தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்; செங்கோட்டையில் விவசாய சங்க கொடியை ஏற்றினர் - ஒருவர் பலி

26-01-2021 02:59 PM

புதுடெல்லி,

டெல்லியில் அமைதியாக நடந்த வந்த விவசாயிகள் போராட்டம், இன்று கட்டுப்பாட்டை இழந்தது. போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழைந்தனர். இவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். சிலர் அங்குள்ள கொடிக்கம்பத்தில் தங்களது விவசாய சங்க கொடியை ஏற்றினர். போராட்டத்தில் விவசாயி ஒருவர் பலியானார். இதனால், டெல்லி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி ராஜபாட்டையில் இன்று குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் நீக்க வேண்டும், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்ட உறுதி அளிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், குடியரசு தினமான இன்று விவசாயிகள் அறிவித்த படி டிராக்டர் பேரணியை நடத்தினர். அதற்கு போலீசார் பல நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்து இருந்தனர்.

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பாதையில் தான் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்த. ஆனால், காலையிலேயே சில சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடந்தே எல்லையில் இருந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.

தில்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணிக்காக படையெடுத்துள்ளனர். சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் மத்திய டெல்லியை நோக்கிச் சென்றனர். 

தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

சில இடங்களில் டிராக்டர்களைக் கொண்டு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை இடித்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைந்தனர். டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளைக் கட்டுப்படுத்த, டெல்லி போலீசார் தொடர்ந்து முயற்சித்தனர். அவர்கள் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். சில இடங்களில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர். தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி போலீசார் விவசாயிகளைக் கலைக்க முயற்சித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

மத்திய டெல்லியின் ஐடிஓ-யில் போலீஸ் பஸ்சை விவசாயிகள் கைப்பற்றினர். ஐடிஓ பகுதியில் டெல்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை விவசாயிகள் அடித்து நொறுகினர். அப்போது, போலீஸ்காரர் ஒருவரை சில விவசாயிகள் தாக்க முயன்றனர். அவரை சில போராட்டக்காரர்கள் மீட்டனர். இதனால், விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டை வீசினர்.

செங்கோட்டையில் கொடியேற்றம்

குடியரசு தினத்தையொட்டி, டெல்லியின் முக்கிய பகுதிகளில் நுழையக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், டெல்லியின் மையப்பகுதியில் முக்கிய இடங்களில் விவசாயிகள் நுழைந்தனர். தடுப்புகளை மீறி விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்தனர். 

மதியம் போல், 20 டிராக்டர்களில் டெல்லி செங்கோட்டைக்குள் விவசாயிகள் நுழைந்தனர். அங்கு கூடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். அவர்களில் சிலர், செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றும் கொடிக் கம்பத்தில் பனைமரம் ஏறுவதுபோல் ஏறி விவசாய சங்கங்களின் கொடிகளை பறக்க விட்டனர். 

அந்த நேரத்தில் கொடிக் கம்பத்தை கீழ் இருந்து சிலர் தாங்கி பிடித்துக் கொண்டனர். 

தொடர்ந்து விவசாயிகள் செங்கோட்டையில் குவிந்தனர். சிலர் கைகளில் ஆயுங்களை சுழற்றிய வண்ணம் இருந்தனர்.

இவர்களை செங்கோட்டையில் இருந்து வெளியேற்ற போலீசார் திணறினர். இதனால், பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். 

 டெல்லி மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. தொடரும் விவசாயிகள் போராட்டத்தால், தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில்நிலையங்களில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயி ஒருவர் பலி

பேரணியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், டிராக்டரிலிருந்து கீழே விழுந்த விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும், அந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த விவசாயின் உடல்மீது மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி, விவசாயிகள் முழக்கமிட்டனர். விவசாயிகள் அங்கேயே தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போலீசாருக்கும் விவசாயிகளுக்கு இடையே நடந்த மோதலில் 3 போலீசார் காயமடைந்தனர். பேரணி நடத்திய பின்னர் விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்திய எல்லைகளை நோக்கி திரும்பினர்.
Trending Now: