அயோத்தி ராம ஜன்ம பூமியில் ராமர் ஆலயத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

05-08-2020 11:43 AM

சென்னை

அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 5) அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.  

ஆழந்த பக்தி உணர்வோடு மிகவும் எளிமையாக நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் சுமார் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளிப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ராமர் பிறந்த பூமியாகக் கருதப்படும் இடத்தில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான சிறப்புப் பூஜைகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி  மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக டில்லியில் இருந்து குர்த்தா வேட்டி அணிந்து அயோத்திக்கு இந்திய விமானப்படை விமானத்தில் புதன் கிழமை காலை பிரதமர் மோடி புறப்பட்டார்.

இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்தது.அயோத்திக்கு இந்திய விமானப்படை விமானத்தில் ஏறும் காட்சியையும் பிரதமர் அலுவலகம் டுவிட்டர் செய்தியோடு இணைத்து வெளியிட்டது.

டில்லியில் இருந்து லக்னோவுக்கு இந்திய விமானப்படை விமானத்தில் வந்திறங்கினார் பிரதமர் மோடி. அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் அயோத்தி நகருக்கு பயணம் செய்தார்.

அயோத்தியில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து  லக்னோ வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் 11:45க்கு  அயோத்தி வந்தடைந்தார். சமூக இடைவெளியுடன் முதலமைச்சர் யோகி, ஆளுநர் ஆனந்திபென் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பிரதமர் மோடி வெள்ளை நிற முகக் கவசம் அணிந்திருந்தார்.

29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அயோத்திக்கு வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பாரம்பரிய முறைப்படி முதலில் ஹனுமன்ஹார்ஹி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அங்கிருந்து ஹனுமன்ஹார்ஹி ஆலயத்துக்கு பிரதமர் மோடியும் ஆதித்ய நாத்தும் மற்றவர்களுடன் சென்று வழிபாடு செய்தனர். அங்கு தலைமைப் பூஜாரி பிரதமர் மோடிக்கு தலையில் அணியும் பரிவட்டத்தை அன்பளிப்பாக தந்தார்.

பின்னர், அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் கோவிலில் பிரதமர் மோடி தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அயோத்தியில் நடந்த பூஜைகளிலும்  கலந்து கொண்டு வழிபட்டார்.

பின்னர், பாரிஜாத மலர் செடி ஒன்றை நட்டு நீர் ஊற்றினார் பிரதமர் மோடி.

பூமி பூஜை நடைபெறவுள்ள இடத்தை அடைந்த பிரதமர் மோடி, அட்சதைகளைப் பெற்றுக்கொண்டு, 12.14 மணிக்கு பூஜை நடைபெறும் இடத்தில் அமர்ந்தார் பிரதமர்.

சாதுக்களின் பூஜையில் பங்கு பெற்று வழிபட்டார், அடிக்கல் நாட்டுவதற்கான பூஜையில் பங்குபெற்றார் பிரதமர் மோடி.

ஜெய் ஸ்ரீராம் முழக்கத்திற்கிடையை ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான வேள்வி தொடங்கியது. 

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 161 அடி உயரத்தில் 3 அடுக்காக புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு (12:45 மணிக்கு) பிரதமர் நரேந்திர மோடி 40 கிலோ  வெள்ளியாலான கற்களை பூமியில் பதித்து ராமர் ஆலயத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

பின்னர், ராமர் கோவில் பூமி பூஜை குறித்தும், கோயில் கட்டுவது குறித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

ராமர் சிலை தயார்

அயோத்தி ராம ஜன்ம பூமியில் புதிதாகக் கட்டப்பட உள்ள ராமர் ஆலயத்தில் நிறுவப்பட  251 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையின் பிரதி தயாராக உள்ளது.

பிரபல சிற்பி ராம் சுதரும் அவரது புதல்வன் அனில் சுதரும் இணைந்து இந்த ராமர் சிலை வடிவத்தை தயாரித்துள்ளனர்.

2018ல் ராமர் சிலையைத் தயாரிக்கும்பணியை மேற்கொள்ளும்படி உத்தர பிரதேச முதலமைச்சர்  யோகி கேட்டுக் கொண்டார். அதன்படி 251 மீட்டர் ராமர் சிலையின் பிரதி தாயாரிக்கப்பட்டுள்ளது. 

இடது கை வில்லைப் பிடித்த நிலையில் வலது கையில் அம்பைப் பிடித்த படி நின்ற திருக்கோலத்தில் ராமர் சிலை அமைந்துள்ளது. இறுதி உத்தரவு தந்தால் சிலையை விரைவாக பூர்த்தி செய்ய முடியும் என அனில் சுதர் கூறினார்.
Trending Now: