ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2020 (01.09.2020 முதல் 21.03.2022 வரை) திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி (23-9-2020), புதன் கிழமை காலை 8:22 மணியளவில் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். 12-4-2022 மதியம் 1:38 மணி வரை ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். வாக்கியப் பஞ்சாங்கப்படி, 1-9-2020, செவ்வாய்க்கிழமை பகல் 2:10 மணி முதல் 21-3-2022 மதியம் 3:02 மணிவரை சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள். இதனால் 12 ராசி வாசகர்களுக்கும் உண்டாகக்கூடிய பலன்களை கணித்தவர். ஜோதிடர் மு. திருஞானம், எம்.ஏ., சீர்காழி


மேஷம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 3ம் இடமான புகழ், வீரியம், காரியஜெயம், வெற்றி, இளைய சகோதரர் மற்றும் துணிச்சல் ஸ்தானத்தில் ராகுபகவானும், ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உங்களது முழுமுதற் யோககாரகனான குருபகவானது வீட்டில், கோடீஸ்வர அந்தஸ்துகளை உருவாக்கக் கூடிய கேது பகவானும் அமர்ந்து 10ல் ஏழு வெற்றியையாவது கொடுத்து உங்களை சந்தோஷப்படுத்தினார்கள் இதுவரை.

இருந்தாலும், சனிபகவான் ராசிக்கு 9ம் இடத்தில் கேதுவோடு அமர்ந்து கொண்டு, கேது செய்ய வேண்டிய பலன்களை சனியும் சேர்த்துக் கொடுத்து சிலவித தாமதங்களையும், இடையிடையே உண்டாக்கி உங்களுக்கு வேண்டாத விஷயங்களையும் சில நேரத்தில் ஏற்படுத்தி, தவிக்கவிட்டு, விரயங்களைக் கொடுத்து சில நேரத்தில் தடுமாற்றங்களையும் உண்டாக்கி வரவுக்கு தகுந்த செலவு, செலவுக்கேற்ற வரவு என்றபடி நல்லவைகளாகவும், திடீர் சந்தோஷங்களாகவும் எதிர்பாராத வெற்றிகளாகவும் கொடுத்துக் கொண்டு வந்தார்கள் என்பதே உண்மை.

 அதேநேரம் இந்த உலகத்துக்கே ஏற்பட்ட ஒருவித அநாவசிய சோதனைகளால் உலக மக்கள் அனைவருக்குமே ஏற்பட்ட முடக்கத்தையும் மீறி ஏதோ சில சொற்ப லாபங்களையும், கடுமைகளை குறைத்தும் சின்னச் சின்ன வெற்றிகளை உண்டாக்கியும், உங்களை கீழே விழுந்து விடாமல் கவுரவமாக காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள் என்று சொல்லலாம்.

    இந்த தருணத்தில் இப்போது ராகுவுக்கும், கேதுவுக்கும் உகந்த இடங்கள் அல்லாத இடத்துக்கு உங்களது ராசிப் பிரகாரம் ராகுவும், கேதுவும் வந்து அமருகிறார்கள். அதாவது ஒருவர் நீசமாகவும், மற்றொருவர் உச்சமாகவும் நிற்கப் போகிறார்கள். குடும்ப ஸ்தானத்திலும், ஆயுள், ஆரோக்கிய ஸ்தானத்திலும், திடீர் அதிர்ஷ்டங்களை உண்டாக்கக் கூடிய 8வது வீட்டிலும், தன வரவுகளை கொடுக்கக்கூடிய குடும்ப மேன்மைகளை அருளக்கூடிய இடங்களான 2லும், 8லும் ராகு- கேதுக்கள் வந்து அமருவது, ஒருபுறம் நல்லபடியாக சொல்லப்படா விட்டாலும், உங்கள் ராசியைப் பொறுத்தவரை செவ்வாயின் ஆதிபத்யம் பெற்ற ராசி என்பதால் அதனுள்ளே சுக்கிரன், சூரியன், கேதுவின் நட்சத்திரங்கள் உள்ளடங்கி இருப்பதால், சுக்கிரனுக்கு ராகு கிரகம் எதிர்பாராத அனுக்கிரகங்களை கொடுக்கக் கூடிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த பெயர்ச்சி ஒரு பக்கம் உங்களுக்கான பெயர்ச்சி என்றே சொல்லிவிடலாம்.

   எனவே பயம் வேண்டாம், எதற்காகவும் கலங்க வேண்டாம்.  உங்களுக்காக நல்லது செய்யவும், சில நேரங்களில் மட்டும் சிலவித முடக்கங்களை ஏற்படுத்திப் பார்க்கவும் மட்டுமே இந்த ராகு கேது பெயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆக குடும்பம், தனம், வாக்கு, பூர்வீக சொத்துக்களால் லாபம், அதனால் விரயம், பங்கு பங்காளிகளால் கஷ்டங்கள், ஒற்றுமை குறைவு, தலையில் கண் பாகங்கள் போன்றவைகளை குறிக்கக் கூடிய இடங்களுக்கு இவர்கள் வந்து அமர்வது நல்லதுதான். பணவரவு நல்லபடியாக இருக்கப் போகிறதுதான், ஆரோக்கியம் பற்றி எந்தவித கோளாறுகளும் இல்லைதான். இல்லத்துக்குள் அவ்வப்போது சிற்சில சலசலப்புகள் தோன்றினாலும் எப்படியோ ஒருவித முடிவுக்கும், ஒற்றுமையும் கண்டிப்பாக வந்துவிடும். இறைபலம் அதிகரிக்கும்.

   வருகிற நவம்பர் மாத 16ம் தேதி வரை குருபகவான் ராசிக்கு 9ம் இடத்தில் நின்று ராசியை பார்த்துக்கொண்டிருப்பதால்  79 தினங்கள் வரை ராகு கேதுக்கள் 2,8-ஆக வந்து நிற்பதால் எந்தவித பெரிய இம்சையும், போராட்டமும், கடுமையும் இல்லாமல்தான் நகரப் போகிறது. அதைவிட குருபகவானுக்கு திரிகோணத்தில் அதாவது வருகிற குருபெயர்ச்சி நிகழ்ந்த பிறகு குரு பார்த்த ராகுவாகவும், குருபகவானுக்கு 11ல் கேது நிற்கப் போவதாலும் மிகப்பெரிய மாற்றங்கள் வாழ்வில் நடக்கும். தடைப்பட்ட விஷயங்கள் நல்லவிதமாக முடிவுக்கு வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கைகூடும். விரயங்கள் ஏற்பட்டாலும் அது உபயோககரமான விரயமாகவே இருக்கும். தேவையான செலவுகளாகத்தான் நீடிக்கும்.

   இந்த ராகு-கேது பெயர்ச்சியானதிலிருந்து வருகிற திங்கள் மற்றும் வியாழன் செவ்வாய்க் கிழமைகளிலும் ரோகிணி, திருவோணம் அடுத்ததாக உத்திரட்டாதி, உத்திராடம் வருகிற நட்சத்திர நாட்களிலும் ஏகபோகமான விசேஷ மேன்மைகள் அதிரடியாக காத்துள்ளன.

   பரணி நேயர்களுக்கு. ராகு- கேது பெயர்ச்சியானதிலிருந்து 129 தினங்கள் சூப்பர் யோகக் காலங்களாக நகரப் போகிறது. அனைத்து திட்டங்களும் மிகப்பெரிய சாதகங்களை ஏற்படுத்தப் போகின்றன. போட்டி -பொறாமை இல்லாத ஏற்றம் காத்திருக்கிறது. அதிரடி பணவரவுகளை சந்திக்கலாம்.

   அஸ்வினி நேயர்கள் ராகு -கேது பெயர்ச்சியானதிலிருந்து 87 தினங்கள் மிகமிக கவனமாகவும், அகலக்கால் திட்டம் போடாமலும் குடும்பத்துக்கான தேவை அத்தியாவசிய கடமை நிறைவேற்றங்களில் பொறுப்பாகவும் நடந்து கொண்டு மாதங்களைக் கடத்தினால் அடுத்து வருகிற 6 1/2 மாதங்கள் மிகப்பெரிய விசேஷ அதிர்ஷ்டங்களாக நகரப் போகிறது.

   கார்த்திகையினருக்கு ராகு- கேது பெயர்ச்சியானதிலிருந்து 5 1/2 மாதங்கள் வரை இனம்புரியாத போராட்டமாகவும், இல்லத்துக்குள் சின்னச் சின்ன பிணக்குகளாகவும், நினைத்தது நடக்காமலும், வெற்றிகள் கை நழுவிப் போகுதலும், நடைபெற்றாலும் அதன் பிறகு மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்கக் கூடிய யோகங்களை அனுபவிக்கக் கூடிய பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அடையக் கூடிய ராகு-கேது பெயர்ச்சிதான் இது.

   எனவே, வருகிற 2021 நவம்பருக்குள் பரணியினரும், 2021 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, கார்த்திகை நேயர்களுக்கும், 2022 ஜனவரி 12-ம் தேதி முதல் மார்ச் மாதத்துக்குள் கார்த்திகையினருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் உயர்வாக, செழிப்பாக இருக்கப் போகிறது.

   பொதுவாக பார்க்கப் போனால் இந்த ராகு -கேது பெயர்ச்சி பரணியினருக்கு 65 சதவீத சாதகத்தையும், அஸ்வினி நேயர்களுக்கு 55சதவீதத்தையும், கார்த்திகை நேயர்களுக்கு 8 மாதம் கடந்த பிறகு  90 சதவீத யோகத்தையும் தடாலடியாக உண்டாக்கி மிகப்பெரிய திருப்பு முனைகளை கொடுக்கக் கூடிய பெயர்ச்சி இது என அடித்து சொல்லிவிடலாம்.


ரிஷபம்

ரிஷபம் 

(கார்த்திகை 2, 3, 4-ம் பாதம்ரோகிணிமிருகசீரிஷம் 1, 2ம் பாதம்)

 

ரிஷப ராசி அன்பர்களான உங்களை கடந்த 19 மாதங்களாக ராகு -கேதுக்கள் 2, 8-ஆக அமர்ந்து கொண்டு, பலவித சோதனைகளைத்தந்து, இப்போது ராசிக்குள் ஜென்ம ராகுவாகவும், கண்டக கேதுவாகவும் வந்து அமர்கிறார்கள். இதுவரை நம்பியவர்கள் மோசம் செய்தார்கள், நம்பி இறங்கிய தொழில் மோசம் போக வைத்தது. முதலீடு காணாமல் போனது, லாபம் தரும் என இறங்கிய வியாபாரம் முடக்கிப் போட்டது, மூடவும் வைத்தது, எப்போது சோதனை வரும் என்பது புதிராகவே நடந்து வந்தது. காலம் பதில் சொல்லுமா நமக்கு, நல்ல நேரம் எப்போதுதான் ஒத்துழைக்கும். 10 முதலீடு செய்து 12 லாபம் கிடைக்கும் என நினைத்தால் முதலீடும் போய், பத்து, எட்டானது, நல்லவர், கெட்டவர் என எல்லாரும் விரோதம் பாராட்டினார்கள் உங்களை.

உறவு பகையானது, பகைவர்கள் கூட சில நேரம் ஒத்துழைத்தார்கள். ஆனால் நல்லவர்கள் போல் நடித்து சில பகைவர்கள் மறைமுக எதிர்ப்பு காட்டினார்கள். இதுவெல்லாம் உங்களது நடவடிக்கைகளால் ஏற்பட்ட தவறு அல்ல. அனைத்தும் சயாகிரகங்களான இவர்கள் செய்த மாயங்களே.

 இப்போது என்னவெனில் ராகு- கேதுக்கள் ராசிக்குள்ளும், 7ம் இடத்திலும் வந்து அமர்வது, ஒருபுறம் தேவையற்ற அநாவசிய பிரச்னை தரும் இடம் என்றாலும் உங்களது ராசிக்கு இவர்கள் எப்போதுமே நல்லவர்களே. இவர்களது நட்சத்திரங்களான திருவாதிரை,- சதயம்,- சுவாதி,- அஸ்வினி,- மகம்,- மூலம் வருகிற நட்சத்திர தினங்களிளெல்லாம் நீங்களே எதிர்பாராத வகையில் சில அற்புத உயர்வுகளை கொடுத்துவிட்டு போகிற இவர்கள் உங்கள் ராசிக்குள் வந்து அமர்வது என்ன தவறா? என கேட்க வேண்டியிருக்கிறது.

 ராகு -கேது ராசியிலும் 7ம் இடத்திலும் வந்து அமர்வது அலகை யோகம் எனப்படும் புகழ்பெறும் அமைப்பாகும். அதோடு ராகு பலம் இழக்கிறார், கேது பலம் அடைகிறார். ஆரம்ப நட்சத்திர சஞ்சாரமோ, செவ்வாயின் நட்சத்திரத்திலும், குருவின் நட்சத்திரத்திலும் ஏற்பட இருக்கிறது. இதனால் இதுவரை என்னென்ன நன்மைகளை பிறருக்கு செய்து, அவப்பெயரையும், பண விரயத்தையும் சந்தித்தீர்களோ அதற்கெல்லாம் கொடுப்பினையாக மிகப்பெரிய யோக நிவர்த்தி ஈடுகட்டுதல்களை செய்யப் போகிற அற்புதமான பெயர்ச்சி இது. அதோடு நீங்கள் பிறந்த நேரத்தில் அதாவது, பிறந்த வருடத்தில் ராகு-கேதுக்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் அமர்ந்திருக்கிறார்களோ, அந்த கட்டத்துக்கு எத்தனையாவது இடத்துக்கு அவரவர்கள் நின்ற வீட்டு பிரகாரம் வருகிறார்கள் என பார்க்க வேண்டுமே தவிர ராகு-கேதுக்கள் ராசியிலும், 7லும் வருவதால் பிரச்னை என்று சொல்லிவிட முடியாது.

  எனவே இந்த பெயர்ச்சி தொட்டு கலக்கத்தை கை விடுங்கள். ராகு-கேது பெயர்ச்சி  90 சதவீத மேன்மைகளை நிச்சயமாக வழங்கும். தனி துணிச்சல் பிறக்கும். விவகாரங்களை தீர்த்து வைக்கும். உள்மன பிரச்னைகளை விரட்டி விடும். மன உளைச்சல்களை துரத்திவிடும்.

    பொருளாதார தட்டுபாடு நீங்கிவிடும், திறமை அதிகரிக்கும். தனி நுணுக்கம் கூடிவிடும். புத்திசாலித்தனம் மேன்மையாகும். உங்கள் ஆலோசனை வெல்லும். குறுக்கு வழியில் உங்களை முறியடிக்க நினைப்பவர்களை உண்டு இல்லையென செய்துவிடும், மறைமுக எதிரிகளை மறைமுகமாகவே வழி அனுப்பிவிடும். ஆக மொத்தம் இந்த பெயர்ச்சி சூப்பர் பெயர்ச்சியே.

     ரோகிணி நேயர்களுக்கு ராகுவும், இரண்டாம் கட்டமாக கார்த்திகை நேயர்களுக்கு கேதுவும், சூப்பர் உயர்வு பலன்களை அள்ளி வழங்கப் போகிறார்கள். அடுத்த 6 மாதத்திற்கு பிறகு மிருகசீரிட நேயர்களுக்கு ராகுவும், ரோகிணியினருக்கு கேதுவும் அதிரடி உயர்வு பலன் அதிர்ஷ்டங்களை கொடுக்கப் போகிறார்கள். கார்த்திகையினருக்கு ராகு-கேதுக்கள் இருவருமே சேர்ந்து வருகிற 2021 ஜனவரி 18ம் தேதி முதல் நினைத்துப் பார்க்காத வளர்ச்சிகளை இவர்கள் எதிர்பார்த்திருக்கிற தருணத்தில் அருமையாக வாரி வழங்கிடப் போகிறார்கள்.

    புதிய வேகத்தில் இறங்கி தொழில் வளர்ச்சியில் சாதனைப் படைக்கப் போகிறீர்கள். நாட்டு நடப்புகளால் ஏற்பட்ட பெரிய இழப்புகளிலிருந்து மீளப் போகிறீர்கள். சொத்து-பத்து பங்கு பாக பிரச்னைகள் அனைத்திற்கும் நன்மை தீர்வு கிடைக்கப் போகிறது.

    எப்பாடு பட்டாவது சிக்கல்களிலிருந்து கடன் -உடன் வாங்கி மீண்டு வந்த நிலைமைக்கு அது சம்பந்த கடனுக்கு எல்லாம் நிவர்த்தி கிடைக்கப் போகிற காலம் உருவாகி விட்டது.

    வருகிற 2020 நவம்பர் மாதத்தில் குருபகவான் அவருக்கே உரித்தான யோக இடத்திற்கு வரப்போகிறார். வருகிற டிசம்பரில் சனிபகவான் பெயர்ச்சி நிகழப் போகிறது. எனவே பெரும்பாலான ஜாம்பவான் கிரகங்கள் அற்புதமான இடமாற்றத்திற்கு வரப்போவதன் பொருட்டு, அட்டகாசமான திருப்பங்கள் வாழ்வில் நிகழப் போகின்றன. எப்படி முன்னேறுகிறீர்கள் என உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். வரவுகள் பெருகும், வீடு வாசல் புதிதாக உருவாகும். புதிய தன்னம்பிக்கை மேன்மைப்படும். விலகியவர்கள் வந்து சேருவார்கள். உங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள். சொத்து-பத்து பங்கு பாக, பங்கு பங்காளி வகை சச்சரவுகளுக்கெல்லாம் ஒரு வழியாக தீர்வு உண்டாகிவிடும். உத்தியோகம் புதிதாக சட்டென அமைந்துவிடும். விருப்பப்பட்ட இடமாற்றத்துக்கு உத்யோக ரீதியாக மாற்றம் ஆகிவிடலாம்.

     மொத்தத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 2021 செப்டம்பர் 12ம் தேதி வரை ரோகிணியினருக்கு பெரிய வசந்தகாலமே உருவாகிவிடும்.  2021 பிப்ரவரி முதல் 2021 நவம்பர் வரை மிகப்பெரிய மாற்றங்கள் கார்த்திகையினருக்கு வெகு அற்புதமாக நிகழப் போகிறது. மிருகசீரிட நேயர்களுக்கு 2022 ஜனவரி முதல் அந்த ஆண்டு முழுவதும் அதிரடியான அதிர்ஷ்டங்கள் தூக்கலாகப் போகின்றன.

   பொதுவாக இந்த ராசி விவசாயிகளுக்கு தங்களது விவசாய உற்பத்தியில் ஏற்ற இறக்கங்களாகத் தான் இருக்கும்.

கலைஞர்கள் தங்களது தொழில் நுணுக்க திறமைகளை நிரூபிக்கக் கூடிய காலக்கட்டம் உருவாகிவிட்டது. அரசியல் அன்பர்கள் பொதுமக்களிடையே பெரிய புகழை அடையப் போகிறார்கள்.

  அடுத்தடுத்து வருகிற குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி யோகத்தால் உங்களது வாழ்வு பெரியளவில் ஜொலிக்கவே போகிறது.


மிதுனம்

மிதுனம்

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

மிதுனராசி அன்பர்களே, இதுவரை உங்களை காலம் புரட்டிப் போட்டது, இன்னும் புரட்டி எடுத்துக் கொண்டே இருக்கிறது. சரியாக சொல்லப் போனால் இன்னும் 2 1-/4 ஆண்டிற்குப்பிறகுதான் சரியான நிலைப்பாடு உயர்வு, சந்தோஷம், திருப்தி, மகிழ்ச்சி என அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை திட்டவட்டமாகச் சொல்லிவிடலாம்.

   இருப்பினும் இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்த உடம்பான கரும்பாம்புவின் ஒரு பாதி ராகுவும், தலைப்பகுதியான செம்பாம்புவின் ஒரு பாதி கேதுவும் ராசிக்குள்ளும் 7ம் இடத்திலும் அமர்ந்து உங்களை உண்டு இல்லையென தேவையற்ற இடையூறுகளில் எல்லாம் தள்ளி, உங்களை எது சம்பந்தமாகவும், மீள முடியாமலும், உயர முடியாமலும் வைத்து புடம் போட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  

    அதேநேரம் 7ம் இடத்தில் அமர்ந்த குருவால் கொஞ்சம் நெருப்பு மலைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த உங்களுக்கு மிகப்பெரிய பனிக்கட்டி காற்று வீசியதுபோல சில பல நிம்மதி பலன்கள் நடந்திருக்கலாம். ஆனால் 7ம் இட சனி விட்டுவிடுவாரா உங்களை என்ன? காரணம் 8-க்குடைய சனி கடந்த 2017ம் ஆண்டு முதல் 7ம் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு, மிதுன ராசியினர் அனைவருமே கத்தி மீது நடக்க வைத்து சரியாக பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

   உங்களின் அனுமதி இல்லாமலேயே பெண் வாரிசுள் தங்கள் வாழ்க்கைத் துணையை முடிவு செய்தன. இதுவெல்லாம் ஜென்ம ராகு, 7ம் இட கேது, 7ம் இட சனி செய்த லீலைகள்.

   உங்களுக்கு, இனி வரப்போகிற ராகு-கேது பெயர்ச்சி மலையளவு தீர்வுகளை கொடுக்கப் போகின்றன. ஆக இனிமேல் ராகு -கேதுக்கள் 6, 12-ஆக வந்து அமரப் போகிறார்கள். அதாவது ராகு 12லும், கேது பகவான் 6ம் இடத்திலும் உச்ச நீச்சமாக அமரப் போகிறார்கள். 6ம் இடத்தில் ஒரு உச்ச கிரகம் அமர்வது அதிலும், பாவிகிரகம் அமர்வது மிகப்பெரிய யோகம். எதிரி, எதிர்ப்புகளை சமாளித்து விடலாம், போட்டி பொறாமைகளை வென்று விடலாம், குதர்க்கமான விஷயங்களை சரிசெய்து விடலாம். இக்கட்டான சூழல்களிலிருந்து வெளிவந்து விடலாம், பண நெருக்கடிகளிலிருந்து தப்பித்து விடலாம், குடும்ப சம்பந்தமான அவஸ்தைகளிலிருந்து மீண்டு விடலாம், வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்டிருக்கிற பிணக்குகளிலிருந்து வெளிவந்து பெருமூச்சு விடலாம், வழக்கை வென்று விடலாம், சேமிப்பை உயர்த்திக் கொள்ளலாம். இல்ல சுபகாரியங்களை விமரிசையாகவோ அல்லது எளிமையாகவோ நடத்தி முடித்து விடலாம். வாரிசுகளின் முன்னேற்றத்திற்கென செய்து வருகிற முயற்சிகள் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சடாரென எளிதாக முடிந்துவிடும். கடன் தொல்லை ஓரளவு சரியாகிக் கொண்டே வரும். மீள முடியாத பிரச்னைகளிலிருந்து வெளிவர முடியும். புதியவர்களின் ஆதரவு கரம் வேற்று மத, இன, நபர்களால் திடீரென உதவிக்கரம் நீளும்.

   மற்றபடி சொந்த உழைப்பில் வாங்கிய சொத்து -பத்துக்களில் ஏற்பட்டிருக்கிற வில்லங்கங்கள் விலகப் போகிறது. பங்கு-பங்காளிகளிடம் உள்ள இடம், மனை, சொத்து, ஆக்கிரமிப்புகளுக்கு விடிவுகாலம் பிறந்து விடுகிற பெயர்ச்சி இது. இந்த பெயர்ச்சியின்போது திருவாதிரை நேயர்களே  75 சதவீத சாதக அதிர்ஷ்டங்களை ராகுவால் அடையப் போகிறார்கள். புனர்பூச நேயர்களுக்கு கேதுவால் நற்பலன்கள் சற்று குறைவே.  மிருகசீரிட நேயர்களுக்கு கேது கிரகத்தால் தூக்கலான அதிர்ஷ்டங்கள் நிச்சயம் காத்திருக்கிறது.

   தொழில், வியாபாரம், நிர்வாகம், பெரிய பட்ஜெட் விஷயங்கள் கொடுக்கல், வாங்கல் போன்றவைகளில் எல்லாம்  60 சதவீத நன்மைகள் காத்திருக்கிறது. என்றாலும், வருகிற நவம்பர் மாதத்தில் 2020ல் 15-ம் தேதிக்கு பிறகு அஷ்டம குருவாக 7க்குடைய கிரகமான இவர் மாறப் போவதும், வருகிற டிசம்பர் மாத 26-ம் தேதிக்கு பிறகு 2020, 7ம் இட சனி, 8ம் இடமாக மாறப் போவதும், உங்களுக்கு தேவையற்ற இடையூறு தடங்கல்களை உருவாக்கும்தான். என்றாலும், இவர்கள் இருவரும் தர்மகர்மாதிபதி என்பதால் எதிர்பாராத நன்மைகளும், நடக்கத்தான் போகிறது.

   ஆக வரப்போகிற அஷ்டம சனி, அஷ்டம குருவைப் பற்றி பெரிதாக மனதுக்குள் பயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். அப்படியே மீறி ஏதேனும் கடுமைகள் தொடர ஆரம்பித்தாலும், 6ம் இடத்தில் அமர்ந்திருக்கிற கேது கிரகம் அனைத்தையும் மிகப்பெரிய லெவலில் முறியடித்துவிடும். கவலை வேண்டாம். அனைத்தும் சாதகமே, புத்தி ஸ்தானம் தெளிவாக குழப்பம் இல்லாமல், திட்டமிட்டது, திட்டமிட்டபடியே நிறைவேறி அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும்.

   ஆக வாழ்க்கை ஒழுங்காகப் போகிறது. சிறப்புகளை மேன்மையாக்கப் போகிறது. திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டு. ஆதாயங்களுக்கு குறைவே இல்லை. எதை நினைத்தாலும் அதை சாதித்துக் கொள்ளக்கூடிய பக்குவமும், அதற்கான பக்கபலமும் உயர்வாகவே கிடைக்கும்.

   இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் 17 மாதங்களுக்குள் வருகிற சனிக்கிழமை, திங்கள்கிழமை மற்றும் புதன் கிழமைகளிளெல்லாம் அதிரடி யோகங்கள் காத்துள்ளன. செவ்வாய்க் கிழமைகளில் மிக கவனமான செயல்பாடுகள் அவசியம் எனவும் ராகு-கேதுக்களே சொல்கிறார்கள்.

  அயல்தேசத்தில் உள்ள திருவாதிரை நேயர்களுக்கு பெரிய ஜாக்பாட் யோகமும் காத்திருக்கிறது. இந்த ராகு-கேது பெயர்ச்சி 50 சதவீத உயர்வு திருப்பு முனைகளையே தரப்போகிறது. திருவாதிரை நட்சத்திர விவசாயிகள் மிகப்பெரிய மகசூல் ஆதாயங்களை அனுபவிக்கப் போகிறார்கள். மிருகசீரிட விவசாயிகள் விளைச்சல் நில விஷக் கிருமிகளிடம் சர்வ ஜாக்கிரதையாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. திருவாதிரை நட்சத்திர மாணவர்களுக்கு சாத்தியமில்லாத உயர்கல்வி சாத்தியமாகப் போகிறது.

  கலைஞர்கள் இதுவரை இழந்ததற்கும், தோல்வியடைந்ததற்கும் சேர்த்து ஏகபோகமான யோகம், அதிர்ஷடம் இருமடங்காக வரப்பிரசாதமாக கிடைக்கப் போகிறது.

  ராகு-கேதுக்கள் பெயர்ச்சியான உடனேயே செய்யப் போகிற தடாலடி உயர்வு அதிஷ்டம் எதுவென்றால், இந்த ராசி புத்திரபாக்கிய ஏக்கத்தில் உள்ள அனைவருக்கும் நிம்மதியான மகிழ்ச்சியை கொடுக்கப் போவதுதான். அடுத்து பொருளாதாரமும், குடும்ப சுபிட்சமும் இதுவரை கஷ்டப்பட்டதற்கெல்லாம் சேர்த்து ஒருவித யோகத்தையும், அபரிமிதமாக கொடுத்து இந்த ராகு-கேதுக்கள் சிறப்பை உருவாக்கப் போகிற பெயர்ச்சி இது.


கடகம்

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம்பூசம்ஆயில்யம்)

இடம், மண், மனை, கட்டிட இத்தியாதிகளை உயர்வாகவும், அதிர்ஷ்டகரமாகவும் வாழ்வின் சரியான தருணத்தில் அடைந்து விடக்கூடிய வாழ்க்கைத் துணையால் அபரிமித யோகத்தை சந்தோஷத்தை, வசதியை, ஆடம்பரத்தை சந்தித்து விடக்கூடிய கடக ராசிக்காரர்களான உங்களுக்கு, இனிமேல்தான் மிகப்பெரிய அற்புத சந்தோஷங்கள் நிகழப் போகிறது.

    சந்திர ஆதிக்கம் பெற்ற உங்கள் ராசிக்கு மறைமுக யோக அதிர்ஷ்ட திடீர் திருப்புமுனைகளை வழங்கக் கூடிய ராகு-கேது கிரகங்கள் ராசிக்கு 11ம் இடத்திலும், 5ம் இடத்திலும் நீச, உச்சமாகவந்து அமரப் போகிறார்கள். ஒரு வகையில் 11ம் இடம் என்பது உங்கள் ராசிக்கு பாதக ஸ்தானமும் கூட. பரவாயில்லை. அதே நேரம் 5ம் இடம் என்பது பூமிக்காரகனான செவ்வாய் கிரகத்தின் வீடான விருச்சிக ராசி உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோக பாக்கிய சவுகரியங்களை அதிஅற்புதமாக வழங்கிவிடக் கூடிய வீடும், கிரகமும் ஆகும்.

 எனவே அந்த இடத்தில் இப்போது கேதுபகவான் வந்து அமர்வதும், அவர் செவ்வாயின் குணத்துவங்களை பெற்றவரும் என்பதால் மிகப்பெரிய சவுகரிய லீலைகளை இனிமேல்தான் உங்களது வாழ்வில் திருப்பு முனையோடு நடத்திக் காட்டி யோக அற்புதங்களை செய்து தர போகிறது.

ஆக ராகு கிரகம் 11-ல் அமர்வது விசேஷமான நிலைப்பாடு. 5-ல் கேது கிரகம் உச்சம் பெறுவது அதைவிட தாண்டிய அற்புத உயர்வுகளை கொடுக்கக் கூடிய நிலைப்பாடு. அதனால் இனிமேல் உங்களது நினைப்புகள் அனைத்தும் பூர்த்தியாகி வெல்லக் கட்டியாக இனிக்கப் போகிறது. இனிமேல் நிறையவே இனிக்கப் போகிறது என்றாலும் இதுவரை நீங்கள் பட்ட பாடுகள், அல்லல்கள், சங்கடங்கள், எல்லாமே மறக்கக் கூடியவைகளா என்ன? காரணம் 12-ல் ராகு 1 1/2 ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு கெட்ட கிரகமான புதன் வீட்டில் அமர்ந்து கொண்டு உலகத்தில் இல்லாத அவஸ்தைகளை எல்லாம், உருவம் தெரியாத தொந்திரவுகளை எல்லாம் காரணமற்ற தொல்லைகளை எல்லாம் அடுக்கடுக்காக கொஞ்சம் கூட ராகு கிரகம் சோர்ந்து போகாமல் உங்களை போட்டு புரட்டி எடுத்து சோர்வடைய வைத்தது.

அந்த சோகம் மீண்டும் உங்களுக்கு நினைவு வர வேண்டாம்.  வரப்போகிற இடம் அற்புதமான யோக இடங்கள். காரிய ஜெயம் நிறையவே உண்டாகும், புதிய அதிர்ஷ்டங்கள் மலையளவு உருவாகும். சோதனைகள் விலகிவிடும். சொந்தங்கள் விரும்பி வரும், ஆரோக்கிய பிரச்னைகளை துடைத்து எறிந்துவிடும். குடும்ப உள்விவகாரங்கள் விலகி ஒருவித சந்தோஷ முடிவுக்கு வரும்.

 தொழில், வியாபாரம், நிர்வாகம், பட்ஜெட், புதிய முதலீடு, ஊக வாணிகம், அயலூர் தொழில், அயல்தேச நிர்வாகம், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற இன்னும் பல உங்களுக்கு பிடித்தமான லாபகர நினைப்புகளையும், திட்டங்களையும் எதிர்பாராத விதத்தில் பலிதமாக்கி விட்டு போகிற ராகு-கேது பெயர்ச்சி வந்திருக்கிறது.

  வீடு, மனை புதிதாக வாங்கப் போகிற பொற்காலம் ஆரம்பமாகி இருக்கிறது. ஒரு பக்கம் வருகிற 2020 டிசம்பர் 25-ம் தேதிக்கு பிறகு சனிபகவான் 7-ம் இடத்துக்கு கண்டக சனியாக வந்து அமர்ந்து சிற்சில போராட்டங்களை கொடுப்பதற்கு தயாராகி இருக்கிறார் என்றாலும், அதனை முறியடிக்கக் கூடிய நிலைப்பாட்டுடன் குருபகவான் வரப்போகிற 2020 நவம்பர் மாத 14-வது தேதிக்கு பிறகு முன்னதாகவே மகர ராசியில் போய் சப்தம குருவாக அமர்ந்து ராசியை பார்க்கப் போகிறார். 11-ல் அமர்ந்திருக்கிற ராகுவையும், நோக்கப் போகிறார். ஆகவே, குரு சண்டாள யோகம், சனியாலும், ராகு -குருவின் தொடர்பாலும் ஏற்படப் போவதால் பிறர் ஆச்சரியப்படும்படியான அற்புத சிறப்பு உயர்வுகள் மலை போல காத்திருக்கின்றன.

   இப்போதைய நாட்டு நடப்பால் ஏற்பட்ட ஸ்தம்பிப்புகள் வருமானம் இல்லாத நிலைமை, பெரிய கடன் பட்டிருக்கிற சூழல், அதிக விரயங்கள், வியாபார நஷ்டங்கள், தொழில் பாதிப்புகள் அனைத்திற்கும் ஒரு வழியாக தீர்க்கமான நல்லதொரு முடிவு ஏற்படப்போகிற பெயர்ச்சிகாலம் இது.

   இது ஒரு பக்கம் இருக்க வருகிற 2020 செப்டம்பர் 1ம் தேதி பெயர்ச்சி ஆகிற இந்த சாயா கிரகங்கள் இந்த ராசியின் புனர்பூச நேயர்களுக்கு அற்புதமான சிறப்பு உயர்வுகளை, மகிழ்ச்சிகளை, வசதி ஆடம்பரங்களை, காரிய வெற்றிகளை முதல் தரமாக வருகிற 2021 ஏப்ரல் மாத 7-ம் தேதி வரை சூப்பர் அதிரடியோடு ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது.

   ஆயில்ய அன்பர்களுக்கு வருகிற டிசம்பர் 13-ம் தேதியிலிருந்து 2021 அக்டோபர் மாதம் வரைபலவித யோக மும்முனை உயர்வுகளை ஏற்படுத்தப் போகிறது.

  பூசம் நேயர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சியானதிலிருந்து ராகு கிரகத்தால் வருகிற மார்ச் மாத 2021 வரை பெரிய சாதகத்தை எதிர்பார்க்க முடியாது. அதே நேரம் கேது கிரகத்தால் ஏகப்பட்ட சந்தோஷ சம்பவங்களை அடையப் போகிறார்கள்.

     மாணவர்களின் கல்வி நலன் மிகப்பெரிய தரத்தோடு உயரும். கலைஞர்கள் இந்த ஆண்டு அதாவது 2020 செப்டம்பர் 13-ம் தேதியிலிருந்து 2021 பிப்ரவரி மாத 17ம் தேதிக்குள் ஏதாவது ஒரு வகையில் தங்களது திறமையை சாதித்துக் காட்ட அதிர்ஷ்ட வாய்ப்பு ஒன்றை அடைந்து விடுவார்கள். அரசியல்வாதிகளுக்கு இதுவரை பொறுமையாக கட்சிப் பணிகளை சிரத்தையோடும், கடுமையாகவும் பார்த்ததற்கு பரிசாக ராகு கிரகம் எந்த ரூபத்திலோ அதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறது பதவி ரீதியாக.

    இந்த ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு கடக ராசி அன்பர்கள் அனைவருக்கும் இந்த ராசிக்காரர்களாலேயே மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கப் போகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய புதிய அதிர்ஷ்டங்கள் நெருங்கி வர இருக்கிறது.

   பொதுவாக கடக ராசியினருக்கு லாப ராசியிலும், யோக ராசியிலும் ராகு-கேதுக்கள் பெயர்ச்சியாகி வந்து அமர்வதால் எதிர்பாராத சிறப்பு நன்மைகளும், சுபகாரிய திருமண திடீர் வைபோகங்களும் அற்புதமாக நடந்து இதுவரை அனுபவித்து வந்த பலவித விரய சங்கடங்களிலிருந்தும், லாபகரமாக காப்பாற்றப் போகிற பெயர்ச்சி இது.


சிம்மம்

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சிம்ம ராசி அன்பர்களே, வருகிற 2020 செப்டம்பர் 1ம் தேதியில் இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் 5ம் இடமான திரிகோண யோக ஸ்தானத்திலும்  1 1/2 ஆண்டுகளாக நின்று காரிய சாதகங்களை கொடுத்த சாயா கிரகங்களான ராகு-கேதுக்கள், இனி ராசிக்கு கேந்திர ஸ்தானங்களான 4ம் இடத்திலும், 10ம் இடத்திலும் நின்று சுகஸ்தானமான பந்தய ஸ்தானத்தையும் தொழில் ஜீவன ஸ்தானத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ள இருக்கிறார்கள்.

   இதற்கு முன் எப்படியோ பணம், காசு, பொருளாதாரம் உங்களது தேவைக்கேற்ப, திட்டமிட்டது போல, எளிதாக நினைக்கிற நேரத்தில் ஒவ்வொரு விஷயத்திற்காகவும், கைக்கு வந்து உங்களது தேவை இத்தியாதிகளையும், குடும்ப சுமைகளையும், இல்லத்தாரின் விருப்பங்களையும், வாரிசுகளின் ஆசைகளையும், வெகுவாகவே பூர்த்தி செய்து கொடுத்து கொண்டு வந்தது. அதோடு இதுவரை குருபகவான் 5ம் இடமான யோக ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாலும், ராகு-கேது பெயர்ச்சி ஆனதற்கு பிறகும் இரண்டு மாத காலங்கள் 5ம் இடத்திலேயே நிற்கப் போவதாலும், எந்தவித குறையும், குற்றமும் இல்லாமல் சுகமாகத்தான் நகரப் போகிறது.

   அடுத்ததாக சனிபகவானின் பெயர்ச்சி இன்னும் 4 மாதத்தில் உங்களது ராசிக்கு மிக உயர்வானதொரு இடத்துக்கு வரப் போவதால் மிகப்பெரிய மாற்றங்கள் வாழ்வில் நிகழப் போகிறது.

   அதனால் இப்போது வரப்போகிற ராகு -கேதுக்களின் இடங்களான 4, 10-ம் இடத்தைப் பற்றி பெரிதாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். காரணம் பொதுவாக ராகு -கேதுக்கள் 4, 10-ம் இடத்தில் நிற்கும்போது என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பெரியதொரு உயர்வையும் கொடுப்பார்கள். அநாவசியமான சங்கடங்களிலும் இழுத்து விடுவார்கள். ஆனால் உங்கள் ராசிக்குள்ளே கேதுவின் நட்சத்திரம் இருப்பதால் சுக ஸ்தானத்துக்கு வரப்போகிற கேது நட்சத்திர அதிபதி என்ற முறையில் மிகப்பெரிய உயர்வு மாற்றங்களை கொடுக்கப் போகிறார்.

    அதோடு 10ம் இடத்தில் அமரப் போகிற ராகுவை வருகிற 2020 நவம்பர் 17ம் தேதிக்குப் பிறகு பார்க்கப் போகிறார் 5ம் பார்வையாக. எனவே 10ம் இட ராகுவின் அநாவசிய கோலாட்டங்கள், வீணான சங்கடப் பலன்களுக்கு வாய்ப்பு ஏற்படாது. அதோடு இதுவரை 5ம் இட கேது, 6ம் இடத்து அதிபதியான சனிபகவானுடன் சேர்ந்து கொண்டும், இவர்களோடு குருபகவானும் சேர்ந்திருந்ததால் வழக்கை கொடுத்திருப்பார், நட்புகளை கெடுத்திருப்பார், குடும்பத்துக்குள் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கியிருப்பார்.

   ஆனால் இனிமேல் அப்படி இருக்காது, நினைத்தது, நினைத்தப்படி நிறைவேறும். குடும்பத் தேவைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்தி தடுமாற்றம் இல்லாமல் யோசிக்கும். இல்ல விஷயங்களை அதனுடைய தேவைகளை சாமர்த்தியமாக சரி செய்து கொண்டே வரப்போகிறீர்கள்.

    இல்லத்துக்கான அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே நிவர்த்தி செய்து வைத்து விடுவீர்கள். அடுத்ததாக வாரிசுகள் வகையில் பெண் வாரிசுகள் வகையில் வருகிற டிசம்பர் 10ம் தேதியிலிருந்து கொஞ்சம் அலைக்கழிப்பாகவும், மனஅசூயையாகவும் நீடிக்கலாம். யாருக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பது என்ற குழப்பம் மேலோங்கலாம். இருப்பினும் அதனையும் சரிசெய்து விடக்கூடிய சாதக நிலைமைகளே நீடிக்க இருக்கின்றன.

   மொத்தத்தில் இந்த ராசி பூரம் நட்சத்திர நேயர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சியானது தொட்டு, ராகுவால் தொடர்ச்சியாக  5 1/2 மாதங்களுக்கு சூப்பர் திருப்புமுனை, நிறைவேறாத காரியத்தில் வெற்றி, திடீர் பணவரவு, தொழில் வகை லாபங்கள், உத்தியோக வகை திருப்பங்கள், பதவி பொறுப்பு வகை ஏற்றங்கள், உயர்பதவி கிடைத்தல், உள்ளூர் மதிப்பு மரியாதை உயர்தல் போன்றவைகள் மிகமிக சாதகமாக கிடைக்கப் போகிறது. அதே நேரம் கேதுவாலும் இவர்களுக்கு ஏகப்பட்ட விசேஷ உயர்வு அதிர்ஷ்ட திருப்பங்கள் கண்டிப்பாக உண்டு.

   மகம் நேயர்களுக்கு வருகிற 2021 ஏப்ரலில் இருந்துதான் நினைத்திருப்பது, திட்டமிட்டிருப்பது, புதிதாக இறங்க லாபம் குறித்த விஷயங்களுக்காக யோசித்திருப்பது போன்றவைகள் எல்லாமே அதிரடியாக நடந்து முடிந்து மனதிருப்தியை உண்டாக்கப் போகிறது. உத்திர நட்சத்திர நேயர்களோ, ராகு-கேது பெயர்ச்சியானது தொட்டு  2 1/2 மாதங்கள் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும். வண்டி வாகன விஷயங்களில் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இல்லத்துக்குள் சுபகாரிய திருமண சடங்குகள் முன்கூட்டியே சாதகத்தை தந்துவிட இருக்கிறது. நடந்து முடியவும் போகிறது. அதாவது வருகிற நவம்பர் மாத 27-ம் தேதிக்குள் இந்த ராசி இளம் இருபாலருக்கும் திருமண கனவுகள் பூர்த்தியாகி விடும். புத்திர பாக்கியம் காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்நேரம் உயர்வுகரமான சந்தோஷ செய்தியும் கிடைத்திருக்கும். இந்த ராசி நேயர்களின் வாரிசுகள் திருமணம் ஆகாமல் காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பின் அதற்கும் நல்லதொரு விடிவு காலம் உண்டு.

    பூர நட்சத்திர நேயர்களுக்கு அதாவது உயர்கல்வி முடித்து அரசு பணிகளுக்காக, வேலை வாய்ப்புகளுக்காக திண்டாடி வருபவர்களுக்கு யோக காலம் தொடங்கியாகி விட்டது. மற்றபடி இந்த ராகு-கேது பெயர்ச்சியால் அதிகப்படியான யோக பாக்கிய சவுகரியங்களை முதலில் அடையப் போகிறவர்கள் பூர நட்சத்திர நேயர்களே. அடுத்தபடியாக உத்திரத்திற்கும், அதற்கடுத்ததாக மகம் நட்சத்திர நேயர்களுக்கும் வெகுவான லாபகர சந்தோஷ திருப்புமுனைகள் நிச்சயம் காத்திருக்கிறது.

   மகம் நட்சத்திர மாணவர்கள் மட்டும் நான்கு மாதம் வரை கல்வியில் அதீத சிரத்தை காட்டணும். தீய பழக்க வழக்க நாட்டங்கள் கூடாது. கலைஞர்களுக்கு பல திண்டாட்டங்களுக்கும் புதியதொரு யோகக்காலம் ஆரம்பமாகி இருக்கிறது. பெரிய வாய்ப்புகள் அலைமோதப் போகின்றன. அரசியல் அன்பர்கள் திடீர் பதவிகளை வருகிற ஜூன் மாத 2021-ல் அடையப் போகிறார்கள்.

   வரக்கூடிய நாட்களில் எல்லாம் அபரிமித யோகத் திருப்பங்கள் காத்திருக்கின்றன. மிதுன ராசிக்காரர்களால் எதிர்பாராத அனுகூல ஒத்துழைப்புகள் கிடைக்கப் போகிற பெயர்ச்சி இது.

  இனி வருகிற ஒன்பது மாதத்துக்குள் வருகிற கார்த்திகை, தை, சித்திரை, வைகாசி மாதங்கள் பெரிய யோகத் திருப்பங்களை ஏற்படுத்த இருக்கிறது.


கன்னி

கன்னி

(உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்)

கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட காலம் ஓஹோவென தொடங்கி விட்டது என ராகுபகவானும், கேதுபகவானும் மிகமிக சத்தமாகவே உங்களுக்கென அதிர்ஷ்ட குரல் எழுப்பி, வருகிற 2020 செப்டம்பர் மாத 1ம் தேதியிலிருந்து விருச்சிக ராசியிலும், ரிஷப ராசியிலுமாக வந்து அமரப் போகிறார்கள்.

   ஒருவர் வெற்றி ஸ்தானத்துக்கும், மற்றவர் யோக ஸ்தானத்துக்கும் அதாவது உங்கள் ராசிக்கு தனபாக்கிய அதிபனான சுக்கிரனின் வீட்டில் ராகுவும், உங்கள் ராசிக்கு கெட்டவரான செவ்வாய் கிரகத்தின் வீட்டில் கேதுவும் வந்து அமர்ந்து தங்களது உயர்வான, அதிரடியான அவர்களுக்கே உரித்தான மிகமிக சூப்பர் உயர்வு அதிர்ஷ்டங்களை கொடுப்பதற்கு தயாராகப் போகிறார்கள்.

   இதுவரை சுக ஸ்தானத்தில் குருவும், சனியும், கேதுவும் நின்றிருந்தார்கள். 10ம் இடத்தில் ராகு மட்டும் உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். இதனால் உங்களை பல விஷயங்களும் வெறுப்பேற்றி பிரச்னைகளை அதிகமாக தேவையற்று உண்டாக்கி ஒன்றுக்கு இரண்டான விரயங்களை கொடுத்து, உங்கள் மனதை ஒவ்வொரு விஷயத்தின் சார்பாகவும் கலங்க வைத்தது. இருந்தாலும் ராகு-கேதுக்கள் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய சூட்சும ராஜயோகர்கள் என்பதால், பெரிய அநாவசிய அடாவடி சிரமப் பலன்களை தராமல் ஏதோ கொஞ்சம் சிரமத்தை மட்டும் சின்ன சின்னதாக ஏற்படுத்தி உங்களை காப்பாற்றியும் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

   ஆக இனி எந்த ஒரு இடர்ப்பாடும், தொல்லை தொந்திரவும், உத்தியோக கோளாறும், தொழில் வியாபார இடைஞ்சல்களும் கொடுக்கல் வாங்கல் சிக்கல்களும் ஏற்படாது. குடும்ப நிலைமைகளும் சந்தோஷத்துடன் தனிப்பட்ட மகிழ்ச்சிகளுடன் அன்பு அன்யோன்ய அனுசரணைகளுடன்  நிம்மதியுடன் நடைபோட இருக்கிறது. வெற்றி ஸ்தானம் பலமாகி விட்டது. செல்வ ஸ்தானமும் மிகப்பெரிய அதிர்ஷ்ட நிலைமைக்கு வந்துவிட்டது. கெட்டவரின் வீட்டில் கெட்ட கிரகம் அதாவது கேது கிரகம் 3ம் இடத்தில் அமரப் போவதால் அனைத்திலும் அதிரடியான வெற்றிகளும் அசாத்தியமான லாபங்களும் மிகப்பெரிய அளவில் உங்களுக்கு கிடைக்கப் போவதை திட்டவட்டமாக அடித்துச் சொல்கின்றன இந்த இரண்டு கிரகங்களும்.

    இதுவல்லாமல் இப்போது 4ம் இடத்தில் இருக்கிற அர்த்தாஷ்டம சனியாக சுழல்கிற சனிபகவான் 5ம் இடம் வருகிற டிசம்பர் மாதத்தில் செல்லப் போகிறார். அடுத்ததாக அர்த்தாஷ்டம குருவாக இருக்கிற உங்களது ராசிக்கு பாதக அதிபனும் அடுத்த நிலையில் உள்ள பந்தயஸ்தான அதிபனும் கூட்டு, நட்பு உபத்தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் வருகிற நவம்பர் மாத மத்தியில் 5ம் இடத்துக்கு செல்லப் போகிறார். இந்த நிலைமைகள் எல்லாம் உங்களுக்கு தானாக கிடைக்கப் போகிற மாபெரும் அதிர்ஷ்டங்களை தெரிவிக்கிறது. இதனால் எதிர்பார்த்திராத அதிசய ஆச்சர்யங்கள்  மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கென ஏற்பட இருக்கின்றன.

   ஆக, எப்பேர்ப்பட்ட பெரிய சாத்தியமில்லாத விஷயமாக இருந்தாலுமே இனி வரும் 14 மாதங்களுக்குள் வெற்றியாகப் போகிறது. வீடு நிலபுலன் விஷயங்கள் நல்லபடியாக முடிய இருக்கின்றன. கடன் விஷயங்களிலிருந்து வெளிவரப் போகிறீர்கள். தேவையற்ற மனஅழுத்தம் குறைந்து விடும். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்குமான தொடர் கருத்து மனவேறுபாடுகளும் குடும்பத்துக்குள் நிலவுகிற உள்குழப்பங்களும் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட சிக்கல்களும் தீரப்போகிற காலகட்டம் துவங்கியாகி விட்டது.

    அதனால் இனி துணிச்சலாக ஒவ்வொரு விஷயத்திலும் இறங்கி உங்களது முன்னேற்றத்தை செம்மையாக உயர்த்திக் கொள்ளலாம். வரப்போகிற 5ம் இட சனியால் இடையிடையே சின்னச் சின்ன குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனை குருபகவானும் சேர்ந்து மகர ராசிக்குள் சுழலப் போவதால் உடனுக்குடன் சரிசெய்யப் போகிற காலகட்டம் உதயமாகி விட்டது. உத்தியோக இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தானாக பதவி உயர்வு வாய்க்கும். பொருளாதார சங்கடங்களுக்கு விடிவு பிறக்கும். சேமிப்புகள் உயரும். சேமிப்புகளை முதலீடுகளாக்கிக் கொள்ளலாம்.

   கன்னி ராசியினர் உணவு சம்பந்தப்பட்ட துறையில் இறங்கப் போகிறார்கள். அயல்தேச ரீதியாக சந்தித்து வருகிற சிற்சில தடங்கல்கள் நீங்கப் போகிறது. உள்நாட்டில் இருந்தபடியே சில தொழில்களை செய்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் இதுவரை ஊதிய, சம்பள, கூலி சம்பந்தமான பிரச்னைகளில் உள்ளவர்கள் அதற்குரிய சாதகமான உயர்வுகளை எளிதாக சந்தித்துவிட இருக்கிறார்கள்.

  வீடு மாற்றம் செய்து கொள்ளலாம். புதிய வீடு கட்டிடம் மனை வாங்குகிற யோகமும் காத்திருக்கிறது. குழந்தை பாக்கியம் ஏக்கம் உள்ளவர்களுக்கு  வருகிற 2021 ஆகஸ்ட் மாதத்துக்குள் நிச்சயம் அதற்கான சாத்தியம் ஏற்பட்டுவிடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வாகன சேர்க்கை அற்புதமாக நடக்கப் போகின்றன.

  இந்த ராசி இளம் இருபாலருக்கும் திருமண கனவு மிகப்பெரிய விமரிசையாக நடந்து முடிய இருக்கிறது. அஸ்தம் நேயர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சியான உடன் கேதுவால் மிகப்பெரிய சாதகத்தை எதிர்பார்க்க முடியாது.  2 1/2 மாத காலங்கள் நகர வேண்டும். உத்திர நட்சத்திர நேயர்களுக்கு இவர்களது பெயர்ச்சியால் ராகு கிரகத்தின் மூலம் சாதகத்தை எதிர்பார்க்க முடியாது.

   சித்திரை நேயர்களுக்கோ இந்த இரண்டு கிரகங்களாலுமே சாதகத்தை  4 மாத காலங்களுக்கு எதிர்பார்க்க வாய்ப்பு இல்லை. காரணம் இவர்களது நட்சத்திர சஞ்சாரம் இந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு அவ்வளவு விசேஷமாக இல்லை.

  அஸ்த நட்சத்திர விவசாயிகள் தாங்கள் நினைத்தப்படி போட்டிருக்கிற விளைச்சல் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் மிகப்பெரிய யோகத்தினை, லாபத்தினை அடையப் போகிறார்கள்.

   மாணவர்கள் தங்களது உயர்கல்வி ரீதியான ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள இருக்கிறார்கள் கேது கிரகத்தால். தொழிலதிபர்கள் நினைத்த இடத்தில் போட்டுள்ள திட்டபடி முதலீடுகளை இறக்கலாம். கலைஞர்கள் இதுவரை அனுபவித்த பொருளாதார சங்கடங்களிலிருந்தும் வாய்ப்பு தடைகளிலிருந்தும் விடுபட்டு உயர்வை சந்திக்கப் போகிறார்கள்.


துலாம்

துலாம்

(சித்திரை 3-ம் பாதம், ஸ்வாதி, விசாகம் 1,2,3ம் பாதம்)

துலாம் ராசியினரே, உங்களது ராசிக்குள் செவ்வாய் மற்றும் ராகு குரு இவர்களது நட்சத்திர ஆதிபத்யத்தை உள்ளடக்கி இந்த மூன்று கிரகங்களின் குணாதிசயங்களையும் பெற்ற அதாவது முன்கோபம், அதே அளவு சாந்தம் அதீத நுணுக்கம் இவைகளை அடைந்துள்ள உங்களுக்கு, இதுவரை ராகு கேதுக்கள் மூன்று மட்டும் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து பல ஆண்டுகள் இருந்த இழுபறி, பிரச்னை,  தொந்திரவு, கடன் விஷயங்கள்,சொத்துபத்து விவகாரங்களையும் சரி செய்து,  உங்களை சரியானதொரு பாதையில் வாழ்க்கையை நகர்த்த மிகப்பெரிய அதிர்ஷ்ட சாத்தியங்களை, சாதக கூறுகளை, எதிர்பாராத யோகங்களை எல்லாம் கொடுத்து அடுத்தடுத்த கட்ட உயர்வுகளுக்கு நகர்த்தி சென்ற இவர்கள், இப்போது 2020 செப்டம்பர் மாத 1ம் தேதியிலிருந்து இவர்களுக்கு உரிய அசுப இடமான 2, 8ம் இடத்தில் வந்து நின்று ஒருவர் உச்சமாகவும், மற்றவர் நீசமாகவும் நகர்ந்து உங்களுக்கான வலிமையான பலன்களை கொடுக்கப் போகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

   அதாவது வருகிற1 1/2 ஆண்டும், ராகு கிரகத்தால் உங்களுக்கு எவ்விதமான பெரியஇடர்ப்பாடும் வரப்போவதில்லை என்றே சொல்ல வேண்டும். வருகிற நவம்பர் மாத பாதிக்கு பிறகு ராசிக்கு 6ம் இடத்து அதிபதியான குரு கிரகம் நீசமாகி போக இருப்பது உங்களுக்கு பருத்தி புடவையாய் காய்த்தது போலதான்.

  காரணம் “கெட்டவர் கெடுகிறார்” அதாவது ராசிக்கு 3- 6-ம் இடங்களுக்கு அதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு முழு கெட்டவர். அவர் சனியோடு சேர்ந்து 2021 முதல் மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்தி காட்ட இருக்கிறார். தேவைப்படுகிற விஷயங்களையெல்லாம் தடாலடியாக வெற்றியாக்கி காட்டப் போகிறார்.

அதனால் ராகு- கேதுக்கள் 2, 8- ஆக அமர்வதை பற்றி கவலையே பட வேண்டாம். மேலும் இதுவரை 3 மற்றும் 9-ம் இடத்தில் நின்ற இவர்கள் சில நேரம் நன்மைகளையும், சில நேரம் எதிர்பாராத கடுமைகளையும் சற்றே ஏற்படுத்தியிருப்பார்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கேது கிரகம் கெட்டவரின் வீட்டில் நின்றது. அதனால் பெரிய பெரிய நன்மைகளே. ஆனால் ராகு கிரகம் கெட்டவர் என்பதால் அவர் நல்ல கிரகமான உங்கள் ராசிக்கு யோக கிரகமான புதனின் வீட்டில் அமர்ந்தது ஒரு வகையில் சிற்சில தடங்கல்களை உண்டாக்கியிருக்கும் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

   இருந்தாலும் உங்கள் ராசியில் உள்ள சுவாதி நட்சத்திரத்தில் அதிபன் என்பதால் அவர் பெரிய பெரிய விசேஷ உயர்வுகளை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை துலாம் ராசியான உங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டவர். அதனால் நிறைய நன்மைகளை சாதகமாக எதிர்பாரா தருணத்தில் எல்லாம் உங்களுக்கென அருளி இருப்பார். இந்த நிலைமைகளில்  இப்போது வரப்போகிற இடம் குடும்ப ஸ்தானம், தனஸ்தானம், நேத்திர ஸ்தானம், ஆதாய ஸ்தானம், பூர்வ புண்ணிய சொத்துக்களால் கிடைக்க வேண்டிய செல்வ ஸ்தானம், சகோதரர்களுக்கான விரய ஸ்தானம், மண், மனை கட்டிட விஷயங்களில் தேவையற்ற கெடுபிடிகளை தரக்கூடிய ஸ்தானம். அடுத்து 8ம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம், திடீர் அதிர்ஷ்ட ஸ்தானம், விபத்து ஸ்தானம், வண்டி வாகனங்களால் அதிர்ஷ்டங்களை சேர்க்கக் கூடிய ஸ்தானம், வாழ்க்கைத் துணையின் முக ஸ்தானம் அடுத்ததாக வாரிசுகளின் முயற்சி ஸ்தானம், புகழ் ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் ராகு- கேதுக்கள் அமர்வது அவர்களுக்குரிய நன்மைகளுக்காக உங்களை கொஞ்சம் வேகமாக செயல்பட வைக்கக் கூடிய அதிஅற்புதமான சிறப்பு ஸ்தானம் என்பதால் அவர்களுக்காக சற்று போராடி அவர்களது முன்னேற்றங்களை கவனிக்கப் போகிறீர்கள் என்பதை ராகு -கேதுக்கள் தெரியப்படுத்துகின்றன.

   வருகிற ஓர் ஆண்டு வரை வண்டி வாகனத்தை மாற்றுகிற யோசனைகளை தள்ளி வைக்கவும். புது வீடு கட்ட நினைத்திருப்பதையும் சற்றே தள்ளி வைக்கவும். எந்த புது முயற்சியில் இறங்க நினைத்தாலும் 9 1/2 மாதங்கள் கடந்த பிறகு ஆரம்பித்துக் கொள்வது மிக நல்லது.

  மேலும் சொத்து-பத்து பங்கு பங்காளி வகை விஷயங்கள், பிரச்னைகள் பேச்சு வார்த்தையாகவே நகர்ந்து கொண்டிருக்கும். உடனடி முடிவுக்கும், தீர்வுக்கும் சில நேரம் வராது. அடுத்ததாக கொடுக்கல் வாங்கலில் மிகுந்த விழிப்பு தேவை. புதிய கடன்படுவதை நிறுத்திக் கொள்ளவும். மனதை அலைபாய விடக்கூடாது. தீயவர் சகவாசத்தை தவிர்க்க வேண்டும்.

   சுபகாரிய திருமண விரய செலவுகளை மேற்கொள்ளலாம். வாரிசுகளின் வயது கடந்து கொண்டிருப்பின் அவர்களுக்கு சுபமான நன்மைகளை நடத்தி முடிக்கலாம். ஆக இந்த ராகு-கேது பெயர்ச்சி என்பது உங்களை சில நேரம் மனதளவில் குழம்ப வைத்தாலும், அத்தனையும் நன்மையிலேயே தான் முடிய வைக்க இருக்கிறது.

   சுவாதி நேயர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி தொட்டு 80 சதவீத உயர்வுகள் 3 1/2 மாத காலத்துக்கு கிடைக்கப் போகிறது. அதன்பிறகு சித்திரை நேயர்களுக்கு. அதற்கடுத்ததாக விசாக நேயர்களுக்கு. அடுத்தடுத்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உயர்வுகளை ஏற்படுத்தப் போகிற பெயர்ச்சி இது. வரப்போகிற அர்த்தாஷ்டம சனியால் எவ்வித கெடுபிடியும் ஏற்படாதவாறு ராகு-கேதுவும், குருபகவானும் பார்த்துக் கொள்வார்கள்.

   விவசாயிகள் மிகப்பெரிய ஏற்றங்களை அடைந்தாலும் 100 சதவீத லாபத்தில் 25 சதவீதத்தை விஷக் கிருமிகளாலும், விலங்குகளாலும் சேதத்தை சந்திப்பார்கள்.

   அரசியல்வாதிகள் தேவையற்ற அவதூறுகளை இந்த காலக்கட்டத்தில் பொதுமக்களிடையே சந்திக்கக் கூடிய வாய்ப்பு நிச்சயம் உண்டு. கலைஞர்கள் கொஞ்சம் போராடி தான் முன்னேற வேண்டியிருக்கும்.

மற்றபடி இனி வருகிற அதாவது1 1/4 ஆண்டுக்குள் வருகிறசெவ்வாய்,- சனி, புதன்கிழமைகளிளெல்லாம் அற்புதமான திருப்பு முனைகளும், அதிர்ஷ்டங்களும் கிடைக்கப் போகிறது.

  நடைபெற்று வருகிற தமிழ் வருடத்தில் வருகிற தை மாதமும், பங்குனியும், அடுத்த சித்திரை மற்றும்ஆடி மாதங்கள் சூப்பர் உயர்வுகளை தரப் போகிறது.


விருச்சிகம்

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

விருச்சிக ராசி அன்பர்களே, உங்களுக்கு இதுவரை ராகு-கேதுக்கள் குடும்ப ஸ்தானத்திலும், 8ம் இடத்திலும் நின்று கொண்டு பல பெரிய தொல்லைகளை கொடுத்து உங்களை உயர விடாமலும், அடுத்தக்கட்ட கீழ் இறக்கத்திற்கு கொண்டு சென்று விடாமலும், திரிசங்கு சொர்க்கமாக உங்களை வைத்து ஒரு மிகப்பெரிய கேம் -ஷோ ஒன்றையே 1 1/2 ஆண்டாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

   இவர்களுக்கு துணையாக சனிபகவானும் சேர்ந்து கொண்டு தன்னுடைய பங்குக்கு உங்களை போட்டு பல துயரங்களாலும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம், இந்த ராசி  38 வயதிலிருந்து 47 வயதுக்குள் இருக்கிற விருச்சிகத்தார் அனைவருக்கும் ஏகப்பட்ட சுப - சோபனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

  வீடு கட்டி கொண்டிருக்கிறார்கள். திருமணம் செய்து முடித்திருக்கிறார்கள். புதிய சொத்துகளை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். தொய்வில்லாத தொழில் லாபத்தை சந்தித்து வருகிறார்கள். புதிய வியாபாரத்தில் முதலாளியாக அமர்ந்திருக்கிறார்கள். இப்போதைய நாட்டு நடப்பின் காரணமாக ஏதேதோ சிக்கல்களும், ஸ்தம்பிப்புகளும் ஒருபுறம் இவர்களை ஆட்டி படைத்தாலும், மறுபுறம் அதிலிருந்தெல்லாம் மீண்டு தாங்கள் யாரென  நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

   காரணம் இப்போது இவர்களுக்கு சனிபகவான் காட்டிக் கொண்டு வருகிற கருணையே. அதே நேரம் சனிபகவானால் கிடைக்க வேண்டிய உயர்வு பலன்களை எல்லாம் எதிர்பாராத தருணத்தில் 2, 8- ஆக கடந்த1 1/2 ஆண்டாக அமர்ந்திருந்த ராகு-கேதுக்கள் கிடைத்த லாபத்தை யாருக்காகவோ பங்கு போட வைத்தார்கள். அதனால் உங்களது செல்வ நிலைமை குறைந்திருக்கலாம். ஆனால் பணத்தால் குறையாத சந்தோஷமே கிடைத்துக் கொண்டு வந்திருக்கும். காரணம் 2ம் இட பாவ கிரகங்கள் எதுவாக இருப்பினும் அது தனப்பெருக்கத்தை  உண்டாக்கக் கூடிய வல்லமை படைத்தவை என்பதால்.

   அதேநேரம் இந்த ராசி சுமார் 50 வயதிலிருந்து 59 வயதுக்குள் இருப்பின் ஏகப்பட்ட சோதனைகளும், காரண காரியமற்ற தடங்கல்களும், இல்லத்துக்குள் சச்சரவுகளும், வாழ்க்கைத் துணையுடன் விதண்டாவாதங்களும், சம்பந்தமில்லாத பிரிவுகளும், ஒற்றுமை குறைவும் இல்லத்துக்குள்ளேயே ஒருவருக்கொருவர் வெவ்வேறு அறையில் அடைந்து கிடக்க வேண்டிய சூழலும், அவர் கையால் நான் சாப்பிட மாட்டேன் என்றவித கொள்கை பிடிவாதமும் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கலாம். தொழில், வியாபார, நிர்வாக, உத்தியோக, பதவி, பொறுப்பு, பணி, சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கலாம். இதற்கெல்லாம் ஒரு வழியாக முடிவு கட்டுவதற்கே இந்த ராகு-கேது பெயர்ச்சியும், அடுத்து வருகிற 2020 டிசம்பர் 25-ம் தேதிக்கு பிறகு7 1/2யை முடிக்கிற சனிபகவானும், அவரோடு சேர்ந்து நிற்கப் போகிற நீச குருவும் இணைந்து உங்களுக்கான அபரிமித உயர்வு, சாதக, உன்னத பலன்களை மிகப்பெரிய அளவில் கொடுக்கப் போகிறார்கள்.

    ராசிக்குள் கேது வந்து அமரப் போகிறார். 7-ம் இடத்தில் ராகு வந்து நீசமாகிவிட இருக்கிறார். எனவே, வீடு. கட்டிட செலவுகள் ஏற்படும். வாகனத்துக்காக செலவு செய்ய நேரிடும். வாங்கிப் போட்ட இடத்தை சீர் செய்வதற்காக விரயங்கள் உண்டு. தொழிற்சாலையில் புதிய எந்திரங்களை வாங்குவதற்காக புதிய பட்ஜெட் ஒதுக்க நேரிடலாம்.

    ஆக. எல்லாமே ஆக வேண்டிய செலவுகள்தான். ஆகியே தீர வேண்டிய செலவுகள்தான். வருகிற நவம்பர் மாத 10ம் தேதி வரை அனுஷ நேயர்கள் சர்வ கவனமாக செயல்படணும். அதன்பிறகு சிறப்பு லாபங்கள், உயர்வுகள், சந்தோஷங்கள் தூக்கலாக கிடைக்கப் போகின்றன.

   விசாக நேயர்கள் வருகிற 2020 டிசம்பர் 4ம் தேதியிலிருந்து அதிரடியான யோக பலன்களை, உயர்வுகளை தடாலடியாக அடையப் போகிறார்கள்.

ராகு -கேதுக்கள் வருகிற செப்டம்பர் 1ம் தேதி, பெயர்ச்சியானதிலிருந்து 7 1/2 மாத காலத்துக்கு ஏகப்பட்ட திருப்பங்களை கேட்டை நேயர்கள் அதிரடியாக சந்தித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள். புத்தி ஸ்தானம் வழுவாகப் போகிறது. தனி துணிச்சல் உருவாகிவிடும். அடுத்ததாக சொத்து-பத்து பிரச்னைகளும், கடன் வழக்கு விவகாரங்களும் மெல்ல முடிவுக்கு வரும். திருமண விஷயங்கள் எளிதாக கைகூடிவிடும் .உத்தியோக பளு குறைந்துவிடும், ஊதிய சம்பந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஊதிய நிலுவைகளும் பென்சன் சம்பந்தபட்ட பிரச்னைகளும் சாதகமாக போகின்றன.

   இந்த ராசி அனுஷ இளம்பெண்கள் மட்டும் தங்களது பிடிவாதத்தை கண்டிப்பாக மணவாழ்க்கை ரீதியாக தளர்த்திக் கொள்ள வேண்டும். இந்த ராசி இளைஞர்கள் அனைவரும் தங்களது மோட்டார் வாகன பயணங்களில் விழிப்போடு பயணிக்க வேண்டிய காலகட்டமிது.  விவசாயிகள் இனிமேல் தங்களது உழைப்புக்கேற்ற அதீத உற்பத்தி லாபங்களை அடைய இருக்கிறார்கள்.

   அனுஷ நட்சத்திர இளம் மாணவ, மாணவிகள் தங்களது கல்வி கனவுகளை விருப்பப்பட்ட நுணுக்க உயர்கல்விகளை எவ்வித தடங்களுமின்றி அடையப் போகிறார்கள். கலைஞர்களுக்கு இடையிடையே சோதனைகள் ஏற்பட்டாலும், தங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகளை அடையவே போகிறார்கள். தொழிலதிபர்கள், அயல்தேசவாசிகள்,வாணிக தொடர்பில் இருப்பவர்கள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் இனிமேல் இரட்டை லாபங்களை கண்டிப்பாக அடைவார்கள்.

  வருகிற 2/3 ஆண்டுக்குள் தமிழ் மாதங்களான மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி மாதங்களிலும் இந்த காலக்கட்டத்தில் வருகிற வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏகபட்ட உயர்வு திருப்பங்கள் இந்த ராசி அனைவருக்கும் உண்டு.

  பொதுவாக விருச்சிகத்தார் அனைவருக்கும் கும்பம் மற்றும் ரிஷபம் துலாம் ராசி அன்பர்களாலும் மூலம், சதயம், பூசம் மற்றும் உத்திர நட்சத்திர நேயர்களாலும் அபரிமித விசேஷ உயர்வு பலன்கள் கிடைக்கப் போகிறது.


தனுசு

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தனுசு ராசி நேயர்களான நீங்கள் எப்போதுமே வாழ்வின் அடிமட்ட சோகத்தையும், உயர்மட்ட மகிழ்ச்சி, ஆடம்பர, வசதி வாய்ப்பு, ஆளடிமை, ஏவலால் சவுகரியங்களை அடையக் கூடிய தகுதி படைத்த குருபகவானின் ஆதிக்கம் பெற்ற குருவின் மூலத்திரிகோண ஆட்சிநிலை வீடான தனுசு ராசிக்கு சொந்தக்காரரான உங்களுக்கு, இதுவரை சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடல் வரிகள் தான் எந்நேரமும் உங்களது காதுக்குள் மிக சத்தமாகவே ரீங்காரமிட்டிருக்கும். காரணம் இதுவரை ஏழரையில்ஜென்ம சனி, கடந்த ஓராண்டாக ராசிநாதனான குருபகவான் ஜென்ம குருவாக பிரவேசம். அத்துடன் ஜென்ம கேது இதுவல்லாமல் 7ம் இட ராகு. இவ்வித கிரக சுழற்சியெல்லாம் சேர்ந்து உங்களை சுழற்றி அடித்தது என்றே சொல்லலாம். அனுபவிக்காத சங்கடமில்லை, செய்யாத விரயம் கிடையாது.

  ஒட்டடை போல் ஊசலாடிக் கொண்டிருக்கிற உங்களுக்கு, இதோ வந்துவிட்டது வசந்த வாழ்க்கை. இதனால் நிறையவே சந்தோஷப்பட போகிறீர்கள். நெருக்கடியிலிருந்தெல்லாம் மீளப் போகிறீர்கள். இல்லற வாழ்வில் தனிப்பட்ட மகிழ்ச்சியை சந்திக்கப் போகிறீர்கள். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் ஏற்பட்ட பனிப்போர் சச்சரவால் ஏற்பட்ட பிரிவு ஒரு வழியாக முடிவுக்கு வந்து மீண்டும் ஒற்றுமையாகப் போகிறீர்கள். பொருளாதார நிலைமையில் புதிய ஏற்றத்தை சந்திக்கப் போகிறீர்கள். போட்டி, பொறாமை எதிர்ப்புகளிலிருந்து வெளிவந்து விட இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் பெரிய சாதக அதிர்ஷ்ட திருப்புமுனை உயர்வுகளை இந்த ராகு -கேதுக்கள் வருகிற 2020 செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்துவித தடைகளையும் உடைத்தெறிந்து உங்களுக்கென உயர்வானதொரு அதிர்ஷ்ட தனித்த பாதையை உருவாக்கப் போகிறார்கள்.

   அதே நேரம் இந்த ராசி 32 வயதிலிருந்து 41 வயதில் இருக்கிற அனைத்து இருபாலருக்கும் ஏகபோகமான சந்தோஷ உயர்வுகள் தான் எவ்வித கோளாறுகளும், தடைகளும், சச்சரவுகளும் இல்லாமல், எதைத் தொட்டாலும் பொன்னாக விளைந்து, பொருளாதார சங்கடமில்லாமல், வீண் போட்டி சங்கடங்களில் மாட்டாமல், தனது உயர்வு, தனது செல்வம் என்றபடி அருமையாக போய்க் கொண்டிருக்கிறது, அதாவது ஜென்ம சனி, ஜென்ம கேது, ஜென்ம குரு கிரக சூழலையெல்லாம் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. காரணம் இந்த வயதில் இருப்பவர்களுக்கு இப்போது பொங்கு சனி காலம் என்பதால்.

  இதுவல்லாமல் இந்த ராசி  52 வயது முதல் 60 வயதுக்குள் இருக்கிற தனுசு ராசி அனைத்து இருபாலருக்கும் தேவையற்ற சச்சரவுகளும், நெருக்கடியான சூழல்களும் நகர்ந்து கொண்டிருக்கலாம். இது ஏழரையின் மறுபக்க நாட்டியம். தசாபுத்தி சாதகமாக இருந்தால் மட்டுமே கொஞ்சம் சந்தோஷ மகிழ்ச்சியோடு நகர்த்திக் கொண்டிருக்கலாம் அவ்வளவே.

   இனி இந்த செப்டம்பர் 2020 1ம் தேதி முதல் மூல நட்சத்திர நேயர்களுக்கு 55 சதவீத சாதகமும், மகிழ்ச்சியும், வெற்றியும், சந்தோஷமும் கிடைத்து தனிப்பட்ட வளர்ச்சியினை கொடுக்கும். இது 2021 மார்ச் மாத 26-ம் தேதிக்கு பிறகு மேலும் பல திருப்பங்களையும், உயர்வுகளையும் அதிரடியாக உண்டாக்கி ஒவ்வொரு தொல்லை தொந்திரவுகளிலிருந்தும் விடுபட வைத்துவிடும்.

   பொதுவாக ராகு- கேதுக்கள் ஜென்ம ராசியை விட்டும், 7-ம் இட கண்ட ஸ்தானத்தை விட்டும் விலகுவதே பெரிய பாக்கியம் இவர்களுக்கு. இதன் பொருட்டு பலவித இக்கட்டான கடுமைகளிலிருந்து ஒவ்வொன்றாக வெளிவந்து விடலாம்.

   ஆக இந்த நட்சத்திர அன்பர்களுக்கு இனிமேல் எல்லா சவுகரியங்களும் ஒரு வழியாக கிடைத்து, இல்ல சுபகாரிய திருமண இழுபறிகளையெல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து அதீத மனமகிழ்ச்சி சந்தோஷத்திற்கு திரும்பி விடலாம்.  பூராட நட்சத்திர நேயர்களுக்கு இந்த 2020 செப்டம்பர் 2-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 5 1/2 மாதங்கள் வெகு சூப்பர் உயர்வுகள் வாய்ப்புகள், குடும்ப வளர்ச்சி, உத்தியோக மேன்மை, எண்ணற்ற சவுகரியங்கள், வசதி, ஆடம்பர உயர்வுகள், ஆடை ஆபரண வாகன சேர்க்கை, மண், மனை, பூமி, கட்டட இத்தியாதிகளால் லாபங்கள், கொடுக்கல் வாங்கலால் திருப்தி மேன்மை, கடன் விஷய தீர்வு, பூர்வீக சொத்துபத்து சம்பந்த பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும் சாதகமான ராகு-கேது பெயர்ச்சி இது .

    உத்திராட நட்சத்திர அன்பர்கள் ராகு- கேது பெயர்ச்சியானது தொட்டு வருகிற ஜனவரி 2021, 7-ம் தேதி வரை அனைத்து விஷயத்திலும் சர்வ கவனமாக, நிதானமாக செயல்படணும். அதன் பிறகு சூப்பர் உயர்வு காலம், மிகப்பெரிய உயர்வுகளோடு நகரப் போகிறது.

   நினைத்ததெல்லாம் கைகூடும். அனைத்துவித பெரிய, இனம்புரியாத சம்பந்தம் இல்லாத சங்கடம் அனைத்திலிருந்தும் வெகு லாவகமாக வெளிவந்து விடலாம். எல்லா ஆசைகளும் பூர்த்தியாகும். திருமண ஏற்பாட்டிலிருந்தால் நடந்துவிடும். உத்தியோகம் கிடைக்காத சஞ்சலங்களிலிருந்தால் அருமையான உத்தியோகம் அமைந்துவிடும் என ராகு -கேதுக்களே உத்திரவாதம் தருகிறார்கள்.

  இந்த ராசி விவசாயிகள் பல லாப பெருக்கங்களை அடையப் போகிறார்கள்.மாணவர்கள் குழப்பமான கல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு தெளிவான உயர்கல்வி பாதையை தேர்ந்தெடுத்து விடுவார்கள்.

   கலைஞர்கள் தங்களது திறமையை நிருபிக்க வருகிற நவம்பர் மாதமே 2020, பெரியதொரு அதிர்ஷ்ட களம் அமையப் போகிறது. அரசியல்வாதிகள் வருகிற ஐப்பசி மாதமே பெரியதொரு உயர்வை, பதவியை எதிர்பாராமல் சந்திக்கப் போகிறார்கள்.

   மற்றபடி இனி வருகிற 1 1/2 வருட காலத்திற்குள் வருகிற ஐப்பசியும், மாசியும், சித்திரையும், வைகாசியும், புரட்டாசியும் வெகு அற்புதமான திருப்பங்களையும் கொடுக்கப் போகிறது. இந்த காலகட்டத்திற்குள் வருகிற சனி.- செவ்வாய். வெள்ளிக்கிழமைகளிளெல்லாம் எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் உயர்வாக ஏற்பட போகின்றன.

    மகர மேஷ ராசி அன்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருவோணம், உத்திரட்டாதி, அஸ்வினி, பூரம், உத்திரம், சுவாதி நட்சத்திர அன்பர்கள் உதவப் போகிறார்கள்.

    மொத்தத்தில்  4 1/2 ஆண்டு சங்கடங்களுக்கெல்லாம்  தீர்வு கிடைத்து உங்களை முன்னேற்ற வந்திருக்கிற ராகு -கேது பெயர்ச்சி இது.


மகரம்

மகரம்

(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

மகர ராசி அன்பர்களே, இதுவரை விரய சனி, விரய கேது, விரய குரு போன்ற கிரக சுழற்சியால் 2 3/4  ஆண்டுகளாக தடுமாற்றம், தடுமாற்றம், தடுமாற்றம்தான் உங்களுக்கு. எதிலும் ஒழுங்கான நிவர்த்தி கிடைக்காமலும், சம்பாதித்த பணம் செலவாகிற வழி உங்களுக்கே தெரியாமலும், மறைமுக எதிர்ப்பு தொந்திரவுகளை சமாளித்தும், போட்டி பொறாமைகளை எதிர்கொண்டும், இல்லத்தாருடன் சிற்சில சமயங்களில் விரோதம் பாராட்டியும், வாழ்க்கைத் துணையால் அவ்வப்போது வேண்டாத சங்கடங்களையெல்லாம் சந்தித்து கொண்டிருக்கும் உங்களுக்கு இரு கரம் கொடுத்து, காப்பாற்றி கரை சேர்க்க இரு கிரகங்களான சாயா கிரகங்கள் ராகுவும், கேதுவும் வருகிற செப்டம்பர் மாத 1ம் தேதியிலிருந்து லாப ராசியிலும் ஒருவர் யோக ஸ்தானத்திலும் வந்து அமர்ந்து, உங்களை நீங்களே ஆச்சரியப்படும்படி உயர்த்திவிட்டு போவதற்கு தயாராகி விட்டார்கள் என அவர்களே சொல்கிறார்கள்.

    அதே நேரம் மகர ராசிக்கு வருகிற 2020, நவம்பர் மாத 17ம் தேதிக்கு பிறகு வரப்போகிற ஜென்மகுருவும், அடுத்து ராசிக்குள் நுழைகிற ராசிநாதனான சனிபகவான் உண்டாக்க போகிற ஜென்ம சனி நேரத்தையும், சரி செய்ய ராகு- கேதுக்கள் தயாராக நிற்கப் போகிறார்கள். ஆகவே அடுத்தடுத்து வருகிற கடுமையான கிரகப் பெயர்ச்சிகள் ஒன்றும் உங்களை செய்திடாதவாறு காப்பாற்றவே இந்த ராகு- கேதுக்கள் முன்கூட்டியே 11ம் இடத்திற்கும், 5ம் இடத்திற்கும் வந்து நிற்கப் போகிறார்கள். எனவே இனி எதிலும் சுபமே, சந்தோஷமே, இனிமையே, எதைத் தொட்டாலும் வெற்றியே. இந்த ராகு-கேது பெயர்ச்சியே உங்களை பலமடங்கு மகிழ்ச்சியாக்கி நிம்மதி பெருமூச்சு வைக்க விட இருக்கிறது.

  அடுத்ததாக வருகிற 2021, மே மாத 8ம் தேதி வரை திருவோண நட்சத்திர நேயர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய யோகங்கள், மிக அட்டகாசமாக கிடைக்கப் போகிறது. ஏழரையில் அடுத்து வருகிற ஜென்ம சனி கெடுபிடிகளையும், ஜென்ம குருவின் கோலாட்டங்களையும், இந்த ராகு-கேது பெயர்ச்சி 1 1/2 ஆண்டு காலத்துக்கு அடக்கி வைக்கப் போகிறது. யோகத்தை அதிகப்படுத்த இருக்கிறது, அதிர்ஷ்டங்களை இருமடங்காக்கப் போகிறது.

இல்லத்துக்குள் மகிழ்ச்சி இருமடங்காக இருக்கிறது. இழந்த தொகைகள் கிடைக்கப் போகின்றன. எதிர்பாராத பரிசு பண அதிர்ஷ்ட வரவுகளுக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறது.

  அவிட்ட நேயர்களுக்கு ராகு கிரகத்தால் பெரிய சாதகத்தை  4 1/2 மாத காலத்துக்கு எதிர்பார்க்க முடியாது. அதற்கு பதிலாக கேது கிரகத்தால் இந்த 4 1/2 மாதமும் உயர்வுகரமாக ஓடும். ராகு ஏற்படுத்துகிற தடைகளை கேது கிரகம் உடைத்து விடுவார். ஜென்ம சனி, ஜென்ம குரு உண்டாக்குகிற கெடுபிடிகளையும் கேது கிரகம் பார்த்துக் கொள்ளும். அதன்பிறகு இரண்டு கிரகங்களுமே ஒரே நேரத்தில் அவிட்ட நட்சத்திர நேயர்களுக்கு மிகப்பெரிய ஆதாய, லாபகர, சுபசோபன வைபவ மாற்றங்களை எண்ணற்ற வகையில் ஏற்படுத்தி, புதிய சொத்து-பத்துகளுக்கும், சேமிப்பு உயர்வுகளுக்கும் வழிவகை செய்துவிட்டு உத்தியோக, பதவி, பொறுப்பு, பணி, வேலை மற்றபிற கடமை இத்தியாதிகள் அனைத்திலும், புது வகை உயர்வுகளை கொடுத்து உங்களை முன்னேற்றப் போகிறார்கள்.

   உத்திராட நேயர்கள் அனைவருக்கும் வருகிற செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து கொஞ்சம் தடுமாற்றமாகவும், தேவையற்ற கெடுபிடிகளாகவும் 7 மாதங்கள் நகர்ந்து அதன் பிறகே நினைத்ததையெல்லாம் பலிதமாக்கப் போகிறது. உத்தியோக சங்கடத்தை தீர்த்து வைக்கப் போகிறது. வியாபார உயர்வை கொடுக்கப் போகிறது. தொழிலில் புதிய முன்னேற்றத்தை ஆரம்பித்து வைக்கப் போகிறது.

   இல்ல சுபகாரியங்களை நடத்தி வைக்கப் போகிறது. திருமண கனவுகளை பூர்த்தியாக்கி வைக்கப் போகிறது. உயர்வான பணி, வேலை, உத்தியோக பதவி அமையாததற்கு எல்லாம் திருப்பு முனைகளை தரப்போகிறது. இதுவெல்லாம் ஜென்ம சனியையும், ஜென்ம குருவையும் தாண்டி நடக்கப் போகிற அற்புதங்கள்.

   அதேநேரம் மகர ராசியினர் சுமார் 37 வயதிலிருந்து, 49 வயதுக்குள் இருப்பின் இவர்களுக்கு தற்போதுசனி மகா திசையான ராசிநாதனின் திசையும், பொங்குசனி காலமும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அனைத்து சுப சோபனங்களும் ஒழுங்காக உயர்வாக கிடைத்துக் கொண்டே நகரும். புதிய சொத்துபத்து சேர்க்கை வீடு வாகன சேர்க்கைகள், புதிய வீடு கட்டுவதில் சிரமமில்லாத நிலை, அயலூர் திட்டங்களில் யோகங்கள், தொழில் வியாபாரத்தில் பெரியதொரு அதிர்ஷ்ட மாற்றம், பொருளாதார சரள நிலை, எதிர்பாராத பரிசு பண வரவுகள் என மகர ராசியினரை மெல்ல உச்சத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும்.

    மகர ராசியினர் வருகிற 2021 ஜனவரியிலிருந்து புதிய பெரிய திட்டங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், அகலக்கால் திட்டங்களில் இறங்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

    இந்த ராசி விவசாயிகளுக்கு வருகிற நவம்பர் முதல் ஏகப்பட்ட விளைச்சல் உற்பத்தி, லாப அதிர்ஷ்டங்கள் அபரிமிதமாக போகின்றன. மாணவர்கள் வெளியூர் படிப்பை மட்டுமே உயர்கல்விக்காக தேர்ந்தெடுப்பது நலம்.

காவல்துறை உத்தியோகத்திற்காக முயற்சித்து வரும் உத்திராடம் மற்றும் அவிட்ட நட்சத்திர நேயர்களுக்கு எதிர்பாராத உத்தியோக வாய்ப்பு இந்த துறையில் கிடைக்கப் போகிறது. அடுத்து தொழிலதிபர்கள், அயல்தேச வாசிகள் தங்கள் விருப்பங்கள் அனைத்தையும் வருகிற 2020 டிசம்பர் மாத 12ம் தேதியிலிருந்த ஏக சவுகரியமாக உயர்வாக அடைய இருக்கிறார்கள்.

   கலைஞர்கள் வருகிற நவம்பர் வரை கொஞ்சம் நிதானமாகவும், தங்களது தொழில் ரகசியங்களை வெளிப்படுத்தாமலும் நகர்த்த வேண்டியது முக்கியம்.

   அரசியல் அன்பர்கள் வருகிற ஐப்பசி மாதம் தொட்டு தடாலடியான உயர் பதவிகளை கட்சி ரீதியாக அடையப் போகிறார்கள்.


கும்பம்

கும்பம்

(அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

கும்ப ராசி வாசகர்களே, உங்களுக்கு வருகிற செப்டம்பர் மாத 1ம் தேதி முதல் இதுவரை 5 மற்றும் 11ம் இடமாக அமர்ந்திருந்த நிழல் கிரகங்களான ராகு -கேதுக்கள், இப்போது 4, 10ம் இடமாக வந்து கேந்திர ஸ்தானத்தில்அமர்கிறார்கள், ஒருவர் செல்வ ஸ்தானத்தில்அமர்கிறார், மற்றொருவர் சுகஸ்தானத்தில் அமர்கிறார், சுகஸ்தானம் 4ம் இடம், செல்வ ஸ்தானம்10ம் இடம். 4ம் இடத்தைப் பொறுத்தவரை தாயார் பந்தயம், போட்டி எதிர்ப்புகளில் வெற்றி கொள்ளுதல், வாகன விருத்தி மற்றும் சுக தூக்கம், சுக போஜனம், சொந்த பூர்வீக சொத்துக்கள் பற்றிய விரயம் போன்றவைகளை தெரிவிக்கக் கூடியது.

   10ம் இடம் என்பது அடையக்கூடிய பதவிகளையும், தானாக வாய்க்கக்கூடிய செல்வங்களையும், திடீர் பதவிகளையும், உத்தியோக நிரந்தரத்தையும், பூர்வீக சொத்து-பத்துகளால் கிடைக்க வேண்டிய ஆதாயங்களையும், தொழில் வியாபார லாபங்களையும், எதிர்பாராமல் சேரக்கூடிய செல்வங்களையும் குறிக்கக் கூடிய மிக உன்னதமான இடம். இந்த இடங்களுக்கு ராகு -கேதுக்கள் வந்து அமர்வது மிகப்பெரிய உயர்வுகளையும், தனப் பெருக்கத்தையும் கும்ப ராசிக்காரர்களான உங்களுக்கு கண்டிப்பாக உண்டாக்கப்போவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    ராகு, சனியின் குணங்களை கொண்டவர் என்பதால் அதோடு கேதுபகவான் செவ்வாயின் குணங்களை அடைந்தவர் என்பதால் செல்வ ஸ்தான அதிபதியான செவ்வாய்க் கிரகம் செய்ய வேண்டிய, கொடுக்க வேண்டிய லாப சவுகரியங்களையும், உத்தியோக அமர்வுகளையும், திடீர் வேலைவாய்ப்புகளையும் தொழில் வியாபார வகை பெருக்கங்களையும் ஏற்படுத்தக் கூடிய கட்டாயத்திற்கு கேது கிரகம் ஆளாகிறார். ராகு கிரகமோ சனியின் குணத்துவத்தைப் பெற்று தனது நண்பரின் வீடான ரிஷப ராசியில் கேந்திரமாக அமர்வது தனி துணிச்சல், உழைப்பு கூடுதல், தன்னம்பிக்கை குறையாமல் இருத்தல், உழைப்பை சோர்வு இல்லாமல் செலுத்தி லாபத்தை தட்டி செல்லுதல், இடம், மனை அமைய செய்தல், கட்டிட விருத்திகளை ஏற்படுத்துதல், தாயாரின் ஆரோக்கியத்தை வலிமையாக்குதல் போன்றவற்றை எந்தவித குறையுமின்றி இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யப் போகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

   அதாவது 4, 10ம் இட ராகு-கேதுக்கள். அடுத்ததாக வருகிற டிசம்பர், 26-ம் தேதிக்குப் பிறகு உங்கள் ராசிக்கு விரய சனி காலம். நவம்பர் மாத 15ம் தேதிக்கு பிறகு விரய குரு காலம். இருப்பினும் உங்கள் ராசிக்கு ஒருவகையில் குரு கிரகம் பாவி. சனியோ ராசிநாதன் அதனால் அவ்வளவாக பெரிய தாக்கங்கள் எதுவும் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. அத்துடன் நீங்கள் சுமார் 35 வயதிலிருந்து 44 வயதுக்குள் இருப்பின் உங்களது பிறந்த லக்ன பிரகாரம் சுப தெசா, லாப தெசா, யோக தெசா நடைமுறையிலிருப்பின் இந்த ராகு -கேது பெயர்ச்சியாலும், வருகிற ஏழரையாலும் எவ்விதமான தொல்லை தொந்திரவும் கண்டிப்பாக ஏற்படாது என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறது. இதற்கு மாறாக ராகு -கேதுக்களால் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு மிக மிக மேன்மையாக, நல்லபடியாக கை கொடுக்கவேபோகிறது.

    எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாவது வெற்றிக்கு கொண்டு வந்து விடுவீர்கள். குடும்ப கடமை, தேவை, அத்தியாவசிய இத்தியாதி பணிகள் அனைத்தும் செவ்வனே சுபமாக நிறைவேறப் போகிறது. வாட்டுதல் கிடையாது, புதிய தொந்திரவு ஏற்படாது, கடன் உயர்வுகளுக்கு வாய்ப்பில்லை. பழைய கடனாளிகள் யாரும் தொந்திரவு படுத்த மாட்டார்கள். அரசாங்க சம்பந்த கெடுபிடிகள் ஒரு பக்கம் நீடித்தாலும், அதனை சுபமாக முடிவுக்கு கொண்டு வருகிற வல்லமை ஏற்பட்டுவிடும். அடுத்தடுத்த காரியங்களில் வெகு சுறுசுறுப்பாக இறங்கி, காரிய சாதனை படைப்பதற்கு ராகு- கேதுக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

  யோக அதிபதிகளின் அதாவது தர்மகர்மாதிபதிகளின் வீட்டில் சாயா கிரகங்களான இவர்கள் மறைமுக திடீர் யோகங்களை கொடுக்கக்கூடிய பக்குவத்தில் இருக்கிற இவர்கள் எந்த ரூபத்திலோ, பெரிய பெரிய உயர்வு மாற்றங்களை மிக எளிதாக கொடுக்கத்தான் போகிறார்கள். ஒரு வகையில் ராகு -கேதுக்களுக்குஉகந்ததான இடம் இது சொல்லப்பட்டாலும் “பாவிகள் கேந்திரத்தோன் ஆயின் தீய பலன்களை கொடார்கள்” என்ற விதிகளுக்கு ஏற்ப உங்களுக்கு சிலபல யோக சவுபாக்கிய விருத்திகளை கண்டிப்பாக உண்டாக்கக் கூடிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த பெயர்ச்சிதான் உங்களை முழு மனிதனாகவேஆக்கப் போகிறது.

   உயர்வுகளை கொடுக்கப் போகிறது. இதுவரை 11-ம் இடத்தில் நின்ற குருவும், கேதுவும் கிள்ளிக் கொடுத்தார்கள். இனிமேல் தனித்த ராகுவும், கேதுவும் அள்ளிக் கொடுப்பார்கள். ஆசைப்பட்டதை அடைய வைப்பார்கள். புத்திசாலித்தனத்தை உயர்த்துவார்கள். வி.ஐ.பிகளை நெருக்கமாக்குவார்கள்.

   கும்ப ராசியினரில் முதலில்  சதய நட்சத்திரத்திற்கு வருகிற 2020 செப்டம்பர் 1லிருந்து 2021, மார்ச் மாத 17-ம் தேதி வரை எவ்வித தங்கு தடையுமின்றி யோகங்கள் தொடர்ச்சியாகப் போகிறது.

   பூரட்டாதி நேயர்களுக்கு வருகிற செப்டம்பர் முதல் 2021 ஜனவரிக்குள்ளாகவே ஏகபோகமான அதிரடி திருப்பங்கள் நிறையவே காத்திருக்கின்றன.

   அவிட்ட நேயர்களுக்கு வருகிற 2021, ஏப்ரல் 2-ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து பத்து மாதங்கள் அதிரடியான வளர்ச்சி யோக, பாக்கியங்களை, சவுகரியங்களை கொடுக்கப் போகிறார்கள் இவர்கள்.

அரசியல்வாதிகளுக்கு யோகமான பதவி காலம் இது. விவசாயிகளுக்கு தனித்தொரு லாபம் பெரிய அளவில் விளைச்சல் மூலம் மகசூலாக கிடைக்கப் போகிறது. இந்த ராசி கலைஞர்கள் போட்டி போட்டு ஜெயிப்பார்கள்.

    இந்த 1 1/2 ஆண்டு காலத்துக்குள் வருகிற கார்த்திகையும், மார்கழியும் மற்றும் சித்திரை, ஆடி மாதங்களும் சனி, புதன், வெள்ளிக்கிழமைகளும் மிகமிக உயர்வாக இருக்கப் போகிறது.

   ரிஷப, கடக ராசி அன்பர்கள் உதவியாகவும், அன்யோன்யமாகவும், ஒத்துழைப்பாகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

   மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி ஒருவித பெரிய உயர்வை தந்துவிட்டே போக இருக்கிறது கும்ப ராசிக்கு.


மீனம்

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீன ராசிக்காரர்களான உங்களுக்கு, இதுவரை ராகு -கேதுக்கள் 4, 10ஆக அமர்ந்து கடுமைகளை இடையிடையே கொடுத்தாலும், மீனம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளுக்கு யோககாரர்களான இவர்களால் எந்தவித தொல்லையும் வராது என்பதை உறுதிப்படுத்தியும், உங்கள் ராசியை கடந்த 1 1/2 ஆண்டாக எந்த ஒரு துன்புறுத்தலும் ஏற்படுத்தாமல், அதேநேரம் சிற்சில தடங்கல்களையும், மனவெறுப்புகளை மட்டும் ஏற்படுத்தி, ஓரளவு உங்களை உயர்த்தி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதுவெல்லாமல்  2017லிருந்தே உங்கள் ராசிக்கு சரியான கிரக சாதக சூழல்கள் இல்லாமல் போனது. காரணம் அஷ்டம சனி, அஷ்டம குரு என்றபடி உங்களது வாழ்நாளை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்தியது. அதன்பிறகு 2018லிருந்து 10ம் இட சனி, 10ம் இட குரு, 4, 10ம் இட ராகு கேதுக்கள் என உங்களை எந்தவித கொடுப்பினைகளையும் அனுபவிக்க முடியாதபடி தடைக்கட்டைகளை போட்டு அனைத்து திட்டங்களையும் தகர்த்தெறிந்தது.

   உங்களை கன்னாபின்னாவென அலைக்கழித்த அத்தனை தொல்லை தொந்திரவுகளையும் இந்த ராகு- கேது பெயர்ச்சி தொட்டு சரி செய்து உங்களை இமாலய வளர்ச்சிக்கு கொண்டு போகவே 18  ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராகு - கேதுக்கள் ரிஷபத்துக்கும், விருச்சிகத்துக்கும் வந்திருக்கிறார்கள்.

   அதாவது வருகிற 2020, செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து உங்கள் ராசிக்கு கெட்ட இடமான அதேநேரத்தில் மிக முக்கிய இடமான 3ம் இடத்துக்கு ராகுவும், ராசிக்கு யோக இடமான விருச்சிகத்துக்கு கேதுவும் வந்து நின்று நீச உச்சமாக சொல்லப் போவதால் தடுமாறாத உயர்வு, தடம் மாறாத வெற்றி, தடங்கல் இல்லாத காரிய நிவர்த்தி, போட்டி பொறாமை இல்லாத உயர்வுகள், எதிர்ப்புகள் இல்லாத வாழ்க்கை, பொருளாதார தட்டுப்பாடு இல்லாத நாட்கள் என வருகிற 1 1/2 ஆண்டு காலமும் நகரப் போகிறது.

    அடுத்ததாக வருகிற டிசம்பருக்கு பிறகு மற்றுமொரு யோக காலம் தொடங்கப் போகிறது. அதாவது டிசம்பர் 25ம் தேதிக்கு பிறகு சனிபகவான் லாபத்திலும், நவம்பர் 2020, 16-ம் தேதியிலிருந்து குருபகவான் லாப ஸ்தானத்திலும் நிற்கப் போவது மறக்க முடியாத பொற்காலமாக அடுத்து வருகிற ஆண்டுகள் நகரப் போகின்றன என்பதற்கு தகுந்த அடித்தளத்தை, அதிர்ஷ்டத்தை, உயர்வை இந்த ராகு-கேதுக்கள் ஏற்படுத்தி தருவதற்கு வந்துவிட்டன.

    உத்திரட்டாதி நேயர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி தொடக்கமானதிலிருந்து  6 மாதங்கள் மிதமாகத்தான் நகரும். அதன்பிறகு ஏகபோக உயர்வுகள் குவியப் போகின்றன.

   பூரட்டாதியினருக்கு ராகு-கேது பெயர்ச்சியானதிலிருந்து வருகிற ஏப்ரல் மாதம் முடியும் வரை அதிர்ஷ்டங்கள் கரை புரளப் போகின்றன.

   உத்திரட்டாதி அன்பர்களுக்கு 2021, மார்ச் மாத 7-ம் தேதியிலிருந்து அடுக்கடுக்கான வளர்ச்சிகள் தேடி வரப் போகின்றன. தினசரி காலையில் அதிர்ஷ்டமே இவர்களை தட்டி எழுப்பப் போகிறது.

   ரேவதி நட்சத்திர நேயர்களுக்கு வருகிற செப்டம்பர், 2020 -9-ம் தேதி முதல் பலவித பெரிய பெரிய குதூகலங்கள் உண்டாக இருக்கின்றன. மறைமுக தொந்திரவுகள் அனைத்தும் தீரப் போகின்றது. பல காலமாக போட்டு வைத்திருக்கிற திட்டங்களுக்கு இந்த கால கட்டமே ஒத்துழைக்கப் போகிறது.

   பொதுவாக ராகு-கேது பெயர்ச்சியானதிலிருந்து இந்த ராசியினர் அனைவரும் 108 தினங்கள் கவனமாகவும், நிதானமாகவும் புது பிரச்னைகளில் ஈடுபடாமலும் ஓட்ட வேண்டியது அவசியம். காரணம் சனியும் குருவும் தங்களது பாதைகளிலிருந்து மாறாமல் நிற்கிறார்கள் என்பதால். மேலே சொன்ன விஷயங்களில் சிலநேரம் ஈடுபட வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம்.

   இந்த ராசி விவசாய நேயர்கள் வருகிற கார்த்திகை மாதத்திற்குள் ஓரளவு தங்களது கஷ்ட நிலைமை சிக்கல், அரசாங்க கடன், வட்டி கடன், ஆபரண கடன் விஷயங்களிலிருந்து கண்டிப்பாக வெளி வந்து விடுவார்கள். 

   தொழிலதிபர்கள் இதுவரை பார்த்த முதலீடு செய்த, விஷயங்கள் அல்லாமல் புதிய பட்ஜெட்டில் இறங்கப் போகிறார்கள். அடுத்து அயல்தேசவாசிகள் தற்போதைய நாட்டு நடப்பின் காரணமாக என்னென்ன சிக்கல்களை அயல்தேச ரீதியாகவும், அது தொடர்பான உள்நாட்டு நிர்வாக தொடர்பாக அனுபவித்தார்களோ அனைத்திற்கும் மாற்றங்கள் உண்டாகிற பெயர்ச்சி இது.

   கலைஞர்கள் பெண் வர்க்கத்தாரால் அபரிமித யோக வாய்ப்புகளை திடீரென வருகிற 2020, டிசம்பருக்குள்ளாகவே அடைந்து பார்க்க இருக்கிறார்கள்.

   இந்த ராசி உத்திரட்டாதி இளம்பெண்கள் தங்களது நட்பு விஷயத்திலும், உத்தியோக கல்வி இடத்திலும் கவனமாக இருக்கணும். இந்த நட்சத்திர இளைஞர்கள் கேளிக்கை, அநாவசிய பழக்கவழக்கம், தீயவர் சகவாசங்களை  6 1/2 மாத காலத்துக்கு கண்டிப்பாக தவிர்த்து விடணும்.

  மற்றபடி மீன ராசிக்கு அதிஅற்புத சவுகரிய உயர்வுகளே அதிகரிக்க இருக்கின்றன. வருகிற 1 1/2 ஆண்டு காலத்தில் வருகிற வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி போன்ற மாதங்களும் வியாழன், திங்கள் மற்றும் சனிக்கிழமைகளும் வெகு அற்புதமாக இருக்கப் போகிறது.

    நட்சத்திர ரீதியாக மிருகசீரிடம், பூசம், மகம், அஸ்தம், சுவாதி மற்றும் திருவோணம், சதய நட்சத்திர நேயர்களும் விருச்சிக, மகர ராசி அன்பர்களும் பெரிய ஒத்துழைப்புகளை செய்து கொடுக்க இருக்கிறார்கள்.


Trending Now: