சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 47 – துரை கருணா

17-06-2016 09:05 PM

மது ஒழிப்பே நம் லட்சியம்!

தமிழக சட்டமன்றத்தில் 1978–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியது:–

எம்.ஜி.ஆர்: தஞ்சைப் பகுதியில் ஒரு விழா கொண்டாடிய போது அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட அதிலே சேர்ந்து பணியாற்றி அன்றைய தினம் பரிசு பெற்றார்கள். ஆனால் திடீரென்று  அதில் பங்ராகேற்ற ஒருவர் ஜினாமா செய்துவிட்டார். என்ன காரணம் என்று கேட்டால், மேலிடத்து உத்தரவு என்று சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு என்ன சொல்வது? கொள்கையில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் யாரோ அப்படிப்பட்ட நிலைமையை உருவாக்குகிறார்கள் என்றால் இந்த நாட்டில் ஒன்று சேர்ந்து நல்லது செய்ய முயலுபவர்களைத் தடுப்பதிலிருந்து நிச்சயமாக நாட்டுக்கு அவர்கள் நன்மை செய்பவர்களாக இருக்க முடியுமா என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அந்த வகையில் காரியங்கள் நடைபெற நாம் நிச்சயமாக அனுமதிக்கக் கூடாது என்பதையும், அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைத்தால்தான் இதிலே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

அண்டை மாநில முதலமைச்சர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அந்த வேண்டுகோள் – 'தமிழக எல்லை ஓரத்தில் தங்களது மாநிலத்தை ஒட்டிய இடத்தில் 5 கிலோ மீட்டர் துாரத்திற்கு நீங்கள் மதுவை அனுமதிக்கக் கூடாது, விற்கக் கூடாது, அதை தடுக்க வேண்டும்' என்று நான் கேட்டுக் கொண்டேன்.

கேரள அரசு ஒத்துக் கொள்ளவில்லை, ஆந்திர அரசும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கர்நாடக அரசு, ''ஜூலை 1ம் தேதி முதல் அதை தடுத்துவிட்டோம், 5 கிலோ மீட்டருக்குள் விற்க முடியாது; நாங்கள் கட்டளையிட்டு விட்டோம்'' என்று கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மாமன்றத்தின் சார்பாக நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். 

கேரள அரசு அமைச்சரவையும், ஆந்திர அரசு அமைச்சரவையும் இரண்டு முதலமைச்சர்களும் நிச்சயமாக இதற்கு பிறகாவது சிந்தித்துப் பார்த்து இதைப்போல் அமல்படுத்த அவர்கள் முன்வருவார்கள் என்று நம்புகிறேன். இதை அவர்கள் தெரிந்து பின்பற்றுவார்களானால் இங்கு சாராயத்தை கொண்டுவருவது, கள்ளச் சாராயத்தைக் காய்ச்சுவது எல்லாம் நிச்சயமாக எளிதில் தடுக்கப்பட முடியும்.

இங்கே ஸ்பிரிட் வேண்டுமென்று கேட்கிறார்கள். வார்னிஷ் வேண்டுமென்று கேட்கிறார்கள். லித்தோ பிரஸுக்கு, என்னிடமே மனு கொண்டு வந்தார்கள், 8 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது என்று கேட்டார்கள். அவைகளையெல்லாம் நாங்கள் கணக்குப் போட்டுப் பார்த்து இனிமேல் நேரடியாக லைசென்ஸ் கொடுப்பது இல்லை என்றும், கூட்டுறவு முறையில் குறிப்பிட்ட சங்கங்களை அமைத்து, அரசினுடைய அங்கீகாரம் பெற்று, கடைகளை வைக்கின்ற வியாபாரிகளுக்கு மட்டும் கொடுப்பது என்றும், எல்லோருக்கும் கொடுப்பதில்லை என்றும் முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கும்பொழுது இங்கே நம்மையும் மீறி தவறுகள் ஏற்படுகின்றன. ஒரு தடவை செய்தால் தவறு, மறுதடவை செய்தால் ஏதோ பழக்கம் என்று சொல்லலாம், மூன்றாவது தடவை செய்தால் ஏதோ கடைசி என்று மன்னிக்கலாம். ஆனால் நான்காவது தடவை தவறு செய்தால் தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு. குறைந்தது முதல் தண்டனை 6 மாதம் கடுங்காவல் தண்டனை என்ற வகையில் அந்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்பது என்னுடைய ஆசை. அதை நிறைவேற்றித்தர நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கொள்கை அளவில் மதுவை அகற்றுவதுதான் நல்லது என்பதில் நம்மில் யாருக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் அதிலே ஏற்படுகிற நஷ்டங்களிலும், தொல்லைகளிலும் இருந்து மீண்டு அதை எப்படிக் கொண்டு வருவது என்பதிலே நம்முள் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர, அதனால் நன்மை உண்டு என்பதிலே கருத்து வேறுபாடு இருக்காது. அவ்வளவு தொல்லைகளையும், நஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு இந்த அரசும் இந்த மாமன்றமும் அதற்காகச் செயல்படும்பொழுது மக்கள் மத்தியிலே நிச்சயமாக சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று நான் நம்புகிறேன்.

காவல் துறையிலே எத்தனை பேர்களைச் சேர்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்பிய நேரத்திலே எங்களுடைய கட்சிக்காரர்களைச் சேர்ப்பதற்காக 10 ஆயிரம் பேர்களைச் சொல்லிவிட்டேன் என்று மக்கள் மத்தியிலே சிலர் பேசியதை நான் மறந்துவிடவில்லை. உண்மையில் அப்படிப்பட்ட எண்ணத்தில் நான் சொல்லவில்லை. மதுவிலக்கை எப்படி சரிவர நிறைவேற்றுவது, மதுவை எப்படி தடைசெய்வது என்ற நோக்கத்திலே முன்னாலே தவறு செய்கிறவர்கள் யாராவது இருந்தால் அதற்குப் பின்னாலே புதிதாக காவல் துறைக்கு வருகிறவர்கள் நல்ல குணத்தோடு அப்படிப்பட்ட பழக்க வழக்கம் இல்லாதவர்கள் வந்து அந்த இடத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்தில் தான் சொனேன். அதற்காக அவசரத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை. சில நேரங்களிலே நாம் குலத்தொழில் என்பதையே ஆதரிப்பவர்கள் இல்லை என்ற நிலையில் போலீசார் மகன் போலீசில்தான் வர வேண்டுமென்ற நிலையில், சில நேரங்களிலே பழக்க வழக்கம் ஏற்பட்டுவிட்ட காரணத்தாலே, காவல் துறையில் பணியாற்றியவர்களின் வீட்டிலே இருக்கிற மூத்த மகன் வேலையின்றி இருந்தால்,  அதற்குப் பொருத்தமான நிலையில் இருந்தால், சம்பாதிக்கும் ஆட்கள் வேறு இல்லையென்றால் அவருக்குக் கொடுக்கலாம் என்ற நிலையில் நாங்கள் முடிவு எடுத்துச் செயல்பட வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமையில் பேரணாம்பட்டு சம்பவத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. 25.8.1978 அன்று மாலையில் சின்ன மசூதி, பெரிய மசூதி தெரு வழியாகப் போலீஸ் பந்தோபஸ்துடன் காவடி ஊர்வலம் சென்ற பொழுது இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. 

மேலும் சட்டவிரோதமாக 3 ஆயிரம் பேர்களடங்கிய கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வெடித்து, தடியடியும் உபயோகித்தனர். இந்த சட்டவிரோதக் கும்பல் ரஜிதாபாத்திலுள்ள குடிசைகளுக்குத் தீ வைக்க முற்பட்டனர். ஒரு முஸ்லிம் பெண்மணி தீக்காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26.8.1978 காலை மரணமடைந்தார். ஒரு சப்–இன்ஸ்பெக்டரும், ஒரு கான்ஸ்டபிளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை கண்காணிப்பாளரும் பேரணாம்பட்டில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்டினர்.

காவல்துறைத் தலைவரும் 26ம் தேதி பேரணாம்பட்டிற்கு விரைந்து, உள்ளூர் முஸ்லிம் தலைவர்களையும், இந்து தலைவர்களையும் கலந்து ஆலோசித்து அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 25.8.1978 அன்று தாசில்தார் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ரூ.100/– கொடுப்பதற்காகச் சென்ற பொழுது அவர்கள் தங்கள் சொந்தக்காரர்களிடம் சென்று தங்கிவிட்டதாகத் தெரிகிறது. தாசில்தார் மேலும் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிச் சென்றபொழுது அவர்கள் அந்த ரூ.100–ஐ பெற விரும்பாமல் மறுப்பதாக தெரிகிறது. தற்போது நிலைமை அமைதியாகவே இருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது.

இந்த நிலையில் அரசு அவ்வப்பொழுது தன்னாலான கடமைகளைச் செய்து கொண்டும், காவல்துறை தன்னாலான நிலைமைகளிலே செயல்பட்டுக் கொண்டும் வருகிறது. இவைகளை நான் இங்கே குறிப்பிடும்பொழுது காவல் துறையினருக்கும் இந்த மாமன்றம் பாதுகாப்புத்தர வேண்டுமென்று நான் சட்டப்பேரவைத் தலைவரவர்கள் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன். தவறு செய்யும் அதிகாரிகளை மன்னிக்க வேண்டுமென்று கேட்க மாட்டேன். அவர்கள் செய்த குற்றங்களுக்கேற்ப தண்டனை பெற்றாக வேண்டும். ஆனால் குற்றமற்றவர்களையெல்லாம் கூட, தவறு செய்பவர்களோடு ஒரே தராசில் நிறுத்தி ஒரேதரமாகப் பாவித்து, ஒரேவிதமாக கற்பனை செய்து கொண்டு இவர்களை விமர்சனம் செய்ய முன்வந்தால் அதன் விளைவு எவ்வளவு மோசமாகப் போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நியாயமாக நடப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமற்போனால் அவர்கள் மக்களை எப்படிப் பாதுகாக்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

முதலாளிகள், பெரும் முதலாளிகள், சில ஆலை முதலாளிகள், குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் தொழிலாளர்களுடைய தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சிலரை நம்பி, அவர்களைத் தங்கள் கையாட்களாக வைத்துக் கொண்டு, சில அவலமான நிலைகளையெல்லாம் ஏற்படுத்துகிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது என்பதை வருத்தத்தோடு சொல்வேன். இங்கே தொழிலாளர் தலைவர்களாக இருப்பவர்கள் பலர் இருப்பார்கள். நீங்கள் அந்தத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று இந்த மாமன்றத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும், யாராவது அப்படிக் குற்றம் செய்பவர்கள், முதலாளிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்து, ஆனால் தொழிலாளர்களுக்குத் தலைவர்களாக இருந்து எதிரிச் சங்கத்தை அழிக்க முதலாளிகளைப் பயன்படுத்திக் கொண்டு, யாராவது கைக்கூலிகள் போலச் செயல்பட்டால் தயவு செய்து இந்த மாமன்றத்திலே இருக்கின்ற அத்தனை தொழிலாளர் தலைவர்களும், பொதுவாக அத்தனை மாமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்..... 

(தொட­ரும்) Trending Now: