வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு தகவல் கொடுங்கள்: நிர்மலா அறிவிப்பு

01-08-2020 05:43 PM

புதுடில்லி:

'வங்கிகள், தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்க மறுத்தால், அது குறித்த புகாரை எனக்கு அனுப்பலாம்; நான் நடவடிக்கை எடுப்பேன்', என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசியதாவது:

பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, டூரிசம் மற்றும் ஹோட்டல் துறையினர், கடன் தவணை செலுத்துவதை மேலும் தள்ளி வைக்க வேண்டும் அல்லது கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, 'ஆத்மாநிர்பார் பாரத்' திட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவசர கடன் உறுதி திட்டம் மூலம், உத்தரவாதம் இல்லாமல் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில வங்கிகள், உத்தரவாதமில்லாமல் அக்கடன்களை தர மறுப்பதாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தகுதியான நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுத்தால், அது குறித்த புகாரை எனக்கு அனுப்புங்கள். நான் நடவடிக்கை எடுப்பேன். தொழில் துறையின் அவசர கடனுக்கு, மேம்பாட்டு நிதி மையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.Trending Now: