சென்னை - அந்தமான் கடலடி கேபிள் திட்டம்: நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

10-08-2020 10:45 AM

புதுதில்லி

சென்னைக்கும் அந்தமான் நிக்கோபார் தலைநகர் போர்ட் பிளேருக்கும் இடையே 2,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலடியில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் இணைப்பை, பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வங்காள விரிகுடா கடல் பரப்பின் கிழக்குப் பகுதியில் உள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் அதிவேக தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கும் வகையில், கடலடியில் ஆப்டிக்கல் பைபர் கேபிள் (நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள்) பதிக்க திட்டமிடப்பட்டது.

சுமார் 1,224 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடலடியில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிக்கும் இத்திட்டத்திற்கு, போர்ட் பிளேரில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில்,சென்னை - போர்ட் பிளேர் இடையே, கடலடியில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் இணைப்பை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி பேசும்போது

கடலடியில் ஆய்வுகள் மேற்கொண்டு, கேபிள்களின் தரத்தை பராமரித்து, பிரத்யேக கப்பல்களைப் பயன்படுத்தி கடலுக்கு அடியில் கேபிள்களை பதிப்பது அவ்வளவு எளிதான பணி அல்ல.

அந்தமான் - நிக்கோபாரையும் நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் ஆப்டிக்கல் ஃபைபர் திட்டத்தால் அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பயனடைவார்கள்

திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்னதாகவே, 2300 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலடி கேபிள் பதிக்கும் பணி முடிக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக, கடலடியில் ஆப்டிக்கல் ஃபைபர் பதிக்கும் திட்டமானது, பிராட்பேண்ட் இணைப்பு, அதிவேக மொபைல் மற்றும் லேண்ட்லைன் இணைப்பு ஆகியவற்றை வழங்கும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதோடு, e-governance, telemedicine மற்றும் tele-education ஆகிய திட்டங்களுக்கும் உதவும் என ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.


Trending Now: