திமுகவிலிருந்து என்னை எவராலும் பிரிக்க முடியாது அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்

06-08-2020 05:12 PM

சென்னை,

திமுகவிலிருந்து என்னை எவராலும் பிரிக்க முடியாது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்துார் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை - ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று டில்லி சென்று பாஜக தலைவர் நட்டாவை சந்தித்தார், அதைத்தொடர்ந்து தான் பாஜக-வில் சேரவில்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின், கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்களை கண்டிக்க வேண்டும் என்றும், கட்சி தேர்தலை முறைபடி நடத்த வேண்டும் என்றும், பகிரங்கமாக கேட்டுக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து  திமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவக்கூடும் என்றும் பாஜவினர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாயின,

இந்த நிலையில் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அனிதாராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கடந்த சில நாட்களாக  சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர், அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன், நான் திமுகவின் விசுவாசமிக்க தொண்டனாக  திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் ஆவதற்கு இதயசுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை அவர் நன்கறிவா். ஆகையால் என்னை திமுகவிலிருந்தும் ஸ்டாலினிடமிருந்தும்  எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இனியும் இதுபோன்ற விஷம பிரசாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு, அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்,Trending Now: