25-01-2021 10:12 AM
புதுடெல்லி,
தேசிய வாக்காளர் தினம் இன்று (ஜனவரி 25ம் தேதி) கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும், விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் மாற்றுவது என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
61வது தொடக்க தினம் கொண்டாடப்பட்ட 2011ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக, சட்ட அமைச்சக முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் தேசிய வாக்காளர் தினமாக அந்த நாள் அனுசரிக்கப்பட்டு, வாக்குரிமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து
வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில்,
தேசிய வாக்காளர் தினம் என்பது நமது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தேர்தல்களை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தவும், தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். இளைஞர்கள் மத்தியில் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாள் இது.
என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
National Voters Day is an occasion to appreciate the remarkable contribution of the EC to strengthen our democratic fabric and ensure smooth conduct of elections. This is also a day to spread awareness on the need of ensuring voter registration, particularly among the youth.
— Narendra Modi (@narendramodi) January 25, 2021
தமிழ்நாடு ஆளுநர் உறுதிமொழி
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை - கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெறும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, வாக்காளர் தின உறுதிமொழியை செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர் ஆர். பழனிசாமி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்