ம் தேதியிலிருந்து தலைகீழாக மாறி புதிய அதிர்ஷ்டங்களை கொடுக்கபோகிறார். ஆயில்யத்தினருக்கு 2020, ஜூலை முதல் மென்மையாகவே நடந்து வருகிறது. இந்த நிலைமை சனிப்பெயர்ச்சி தொட்டு 93 தினங்களுக்கு மிக மிக அருமையாகவே மேலும் பல அதிர்ஷ்ட சந்தோஷங்களுடன் நகரும். அதன்பிறகு இவர்கள் 6 ½ மாதங்கள் எல்லா விஷயத்திலும் சர்வ கவனமாக நடைபோடணும். புனர்பூச நட்சத்திரத்தினர் இப்போது அனுபவித்து வருகிற யோக பலன்களை வெகு துாக்கலாக வருகிற தமிழ் புது வருடமான பிலவ வருட, ஆனி மாதம் வரை நல்லபடியான உயர்வுகளை மேலும் மேலும் அடையப் போகிறார்கள். அதன்பிறகு அதாவது வருகிற தமிழ் வருட ஆடி தொட்டு மார்கழி மாதம் வரை எல்லாவற்றிலும் கவனமாகத்தான் செயல்பட்டாக வேண்டும். பொதுவாக கடக ராசியினரின் கடன், கண்ணி, வம்பு தும்பு, வழக்கு, கோர்ட், போலீஸ், பஞ்சாயத்து, சொத்துபத்து ரீதியான சங்கடங்கள் எல்லாவற்றையும் 11ம் இட ராகுவும், 5ம் இட கேதுவும் சனிபகவானை மீறி நல்ல விதத்தில் நிவர்த்தி செய்து கொடுத்து விடுவார்கள்.
இந்த ராசி பூச நட்சத்திர இளம் பெண்களுக்கு 30 வயது முதல் 33 வயது கடந்தும் திருமண சுப விஷயங்கள் நடக்காமல் இருக்கிற பட்சத்தில் வருகிற பிலவ வருட, பங்குனி மாத 16ம் தேதிக்குள் திடீர் வரன் கிடைத்து விடும். புதிய வித சொத்துபத்து வாங்குகிற முயற்சியிலும் வீடு, மனை, கட்டடம் சம்பந்தமான விஷயங்களிலும் கடக ராசியினருக்கு வருகிற சித்திரை மாதம் முதல் நினைத்த மாதிரி சந்தோஷங்கள், உயர்வுகள் உண்டு.
பெண்மணிகளுக்கும்,இல்லத்தரசிகளுக்கும் இதுவரை எந்த விதமான வாழ்க்கை சுகபோகமும், செழிப்பு சந்தோஷமும் அமையாதிருக்கிற பட்சத்தில், இந்தச் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு 7 மாதங்களுக்குள் அருமையான திருப்பங்களையும், உயர்வுகளையும், மகிழ்ச்சிகளையும் நல்லவிதமாக அடைவார்கள்.
தொழிலதிபர்கள் தங்களது அயலுார், அயல் மாநில, அயல் தேச தொழில் பட்ஜெட், வியாபார, கூட்டணி திட்டங்களை 2021, ஏப்ரல் மாத 17ம் தேதிக்கு பிறகு தொடங்கிக் கொள்வதே உத்தமம்!
விவசாயிகள் குறிப்பாக பூச நட்சத்திரத்தினர் வருகிற 2021, மார்ச் மாத 4ம் தேதிக்கு பிறகு ஏகப்பட்ட திருப்பங்களை உற்பத்திரீதியாகவும், தங்களது சொந்த நிலபுலன் சார்பாக நீடித்து வருகிற கடன், கண்ணி, வழக்கு சமாச்சாரங்கள் ரீதியாகவும் அருமையான நிம்மதி அதிர்ஷ்டத்துக்கு இடமுண்டு.
மாணவ – மாணவிகள் தங்களது கல்வி சார்பான நினைப்புகளையும், உயர்வுகளையும், திருப்திகளையும் வருகிற 2021, மார்ச் மாத 11ம் தேதியிலிருந்து புதிய ரூபத்தில் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறார்கள்.
அரசியல்வாதிகள் இதுவரை கட்சி சார்பாகவும், கட்சி மேலிட தலைமை ரீதியாகவும் சின்ன சின்ன சந்தோஷங்களாகவும், பதவி உயர்வுகளாகவும் அனுபவித்து வந்ததற்கு இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு 210 நாட்களுக்குள் திடீரென்று எதிர்பார்க்காத உயர்வுகளையும், பதவிகளையும் அடையக்கூடிய பாக்கியம் உண்டு!
பொதுவாக கடக ராசியினர் அனைவருக்குமே இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு வருகிற 2½ ஆண்டுகளுக்குள் வருகிற தமிழ் மாதங்களான தை, சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்கள் அனைத்தும் வெகு சந்தோஷ உயர்வு மேன்மை அதிர்ஷ்டங்களையும், புதிய வளர்ச்சிகளையும், சுபகாரிய திருமண, புத்திர பாக்கிய யோகங்களையும் நல்லவிதமாக கொடுக்கப் போகிறது. இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு வருகிற ஆடியும், ஆவணியும் மற்றும் கார்த்திகை, பங்குனி, ஆனி மாதங்களிளெல்லாம் எல்லா விஷயத்திலும் முழு விழிப்பு தேவை!
இந்தச் சனிப் பெயர்ச்சியிலிருந்து வருகிற ஆயில்யம், பூரம், அஸ்தம், கேட்டை, மூலம், திருவோணம் மற்றும் சதயம், அஸ்விணி நட்சத்திர நாட்களிலெல்லாம் ஏகப்பட்ட சந்தோஷ உயர்வுகள், பொருளாதார சரளங்கள் வெகு அருமையாக உயரப்போகிறது.
அடுத்து வருகிற 2½ ஆண்டும் தொடர்ச்சியாக பிரதி திங்கள்தோறும் சோமாவார விரதத்தையும், பிரதோஷ வழிபாட்டையும் வைத்துக்கொண்டு ஸ்ரீசிவபெருமானுக்கு வில்வமும், விபூதியும் தந்து வழிபட்டுக்கொண்டிருப்பது மிக மிக அவசியம்! நவக்கிரக வலம் தொடர்ச்சியாக 11 தினம் செய்து கொண்டிருப்பது விசேஷ நலன்களை அளிக்கக்கூடிய பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி வந்திருக்கிறது.
சிம்மம்
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
சிம்மம் ராசி வாசகர்களே!
இந்த 2020 டிசம்பர் இறுதி முதல் வெகு ஜோராக நீங்கள் திட்டமிட்டிருப்பதையெல்லாம் தாண்டி, வெகு அற்புதமான யோக, சவுபாக்ய, அதிர்ஷ்டங்களை பல ரூபத்திலும் உங்களுக்கென வழங்கி, எல்லா வகையிலும் ஏற்றத்தைக் கொடுக்க வந்திருக்கிற அற்புதமான பெயர்ச்சி இது.
குறிப்பாக சொல்லப் போனால் நீங்கள் சந்தித்த துயரங்களை, அடுக்குவதற்கு உங்களது வீட்டிலேயே இடம் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அவ்வளவு துன்ப, துயரங்களை எல்லை யில்லாமல் அனுபவித்து முடித்து இருக்கிறீர்கள். நல்லது செய்யப் போய், உங்கள் பெயரை பழுதாக்கிக் கொண்ட கதையும், எவருக்கோ உபகாரமாக நிற்கப் போய், அதுவே உங்களுக்கு பாதகமாக முடிந்த கதையும் ஒரு புத்தகமாகவே எழுதி முடித்துவிடலாம்.
இனி, சனி கிரகம் உங்கள் ராசிக்கென வெகு அட்டகாசமாக வந்து, மகர ராசியின் ஆட்சி வீட்டுக்குள்ளே அமரப்போகிறது. இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 2020, 15ம் தேதி குருபகவான் 6ம் இடத்தில் மறைந்து, நீச நிலைமையில் நின்றுக் கொண்டிருக்கிறார். இவரோடு ராசிக்கு 6ம் இடத்து அதிபதியான சனி வந்து இணைவது விபரீத ராஜயோக அமைப்பு! காரணம் 6க்குடைய சனியும், 8க்குடைய குருவும் இணைந்து நீசபங்க ராஜயோகத்தோடு ருண ரிண ரோக சத்ரு ஸ்தானத்தில் வந்து அமரப்போவது மிகப் பெரிய சாதகமான விசேஷ உயர்வுகளை கொடுக்கக்கூடிய பெயர்ச்சி இது!.
கடன்களுக்கு முற்றுப்புள்ளி உண்டாகப் போகிறது. கணக்கு வழக்கில்லா இடர்பாடுகளுக்கெல்லாம் புதிய ரூபத்தில் தீர்வு கிடைக்கப் போகிறது. பல ஏற்பாடுகள் செய்தும், முயற்சிகள் செய்தும் முடிவுக்கு வராத, உங்களது அவசியமான காரியங்கள் அனைத்தும் சட்டென்று இனிமேற் தொட்டு பெரியளவு அதிர்ஷ்ட மேன்மைகளை கொடுக்கப் போகிறது.
அதே நேரம் இவர் பெயர்ச்சியாவதற்கு முன்பே இந்த ராசியில் பூரம் நட்சத்திரக்காரர்களை மட்டும் கடந்த 2020, மே மாதத்திலிருந்து சனிபகவான் நல்லபடியாக கவனித்துக் கொண்டு வருகிறார். நினைத்ததை சாதிக்க வைக்கிறார் இவர்களுக்கு! இவர் இப்போது இந்த நட்சத்திரக்காரர்களுக்கு 2வது நட்சத்திரமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சார கதியில் இந்த பெயர்ச்சியின்போதும் இருப்பதும், தன தாரையில் சனிபகவான் சஞ்சரித்து க்கொண்டிருப்பது 5ம் இட சனியின்போதே அள்ளிக் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார் இவர்களுக்கு! தேவை, அத்தியாவசிய, இத்யாதி, கடமைகள் உபாி யாகவே பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.
இல்லத்துக்குள் சுபகாரிய சந்தோஷங்களும், திருமண வைபவங்களும், பூரம் நட்சத்திரக்காரர்களின் இல்லத்தில் விமரிசையாகவே நடந்து முடிந்திருக்கிறது. அத்துடன் இனிமேலும் இந்தப் பெயர்ச்சி தொட்டு நான்கு மாத காலம்வரை அதாவது வருகிற 2021, ஏப்ரல் மாதம் முடியும் வரை இவர்களை கைகளால் பிடிக்க முடியாதபடி பல ரூப அதிர்ஷ்டங்களை சந்தித்து மேன்மையடைவார்கள். அடுத்ததாக இந்த ராசியின் மகம் நட்சத்திரக்காரர்களும், உத்திரம் நட்சத்திரக்காரர்களும் படு திண்டாட்டத்தை சனிபகவான் 5ல் அமர்ந்திருந்த போதும் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம் சனிபகவான் விபத்து தாரையில் சுழல்வதால் இவர்களுக்கு ஆரோக்கிய வகையிலும், மருந்து மாத்திரை சம்பந்தமாகவும், மற்றபிற சம்பந்தமில்லாத பிரச்னைகள் வழியிலும் ஏகப்பட்ட குளறுபடிகளை சந்தித்துக் கொண்டிருக்கி றார்கள்.
இனிமேல் வருகிற 2021, மார்ச் மாத 5ம் தேதியிலிருந்து இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ஏகப்பட்ட சுபிட்ச, அதிர்ஷ்ட சுப சவுகரிய உயர்வு பலன்களை அடுக்கடுக்காக கொடுத்துப் பார்க்கப் போகிறார்கள். அதோடு எவ்வளவு இழப்பும், நஷ்டமும் எது சார்பாக ஏற்பட்டிருந்தாலும் இனிமேல் ஒவ்வொன்றாக ஈடுகட்டப்படயிருக்கிறது.
குடும்பத்துக்குள் நிலவி வந்த அநாவசிய கருத்து சச்சரவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி ஏற்பட இருக்கிறது. குதர்க்கமான விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப் போகின்றன. தீர்க்க முடியாத சிக்கல்களுக்கெல்லாம் விடிவு கிடைக்கும். திடீர் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கிய ரீதியான சச்சரவுகளுக்கெல்லாம் ஒரு வழியாக முடிவு ஏற்பட்டு மருந்து மாத்திரை விரயங்களும், சிகிச்சை சம்பந்தமான பயமும் ஒட்டுமொத்தமாக தீர்ந்து விலகிவிடும்.
உறவுகளால் எந்த மாதிரியான குழப்பமும், சச்சரவும் நீடிக்கிறதோ அதற்கெல்லாம் தீர்வு ஏற்பட்டு ஒற்றுமை அதிகரிக்கும். அனைத்து முயற்சிகளுக்கும் கால நேரம் ஒழுங்காக ஒத்துழைக்கப் போகிறது.ஆசைப்பட்டதை எளிதாக அடைய முடியும். வீடு சம்பந்தமான, கட்டட சம்பந்தமான விருத்தி நினைப்புகளுக்கும் சாதகம் ஏற்படப் போகிறது. புதிய மனை, கட்டடம் வாங்குவதற்கான அதிர்ஷ்டங்கள் கைக்கூடப் போகின்றது. அத்துடன் வாரிசுகள் சம்பந்தமான எந்த ரூப கவலையாக இருந்தாலும், வருகிற 2021, பிப்ரவரி மாத 18ம் தேதிக்கு பிறகு நல்லபடியாக தீரும்.
கடன், கண்ணி விவகாரங்கள் எது ரூபமாக இருந்தாலும் அதற்கெல்லாம் சந்தோஷ தீர்வுகள் கிடைக்கக்கூடிய காலக்கட்டமிது! பொதுவாக சிம்ம ராசியினருக்கு பங்குபாக ரீதியாக பூர்வீக சொத்துக்கள் வகையில் பாட்டனார், முப்பாட்டனார் வழி ஆஸ்திகள் கிடைக்க வேண்டியிருப்பின் அது கடந்த 2020, நவம்பர் மாதத்திலிருந்தே சாதக முகாந்திரங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்.
திருமண வாழ்க்கை ரீதியாக ஏதேனும் சச்சரவுகள், தொல்லைகள், விவாகரத்து விவகாரங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைத்து புதிய ஒற்றுமை, அன்யோன்யம், பரஸ்பரம் அதிகரிக்கப் போகிறது. அத்துடன் ஏற்கனவே விவாகரத்தாகி மறுமண எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு விருப்பப்படுவது மாதிரி திருமண வரன் அமைகிற காலக்கட்டம் உதயமாகி இருக்கிறது. இனிமேல் 9 மாதங்கள் வரை திட்டமிடாத விஷயங்களில்தான் சிம்மராசி யினருக்கு பெரியவித யோகங்களும், அதிர்ஷ்டங்களும், பணப்பரிமாற்றங்களும், பெரிய தொகை வரவுகளும் கிடைக்கப் போகிறது. பொன், பொருள், ஆபரணச்சேர்க்கைகள் உபரியாக சேருகிற காலக்கட்டம் இந்த காலக்கட்டமே! சேமிப்பு தானாக, எளிதாக உங்களை மீறி ஏற்பட்டுக் கொண்டிருக்கப் போகிறது.
மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வருகிற 2021, மார்ச் மாத 13ம் தேதியிலிருந்து மிகப் பெரிய சவுகரியங்களை 6ம் இட சனி உருவாக்கப் போகிறார். வீடு இருப்பிட கோளாறுகளை தீர்த்து வைக்கப் போகிறார். உறவுகள் மத்தியில் பலமாக, கவுரவமாக வலம் வர வைக்கப் போகிறார்.
பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் சுபயோக சுப காலம் யோககரமாக தொடங்கியிருக்கிறது. அத்துடன் வேண்டப்பட்ட விஷயங்கள், கடவுளிடம் வைத்த பிரார்த்தனைகள் நிறைவேறப் போகிறது. மேலும் இல்லத்துக்குள் வசதி வாய்ப்பு, சவுகரியங்கள் தங்களது வசதிக்கேற்றவாறு மாறப் போகிறது. அத்துடன் புத்திரபாக்கிய ஏக்கத்தில் உள்ள பெண்மணிகளுக்கு குரு – சனி சேர்க்கையால் திடீர் அதிர்ஷ்ட செய்தியை மருத்துவர் சொல்லப் போகிறார்.
மாணவ -– மாணவிகள் இனிமேல் எந்த வித கல்வி, அசவுகரியத்தையும் சந்திக்க மாட்டார்கள். நினைத்த கல்வி வருகிற கல்வியாண்டில் கண்டிப்பாக அமையும்.
தொழிலதிபர்கள் இதுநாள் வரை சந்தித்து வரும் பெரிய பட்ஜெட் ரீதியான இழப்புகளுக்கும், விரயங்களுக்கும் ஈடுகட்டப்படுகிற லாப வரவுகள் மிகப்பெரிய அளவில் காத்துள்ளன. அயல்தேச தொழில், பட்ஜெட் கூட்டணி விவகாரங்களை வருகிற தமிழ் மாதமான மாசி வரை ஒத்தி வைப்பது நலம்.
விவசாயிகள் குறிப்பாக சனிப்பெயர்ச்சியானதிலிருந்து பூர நட்சத்திரத்தினர் 8 மாதங்களுக்குள் அதிரடியான சிறப்பு வளர்ச்சிகளை தங்களது உற்பத்தி, நிலபுலன் சார்ந்த வகைகளில் அடையப் போகிறார்கள். வருகிற 2021, ஏப்ரல் மாத 10-ம் தேதிக்கு பிறகு மகம் மற்றும் உத்திர நட்சத்திர விவசாயிகள் தாங்கள் எதிர்பார்த்ததைத் தாண்டி பெரியளவு உற்பத்தி லாபங்களையும், புதிய நிலபுலன் சேர்க்கைகளும் உண்டு.
இந்த ராசி அரசியல்வாதிகளுக்கு தங்களது வழக்குகளிலிருந்தும், பொது ஜன பிரச்னை களிலிருந்தும் லாவகமாக வெளிவந்து சாதித்துக் கொள்ள இருக்கிறார்கள். 2021, தேர்தல் இவர்களுக்கு படு சாதக உயர்வுகளை, வெற்றிகளை, பெரும்பான் மைகளை வழங்கக்கூடிய உன்னதமான பெயர்ச்சி இது!
பொதுவாக இந்த ராசியினர் அனைவருக்கும் இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு அடுத்து வருகிற 2½ ஆண்டுகளுக்குள் வரும் தமிழ் மாதங்களான தை, சித்திரை, வைகாசி, ஆனி, ஐப்பசி மாதங்கள் பலவித உயர்வு, சந்தோஷ மேன்மைகளை கண்டிப்பாக கொடுக்கும். அதோடு மாசி, பங்குனி மற்றும் ஆவணி, புரட்டாசி மாதங்கள் சற்றே சோதனையான மாதங்கள்தான். வருகிற தமிழ் வருடமான புது பிலவ வருடம் சிம்மராசியினருக்கு பெரியதொரு சந்தோஷ உயர்வுகளையும் கொடுக்கப் போகிறது. அடுத்ததாக இனி வரும் 2 ½ ஆண்டு காலத்துக்குள் வருகிற உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி மற்றும் ரோகிணி நட்சத்திர தினங்களிலெல்லாம் உயர்வு அதிர்ஷ்டங்களை இந்த 6ம் இட சனிபகவான் பெரியளவு கொடுக்கப் போகிறார்.
இந்தச் சனிப்பெயர்ச்சி முதல் தொடர்ச்சியாக உங்களது குலதெய்வத்தை பிரதி செவ்வாய்தோறும் சென்று வழிபட்டுக்கொண்டிருக்க, நவக்கிரக ராகு-கேதுக்களுக்கு பிரதி பரிகாரம் செய்து கொண்டிருக்க, திங்கட்கிழமை தோறும் ஸ்ரீஅம்பாள் வழிபாடு செய்துக்கொண்டிருக்க நினைத்தது அனைத்தையும் வெகு துாக்கலான அதிர்ஷ்டத்தோடு நிறைவேற்றி வைப்பார் 6ம் இட சனி!
கன்னி
கன்னி
(உத்திரம் 2,3,4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதம்)
கன்னி ராசி வாசகர்களே!
சொல், செயல், வாக்குகளிலெல்லாம் அதிசாதுார்யம் படைத்த மகா புதனின் ஆதிக்க ராசியையும், புதனின் ஆட்சி உச்ச வீட்டையும், சொந்த வீடாக கொண்ட கன்னி ராசிக்காரர்களான நீங்கள் எப்பொழுதுமே பார்த்ததை பார்த்த மாத்திரத்தில் யூகித்து அதன்படி தனது செயலுக்கு கொண்டு வந்து விடுவீர்கள்.
கல்வி ஞானம் மிகப்பெரிய அளவில் வாய்த்துவிடும். அப்படி இல்லாவிடில், உலகியல் ஞானம் அதைத்தாண்டி உங்களிடம் பிரகாசிக்கும்.
அப்படிப்பட்ட உங்களுக்கு சனிபகவான் 2018ம் ஆண்டு ஆரம்பம் முதல் மிகப்பெரிய அல்லல்களுக்கும், தொல்லைகளுக்கும், இடையூறுகளுக்கும், வீணான அவஸ்தைகளுக்கும், கண்மண் தெரியாமல் ஆளாக்கி உங்களைப் போட்டு அமுக்கி வைத்திருந்தார்.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல, எதுவுமே உங்களது மூளைக்கு புரியாதபடி வைத்தார். குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாதபடி ஆட்டிப்படைத்தார். இன்றைய பொழுது சுகமாக விடியும் என்று நினைத்து உறங்கச் செல்லும்போது விடிந்தால், உங்களை எழுந்து ஒழுங்காக அன்றாட பணிகளைக் கூட செம்மையாக செய்யமுடியாதபடி தடுத்தார், காலநேரத்துக்கு சாப்பிட முடியாமல் கசக்கினார், உணவு இருந்தும் அதனை ருசிக்க முடியாதபடி ஆற வைத்தார், ஆறாத சஞ்சலங்களை வடுவாக மனதுக்குள் மாற்றினார், உறவுகள் உங்களை பார்த்து மதிக்காமல் செய்ய வைத்தார். அப்பப்பா! இதுவரை எவ்வளவு பெரிய துயரங்களை தாங்கினீர்கள் என்பது அதனை கொடுத்த சனிபகவானுக்கே வெளிச்சம்! போதாக்குறைக்கு 3 ஆண்டுகளாக ராகு-கேதுவும், குருவும் சரியில்லாத சஞ்சார கதியால், உரலுக்குள் மாட்டிக்கொண்ட எலியின் தலையாக உங்களது நிலைமை படு அபத்தமாக பலவித இன்னல்களையும், சந்தித்து இப்போதுதான் நல்ல மூச்சை விட ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று சொல்லி விடலாம்.
எனவே இப்போது அர்த்தாஷ்டமச்சனி விலகி, 5ம் இட யோக சனியாக தன்னுடைய ஆட்சி வீட்டில் வந்து அமரப்போகிறார். 2020, டிசம்பர் 27ம் தேதி முதல்! எனவே இதுமுதற்கொண்டு உங்களது யோக அதிர்ஷ்ட திருப்திகள் களைக்கட்டப்போகிறது. அதோடு 12 ராசிகளில் முதல் தர யோக அதிர்ஷ்டத்தில், 2வது இடத்தைப் பிடிக்கப் போகிற மகா பாக்கியவான்கள் யாரெனில் கன்னிராசிக்காரர்களே!
இதனால் சனிப்பெயர்ச்சி ஆனப்பிறகு கொஞ்சம் லேசாக தடுமாற்றமும், தாமதமும் இருக்குமே தவிர மற்ற பிற தொல்லைகள், தொந்தரவுகள் உங்களை நெருங்காத வண்ணம் வெற்றி, வீர, ஜெய பராக்கிரம ஸ்தானத்தில் நின்றிருக்கிற கேது கிரகம் பார்த்துக்கொள்ளும், புதிய வெற்றிகளை வழங்கும், அசகாய சந்தோஷங்களை கொடுக்கும். நினைத்ததை நினைத்தப்படி நிறைவேற்றி வைக்கும். அடுத்ததாக சனிபகவான் மாற்றத்தைத் தாண்டி, குருபகவான் 5ம் இடத்தில் ஏற்கனவே சென்று அமர்ந்திருக்கிற நிலையால் எண்ணற்ற மனகுதுாகலங்களும், சந்தோஷங்களும், அதிர்ஷ்டங்களும் உங்களுக்கு தானாக ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
இதை விட வருகிற 2023க்கு பிறகு இன்னும் பல செழிப்புகளையும், உயர்வுகளையும் சனிபகவான் கொடுக்க இருப்பது நிச்சயம்! அதற்கான ஆயத்த அஸ்திவாரங்களைத்தான் இந்த 5ம் இட சனிபகவான் தன்னுடைய பெயர்ச்சிக்கு பிறகு மகர ராசிக்குள் அமர்ந்து ஆரம்பித்து வைக்கப் போகிறார். அதோடு இந்த ராசி உத்திர நட்சத்திரத்தினர் 2020, மார்ச் மாத 9ம் தேதியிலிருந்து ஏகப்பட்ட பிணக்குகளை குடும்ப ரீதியாகவும் தங்களது தேவை, கடமை, அத்தியாவசிய ரீதியாகவும், ஆரோக்கிய வகையிலும் மாபெரும் சங்கடமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இவர் பெயர்ச்சியான பிறகு உடனடியாக எந்த ஒரு மேன்மை பலனையும், சற்றே கொடுக்க முடியாதபடி சுழலப்போகிறார். ஆகவே இந்த நட்சத்திரத்தினர் வருகிற 2021, பிப்ரவரி 16ம் தேதி வரை சற்றே எதிலும் நிதான நடவடிக்கையோடு செயல்பட வேண்டும்.
அஸ்த நட்சத்திரத்தாருக்கு சனிபகவான் இப்போதே பரம மைத்ர தாரையான ஞானவாக்கிய சஞ்சாரத்தில் சுழன்றுக்கொண்டிருக்கிறார். ஆகவே இவர்கள் இவரால் 60 சதவீத நன்மைகளையும், சந்தோஷங்களையும் இடையிடையே சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சித்திரை நட்சத்திரத்தினருக்கு ஷேம அதிர்ஷ்ட தாரையில் இப்போது சனிபகவான் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து வருகிற நிலைமையிலும், எண்ணற்ற சுபயோக சுப பலன்களைத்தான் கொடுத்துக்கொண்டு வருகிறார். இந்த நிலைமை டிசம்பர் 2020, 27ம் தேதிக்கு பிறகு மாறி, இன்னும் பல கொடுப்பினைகளை கண்மண் தெரியாமல் வாரி வழங்கப் போகிறார் சனி!.
ஆக! முதலில் உத்திர நட்சத்திரத்தினருக்கு சனிப் பெயர்ச்சி ஆனது தொட்டு, 2 ¼ மாதத்துக்கு பிறகு சுபிட்ச யோக உயர்வு பலன்களும்,
அஸ்த நட்சத்தி ரத்தினருக்கு 2 ¼ மாதத்துக்கு பிறகு சிற்சில பின்னடைவு பலன்களும், சித்திரை நட்சத்திரத்தினருக்கு இந்த 2 ¼ மாதம் கழித்து இன்னும் பல உயர்வு மேன்மைகளையும் அடுக்கடுக்காக கொடுத்து பார்க்கப் போகிற அதி உன்னத பெயர்ச்சி இது!
வீட்டை சரிசெய்ய, கட்டட விருத்தியை ஏற்படுத்த, புதிய மனை, சொத்து கட்டடம் வாங்க, இல்லத்தை விஸ்தீரணமாக்க, எடுத்து வருகிற நடவடிக்கைகள் எல்லாம் 85 சதவீத வெற்றி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிற சனிப்பெயர்ச்சி இது!
கன்னிராசிக்கு புத்தி ஸ்தான சனியாகவும், நீச குருவோடும் இணைந்தி ருக்கிற இந்தப் பெயர்ச்சி சனிபகவான் மூளையை சற்றே இடையிடையே கொஞ்சம் குழப்பவும் செய்வார். சில நேரம், சில விஷயங்களை பிடிபடாமல் செய்வார். கண்ணை கட்டுவார், நன்றாக உள்ளதைக் கெட்டதாக காட்டுவார், கெட்டதாக உள்ளதை நல்லதாக உணர்த்துவார், நல்லவர் யார்?, கெட்டவர் யார்? என்பதை யூகிக்க முடியாமல் செய்ய வைப்பார், பார்த்துக்கொள்ளணும்!.
இருந்தாலும், உங்களது ராசிநாதனுக்கு மிக வேண்டப்பட்ட நட்பு கிரகம் என்பதால் தவறுகளின்போது லேசாக தட்டி, அதனை சுட்டிக்காட்டி உணர்த்துவார். பெரிய இடைஞ்சல், தொல்லைகளை ஏற்படுத்தமாட்டார்.
மேலும் மிகப்பெரிய திருப்பங்களை உண்டாக்கக்கூடிய கிரக சஞ்சாரமும், கிரக சேர்க்கையும் கன்னிராசிக்கு ஏற்பட்டிருப்பதால் இதுவரை பட்ட அடிகளிலிருந்தும், துயரங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் வெளிவர வைக்கப் போகிற உன்னதமான பெயர்ச்சி! குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றத்தை உண்டாக்கும்.
பிள்ளை களுக்கான சுப சடங்கு விஷயங்களையும் காதுகுத்து, சீமந்தம் போன்ற விஷயங்களும் இல்லத்துக்குள் களேபரமாக நடக்கும். இந்த ராசி வயது கடந்துக் கொண்டிருக்கும் இளம் இருபாலருக்கும் திருமண நிறைவேற்றம், சுபமான வரன், அதிர்ஷ்டகரமான வாழ்க்கைத்துணை என்று அமையப் போகிற காலக்கட்டம் உருவாகியிருக்கிறது!
அத்துடன் சனிபகவான் பெயர்ச்சியானதிலிருந்து 8 ½ மாதத்துக்குள் அதிர்ஷ்ட புத்திர பாக்கியம் கண்டிப்பாக நிச்சயம்.
பெண்மணிகளுக்கு இனிமேல்தான் யோக சுபிட்ச காலம் ஆரம்பம்! இல்லத்தரசிகள் தங்களது இல்லத்துக்குள் சந்தோஷப்பலன்களையும், வாழ்க்கைத்துணையால் உயர்வு மகிழ்ச்சிகளையும் ஏகபோகமாக சந்திக்கப் போகிறார்கள்.மணவாழ்க்கை ரீதியாக சந்தித்து வருகிற அனைத்து வித சச்சரவுகளும் முடிவுக்கு வரப் போகிறது.
விவசாயிகளுக்கு குறிப்பாக சித்திரை நட்சத்திரத்தினருக்கு உற்பத்திப் பெருக்கமும், நிலபுலன்களால் ஆதாயமும், புதிய நிலபுலன் சேர்க்கையும், பாட்டனார், முப்பாட்டனார் வகை சொத்து-பத்து ஆஸ்தி நிலங்களும் சேர்க்கையாகி பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கப் போகிற பெயர்ச்சி இது!
தொழிலதிபர்களுக்கு புதிய மேன்மைகளும், வளர்ச்சிகளும், ஏகபோகமாக காத்துள்ளது. பழைய தொழிலை விட்டு வெளிவரப் போகிறார்கள். புதிய தொழில் யோசனைக்கான முகாந்திரங்கள் நிறைய உருவாக இருக்கிறது. அயல்தேச தொழில் தொடக்கத்திற்கான திட்டங்கள் பெரியளவில் தங்களுக்கு தெரிந்த வி.ஐ.பி.களால் சிபாரிசுகள் கைக்கூடப் போகின்றன.
மாணவ -– மாணவிகளுக்கு தாய்வழி உறவுகளால் கல்விக்கான செலவு, உபகரணங்கள் அனைத்தும் மேன்மையாக கிடைக்கும். இனிமேல் கல்வி ரீதியான எந்த ஒரு தடையையும் சந்திக்கப் போவதில்லை.
அரசியல்வாதிகள் தங்களது நிலைமையை இன்னும் சற்றே உயர்த்திக் கொள்ளப் போகிறார்கள். இவர்கள் சுய ஜாதக தெசா புத்தியின் அடிப்படையில் சனிபகவான் சிம்மத்திலோ, விருச்சிகத்திலோ அல்லது மீனத்திலோ அமர்ந்திருப்பின் உயர்ப்பதவிக்கும், கட்சி ரீதியான, கட்சி தலைமை மேலிட ரீதியான சகாய அனுகூலங்களும் வரக்கூடிய சமயம் வாய்த்திருக்கிறது.
கன்னி ராசியினர் அனைவருக்கும் அடுத்து வருகிற 2 ½ ஆண்டுகாலக்கட்டத்திற்குள் வருகிற தமிழ் மாதங்களான தை, மாசி, வைகாசி, ஆனி, ஆடி மற்றும் கார்த்திகை மாதங்கள் வெகு விஷேசமாக இருக்கப் போகிறது. அதோடு இந்த 2 ½ ஆண்டு காலத்திற்குள் வருகிற ஐப்பசி, பங்குனி, மார்கழி, ஆவணி மாதங்கள் சர்வ கவனமாக நடைபோடணும்.
சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தவுடன் வருகிற 19 தினங்கள் இந்த ராசியினர் அனைவருமே புதிய விஷயங்களில் ஈடுபடாமலும், பெரிய பட்ஜெட், நிர்வாக விஷயங்களிலும் மூக்கை நுழைக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த ராசியினர் அனைவருக்குமே இந்த 2 ½ ஆண்டு காலக்கட்டத்திற்குள் வருகிற சுவாதி, பூரம், பூராடம், திருவோணம், அனுஷம், உத்திரட்டாதி மற்றும் திருவாதிரை நட்சத்திர தினங்கள் வெகு அற்புதமான சுபிட்ச உயர்வுகளையும் தரும்.
இந்த 2 ½ ஆண்டு காலமும் நவக்கிரக ஸ்ரீசுக்கிரனையும், சந்திர கிரகத்தையும் தொடர்ச்சியாக வழிபட்டு, சிவாலய ஸ்ரீ அம்பாளுக்கு பிரதி திங்கள்தோறும் இயன்ற அளவு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டுக்கொண்டிருக்க மிகப்பெரிய மாற்றங்களும், சுபிட்சங்களும் தானாக உருவாகும்.
துலாம்
துலாம்
(சித்திரை 3ம் பாதம், ஸ்வாதி, விசாகம் 1,2,3ம் பாதம்)
துலாம் ராசி வாசகர்களே!
இந்த ராசியினருக்கு சனிபகவானைப் போல் எவருமே அதாவது மற்ற எந்த கிரகங்களுமே பெரியளவில் கொடுத்து விட முடியாது என்பதால், இறைவனும், கிரகங்களும் உங்களது ராசியான துலாமுக்கு தராசு சின்னமான துலாக்கோலைக் கொடுத்தது போலவே, எதிலும் நேர்மையும், பரோபகாரமும் கொஞ்சம்கூட தன்னுடைய நியாயத்திலிருந்து நழுவாத குணத்தையும் கொடுத்து, நேர்மையின் பிடியிலேயே உங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம் இந்த ராசிக்கு மிக முக்கிய கிரகங்களான புதனும், சனியும் யோகாதிபதிகளாக வருவதால் இயற்கை யாகவே இவர்களுக்கு தந்தையால், தாயால் மிகப் பெரிய சொத்துபத்து நிரந்தரங்களையும், ஏழு தலைமுறை களுக்கு உண்டான செல்வச்செழிப்பினையும் இவர்களது இளவயதிலேயே மாபெரும் கொடுப்பினையாக கொடுத்து
இயற்கையாக இந்த ராசியினருக்கு சனிபகவான் மகரத்திலோ, மேஷத்திலோ, கடகத்திலோ, துலாம் ராசியிலோ ஜனன ஜாதகப் பிரகாரம் அமர்ந்துவிட்டாரெனில், இவர்களது வாழ்வு மிகப்பெரிய அசைக்க முடியாத செல்வச்செழிப்புக்கும், உயர்ப்பதவிக்கும், அரசியல் பதவிக்கும், அரசு சார்ந்த உத்தியோக பதவிக்கும், ஆளாக்கி தங்கத்தட்டில் பாற்சோறு சாப்பிடும் அளவிற்கு ஆளாக்கி விடக்கூடியவர். என்றாலும், மூன்று ஆண்டுகளாக குருபகவான், தன்னுடைய சுபவீடு சஞ்சாரங்களை மாற்றிக் கொண்டே இருந்தார். ஆனாலும் குருபகவான் இவர்களுக்கு கெட்டவர் என்பதால், அவரைப் பற்றி இவர்களுக்கான யோகப் பலன்களை கொடுப்பார் என்பது நிச்சயம் இல்லை.
‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்றபடி குருவாலும், சனியாலும் மிகப்பெரிய சந்தோஷ உயர்வுகள் இந்த அர்த்தாஷ்டமச்சனியிலும் கிடைக்கப் போகிறது. இப்போது 2020, டிசம்பர் 27ம் தேதி, சனிபகவான் தனது சுபஸ்தான சஞ்சார கதியை விட்டு நகர்ந்து 4ம் இடமான மகரத்தில் அமர்ந்து அர்த்தாஷ்டமச்சனியாக 2 ½ ஆண்டு காலத்தை நகர்த்தப் போகிறார். இதுவரை 3ம் இடத்தில் அமர்ந்திருந்த சனி வாரிசுகளின் கவலைகளை போக்க வைத்தார். அவர்களுக்கான எதிர்கால விஷயங்களை பூர்த்தி செய்ய வைத்தார். கல்யாணம் காட்சிகளை நடத்திக் கொடுத்தார். வாடகை வீட்டிலிருந்து குடிப்பெயர்ந்து சொந்த வீட்டிற்கு அதிபதியாக்கினார். இடிபாடுகளுடன் பாழாய் கிடந்த உங்களது மனை, கட்டடத்தை சீர்த்திருத்தி வெளிச்சமாக்கினார். ஆரோக்கிய பயத்தையும், ஆயுள் சம்பந்தமான பீதியைப் போக்கினார். பலவித பொருளாதார சிக்கல்களையும் ஒழுங்காக்கி உருப்படியான சந்தோஷத்தைக் கொடுத்தார். ஊதிய சம்பந்தக் கோளாறுகளை விலக்கி நிவர்த்தியான சரள ஊதிய சம்பளங்களை வழங்கச் செய்தார். உத்தியோக இடத்தில் எந்தவிதமான பிணக்கும் இல்லாமல் சக ஊழியர்களுடன் ஒற்றுமையை அதிகரித்து நிம்மதியாக பணியை பார்க்க வைத்தார். சேமிப்புகளை உயர்த்தினார்.
அதே நேரம் இந்தராசியினர் சிலருக்கு தேவையற்ற சச்சரவுகளையும், வழக்குகளையும், வாரிசு ரீதியான கவலைகளையும், பங்கு பாக பிரச்னைகளையும் உண்டாக்கி இருப்பார். அதாவது 2018, செப்டம்பருக்கு பிறகு. காரணம் சனிபகவானுடன், ராகு-கேது தொடர்பு ஏற்பட்டதே! எதிர்பாராத விரயங்களை சந்தித்திருக்கலாம், ஆசைப்பட்டது நிறைவேறாமல் போயிருக்கலாம்.
சில விஷயங்களில் குதர்க்கமான நடைமுறைகள் நிகழ்ந்தி ருக்கலாம். அதே நேரம் சித்திரை மற்றும் விசாக நட்சத்திரத்தாருக்கு சில வகை ஏற்றங்களும், மாற்றங்களும், உயர்வுகளும், அதிர்ஷ்டங்களும் எண்ணற்ற வகையில் இப்போது வரை கிடைத்துக்கொண்டு தான் இருக்கும். காரணம் சுப ஆதிபத்திய பலனில். சனியின் சஞ்சார நிலைமை ஓடிக்கொண்டிருப்பதே! அடுத்து குறிப்பாக 2020ம் ஆண்டு, ஜனவரி 16ம் தேதியிலிருந்து சுவாதி நட்சத்திரத்தினருக்கு கொஞ்சம் கெடுபிடியாகவும், விரயங்களாகவும், நகர்ந்துக்கொண்டிருக்கும். குடும்ப கெடுபிடிகள் அதிகரித்திருக்கும். இனி வரும் 5 ½ மாதங்கள் இந்த இரண்டு நட்சத்திரத்தாருக்கும் ஏகப்பட்ட சுபிட்சப் பலன்கள் தொடரவே போகின்றன அர்த்தாஷ்டமச் சனியிலும்! அதோடு 2ம் இடத்தில் உச்ச கேதுவும், 8ம் இடத்தில் நீச ராகுவும் துலாம் ராசியினர் அனைவருக்கும் சஞ்சாரத்தில் இருப்பதால் இடையிடையே குடும்பத்துக்குள்ளும், வெளிவட்டாரத்திலும் பேச்சு வார்த்தையிலும், நாணயத்திலும், கொடுக்கல் வாங்கலிலும், லேசாக இழுபறி, கிலேசம், சஞ்சலம் என்றபடி நகரலாம்.
மிகப் பெரிய யோகமான எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், திடீர் பணம், பொருள் வரவுகளும், குடும்ப சந்தோஷங்க ளும் ஏகப்பட்டதாக கரைபுரளப் போகிறதுதான்! அதனால் இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த பிறகு, துலாம் ராசியினரிடம் ஏகப்பட்ட வித்தை ஞான அனுபவங்கள் உருவாக இருக்கிறது. உத்தியோக பணி, பொறுப்பு, பதவிகளில் கொஞ்சம் கசக்கலான சூழல்கள் உழைப்பு அதிகரிப்புகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ற பாராட்டும் சன்மானமும், ஊதியமும் கண்டிப்பாக உண்டு. நிலுவைத் தொகைகள், வரவேண்டிய ஊதியங்கள், பென்ஷன் சம்பந்தப்பட்டவைகள், அன்றாட சம்பள வருவாய்கள் எல்லாம் கொஞ்சம் தடைப்பட்டுதான் கைக்கு வரப்போகிறது. தொழில், வியாபார, நிர்வாக விஷயங்களில் எல்லாம் உங்களது தனிப்பட்ட உழைப்பும், சுறுசுறுப்பும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த நிலைமை முற்றிலுமாக மாறுவதற்கு வருகிற 2021, ஜூன் மாத 4ம் தேதி வர வேண்டும்.
இல்லத்தார் விருப்பப்படுகிற விஷயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகளை எப்பாடுப்பட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள். சொத்துபத்து ரீதியான நன்மைகள் அதிகரிக்கப் போகிறது. இளவயது வாரிசுகளுக்கு திருமண சுபகாரிய விஷய நிறைவேற்றங்களை ஏற்படுத்தி விட இருக்கிறீர்கள். இந்த ராசி விசாகத்தினர் வயது கடந்து நிற்பின் ஆரோக்கியத்தில் வெகு அக்கறை காட்ட வேண்டிய காலகட்டமிது! குறிப்பாக இதய சம்பந்தமான நோய் பிரச்னையில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை சிகிச்சை விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அதே நேரம் இவர்களது சொத்துபத்து ஆஸ்திகளை தங்களது வாரிசு களின் பெயருக்கு மாற்றல் செய்யப் போகிறார்கள்.
சித்திரை நட்சத்திரத்தினர் வருகிற 2021, மார்ச் மாத 29ம் தேதியிலிருந்து வாழ்வில் பல வித சுபிட்ச அதிர்ஷ்ட ஏற்றங்களை சந்திக்கக்கூடிய யோகக்காலம் ஆரம்பமாகிறது. அதோடு இந்த நட்சத்திர இள வயது பெண்கள் தங்களது நட்பு வட்டத்திலும், உத்தியோக கல்வி நிறுவன இடத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை!
இந்த நட்சத்திர இளைஞர்கள் வண்டி, வாகன விஷயங்களை இயக்கும்போது அதிக வேகம் தவிர்க்கணும். போலீஸ் சம்பந்தமான பணிக்காக முயற்சித்து வருகிற இந்த நட்சத்திரக்காரர்கள் அனைவருக்கும் சட்டென்று பெரிய உத்தியோக பொறுப்பு போலீஸ் ரீதியாக அமையப்போகிறது. வருகிற பங்குனி, சித்திரை மாதங்களிலெல்லாம் இந்த ராசியினர் அனைவருமே சற்றே கவனமாக இருக்க வேண்டும். காரணம் செவ்வாயின் நிலைமை இந்த ராசிக்காரர்கள் அனைவருக்கும் சற்றே சரியில்லை!
பணம், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரித்து, சேமிப்புகளை உயர்த்தி இவர்கள் விருப்பப்பட்டதை எல்லாம் நிறைவேற்றித் தரப் போகிறார் சனிபகவான்! ஆக மொத்தம் இந்தச் சனிப்பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு 75 சதவீத ஏற்றங்களையே கொடுக்கப் போகிறது.
இந்த ராசி பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இனிமேல்தான் நினைத்தது நினைத்தப்படி ஈடேறி தங்களது வாழ்வு இனிக்கப் போகிறது. பல ஆண்டுகளாக ஆசைப்பட்டிருக்கிற விஷயம் நடந்து முடியும். ஆபரணங்கள் கழுத்தைவிட்டு, கை விரல்களை விட்டு நகராமல் வங்கியில் சென்று முடங்காமல் இருக்கப் போகிறது. சொந்த வீடு பாக்கியமும் உண்டாகி, வாடகை குடியிருப்பு சம்பந்தமான மனக்கசப்புகள் எல்லாம் தீரப்போகிற காலக்கட்டம்.
விவசாயிகளுக்கு சில நேரம் உற்பத்தி சார்பாகவும், தங்களது புது முயற்சி சார்பாகவும் சிற்சில தடங்கல்கள் 4ம் இட சனியால் ஏற்பட்டாலும், குருபகவான் தருகிற ஹம்ச யோக அதிர்ஷ்டத்தால் திடீர் உயர்வுகள், உற்பத்திப் பெருக்கம், லாப உயர்வு, புதிய நிலபுலன் சேர்க்கைகள் உண்டு.
தொழில் அதிபர்களுக்கு இதுநாள் வரை ஏற்பட்ட பட்ஜெட், நிர்வாக, அயலுார், அயல்தேச, அயல்மாநில தொழில்வகை கஷ்டங்களுக்கெல்லாம் இனிமேல்தான் இனிப்பான தீர்வுகள் காத்திருக்கின்றன.
மாணவ – மாணவிகளை பொறுத்தவரை கல்வி சார்ந்த உடமை, உபகரணங்களில் பாதுகாப்பாக இருக்கணும். ஆசிரியர்களின் அறிவுரைகளை மீறக் கூடாது. இந்த நிலைமைகலெல்லாம் வருகிற 2021, ஜூலை மாதத்துக்கு பிறகே நல்லப்படியாக சரியாகி கல்வி சார்ந்த, பெரிய உயர்வுகளை இவர்களுக்கு கொடுக்கப் போகிறது.
அரசியல்வாதிகள் தங்களது நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் உண்டாகி இருக்கிறது. அரசாங்க சம்பந்தமான கெடுபிடிகளையும், கோர்ட், போலீஸ் சம்பந்தமான நெருக்கடிகளையும் சில நேரம் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பார்த்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். அத்துடன் இந்த ராசி சுவாதியினருக்கு வருகிற ஆகஸ்ட் 2021-லிருந்து தான் அதிர்ஷ்டம்!.
பொதுவாக துலாம் ராசியினருக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து 16 மாதங்கள் முடிவதற்குள் அபரிமித சவுகரியங்களும், நிறைவேறாத ஆசைகளில் எல்லாம் சந்தோஷங்களும் கிடைக்கக்கூடிய நேரம் உருவாகி இருக்கிறது.
இந்தப் பெயர்ச்சி தொட்டு 2 ½ ஆண்டு காலத்துக்குள் வருகிற விசாகம், மூலம், திருவோணம், அவிட்டம், ரேவதி, ரோகிணி, திருவாதிரை, பூசம் நட்சத்திரம் வரும் தினங்களிலெல்லாம் எதிர்பாராத பரிசு, பண வரவுகளும், சுபிட்சங்களும் திடீர் ஏற்றங்களும், காரியங்களும் நடக்கப் போகிறது.
இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு 2½ ஆண்டுகாலத்திற்குள் வருகிற தமிழ் மாதங்களான மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி மாதங்களில் வெகு சிறப்பாக பெரிய முன்னேற்றங்களை கொடுக்கப் போகிற பெயர்ச்சி இது! அத்துடன் இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு வருகிற தை, மாசி, சித்திரை, வைகாசி மாதங்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும்.
இந்தப் பெயர்ச்சி ஆரம்பமானதிலிருந்து வருகிற ஒவ்வொரு அஷ்டமி திதியில் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டையும், ஏகாதசி திதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டையும் வைத்துக்கொண்டு, பிரதி வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் நவக்கிரக வலம் வர வேண்டியது அவசியமாக வைத்துக் கொண்டால் இந்த 2 ½ ஆண்டும் மிக மிக அற்புதம். ஒருமுறை திருநள்ளாறு சென்று ஸ்ரீஈசனையும், ஸ்ரீசனீஸ்வரரையும் வழிபடுக! நலம்.
விருச்சிகம்
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
விருச்சிகம் ராசி வாசகர்களே!
இளவயதிலிருந்தே வாழ்வின் எல்லா வித போராட்ட முனைக்கும் சென்று, அது சார்பான அனுபவ ஞானங்களை மனதுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு, கால நேரம் வரும்பொழுது கணக்கச்சிதமாக காரிய சாதனை படைத்து விடும் விருச்சிக ராசியினர். இந்த ராசியில் பிறந்ததற்காகவே பெருமை படைத்தவர்களான காலபுருஷ லக்னத்துக்கு 8வது பாவமான கிரக கிரமமாய், 3வது கிரகமான செவ்வாயின் ஆதிக்க பலம் பெற்ற அவரது ஆட்சி வீட்டையும் அடைந்த முழு செவ்வாய்க்கிரகத்தின் ஆதிக்கம் பெற்றவர்களான உங்களுக்கு ஏழரை முடிகிறது.
உங்களை சனிபகவான் 2011, டிசம்பர் மாத 21ம் தேதி முதல் உண்டு, இல்லை என்று உங்களைப் போட்டு பல களத்திலும், புரட்டி எடுத்திருப்பார். காரணம் அவருடைய சுற்றுப் பிரகாரம் அந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு ஏழரையை துவக்கியதுதான்! அதிலிருந்து உங்களை எவருமே, ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. பொதுவாக, சனிபகவான் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. மேஷ, கடக, சிம்ம, விருச்சிக ராசி அன்பர்களை காரண காரியமில்லாமல், அவரது கோபத்தைக் காட்டுவது உங்கள் ராசியிடம் மட்டும்தான் என்று கூட சொல்லிவிடலாம்.
அந்த வகையில் 2011ம் ஆண்டின் இறுதியில் விரய சனியாக உங்கள் ராசியை பிடித்துக்கொண்ட சனிபகவான் உங்களால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் அடித்து உடைத்து துவம்சம் செய்தார். ஒவ்வொரு விஷய முயற்சியும், பல நுாறு இழுபறிகளைக் கொடுத்த சம்பவங்கள், உறவுகள் அனைத்தும் விரோதமாக மாறிப்போன நிலைப்பாடு.
மாதம் ஒரு முறை கோர்ட்டுக்கும், போலீசுக்கும் எதற்காகவோ நடையாய் நடந்து கால் தேய்ந்து போன கடுமைகள், என்று இதுவரை தொடர்ந்தன! தொழில், வியாபார, நிர்வாக இடங்களை பூட்டிப் போட வைத்து ஒட்டடை படிந்து போன நிலைகள் என்று இன்னும் இந்த உலகத்தில் என்னென்ன துயரங்கள் உண்டோ அத்தனையையும் ஒட்டு மொத்தமாக அனுபவித்து முடித்து, இனிமேலா நமக்கு வாழ்வு உயரப் போகிறது என்றபடியான அவநம்பிக்கையின் எல்லை வரை வந்து, ஏதோ ஒருதுளி நம்பிக்கையை வைத்துக்கொண்டு, உங்கள் எதிர்பார்ப்புகள் சார்பாக முன்னேற்றத்துக்கான ஊற்றுக் கிணற்றை சற்றே எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள் இதுவரை!
ஆக! உங்களுக்கு வந்துவிட்டது விடுதலை தருவதற்கான மஹா சனிப்பெயர்ச்சி இந்த 27.12.2020 முதல்! ஆக, உங்களுக்கான செழிப்பின் துாரம் வெகு துாரமில்லை! சற்றே எட்டிப்பிடித்துவிடும் சொற்ப அடிகள்தான் இருக்கிறது. இதுவரை எண்ணற்ற அடிகளை தாங்கிய உங்களுக்கு, இந்த சொற்ப அடிகள் பெரிதா என்ன? ஒரே பாய்ச்சலில் எட்டிப்பிடித்து உங்களுக்கான உயர்வு களத்தை படுலாவகமாக செதுக்கிக் கொள்ள ஆரம்பிக்கப் போகிறீர்கள்!
அப்படி இருக்க இந்த சனிப்பெயர்ச்சி ஆகி 3ம் இடமான வெற்றி, வீர, ஜெய பராக்கிரம வீரிய ஸ்தானத்தில் வந்து அமரப்போகிறது. இதன்மூலம் உங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய திருப்பங்கள்தான் நடக்கப் போகிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் 33 வயது முதல் 48 வயதுக்குள் இருப்பின், 2011ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டான 2020க்குள் வீடு கட்டியிருப்பார்கள், திருமணம் ஆகி இருக்கும், புதிய சொத்துக்களுக்கு அதிபதியாகி இருப்பார்கள்,
ஒன்றுக்கு, இரண்டாக சொத்துபத்து, வீடு, மனை, கட்டட யோகங்கள் ஏற்பட்டிருக்கும். வங்கி இருப்பு அதிகரித்திருக்கும். எல்லா கடுமையும் எளிதாக கண்ணுக்கு புலப்பட்டிருக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரித்திருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதித்திருப்பார்கள், எல்லாரையும் காப்பாற்றுகிற வல்லமை உண்டாகியிருக்கும்.
காரணம் இந்த வயதுக்காரர்களுக்கு இப்போது ‘மலர்சனி’ காலம் என்று சொல்லக்கூடிய அதிர்ஷ்ட பொங்கு சனிக்காலம் அதனால்தான்! ஆக இவர்களுக்கு ஏற்பட்ட திருப்தி என்பது மலையளவையும் தாண்டி, நிச்சயம் நடந்திருக்கும்.
அதே நேரம் 1961ம் ஆண்டு முதல் 1966 ஆண்டுக்குள் பிறந்திருக்கிற இந்த ராசிக்காரர்கள் ஏன்தான் பிறந்தோமோ என்றபடியான சம்பவங்களை தான் தொடர்ச்சியாக அனுபவித்து முடித்திருப்பார்கள்.
போகட்டும்! நடந்ததெல்லாம் நடந்தபடியாகவே இருக்கட்டும்! இழந்தது எவ்வளவு பெரிய செல்வமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! சனிபகவான் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டாரே அதுவே போதும்! காரணம் சுவர் இருந்தால்தானே சித்திரம்.
விபத்து ரீதியாக உடம்பில் சேதமடைந்த உறுப்புகள் மீண்டும் நல்லபடியாக பணிசெய்ய போகிறது. காயம்பட்ட தழும்புகள் மறைந்துவிட இருக்கின்றன. மறைமுக நோய் தொந்தரவும் தானாக வந்து ஒட்டிக்கொண்ட நோயும், மருந்து மாத்திரை சாப்பிடாமலேயே காணாமல் போக இருக்கிறது.
எனவே, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, துடைத்து துாக்கிஎறிந்துவிட்டு, நடக்கப்போகும் அற்புதங்களுக்காக உயர்வு அதிர்ஷ்டங்களுக்காக உங்களை தயார்ப்ப டுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் ஒவ்வொன்றும் இனிமையாக உங்களுக்கே தெரியும். இங்கேதானே நல்லது இருக்கிறது. நாம் வேறு எங்கேயோ போய் தேடிக்கொண்டிருந்தோமே என்று ஆச்சரியப்படும்படியான உயர்வுகள் உங்கள் அருகிலேயே நிற்கப் போகின்றன. இதுவரை உங்களிடம் முரண்பாடாக நகர்த்திய வாழ்க்கைத்துணை அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்க வில்லை என்றபடியான மனநிலைக்கு திரும்பப் போகிறார்.
வழக்கு, சொத்துபத்து கோளாறு, கோர்ட், போலீஸ் பிரச்னைகள், பூர்வீக சொத்து சார்பான சங்கட இழுபறிகள், சேர வேண்டிய பங்கு பாகங்கள் அனைத்தும் விரும்பிய படியே நடக்கப் போகிறது. வாழ்க்கைத்துணைக்கு அவரது பிறந்த வீட்டு சார்பாக கிடைக்க வேண்டிய ஆஸ்திகள், உங்களது பெயருக்கு மாற்றமாகப் போகிறது. வாரிசு பாக்கிய குறையும், நீண்ட காலமாக புத்திர பாக்கியமில்லாத சங்கடத்திற்கும் தீர்வைக் கொடுத்துவிடும்.
பந்தய லாபங்கள் உண்டு. போட்டிகளில் வெற்றி உண்டு. எதிர்பாராத தொகை வரவு கைகளுக்கு கிடைத்து க்கொண்டே இருக்கும். உத்தியோக, பதவி, பணி, பொறுப்புகளில் எல்லாம் பல பெரிய நிம்மதி ஏற்பட்டு, சந்தோஷகரமான தொடர்ச்சிகள் ஏற்படும். ஊதிய சம்பளக் கோளாறுகள் விலகிவிடும். ஊதிய சம்பந்தமான நிலுவைத்தொகைகள் திடீரென்று கைக்கு வரப்போகிறது.
குறிப்பாக இப்போது அனுஷ நட்சத்திரத்தினர் 2020, பிப்ரவரி 3ம் தேதியிலிருந்து பட்டு வருகிற அல்லல்கள் எல்லாம் மெல்ல மெல்ல மாறிவிடும். அதிலும் வருகிற 2021, மார்ச் மாத 12ம் தேதியிலிருந்து இவர்களுக்கு ஏகப்பட்ட செழிப்பு மாற்றங்கள், அதிர்ஷ்டங்கள், உயர்வுகள் தொடங்கப் போவதால், அதுவரை மெல்ல நிதான செயல்பாடு வைத்துக்கொள்வதே நலம்.
விசாகம் மற்றும் கேட்டையினருக்கு இந்த பெயர்ச்சி தொட்டு வருகிற 2021, மே மாத 7ம் தேதிக்குள் அட்டகாசமான உயர்வுகள், அதிரடி செழிப்புகள், சுபகாரிய சந்தோஷங்கள் என்று ஏகபோக களேபரங்கள் நடந்துக்கொண்டே வரப்போகின்றன.
இந்த ராசி பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இனிமேற் தொட்டு எவ்வித குடும்ப சங்கடமும், வாழ்க்கைத்துணை ரீதியான சஞ்சலமும் ஏற்படாது. உடல்நல ரீதியாக சந்தித்த அனைத்து கடுமைகளும் விலகப் போகிறது.
இந்த ராசி மாணவ - மாணவிகளுக்கு தாய்வழி உறவுகளால் கல்விக்கான செலவுகளுக்கு சரளமான உதவிகள் பணரீதியாக கிடைக்கப் போகிறது. இதுவரை கல்வி ரீதியாக சந்தித்த, அனைத்து சங்கடங்களுக்கும், தடைப்பட்டுவிட்ட கல்விக்கும், விடிவுகாலம் தொடக்கம்.
விவசாயிகளுக்கு குறிப்பாக அனுஷ நட்சத்திரத்தினர் சந்தித்துவரும் அத்தனை இழப்புகளும், விரயங்களும், உற்பத்தி சேதங்களும், நிறைவுக்கு வந்து நஷ்டங்கள் ஈடுகட்டப்பட இருக்கிறது. அரசாங்க உதவி உண்டு. இதுவெல்லாம் வருகிற 2021, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து இன்னும் சற்று உயர்வான அதிர்ஷ்ட திருப்திகளை கொடுக்கும்.
தொழிலதிபர்கள் தங்களது திறமை சார்பான பெரிய தொழில் நிறுவனங்களை தொடங்கப் போகிறார்கள். தங்களது நிலை உயர பெற இருக்கிறார்கள். அயல்தேசத்தில் இருக்கிற தங்களது பெரிய தொழிலை, நிர்வாகத்தை எவரிடமாவது ஒப்படைத்து விட்டு, லாபத்தை மட்டும் பார்க்கப்போகிறார்கள் மாபெரும் அதிர்ஷ்டம் தொடக்கமாகியிருக்கிறது இந்த பெயர்ச்சிதொட்டு!
அரசியல்வாதிகள் வருகிற 2021, ஜனவரி 5ம் தேதியிலிருந்து ஒவ்வொரு தங்களது நடவடிக்கையையும், செம்மையாக திட்டமிட்டு, கட்சி மேலிடத்திலிருந்து பாராட்டையும், புகழையும் அடைந்து, வருகிற தேர்தலில் பெரும்பாண்மை வெற்றி பெறப் போகிற உன்னதமான உயர்வுகாலம் ஆரம்பமாகியிருக்கிறது. குறிப்பாக கேட்டை மற்றும் விசாகத்தினருக்கு!
பொதுவாக விருச்சிகத்தார் அனைவருக்கும் இந்த 2½ ஆண்டு காலத்துக்குள் வருகிற தமிழ் மாதங்களான தை, சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்கள் மிகப்பெரிய திருப்பங்களை தரப்போகின்றன. பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை இந்த மாதங்களில் உண்டு.
இனிவரும் 2½ ஆண்டினில் வருகிற மூலம், பூராடம், திருவோணம், பரணி, ரோகிணி, பூரம், உத்திரம், சுவாதி நட்சத்திர தினங்களில் எல்லாம் எதிர்பாராத உயர்வு, அதிர்ஷ்டங்கள் நிச்சயம் உண்டு.
இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கிய பிறகு, பிரதி வெள்ளிதோறும் ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சந்தனக் காப்பிட்டு, அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வருவது நலம். தொடர்ந்து ஓராண்டுக்கு கஞ்சனுார் ஸ்ரீஅக்னிபுரீஸ்வரரை சென்று தரிசனம் செய்து கொள்ளவும். ராகு-கேது ப்ரீதி பரிகாரம் செய்து வழிபட்டுக் கொண்டிருக்க எல்லா நலனும் கைக்கூடும்.
தனுசு
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசி வாசகர்களே!
வாழ்வில் 46வது வயதுக்குப் பிறகு மிகப் பெரிய செல்வ, சுகபோக அந்தஸ்துகளை தனது உழைப்பாலும், நேர்மையாலும், கவுரவத்தாலும், நாணயத்தாலும் அதிரடியாக அடைந்து விடுகிற உங்களுக்கு 6 ½ ஆண்டுகளாக சனிபகவானாலும், குருவாலும், ராகு-கேது மற்றும் மற்றபிற கிரகங்க ளாலும் காரண காரியமற்ற அவஸ்தைகளை இனம் புரியாமல் அடைந்து, உங்களது சுயசம்பாத்தியத்தால் அடைந்த செல்வத்தை எல்லாம் 75 சதவீதம் இப்போது இழந்துள்ள நிலையில் இந்தச் சனிப்பெயர்ச்சி 2ம் இடத்துக்கு வந்துவிட்டது!
உங்களது போராட்டங்களிலெல்லாம் இதுவரை கண்மண் தெரியாத அளவு ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளோடு நீடித்தது. குறிப்பாக மாத கிரகங்களான சூரியன், புதன் மற்றும் செவ்வாய்க் கிரகத்தால், இதுவரை அதாவது கடந்த ஏழு ஆண்டுகளாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டி ருக்கிறீர்கள்.
உங்கள் ராசிக்கு கெட்ட இரு கிரகங்களான சுக்கிரன் மற்றும் சந்திரனாலும் இந்த இடைப்பட்ட ஏழு ஆண்டுகள் சனியோடும், கண்டக ராகுவோடும் சேர்ந்துகொண்டு பலவித இன்னல்களையும் சந்திக்க வைத்தார்கள் இவர்கள்!
அடுத்ததாக 2018ம் ஆண்டு துவக்கத்திலிருந்து, உங்களது நிலைமை எல்லா விஷயத்தின் பொருட்டும் அப்படியே தலைகீழாக மாறி, உங்களை பொருளாதார ரீதியாகவும், மற்ற பிற விஷயங்கள் சார்பாகவும், வெளிவட்டார பழக்கவழக்கங்கள் சார்பாகவும், கொடுக்கல்-வாங்கலிலும், பெரிய தொகை பண விஷயத்திலும் ஏகப்பட்ட பின்னடைவு களை சம்பந்தமில்லாத சச்சரவுகளை, இழப்புகளை, நாணயக் கோளாறுகளை, அவமானங்களை சந்திக்க வைத்தன.
இனிமேல் இந்த 2020, டிசம்பர் மாத 27ம் தேதி தொட்டு, பலவித பிரச்னைகளில் இருந்தும் நீங்கள் திட்டவட்டமாக வெளிவரப் போவதை சனிபகவானே சொல்கிறார் நிச்சயமாக கஷ்டங்களிலிருந்தெல்லாம் மீளப் போகிறீர்கள்!.
தகுதி குறைந்த நபர்களால் உங்களது கவுரவ, மரியாதை, அந்தஸ்துகளுக்கு ஏற்பட்ட இழுக்குகள் எல்லாம் மறையப் போகிறது. வம்பு, தும்பு சச்சரவுகள் தீர்வுக்கு வரப்போகின்றன. சொத்துபத்து பங்கு, பங்காளி வகை, சண்டை சச்சரவுகளும், ஏமாற்ற நினைத்த போக்குகளும் மாறப் போகின்றன.
அடுத்து இந்த 2ம் இட சனிக்கான ஜோதிட பாடல்!
“பாரப்பா பானு மைந்தன் பால் மதிக்கு
இரண்டில் மேவ செம்பொன்னும் சிவசிவா கிட்டுமடா!” -என்கிறது.
ஆக 2ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி வந்திருக்கிற இந்த சனிபகவானால், உங்களது கஷ்டங்கள் அனைத்தும் தொலையப் போகிறது. மீள முடியாத பிரச்னைகளில் இருந்தெல்லாம் வெளிவரப் போகிறீர்கள்.
புதிய சிக்கல்கள் முளைக்காது. தேவையற்ற அவதுாறுகளில் மாட்டப் போவது இல்லை. வர வேண்டிய உங்களது பெரிய தொகைகள் அனைத்தும் சட்டென்று கைக்கு வந்து விட இருக்கிறது. அதனைக் கொண்டு கடன்களில் இருந்து மீளப் போகிறீர்கள். புதிய சந்தோஷம் மனதுக்குள் மலரப் போகிறது. காரண, காரியமற்ற நெருக்கடிகள், உறவுகள்ரீதியான சிக்கல்கள் எல்லாம் தவிடுபொடியாகப் போகிறது.
இப்போது ஜென்ம சனியாக தனுசு ராசியினருக்கு இருந்தாலும், குறிப்பாக பூராட வாசகர்களுக்கு மட்டும் 2020, ஜனவரி 6ம் தேதியிலிருந்து மிகப் பெரிய உயர்வு மாற்றங்கள் சந்தோஷங்கள், செல்வ சேர்க்கைகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. அதேநேரம் சந்திர திசையில் செவ்வாய் திசையில் ஜனன ஜாதகப் பிரகாரம் இப்போது உள்ள இந்த ராசியினருக்கு மிக மிக கெடுபிடியான பலன்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஜென்மச்சனியால் என்று சொல்லணும். அதே நேரம் மூலம் மற்றும் உத்திராட நட்சத்திரனருக்கு 2020 துவக்கத்திலிருந்தே ஏகப்பட்ட இன்னல்கள், கடன் சிக்கல்களிலிருந்து வெளிவர முடியாத சூழல், நாணய பங்கம், மிகப் பெரிய தடைகள், வாரிசுகளை கரை சேர்க்க முடியாமை, தொழில், வியாபார, நிர்வாக முடக்கங்கள், உத்தியோக, பதவி, பணிவிலகல் போன்றவை களெல்லாம் ஏற்பட்டு இவர்களை செக்கில் மாட்டிக் கொண்ட எலியாக ஆக்கியிருக்கிறார் சனிபகவான்!
சரி! இனிமேல் எப்படி இருக்கப் போகிறது? நன்றாகவே இருக்கப் போகிறது. பொருளாதார நிலைமை என்ன சொல்கிறது? அற்புதமான செழிப்போடு இருக்கப் போகிறது. அனைவரும் மதிப்பு கொடுப்பார்களா?, கொடுக்க மாட்டார்களா? நிச்சயமாக இனிமேல் தான் மதிப்பு அதிகரிக்கவே போகிறது. குடும்ப நிலைமை எப்படி இருக்கும்? அற்புதமான குதுாகலத்தோடு நீடிக்கும். சொந்த வீடு கட்டலாமா? நிச்சயமாக கட்டத் துவங்கலாம். அதற்கான சுப விரய காலம் ஆரம்பமாகிவிட்டது. வாரிசுகளை நல்லபடியாக மணவாழ்க்கைக்காக கரம் பிடித்து கொடுக்கலாமா? நிச்சயமாக அதிலென்ன சந்தேகம்! கண்டிப்பாக களம் இறங்கி விடலாம்.
உங்களை மருத்துவர் ஆரோக்கிய வகையில் எச்சரித்துள்ள விஷயத்துக்கு என்ன செய்வது? அதுவெல்லாம் ஒன்றுமில்லை, துாசியாக பறந்துவிடும். வெளியூர் தொழில் தொடங்கலாமா? ஆயத்தமாகி விட்டீர்கள் அதிலென்ன கேள்வி!
எனவே 40 சதவீதம் தனுசு ராசியினர் அனைவரும் பரிகார ராசிக்கு உட்பட்டவர்களாக இந்த காலக்கட்டத்தில் இருந்தாலும், மிகப்பெரிய அற்புத மாற்றங்களும், இந்தப் பெயர்ச்சி தொட்டு தான் நிகழப் போகிறது.
பூராட நட்சத்திரத்தினருக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து வருகிற 2021, ஏப்ரல் மாத 17ம் தேதி வரை மிகப்பெரிய சந்தோஷ சம்பவங் களும், சுபகாரிய குதுாகலங்களும், திருமண நிறைவேற்றங்களும், குலதெய்வ பிரார்த்தனை நிறைவு சந்தோஷங்களும் உண்டு இனிமேல்.
மூலம் நட்சத்திரத்தினருக்கு இந்தச் சனிபகவான் பெயர்ச்சியானதிலிருந்து சனிபகவானால் கிடைக்க வேண்டிய சுபயோக சுபிட்ச பலன்கள் எல்லாம் வருகிற 2021, மார்ச் மாத 2ம் தேதியிலிருந்து தான் படு தடாலடியான யோக வளர்ச்சிகளை கொடுக்கப் போகிறது. எந்த வித தொல்லை தொந்தரவும் இருக்காது.
உத்திராட நட்சத்திரத்தினர் தற்காலமே ஆரோக்கிய வகை சிக்கலாலும், அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட சங்கடத்தாலும், இதய நோய் கோளாறாலும் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நிலைமைக்கெல்லாம் விடுதலை வருகிற 2021, மார்ச் மாத 14ம் தேதியிலிருந்து ஒரு வழியாக கிடைத்து விட இருக்கிறது.
எனவே இந்தச் சனிப்பெயர்ச்சியால் எந்த வித உள்மன கிலேசமும் அடைய வேண்டாமென தனுசு ராசியினர் அனைவருக்குமே சொல்ல வேண்டியி ருக்கிறது. இந்த ராசியினருக்கு பாதசனி நடந்துக் கொண்டிருப்பதால் நிச்சயமாக கை, கால்களில் எதிர்பாராத காயம் ஏற்பட, விபத்துகளால் வாய்ப்புண்டு!
பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் மிக யோகமான காலம் உருவாகியிருக்கிறது. எல்லா வகையிலும் பெரியதொரு திருப்தி நிச்சயமாக கிடைக்கும். இவர்கள் இழந்த இழப்புகள் அனைத்தும் ஈடுகட்டப்பட இருக்கிறது.
விவசாயிகள் குறிப்பாக பூராடத்தினர் அடுத்து வருகிற அறுவடை காலங்களில் மாபெரும் மகிழ்ச்சிகளை ஏகபோகமான லாபமாக அனுபவிக்கப் போகிறார்கள். மூலம் மற்றும் உத்திராட நட்சத்திரத்தினர் வருகிற சித்திரை மாதம் தொட்டு தான் சிறப்பான லாப வளர்ச்சிகளை சந்திக்கப் போகிறார்கள்.
மாணவ - மாணவிகள் குறிப்பாக மூலம் மற்றும் உத்திராடத்தினர் தங்களது கல்வி விஷய நடவடிக்கைகள் அனைத்திலும் வருகிற 2021, மார்ச் மாத 27ம் தேதி வரை சிரத்தையோடு கவனப்படுத்திக் கொள்ளணும். அதன்பிறகு கல்வி நலன் அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள் உள்ளூர் தொழிலை விட்டு, அயலுாரில், அயல் தேசத்தில் தொழில் தொடங்கக்கூடிய காலக்கட்டம் உதயமாகிவிட்டது. புதிய வி.ஐ.பி.கள் கூட்டாளிகளாக உங்களது நிர்வாகத்தில் பெரிய பட்ஜெட்டில் இணையப் போகிறார்கள். பெரிய லாபத்தை சந்திக்க ஆரம்பித்து விடலாம். பூராடத்தினருக்கு இப்போதே ஏகபோகமான லாப உயர்வுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
அரசியல்வாதிகள் இந்தச் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு கொஞ்சம் போராடித்தான் தங்களது கட்சிப்பணி ரீதியாக வெற்றியை சந்திக்க முடியும். அதே நேரம் வருகிற 2021, ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு சக கட்சியினரின் பதவிகள் பிடுங்கப்பட்டு, உங்களுக்கு தரப்படலாம்!.
இந்த 2½ ஆண்டு காலத்துக்குள் வருகிற உத்திராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை மற்றும் பூரம், அஸ்தம் நட்சத்திரம் வரும் தினங்களிலும் சஷ்டி மற்றும் தசமி திதி வருகிற நாட்களிலும் ஏகபோக சுபிட்சங்கள் உயர்வுகரமாக கிட்டப் போகிறது.
இந்த 2½ ஆண்டு காலத்துக்குள் வருகிற புதன், சனி மற்றும் வெள்ளிக்கிழமைகள் எல்லாம் சூப்பர் உயர்வுகளை கொடுக்கப் போகிறது. இந்த 2½ ஆண்டு காலத்துக்குள் வருகிற தமிழ் மாதங்களான வைகாசி, புரட்டாசி, ஐப்பசி மற்றும் மாசி மாதங்கள் வெகு அற்புதமாக இருக்கப் போகிறது. வருகிற பங்குனி மாதம் மட்டும் சற்றே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த 2½ ஆண்டும் தொடர்ச்சியாக தனுசு ராசிக்காரர்கள் நவக்கிரக செவ்வாயையும், சனியையும் அததற்கு உரிய கிழமைகளில் தொடர்ச்சியாக வழிபட நினைத்த காரியம் அனைத்தும் சித்தியாகும். உங்களது ஜென்ம நாளில் அதாவது நீங்கள் பிறந்த கிழமையில் திருநள்ளாறு சென்று ஸ்ரீதர்பாரண்யேஸ்வரரை வழிபாடு செய்ய நலன்கள் கண்டிப்பாக சித்திக்கும்.
மகரம்
மகரம்
(உத்திராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்
மகரம் ராசி வாசகர்களே!
இந்த ராசியினர் 1970ம் ஆண்டுக்கு பிறகு ஒன்பது ஆண்டுகளுக்குள் பிறந்திருப்பின், இந்த ஏழரையின் விரய சனி காலம் 2018ம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து நல்லபடியாகத்தான் செழிப்பாக, அதிர்ஷ்டமாக, உயர்வாக வைத்திருக்கிறார். வீடு வாசல் யோகத்தை கொடுத்தி ருப்பார். திருமண தாமதத்தை விலக்கி திருமண நிறைவேற்றத்தை உண்டாக்கியிருப்பார். எதிர்பாராத பல மேன்மை சுபிட்சங்களை அடுக்கடுக்காக கொடுத்திருப்பார்.
நிகரில்லா ராசி!, சிகரம் தொடும் ராசி!, வழக்கை அறுத்து விடும் ராசி! என்றபடியெல்லாம் உங்கள் ராசிக்காக வர்ணனைகள் செய்து வைத்தாலும், 3 ½ ஆண்டு காலமாக நீங்கள் பட்ட அல்லல்கள் உங்களுக்கே வெளிச்சம்! சனிபகவான் உங்கள் மீது சொந்தம் கொண்டாடி, 3 ½ ஆண்டுகளாக உங்களைப் போட்டு புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார். சில நேரம் மறைமுகமாக அடிக்கிறார்! பல நேரம் நேரடியாகவே வந்து தாக்குகிறார். விரயம் என்றால் அப்படி ஒரு விரயம்! கடன்கள் உயர்வு என்றால் சொல்லவே வேண்டாம்! இந்த நிலைமையில் கண்களில் உங்களுக்கு ரத்தம் வராத குறைதான் என்று சொல்லிவிடலாம்! அதிகாலையில் நீங்கள் விழித்துக் கொண்டீர்களோ இல்லையோ, எல்லாருக்கும் முன்னதாக உங்களுக்கு கடன் கொடுத்தவர் விழித்து, வீட்டுவாசலில் வந்து நிற்கும்போதுதான் உங்களது ரத்தமே சுண்டியிருக்கும்.
ஆனால், பொதுவாக 56 வயதை கடந்திருப்பவர்களுக்கு 2018ம் ஆண்டு முதல் அல்லல்களோ அல்லல் என்று இவர்களது சங்கடங்களையெல்லாம் கூவிக்கூவி விற்கும் படியாக கூடை நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தாக்குப்பிடிக்கிறார்கள், தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னமும் தாக்குப் பிடிப்பார்கள்.
இப்படியாகத்தான் இவர்களது எந்தக் கதையை கேட்பது என்றபடியாக சனிபகவான், குருபகவானுடன் சேர்ந்து கேதுவுடனும் கூட்டணி வைத்து, கடந்த 11 மாதங்களாக பந்தயத்துக்கு தண்ணீரில் மூழ்கி மூச்சை அடக்கினால், மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என்று சொல்லிவிட்டு, நீரில் மூழ்கியப் பிறகு, இவர்களை ஈட்டியைக் கொண்டு குத்தியதுபோல இவர்களது சோகம் படு துயரமானது!.
இப்போது நிகழப் போகிற ஜென்மச்சனியால் என்னவெல்லாம் நடக்கும் இவர்களுக்கு! நல்லதும் நடக்கும், இடையிடையே இடையூறும் ஏற்படும். ஆனால் பாதகம் ஏதும் ஏற்பட்டு விடாது! விருந்து பந்தியில் அமரலாம். ஆனால் இனிப்பு இருக்காது என்றபடி தான் நகரும்.
அதே நேரம் 2020, ஏப்ரல் மாதத்திலிருந்து திருவோணத்திற்கும், அவிட்டத்திற்கும் ஓரளவு சுபிட்சமான நற்பலன்களும், சுப விரயங்களும், திருமண சுபகாரிய சந்தோஷங்களும் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. அதே நேரம் 2020, ஏப்ரலில் இருந்து உத்திராடத்தினர் அனைவரும் மிகப்பெரிய சச்சரவுகளுக்கும், தொல்லை தொந்தரவுகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவமனையிலிருந்து மிகப்பெரிய ஆபத்துக்காக படுத்து எழுந்திருக்கிறார்கள். கையில், காலில் கட்டை போட்டுக்கொண்டு பலரது பணிவிடைகளையும் எதிர்பார்த்திருந்தார்கள்.
பொதுவாக மகர ராசிக்கு, இந்த ஜென்மச்சனிக் காலத்தில், ஜென்ம குருவின் நேரத்தில் காப்பாற்றப் போகிற ஒரே கிரகம் 11ல் அமர்ந்திருக்கிற உச்ச கிரகமான கேதுவே! அதோடு மகர ராசியினர் அனைவருக்கும் எப்போதுமே கேது கிரகத்தால் தடாலடியான உயர்வு சந்தோஷங்கள், லாப வரவுகள், திடீர் அதிர்ஷ்டங்கள் பரிசு, பண ஆதாயங்கள் என்று எந்த நேரத்தில் கிடைக்கும் என்று இவர்களுக்கே தெரியாது. என்பதால் இந்த ஏழரைச்சனியின், ஜென்மச்சனிக்காலத்தை கண்டிப் பாக, கவலையாக மாற்றிக் கொள்ள வேண்டாம்.
அதற்கு வருகிற தமிழ் புது வருடமான பிலவ ஆண்டு துவங்க வேண்டும். அதோடு இப்போது ராசிக்குள் இருக்கிற குரு, சனி சேர்க்கை நீச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்துவதால், அற்புதமான சிறப்பு சந்தோஷங்கள் கண்டிப்பாக குருவால் உண்டு! அதாவது திடீர் தனயோகம் கிடைக்கும். எதிர்பாராத பண, ஆதாய வரவுகளும் உண்டு.
அடுத்ததாக 5ல் அமைந்திருக்கிற ராகுவால், சனிபகவானின் கெடுபிடி பலன்கள் குறைந்துவிடும். ஏற்றஇறக்கமில்லாத சீரான வாழ்வு நடைபோடும். மற்றபடி இந்த ஜென்மச்சனியின் காலத்தில், அடுத்து வருகிற ஓராண்டு காலம் கழித்து, 2ம் இடத்துக்கு குரு நகர்ந்த பிறகு பலப்பல ஏற்றங்கள் எளிதாக நிகழும்.
பிறருக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு பிரச்னை களத்தில் இறங்கிவிடக் கூடாது. ஜாமீன் விவகார தலையீடுகள் வேண்டாம். நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக சாத்தியமில்லாத நடவடிக்கைகளில் குதித்து விடக்கூடாது. உறவுகளின் பிரச்னைகளில் தலையிடக்கூடாது. அத்துடன் சகோதர, சகோதரிகள் உங்களிடமிருந்து எவ்வளவு வாங்கிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு தொகைகளையும் வாங்கிக் கொண்டு விடுவார்கள்!,
மற்றபடி உத்திராட நட்சத்திர இளம் இருபாலரும், இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு, அடுத்து வருகிற 2 ½ மாதங்கள் சர்வ கவனமாக பிற நட்பு விஷயத்திலும், வாகன விஷயத்திலும் கவனமாக இருக்கணும். கவுரவ விஷயங்களில் கவனமாக இருக்கணும். பண சேமிப்புகளில் நாட்டம் வைக்கணும். அநாவசிய, ஆடம்பர நாட்டங்களை விலக்கணும்.
பிற நட்புகளின் பிரச்னைகளுக்காக தலை கொடுக்கக்கூடாது. மருந்து, மாத்திரை சம்பந்தமானவைகளிலும், சிகிச்சை விஷயத்திலும் கவனம் தேவை! மருத்துவரின் ஆலோசனைகளை தட்டக்கூடாது.
சக ஊழியர்களிடம் எந்த கருத்து விமர்சனங்களையும் பரிமாறிக் கொள்ளக் கூடாது. தவறுகிற பட்சத்தில் அதிகப்படியான சச்சரவுகளை சந்திக்கக்கூடும் கவனம்!
தொழில், வியாபார, நிர்வாக பட்ஜெட் விஷயங்களில் எல்லாம் கண்ணும், கருத்துமாக இருக்கணும். புதிய முதலீடு விஷயங்களிலும் நிதானமாக இருக்கணும். எதிர்ப்பு, வழக்கு, கடன் விஷயங்களை சாதுரியமாக எதிர்நோக்க கற்றுக் கொள்ளணும்.
அதேசமயம், திடீர் பணம், பொருள் சேர்க்கை ஆதாயங்களும் காத்துள்ளன. ஆபரண, வாகன விருத்திகளும் ஏற்படும். இதுவெல்லாம் 11ம் இட கேது தருகிற உங்களுக்கான அதிர்ஷ்ட மாயங்கள்!
சொத்துபத்து சம்பந்தமான தீர்வுகள் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு உரிமையாக கிடைக்கக்கூடிய பங்குபாக விஷயங்களில் இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு 1 ¼ ஆண்டு கழித்து, திடீரென்று உங்கள் பக்கம் சொத்து திரும்பி விட இருக்கிறது.
பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு, 55 சதவீத சாதக திருப்திகள் உண்டு. நெடுமாதங்களாக இருக்கிற குடும்ப ஒற்றுமை பிரச்னை தீரப் போகிறது. வாழ்க்கைத்துணையுடன் பரஸ்பர அன்யோன்யம் அதிகரிக்கப் போகிறது என்றாலும் அது பட்டும் படாமலும்தான் நீடிக்கும். அடுத்து இந்த ராசி இளம் பெண்களுக்கு திடீர் திருமணம் ஏற்படுகிற காலம்.
விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி தொட்டு, குறிப்பாக அவிட்டத்தினருக்கு ஐந்து மாதங்களுக்குள் விசேஷகரமான திருப்பங்கள், உற்பத்தி சார்பான திருப்திகள், பெரிய ஆதாயங்கள், லாப முன்னேற்றங்கள், புதிய நிலபுலன் சேர்க்கை கண்டிப்பாக உண்டு!
மாணவ, மாணவிகள் இந்தப் பெயர்ச்சி தொட்டு, பெற்றோர்களின் பேச்சையும், கட்டளைகளையும் மீறக்கூடாது. குறிப்பாக உத்திராடத்தினர் கல்வியில் மட்டும் நாட்டம் வைக்கணும்.
தொழிலதிபர்கள் இந்தப் பெயர்ச்சி தொட்டு 1 ½ மாதத்துக்குள் குறிப்பாக அவிட்டத்தினரும், திருவோணத்தினரும் மிகப்பெரிய லாப முன்னேற்றங்களை தொடப் போகிறார்கள். இந்த நிலைமை வருகிற 2021, ஜூன் மாதம் வரை நீடிக்கும்.
அரசியல்வாதிகள் உத்திராடத்தினர் மட்டும் கட்சி சார்பாக லேசாக செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். இந்தச் சனிப்பெயர்ச்சி அவ்வளவு விசேஷகரமாக 50 சதவீதம் இல்லை. அதே தருணம் இந்த ராசி 41 வயது முதல் 47 வயதுக்குள் இருப்பவர்களுக்கு அட்டகாசமான திருப்பங்கள் உண்டு.
இனி வருகிற தமிழ் மாதங்களான பங்குனி, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி கார்த்திகை மாதங்கள் வெகு துாக்கலான சந்தோஷ உயர்வுகளை கொடுக்கப் போகிறது, உயர்த்தப் போகிறது.
அத்துடன் இந்த ஆண்டு காலக்கட்டத்துக்குள் வருகிற சதயம், ரேவதி, அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம் மற்றும் சுவாதி நட்சத்திர தினங்கள் வெகு களேபரமான யோக சவுபாக்கியங்களையும், மகிழ்ச்சிகளையும், பணம், பொருள் வரவுகளையும் கொடுக்கப் போகிறது. பொன், ஆபரணச் சேர்க்கை நிகழப் போகிறது.
இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கி வருகிற 2½ ஆண்டும் ஸ்ரீவெங்கடாஜலபதி வழிபாட்டையும், ஒரு முறை ஸ்ரீஐயப்பன் தரிசனமும் செய்வது நலம், உயர்வுகளை தரும், சங்கடங்களைப் போக்கும். இனம்புரியாத பிரச்னைகளிலிருந்து வெளிவர வைக்கும். அதோடு இருமுறை திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது மிகப்பெரிய உன்னதம்!
கும்பம்
கும்பம்
(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்
கும்பம் ராசி வாசகர்களே!
கும்ப ராசியினர் அனைவருமே 2018 ஆரம்பம் முதல் சனிபகவான் லாப ராசியான தனுசுக்குள் வந்து நின்றபோதும், அவரால் ஆக வேண்டிய அதிர்ஷ்டங்கள், கிடைக்க வேண்டிய நற்பலன்கள், சந்திக்க வேண்டிய மகிழ்ச்சிகள் அனைத்துக்கும் மாறாக பலவித இடர்பாடுகளிலும் உங்களை தள்ளி, ஏதோ சொற்ப லாபங்களை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார். 100 சதவீத முயற்சிகளில் 60 சதவீத நன்மைகளை மட்டும் செய்து கொடுத்தார். அதுவும் பற்றாக்குறையாகப் போனது. இந்த ராசி சிலருக்கு தேவையற்ற சொத்து இழப்புகளையும், காரிய முடிவின்மையையும், இழுபறிகளையும், விரோதங்களையும் ஏற்படுத்தி எதையும் நிம்மதியாக அனுபவிக்க முடியாமல்தான் செய்திருப்பார். காரணம் மகர ராசிக்கு 12ம் இடத்தில் மறைந்தார்.
இதற்கிடையில் 2019ம் ஆண்டில் பிப்ரவரி மாத 13ம் தேதி ராகு-கேதுக்கள் 5, 11ஆக வந்து நின்றன. அதே நேரம் அங்கே 10ம் இடத்தில் குரு பகவான் சரியில்லாத நிலையில் அமர்ந்திருந்தார். அதன்பிறகு 2019, மார்ச் மாதவாக்கில் குருபகவான் தன்னுடைய லாப வீட்டுக்கு வந்தார்.அதன் பொருட்டு எல்லா விஷயங்களும் கொஞ்சம் நல்லபடியாகவும், அதே தருணம் கெடுபிடியாகவும் மாறி நடந்தது.
ஆகவே 11ம் இடம் சனிக்கு உகந்த இடமாக இதுவரை இருந்தாலும், நீங்களோ சனிபகவானால் எந்த உகந்த நன்மையையும் சரியாக அனுபவிக்க வில்லை என்பதே உண்மை. இப்போது வருகிற 2020, டிசம்பர் மாத 27ம் தேதி முதல் லாப சனியை விட்டு, விரய சனியாக ஏழரையை துவக்குகிறார். இதனை நினைத்து பெரும்படியாக நீங்கள் பயந்துவிடக்கூடாது.
காரணம் ராசிநாதன் அல்லவா! எனவே பெரிய விரயங்கள் எது ரூபமாக ஆனாலும், எல்லாமே உபயோககரமான விரயங்கள்தான் என்று சொல்ல வேண்டும் கும்ப ராசிக்கு!
அதே நேரம் இந்த ராசியினர் 61 வயது முதல் 66 வயதுக்குள் இருப்பின், இந்த விரய சனியால் சில கெடுபிடி பலன்கள் ஏற்படத்தான் செய்யும். அதனால் இவர்களாகவே முன் வந்து தங்களது நிர்வாக விஷயங்களை சரிசெய்து கத்தரித்து, நிர்வாக வட்டத்தை சற்றே சுருக்கிக் கொள்வது நலம். இல்லையெனில், தங்களது வாரிசுகளின் பொறுப்பில் நிர்வாக விஷயங்கள் அனைத்தையும் ஒப்படைப்பது நலம். அதே வேளை இந்த ராசியினர் 1965, 1966, 1968, 1969ம் ஆண்டுகளில் பிறந்திருப்பின் இந்தச் சனிப்பெயர்ச்சி இவர்களுக் கான சூப்பர் பெயர்ச்சியே!
கும்ப ராசியினர் அனைவருக்கும் இந்தச் சனிப்பெயர்ச்சி 70 சதவீத மேன்மைகளையே கொடுக்கப் போகிறது. காரணம் ராசிநாதனும், தன லாப அதிபதியும் ஒரே இடத்தில் சேர்வது அட்டகாசமான அதிர்ஷ்ட அமைப்பு! இதனைக் கொண்டு இந்த 2 ½ ஆண்டுகளை செம்மையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தச் சனிப்பெயர் ச்சிக்கு முன்பாகவே அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு 2019 நவம்பரிலிருந்து ஓரளவு சுபமான சுப விஷயங்கள், ஏற்றங்கள், விசேஷ வைபவங்கள், திருமண சந்தோஷங்கள் என்று களைகட்டிக் கொண்டிருக்கிறதுதான்!
எனவே இந்தச் பெயர்ச்சி ஆனவுடன் வருகிற 2021, பிப்ரவரி 3ம் தேதியிலிருந்து கும்ப ராசியினர் அனைவருக்கும் சிறப்பான நன்மைகள் உயர்வாகவே நடக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விட்டது, போனது வந்தது எல்லாம் ஒரு வழியாக நல்ல முடிவுக்கு வந்து இவர்களை ஸ்திரப்படுத்தப் போகிறது.
ஆனாலும் 4ம் இடத்தில் ராகுவும், 10ம் இடத்தில் கேதுவும், ஒரே ராசியில் நீச குருவும் நிற்பது சற்றே கொஞ்சம் போராட்டமான அமைப்புதான். இதிலிருந்து மீளக்கூடிய முகாந்திரமும் கும்ப ராசியினருக்கு உண்டு.
அதோடு இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு, எந்த முக்கியமான விஷயத்தையும் எக்காரணம் கொண்டும் தள்ளி போடக்கூடாது. அவசியமான காரியங்களில் அலட்சியம் கூடவே கூடாது. அதிக நெருக்கம் இல்லாத உறவுகளிடம் பார்த்து கவனமாக பழக வேண்டியது அவசியம்.
3ம் நபரை எக்காரணம் கொண்டும், இல்லத்துக்குள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டிய காலக்கட்டமிது!
மதிப்புள்ள மனையை, சொத்தை அவசரப்பட்டு விற்பதற்கு முயற்சிக்கக் கூடாது. அதோடு எது காரணமாகவோ, சொந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு அயலுாருக்கு குடி புக நேரும் பட்சத்தில், சொந்த இருப்பிடத்தை பிறரது பாதுகாப்பில் விட்டுப் போவது நலம்!
மற்றபடி ஆரோக்கிய வகையில் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் ஏதேனும் சின்ன சின்ன சச்சரவுகள் தோன்றித்தான் மறையும். ஆனாலும் பெரியளவு பாதகம் எதுவும் ஏற்பட்டுவிடாது.
அடுத்ததாக 38 வயது முதல் 46 வயதுக்குள் இருக்கிற இந்த ராசியினருக்கு பொங்குசனி காலம். ஆகவே குறிப்பாக சனிப்பெயர்ச்சி ஆனதிலிருந்து 3½ மாதத்துக்குள் அவிட்ட நட்சத்திரத்தினரின் இல்லத்துக்குள் வெகு யோககரமான உயர்வு சம்பவங்கள், புது வீடு அமைதல், திடீர் பரிசு பண சேர்க்கைகள், தொழில் விருத்தி, கல்யாணம் காட்சி நல்லபடியாக ஈடேறும். பூர்வீக ஆஸ்திகள் சேருதல், பாட்டனார் வழி சொத்துக்கள் கைகளுக்கு கிடைத்தல் என்று ஏக களேபரமாக அனைத்து சுப சோபன சம்பவங்கள் நடக்கப் போகிற உன்னத மான காலம்.
அதே நேரம் இவர்கள் வருகிற 2021, மார்ச் மாதத்துக்கு பிறகு 13 மாதங்கள் எல்லா விஷயத்திலும் சர்வ கவனமாக இருக்கணும். போட்டி பந்தயங்களில் ஈடுபாட்டை குறைக்கணும். உத்தியோகம், பதவி விஷயங்களில் பொறுப்பாக நடந்து கொள்ளணும். அதிகாரிகளிடம் அமைதியாக பேசணும் என்று 12ல் மறைந்திருக்கிற ராசிநாதனான சனி சொல்கிறார்.
பூரட்டாதியினருக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கியதிலிருந்து 8 மாதங்கள் வெகு அற்புதமாக இருக்கப் போகிறது. எது நினைத்தாலும், திட்டமிட்டாலும் சுபமாகவே நடந்து முடிய போகிறது. வீடு வாங்கலாம், விரயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளணும். போட்டி, பொறாமை, எதிர்ப்புகளில் வெற்றி கொள்ளலாம்.
சதய நட்சத்திரத்தினர் இந்த லாப சனி நேரத்திலும் கொஞ்சம் சரியில்லாத மனநிலையோடும், காரண, காரியமற்ற அலைக்கழிப்போடும் விரயங்களை அதிகப்படியாக சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் சனிபகவானின் தாராபலம் சரியாக கிடைக்கவில்லை இவர்களுக்கு! இப்போது 2020, டிசம்பர் 27ம் தேதி பெயர்ச்சியாகிற சனி இந்த நட்சத்திரத்தினரை 5 ½ மாதங்கள் லேசாக கிலேசப்படுத்துவார்தான்!
பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் மிகப்பெரிய சந்தோஷ சவுகரியங்கள் நிரம்பி வழியப் போகிற காலக்கட்டம் உதயமாகி இருக்கிறது இந்த பெயர்ச்சி மூலம்! பல ஆண்டுகளாக நீடிக்கிற குடும்பச் சிக்கல்களும், வாழ்க்கைத்துணை ரீதியான கருத்து இடையூறுகளும் மாறப் போகிறது. ஆபரண இழப்புகளுக்கெல்லாம் நல்ல திருப்பம் ஏற்படப் போகிறது. இந்த ராசி சதய நட்சத்திர இளம் பெண்கள் சற்றே எல்லா விஷயத்திலும், பிற நட்பு விஷயத்திலும் இந்தச் சனிப்பெயர்ச்சி தொடங்கி ஏழு மாத காலம் கவனமாக இருக்கணும். குடும்பத்தாரின் அறிவுரைகளை மீறக்கூடாது,
விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி தொட்டு உற்பத்தி ரீதியான சங்கடங்கள், விரயங்கள் எல்லாம் தீர்ந்து விட இருக்கிறது. ஆதாய நிலைமை அபரிமிதமாகவே உயரும். புதிய நிலபுலன் சேர்க்கையை வருகிற 2021, மே மாதத்திற்கு பிறகு சந்திக்கப் போகிறார்கள்.
மாணவ, மாணவிகள் சதயத்தினர் மட்டும் இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு 4 ½ மாத காலம் கல்வியில் அதிக விழிப்போடு இருக்கணும். கொஞ்சம்கூட மனதில் அலட்சியம் என்பதே உதயமாக கூடாத தருணமிது! அவிட்ட நட்சத்திரத்தினருக்கு வருகிற 2021, பிப்ரவரி 10-ம் தேதிக்குள் கல்வி சார்பான அனைத்து தேவைகளும் நல்லபடியாக பூர்த்தியாகும் குடும்பத்தாரால்!
தொழிலதிபர்களுக்கு இந்த விரய சனிப்பெயர்ச்சியிலும் ஏகப்பட்ட சந்தோஷ உயர்வுகளை சனிபகவான் கொடுக்கப் போகிறார். மீள முடியாத நஷ்டத்திலிருந்து மீள வைக்கப் போகிறார். புதிய கூட்டாளிகளை இணைத்து வைக்கப் போகிறார். நுணுக்கமான தயாரிப்புகளிலும் இறங்கி பெரிய லாபத்தைக் கொடுக்கப் போகிறார்.
அரசியல்வாதிகள் குறிப்பாக பூரட்டாதியினர் துணிந்து களம் இறங்கப் போகிறார்கள். தங்களது கட்சியின் துணையால்!. இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு 77வது தினம் முடிவதற்குள் தடாலடியான உயர்வுகள் கட்சிரீதியாகவும், கட்சி மேலிட ரீதியாகவும் ஆச்சரியப்படும்படி கிடைக்கப் போகிறது.
இந்தப் பெயர்ச்சி தொட்டு, வருகிற 2½ ஆண்டுக்குள் வரும் மார்கழி, சித்திரை, ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்கள், வெகு அற்புதமாக இருக்கும். அடுத்ததாக இந்த காலக்கட்டத்துக்குள் வருகிற அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்விணி, ரோகிணி, திருவாதிரை, பூசம் நட்சத்திரம் வருகிற தினங்களிலெல்லாம் பணம், பொருள், வரவுகள், புத்திர பாக்கிய சந்தோஷங்கள், திருமண சுபகாரிய முடிவுகள் நடக்கப் போகிறது.
இந்தப் பெயர்ச்சி தொடங்கியவுடன் தொடர்ச்சியாக ஸ்ரீகாலபைரவர் வழிபாடும், ஸ்ரீசிவபெருமான் வழிபாடும் வைத்துக்கொள்வதும் நலம். செவ்வாய்க்கிழமைகளில் சித்தர் பீடங்களை நாடி பிரார்த்தனை செய்து கொள்வது நலம். குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது குலதெய்வ பிரார்த்தனைகள் முக்கியம்.
மீனம்
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
மீனம் ராசி வாசகர்களே!
எந்த ஒரு காரியத்தையும், நேர்த்தியாகவும், சுத்தமாகவும் செய்து முடிக்கக்கூடிய வல்லமைப் படைத்த மீன ராசிக்காரர்களாகிய உங்களுக்கு சூப்பர் சனிப்பெயர்ச்சி! இது.
அதோடு உங்கள் ராசிக்கு கெட்டவராக சுக்கிரனும், சூரியனும் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து லக்னத்திற்கு 2வது வீட்டிலோ அல்லது 10வது வீட்டிலோ அமர்ந்து விடுகிற பட்சத்தில், உங்களை விட வசதிக் காரர்கள் இந்த உலகத்தில் சற்றே யாரும் இருக்க முடியாது.
தேவ குருவான ஸ்ரீகுருபகவானின் சொந்த வீட்டை ஆட்சி வீடாக கொண்ட மீனின் வடிவத்தை ஆதிக்க ராசியாக அடைந்த மீனராசிக்காரர்களான, உங்களது மிகப்பெரிய கொள்கை, தாரக மந்திரமே கவுரவம்! கவுரவம்! சாத்தியமானதை மட்டும் செயல்படுத்துவீர்கள், சாத்தியம் இல்லாததிலும் சில நேரம் இறங்கி கலக்கி விடுவீர்கள். பூரண ஆயுளுக்கு சொந்தக்காரர்கள்.
2018ம் ஆண்டிலிருந்து நீங்கள் படாதபாடில்லை! காரணம் மீன ராசிக்கு சனிபகவான் மிக கடும் பாவி ஆவார்! லாப அதிபன் என்ற முறையில் மட்டும் லேசாக அவ்வப்போது சில நன்மைகளை செய்வாரே தவிர, முழுமையான யோக உயர்வுகளை, அதிர்ஷ்டங்களை சனிபகவானால் கொடுக்க முடியாதுதான்!.
சனிபகவான் 2017ம் ஆண்டு முதல் 10ம் இடமான உங்கள் ராசிக்கு தொழில் ஜீவன பதவி காரிய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த நிலையால் உங்களை நோக்கி பிரச்னை அஸ்திரங்கள் ஒவ்வொன்றாக மாறி மாறி வந்து உங்களை தாக்கிக் கொண்டே இருந்தன. உங்களை உயரே ஏற விட்டு விட்டு, எவரோ வந்து ஏணியை எடுத்துவிட்டுப் போன கதையாக போனது!.
2018 பிப்ரவரி மாத 8ம் தேதி முதல் நடப்பு வருடமான 2020 வரை எந்த வித பெரிய நிவர்த்தி களையும், அவரால் செய்திருக்க முடியாது. அதே நேரம் 2018, 6வது மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட ராகு-கேது பெயர்ச்சியால் மட்டும் கொஞ்சம் லேசாக நிம்மதி பெருமூச்சை விட்டிருப்பீர்கள்! காரணம் 10ம் இட சனியின் கெடுபலன்களை கேது கிரகம் தடுத்திருக்கும்.
அடுத்ததாக ஏற்பட்ட குருப்பெயர்ச்சியால் சனியின் தாக்குதல் இன்னும் சற்று குறைந்திருக்கும். இனி லாப சனியாக வந்து அமரப்போகிறார்.
அதே நேரம் ஏற்கனவே 2020 நவம்பர் மாத 15ம் தேதி, பெயர்ச்சியாகிவிட்ட ராசிநாதனான லாப குருவாக நிற்கிற குருபகவானோடு வந்து இணையப் போகிறார்.
குடும்பத்துக்குள் நிலவி வருகிற அநாவசிய கூச்சல் குழப்பங்களையெல்லாம் துடைத்தெறியப் போகிறார். சனிபகவானுக்கு உகந்த இடங்களான 3, 5, 6, 9,11ல் 11ம் இடம் மட்டும் வெகு சிறப்பான சனிக்கே உரிய இடம்!
அதனால் இதுவரை என்னென்ன சங்கடங்கள் உங்களை தொட்டதோ, அத்தனையும் விட்டு போகப் போகிறது. உறவுகளால் உதாசீனப்படுத்தப்பட்ட நீங்கள் இனிமேல் அனைவரையும் துச்சமாக பார்க்கிற பார்வை உங்களுக்கு சொந்தமாகப் போகிறது. குறிப்பாக சொல்லப்போனால் 12 ராசிகளில் இப்போது அதிக ராஜயோக கிரக பலத்துடன் அதிர்ஷ்ட ராசியாக மீன ராசிதான் முதலிடத்தில் நிற்கிறது. காரணம் ராசிக்கு 3ம் இடத்தில் ராகு, 9ம் இடத்தில் கேது, 11ம் இடத்தில் குரு, சனி சேர்க்கை என்ற கிரக சேர்க்கை கலந்த இந்தப் பெயர்ச்சி!
இந்த அற்புதமான கிரக அமைப்பை பயன்படுத்திக் கொண்டு அகலக்கால் வைக்காமல், நினைத்ததை உடனே களம் இறங்கி செய்யக்கூடிய முயற்சியுடன் இருப்பதும், அநாவசிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நலம்.
குடும்பத்தாரின் நலன்களை மட்டும் தற்காலம் கருத்தில் கொண்டு, மிச்சமிருக்கிற நேரத்திற்கு அடுத்தவர் நலனை பாராட்டுவது நலம்.
அடுத்ததாக குருபகவான் முயற்சி ஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், வாழ்க்கைத்துணையின் ஸ்தானத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதும், தற்காலம் சனிபகவான் 11ம் இடத்தில் நின்று இஷ்டப்பட்ட லாபங்களையெல்லாம் தொடர்ச்சியாக வழங்கப் போவதும் உங்களுக்கான மிகப்பெரிய சாதக அதிர்ஷ்ட அமைப்பு என்பதால், இந்தப் பெயர்ச்சியின்போது இருக்கிற உலவுகிற கிரக நிலைகள் போல், அடுத்து வரும் காலக்கட்டம் அமையுமா? என்பது சற்றே சந்தேகமே!
இந்த 2½ ஆண்டு காலம் போதும் உங்களது ஒட்டு மொத்த வளர்ச்சிக்குமே! அதோடு இனிமேல் உங்களை எளிதாக யாரும் ஏமாற்றி விட்டு ஓடி விட முடியாது. இதுவல்லாமல் குடும்பமே, உறவுகளே, சில நேரம் அநாவசியமாக உங்களுக்கு எதிரியாகி இருக்கலாம். இந்த நிலைமையும் வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து கொள்ளாமல், உங்களது கஷ்ட நஷ்டங்களை உணராமல் ஏனோதானோ குடும்ப வாழ்க்கையை உங்களுடன் சேர்ந்துக் கொண்டே விட்டேத்தியாக நடத்திக்கொண்டு வந்த நிலைமையெல்லாம் காற்றோடு பறக்கப் போகிறது.
இல்லத்தார் வகையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு சம்பந்தமான மருத்துவ விரயங்கள் அனைத்திற்கும் விடுதலை கிடைக்கப் போகிற நேரம் உருவாகி விட்டது. அடுத்தப்படியாக சமீபத்தில் திருமணம் முடிந்து வாழ்க்கைத்துணையால் பலவித சஞ்சலங்களுக்கு விடிவு உண்டு!
புது வீடு கட்டத் துவங்கி, பாதியில் நின்றுவிட்ட கோளாறுக்கும், வீடு கட்டுவதற்கு உண்டான வங்கிக்கடன் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்ததற்கும், தொழிலில், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களையும், ஸ்தம்பிப்பு களையும் சந்தித்த கடுமையான சூழல்களுக்கும் புதிய விடிவுகாலத்தை 11ம் இட சனி தரப்போகிறார். அதற்காக வே லாபஸ்தானத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அதனால் 2018ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட பல சச்சரவுகளுக்கும் சந்தோஷ நிவர்த்திகள் ஏற்படப் போகிறது.
இனிமேல் நினைத்தது அனைத்தையும் நடத்திக்கொள்ள முடியும், வாரிசுகள் சார்பான சஞ்சலங்களுக்கு நிம்மதியை சந்திக்க முடியும். உள்ளூர் மரியாதை சரிந்துக்கொண்டிருப்பதை நிமிர்த்து விட முடியும். பெரிய கடன், கண்ணி விஷயங்களிலிருந்து விடுபட்டு வெளியில் வந்து விட முடியும். கொடுக்கல்-வாங்கல் சச்சரவுகள் அனைத்தும் தானாகவே தீர்ந்து விடும்.
இந்தப் பெயர்ச்சி ஆனதிலிருந்து பூரட்டாதி நட்சத்திரத்தினருக்கு புதிய சொத்துபத்து சேர்க்கைகளும், சுபகாரிய சந்தோஷங்களும், திருமண நிறைவேற்ற வைபவங்களும் இவர்களுக்கென மிக எளிதாக நிறைவேறப் போகிறது.
ரேவதி நட்சத்திரத்தாருக்கு 2020, ஜூன் மாதத்திலிருந்தே சனிபகவானால் சுபிட்ச ஏற்றங்கள் நிறைவாக கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இல்லத்துக்குள் திடீர் சுப வைபவங்களும், பொருளாதார வளர்ச்சிகளும் கரைபுரண்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை இவரது மகர ராசிக்குள் பெயர்ச்சியாகிற நிலைமையால் இன்னும் கூடுதலான உயர்வுகளை அதிகப்படியாக கொடுக்கக்கூடிய பெயர்ச்சியாக இருக்கப் போகிறது.
சட்டென்று வாரிசுகளின் திருமணக்கனவு, உத்தியோகக் கனவு மற்றும் முதலாளி கனவு போன்றவை களை இவர்களது சொந்த பொறுப்பில் நின்று நிறைவேற்றி விட இருக்கிறார்கள். அடுத்ததாக சொத்துபத்து சமாச்சா ரங்களெல்லாம் ஒழுங்கான முடிவுக்கும் வரும்.
உத்திரட்டாதியினருக்கு இவரது சஞ்சார நட்சத்திர ரீதியாக 2020, மே மாதத்திலிருந்தே சற்றே சரியில்லை! இந்த நிலைமை இவர் பெயர்ச்சியானப் பிறகும் 54 தினங்கள் நீடிக்கலாம். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்ய அதிலிருந்து வெளிவர முயற்சித்துக்கொண்டிருந்தால் போதுமானது. இவர்களுக்கு இந்த 54 தினங்கள் கடந்த பிறகு 14 மாதங்கள் சனிபகவானால் அற்புதமான உயர்வு ஏற்றங்கள், சுபிட்சங்கள், சுபகாரிய திருப்திகள் கண்டிப்பாக உண்டு. ஆனாலும் இந்த 2 ½ ஆண்டுக் காலமும் அதாவது 2023, மார்ச் மாத 20ம் தேதி வரை பொன்னான காலமாகத்தான் இவர்களுக்கு சுழலப் போகிறது!
ரேவதி நட்சத்திர இளம் தம்பதியினருக்கு குறிப்பாக 1985-86, 1989-90-ம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டகரமான புத்திரப் பாக்கியத்தை வழங்கிவிட்டு செல்லப்போகிறது.
இந்த ராசி பெண்மணிகளுக்கு பொன், பொருள், ஆபரணச்சேர்க்கைகளும், வீடு வாகன சந்தோஷங்களும் தங்களது பெயரில் சொத்து-பத்து பதிவாகப் போவதும், பல ஆண்டுகளாக தாய்வழி சொத்துக்காக கோர்ட், போலீசில் போராடி வருகிற போராட்ட வழக்குகளுக்கெல்லாம் வெற்றியும் கிடைக்கப் போகிறது.
தொழிலதிபர்கள் தங்களது நிலை உயரப் பெற இருக்கிறார்கள் மிக மிக அற்புதமான அதிர்ஷ்ட மேன்மைகளுடன்! அதோடு பெரிய பட்ஜெட் விஷயங்களும், அயலுார், அயல்மாநில, அயல்தேச தொழில் தொடக்கங்களும் இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு வெகு அற்புதமாக வளர இருக்கிறது. தொழில் கூட்டாளிகளால் ஏற்படும்.
விவசாயிகளுக்கு புதிய சந்தோஷங்கள் நிலபுலன்களுக்கு அரசு சார்ந்த சகாயங்கள், தேவைப்பட்ட பொருளாதாரம் உற்பத்திக்காக சரளமாகப் போவது போன்றவைகள் நடந்து புதிய விவசாய நிலபுலன் சேர்க்கைகளுக்கும் சாத்தியமிருக்கிறது. குறிப்பாக உத்திரட்டாதி மற்றும் ரேவதியினருக்கு!
மாணவ - மாணவிகளுக்கு இந்த சனிப்பெயர்ச்சி தொட்டு தான் தனக்கென தனிப்பட்ட யோசனை எதிர்காலத்துக்கென உதயமாகி அதற்கான களத்தில் கால்வைத்து கல்வி ரீதியான சாதனையை படைக்கப் போகிறார்கள். தாங்கள் விருப்பப்படுகிற உயர்க் கல்விக்கு அரசாங்க ரீதியாக உண்டு.
அரசியல்வாதிகள் இதுநாள் வரை கட்சிக்காக, பொது வாழ்க்கைக்காக பாடுப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ற புகழை, அந்தஸ்தை, புதியதொரு உயர்வை, தலைமையைக் கொடுக்கப் போகிறது.
இந்தச் சனிப்பெயர்ச்சி தொட்டு வருகிற 2023ம் ஆண்டு வரை வருகிற தமிழ் மாதங்களான வைகாசி, ஆடி, ஆவணி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் அனைத்தும் வெகு அற்புதமான யோக உயர்வு பலன்களை, சுபகாரிய சந்தோஷங்களை, புத்திர பாக்கிய மகிழ்ச்சிகளை, தரப்போகிறது.
இந்த 2023 வரை வருகிற, தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை, ஆனி, புரட்டாசி மாதங்கள் அனைத்து விஷயத்திலும் சற்றே கவனமாக நடைபோட வேண்டியது அவசியம். அதோடு இந்த 2½ ஆண்டு காலக்கட்டத்திற்குள் வருகிற பரணி, ரோகிணி, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, கேட்டை, திருவோணம் வரும் நாட்களில் எல்லாம் அற்புதமான உயர்வு தடாலடி பலன்கள் கண்டிப்பாக காத்திருக்கிறது
இந்த 2½ ஆண்டும், மீன ராசியினர் தொடர்ச்சியாக ஸ்ரீசுப்ரமணியர் மற்றும் ஸ்ரீவெங்கடாஜலபதி வழிபாடுகளை தொடர்ச்சியாக செய்து வருவதும், பிரதி செவ்வாய்தோறும் எமகண்ட வேளையில் ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி, சிதறு தேங்காய் அடித்து அர்ச்சனை செய்து வழிபடுவதும் ஏக சிறப்பாக இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தை வைத்துக்கொள்ளும்.
சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு ?
நவக்கிரங்களில் ஒன்றான சனிபகவானை ‘சனீஸ்வரன்’ என்று சிவனின் நாமத்தையும் சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? எப்படி சனி, ‘சனீஸ்வரன்’ ஆனார்?
சூரியனுக்கு உஷாதேவி (சுவர்க்கலா தேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.
சனிபகவானுக்கு, சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது. சிவனுக்கு நிகரான நிலையை அடையவேண்டும் என்று விரும்பிய சனிபகவான் காசிக்குச் சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது பக்தியைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு சனி, “எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைப்பட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.
சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும்” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் தருகிறேன். இன்றுமுதல் நீ ‘சனீஸ்வரன்’ என்று அழைக்கப்படுவாய் என்றார். இப்படித்தான் சனிக்கு, ஈஸ்வர அந்தஸ்து கிடைத்தது.
சனிபகவான் அருள்பாலிக்கும் தலங்கள்!
சனிபகவான் என்றதுமே எல்லாருக்கும் திருநள்ளாறுதான் நினைவுக்கு வரும். திருநள்ளாறு மட்டுமல்ல, இன்னும் சில தலங்களில் சனீஸ்வர பகவான் அருள்புரிகிறார். அவற்றையும் தரிசிக்கலாமா?
திருநள்ளாறு
காரைக்கால் திருநள்ளாறு அருகே நள மகா சக்கரவர்த்தியின் ஏழரை நாட்டுச் சனி விலகிய தலம் இது. இங்குள்ள நளத்தீர்த்தம் விசேஷம் மிக்கது. இந்த குளத்தில் நீராடி, தர்ப்பா ரண்யேஸ்வரரையும், சனி பகவானையும் வழிபாடு செய்தால், சனி தோஷங்கள் விலகும்.
குச்சனுார்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது குச்சனுார். இங்கு சனிபகவான் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். கல் துாணாக பூமியில் இருந்து தோன்றிய மூர்த்தம் இது. நீதியை வழங்குபவராகவும், வயிற்று வலி நீக்குபவராகவும் இந்த குச்சனுார் சனீஸ்வரன் திகழ்கிறார்.
எட்டியத்தளி
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. துாரத்தில் உள்ளது எட்டியத்தளி. அகத்தியமுனிவர், காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு, இத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது அஷ்டமச்சனியால் பாதிக்கப் பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன், தன்னுடைய சனிதோஷம் நீங்குவதற்காக திருநள்ளாறு தலத்திற்கு இந்த வழியாகச் சென்றார். அந்த மன்னனை அகத்தியர் தடுத்து நிறுத்தி, அஷ்டமச்சனிக்கு பரிகாரமாக தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், இங்கு ஒரு கோயில் அமைத்து வழிபடும்படி அறிவுறுத்தினார். நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்யும்படியும், ஈசனின் ஈசான பார்வை சனி பகவானின் மீது படும்படியும் கோயிலமைக்கக் கூறினார். அதன்படியே செய்த மன்னனின் சனிதோஷம் நீங்கியது. சிறந்த சனிதோஷ பரிகாரத் தலங்களில் எட்டியத்தளியும் ஒன்றாக விளங்குகிறது.
மங்கம்மாபேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ளது மங்கம்மாபேட்டை. இந்தத்தலத்தில் சனிபகவான், தன்னுடைய மனைவி நீலாதேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் இங்கே சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற சுப விசேஷங்களையும் செய்கிறார்கள்.
திருவாதவூர்
இத்தலத்தில் வேதபுரீஸ்வரரும், வேதநாயகி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். இங்கு சனிபகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் சனிபகவானுக்கு முடக்கு வாத நோய் ஏற்பட்டது. அந்த நோய் நீங்குவதற்காக, சனிபகவான், இத்தலத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டார். இதையடுத்து அவரது வாத நோய் நீங்கியது. இதனால் தான் இத்தலத்திற்கு ‘திருவாதவூர்’ என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. துாரத்தில் திருவாதவூர் உள்ளது.
பொழிச்சலுார்
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலுார். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு சனிபகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி, தன்னுடைய தோஷத்தைப் போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது.
சோழவந்தான்
சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்குப் போகும் பாதையில் உள்ளது இந்த சனிபகவான் கோயில். இத்தலத்தில் தனது மேல் கரங்களில் ஆயுதங்கள் தரித்து, கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரம் கதாயுதம் ஏந்தியும் சனிபகவான் காட்சி தருகிறார். அருகில் காக வாகனம் உள்ளது. இத்தலம் சனிதோஷம் நீக்குவதற்கும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார தலமாகவும் இருக்கிறது.