வெங்காயத்தை இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம்

24-10-2020 03:22 PM

புதுடில்லி,

வெங்காய விலை அதிகரித்துள்ளதால் அதன் பதுக்கலை தடுப்பதற்கு வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

வெங்காயம் அதிகமாக விளையும் ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு, சந்தைக்கு அவற்றின் வரத்து குறைந்தது.

இதனால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன. வெங்காயத்துக்கான இறக்குமதி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. மேலும், மத்திய தொகுப்பில் இருந்த வெங்காயத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க முன்வந்தது.

இந்நிலையில், தட்டுப்பாட்டை காரணம் காட்டி சில வியாபாரிகள் அவற்றை பதுக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி, சில்லரை வியாபாரிகள் அதிகபட்சமாக தங்களிடம் 2 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரை இருப்பு வைக்கலாம். இந்த தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த வரம்பை மீறினால், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் கடந்த மாதம்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தன் டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில் “அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மோடி அரசு 3-வது கட்டமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.Trending Now: