கொரோனாவை கட்டுப்படுத்த பிற்பகல் 3 மணியுடன் கடைகளை அடைக்கிறோம் - கூட்டத்தில் வியாபாரிகள் முடிவு

15-07-2020 11:04 AM

சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த பிற்பகல் 3 மணியுடன் கடைகளை அடைக்கிறோம் என்று சென்னை -  அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் முன்னிலையில் நடைபெற்ற வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து முடிவு எடுத்துள்ளனர்.

சென்னை அடையாறு துணைக்கமிஷனராக ஐபிஎஸ் அதிகாரி விக்ரமன் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு காவல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள சென்னை சைதாப்பேட்டை சரகத்தில் உள்ள வியாபாரிகளுடன் துணைக்கமிஷனர் விக்ரமன் நேற்று கலந்தாய்வில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை போலீஸ் உதவிக்கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர்கள்  தேவநாயகி, கலையரசன், ராஜேஸ்வரி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் 50 பேர் கலந்து கொண்டனர். கொரோனா நோயை கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு அறிவித்திருந்தபடி கொரோனா தொடர்பாக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுரை வழங்கப்பட்டது. 

கூட்டத்தின் முடிவில் அரசு அறிவித்த காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்வதாக வியாபாரிகள்  தாமாகவே முன்வந்து தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டும் கடைகளைத் திறப்பதாக வியாபாரிகள், துணைக்கமிஷனர் விக்ரமனிடம் தெரிவித்தனர்.Trending Now: