ஒரு வருடத்தில் 12 வீடுகளை மாற்றிய குடும்பம்

13-08-2020 10:26 PM

சென்னை,

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டு மட்டும் 12 வீடுகளை மாற்றியுள்ளனர். தங்கவேலுவின் மகன் ஆனந்த் ஆட்டிசம் என்ற மனவளர்ச்சி குறைப்பாடு கொண்டவர் என்பதால் வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு தொடர்ந்து இடமளிக்க விரும்புவதில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

70 வயதான தங்கவேலு கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். கொரோனா காரணமாக அவருக்கு வேலைவாய்ப்பில்லை. அவர் தனது மனைவி பார்வதி மற்றும் 35 வயது மகன் ஆனந்த் ஆகியோருடன் ஒரு அறை கொண்ட வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

தங்கவேலுவின் மகன் ஆனந்திற்கு சிறு வயதிலேயே ஆட்டிசம் என்ற மனவளர்ச்சி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
குழந்தைக்கு நிரந்தர சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், தங்கவேலுவிடம் அதற்கான பணம் இல்லை.

‘‘எனது மகன் தினமும் சத்தமாக அழுகிறான், சத்தம் போடுகிறான் என்று அக்கம்பக்கத்தினர் பெரும்பாலும் வீட்டு உரிமையாளரிடம் புகார் கூறுகிறார்கள். இதுதான் நாங்கள் அடிக்கடி வீடு மாற்றுவதற்கான காரணம். இந்த ஊரடங்கு காலத்தில் இந்த பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. நான் மற்றவர்களையும் குறைகூற முடியாது’’ என தங்கவேலு கூறுகிறார்.

அவர்கள் தற்போது மலயம்பாக்கத்தில் வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தங்கவேலு சுமார் 10 ஆண்டுகளாக மலயம்பாக்கத்தில் வசித்து வருகிறார். ஆனால் இப்போது அவரது மகன் குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளதால் அவருக்கு வாடகைக்கு வேறு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க உதவியுடன் நிரந்தர வீட்டுவசதி வழங்கும் திட்டங்கள் உள்ளன. ஆனால் தற்போது இந்தியாவில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. இதனால் தங்கவேலு போன்ற பல குடும்பத்தினர் தங்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.Trending Now: