26-01-2021 08:24 AM
சென்னை
72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் .
ஆளுநர் தேசியக் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்கிறார்.
தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
ஆளுநர் தேசியக் கொடியேற்றிய நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
போர் நினைவு சின்னத்தில் மலர் மரியாதை
முன்னதாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னையில் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியரசு தின அணி வகுப்பு, விருது வழங்குதல்
பின்னர் சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு அனைவரும் வந்தனர்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பொது மக்கள், பார்வையாளா்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
குடியரசு தின விழாவின் போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டன..
முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெறவுள்ளன.