நிவர் புயல்: மக்கள் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு முழுவதும் புதனன்று அரசு விடுமுறை முதல்வர் அறிவிப்பு

24-11-2020 05:41 PM

சென்னை

நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நாளை ஒருநாள் (புதன்கிழமை) அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

25-11-2020 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை (25-11-2020) பிற்பகல் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று எழிலகத்தில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

நிவர் புயல் காரணமாக நாளை (புதன்கிழமை) தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாகவும் நிலைமைக்கேற்ப விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வருவார்கள் என்றார்.

நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெறுவதால் புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பொது விடுமுறை விடப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மழையின் அளவைப் பொருந்து செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

எங்கே உள்ளது நிவார் புயல்?

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் புதுச்சேரியில் இருந்து தென்மேற்கு பகுதியில் 370 கிலோமீட்டர் தொலைவில் நிவார் புயல் உள்ளது மணிக்கு 5 முதல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தென்மேற்குத் திசையில் நகர்ந்து வரும் இவர் புயல் மாமல்லபுரத்துக்கு நேராக வந்ததும் கரை நோக்கி நேராக நகரத் தொடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது கரையை நோக்கி புயல் காற்று திரும்பும்பொழுது 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் கரை கரை ஏறும் பொழுது இவர் புயலின் வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

3 அடி முதல் 7 அடி வரை உயரம் உள்ள கடல் அலைகள் நிவர் புயல் கரையை நோக்கித் திரும்பும் பொழுது உருவாக்கி கடலையை தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகங்களில் உஷார் நிலை

நிவர் புயல் புதனன்று மாலை கரையேறுவதால். நாகப்பட்டினம், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, பாம்பன் ஆகிய  துறைமுகங்களில் 7வது எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகங்களுக்கு நிவர் புயல் காரணமாக ஆபத்து ஏற்படக் கூடும் எனவே துறைமுகங்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என இந்த எச்சரிக்கை கூண்டு அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

பேருந்துகள் நிறுத்தம்

புதுச்சேரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செவ்வாயன்று  பகல் ஒரு மணியிலிருந்து அரசுப் பேருந்துகள், ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் ரெவின்யூ நிர்வாகம், போலீஸ், தீயணைப்பு படை, மீட்புப் படை ஆகியவற்றின் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஐஜி, டிஐஜி நிலையில் உள்ள 10 போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என்ற பொறுப்பு கூடுதல் டிஜிபி ஏ.கே. விஸ்வநாதனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

அணு மின் நிலையத்தில் முன்னேற்பாடுகள்

கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணு மின்சார நிலையத்தில், நிவர் புயல் காரணமாக கடல் அலைகள் அணு மின்சார நிலைய பகுதியில்  தாக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு மணல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுதவிர அணு மின்சார நிலையத்தின் பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செயல்பாடு துவக்கப்பட்டுள்ளது.

ரிகள் நிரம்பவில்லை

சென்னை நகருக்கான குடிநீர் வழங்குகின்ற ஏரிகள் எல்லாமே இன்னும் நிரம்பாத நிலையில் தான் உள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியும் இன்னும் நிரம்ப வில்லை. ஆனால் தொடர்ந்து மழை பெய்கின்ற காரணத்தினால் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இன்று காலை சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தந்துள்ள புள்ளிவிவரங்கள் அருகில் பட்டியலாக தரப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் உறுதியாகக் கூறுகின்றார்கள்.

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால் தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்படும். அந்தத் தண்ணீர் நேரே கடலுக்குச் சென்றுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எமர்ஜென்சி வண்டிகள் தயார்

மருத்துவ அவசர தேவைகளுக்காக மக்கள் வழக்கம் போல 64, 108 ஆகிய எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாகனங்களை கோரலாம்.

465 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பெட்ரோல் முழுக்க நிரப்பி நிறுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பேரிடர் மீட்பு படை தயார்

தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஆந்திர மாநிலம் ஆகிய பகுதிகளில் நிவர் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை உஷார் நிலையில் உள்ளது.

1,200 வீரர்கள் மீட்புப் பணிக்கு தயாராக முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 800 பேர் அவசர அழைப்பு வரும் இடங்களுக்குச் செல்ல தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் அனைவருக்கும் தகவல் தொடர்புக்காக சாதனங்கள் தரப்பட்டுள்ளன. அவர்களிடம் மரம் வெட்டும் மின்சார கருவிகள் மற்றும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காப்புக்கான கவச உடைகள் வழங்கப் பட்டுள்ளன என்றும் பிரதான் தெரிவித்தார்.

ராகுல் காந்தி அழைப்பு

நிவர் புயல் கரை ஏறும் பொழுது உதவி தேவைப்படுவோருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.டுவிட்டர் செய்தியில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் இல்லங்களிலேயே தங்கி இருக்கும்படியும் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Now: