லாபம் படப்பிடிப்பை பார்க்க திரண்ட கூட்டம் கொரோனாவுக்கு பயந்து ஸ்ருதிஹாசன் ஓட்டம்

24-11-2020 10:36 AM

விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் லாபம். இதனை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இதன் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் நடந்து வந்தது. ஸ்ருதிஹாசன் பெங்களூருவில் தங்கி இருந்து நடித்து வந்தார்.

கிருஷ்ணகிரி பகுதிகளில் அதிகமான படப்பிடிப்பு நடக்காததாலும் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பதாலும் சுற்றிலுமுள்ள கிராமத்தில் இருந்து மக்கள் குவிந்தனர். இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கு படப்பிடிப்பை நடத்துவதே சிரமாக இருந்தது.

கூட்டத்தை பார்த்து ஸ்ருதிஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவ்வளவு கூட்டம் எப்படி கூடியது. நீங்கள் படப்பிடிப்புக்கு சரியாக திட்டமிடவில்லை. கூட்டத்தினர் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. இந்த நிலையில் நான் நடித்தால் எனக்கு கொரோனா தொற்று வந்து விடும். விஜய்சேதுபதி ரசிகர்களோடு நெருக்கமாக இருக்கிறார். பிறகு எப்படி நான் அவரோடு நடிக்க முடியும் என்று கூறி கேரவனை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

கூட்டத்தை கட்டுப்படுத்துகிறோம். சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து விடுவோம் என்று படப்பிடிப்பு குழுவினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் படப்பிடிப்பில் இருந்து காரில் ஏறி வேகமாக சென்று விட்டார்

இதனால் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஸ்ருதியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் ஸ்ருதி வெளியேறியது படப்பிடிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் ஸ்ருதி எழுதியிருப்பதாவது: கோவிட் என்பது ஆரோக்கியத்துக்கு வரும் தீவிரமான ஒரு ஆபத்து. இந்தத் தொற்றுப் பிரச்சினை இன்னும் முடியவில்லை. விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றால் ஒரு தனி நபராக, நடிகையாக எனது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கு உரிமை இருக்கிறது. என்று எழுதியிருக்கிறார்.Trending Now: