இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை நரசிம்மராவ்: மன்மோகன்சிங் புகழாரம்

24-07-2020 06:52 PM

புது தில்லி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்து உரையாற்றிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை நரசிம்மராவ் தான் என்று புகழாரம் சூட்டினார்.

நரசிம்மராவின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு ஆண்டு காலத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நடத்தவும் தீர்மானித்துள்ளது.

நரசிம்மராவின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை இன்று துவக்கி வைத்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்பொழுது 1991ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் என்ற வகையில் நரசிம்மராவ் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்து வெளியிடப்பட்ட முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்த தினமும் விரைவில் வர உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அவரது நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் அமைந்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அன்றைய நிதியமைச்சர் என்ற வகையில் தன்னுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ராஜிவ்காந்தி நினைவாக தயாரித்து சமர்ப்பித்ததாக மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

 அந்த பட்ஜெட் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்னோடியாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.

அன்றுள்ள சூழ்நிலையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை என்று பிரதமர் நரசிம்ம ராவ் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கட்டுப்பாடுகள் அற்ற புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக அமையும் வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முழு சுதந்திரம் தனக்கு தந்ததாக மன்மோகன்சிங் குறிப்பிட்டார்.

நரசிம்ம ராவுக்கு முன்பு பதவியில் இருந்த ராஜீவ் காந்தி இந்திய ஏழை மக்கள் மீது எத்தகைய கவலை கொண்டிருந்தாரோ அதற்கு இணையான கவலை நரசிம்ம ராவும் கொண்டிருந்தார் என மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

 நரசிம்மராவ் எனது நண்பராக இருந்தார். தத்துவ ஆசிரியராக இருந்தார். வழிகாட்டியாக இருந்தார் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

பதவி ஏற்ற சமயத்தில் நாட்டின் நிதி நிலை மிகவும் சிக்கலாக இருந்தது . அப்பொழுது இந்திய அரசின் வசம் இரண்டு வார தேவையான இறக்குமதிக்கு மட்டுமே போதுமான நிதி கைவசம் இருந்தது .கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு இந்திய நிதித்துறை போய்விட்டது. அப்பொழுது நரசிம்ம ராவுக்கு பெரும்பான்மை பலமும் இல்லை. சிறுபான்மை அரசாங்கம் அவருடையது. அந்த நிலையில் மிகவும் துணிச்சலாக இந்திய பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர சீர் திருத்தங்கள் அவசியம் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது நம்பிக்கையை மற்ற கட்சிகளின் தலைவர்களும்  ஏற்கச் செய்தார்.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நரசிம்ம ராவின் முக்கிய பங்களிப்பு என்பதில் சந்தேகமில்லை ஆனால் மற்ற துறைகளிலும் அவருடைய பணியை குறைத்து மதிப்பிட முடியாது என்று மன்மோகன் சிங் கூறினார்.

வெளியுறவு விவகாரத்தில் தெற்காசிய முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவர்தான் வழி செய்தார் .கிழக்கு நாடுகளுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்பதும் அவருடைய கொள்கை தான்.

அவர் காலத்தில்தான் பிஎஸ்எல்வி  ராக்கெட்டு செலுத்தப்பட்டது. பிரித்வி ஏவுகணை தயாரிக்கப்பட்டு ஏவப்பட்டதும் அவர் காலத்தில்தான்.

டாக்டர் அப்துல் கலாமை அழைத்து அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி நரசிம்ம ராவ் உத்தரவிட்டார்.

நரசிம்ம ராவ் ஆணைப்படி அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வாஜ்பாய் அரசு 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளை நடத்தியது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் எப்பொழுதும் அரசின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் ஆலோசனைகளை கேட்கவும் நரசிம்மராவ் தயாராக இருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் கூட்டத்திற்கு வாஜ்பாய் தலைமையில் தூதுக் குழுவை அவர் அனுப்பி வைத்தார். அவர் சிறந்த அறிஞர். அவருக்கு 10 இந்திய மொழிகள் தெரியும் 4 வெளிநாட்டு மொழிகளில் அவர் பேசக்கூடியவர். அதுமட்டுமல்ல கணினி அறிமுகம் செய்யப்பட்டதும் அதனை அலசி ஆய்வு செய்து கற்றுக் கொண்டார்.

அவர் கணினி புரோகிராம்களை எழுதும் திறன் பெற்றிருந்தார். எப்பொழுதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நரசிம்ம ராவுக்கு இருந்த காரணத்தினால் தான் அவரால் இத்தனையும் சாதிக்க முடிந்தது என்று மன்மோகன் சிங் அவர் குறிப்பிட்டார்.Trending Now: