என் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு

11-07-2020 09:29 PM

லக்னோ,

போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேவின் இறுதி சடங்குக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி ரிச்சா துபே என் கணவர் பல தவறான காரியங்களை செய்தார். அவர் இந்த தண்டனைக்கு தகுதியானவர் தான் என ஆவேசமாக கூறினார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபேவை கைது செய்வதற்காக கடந்த 2ம் தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர்.

அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான். இந்த சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து விகாஸ் துபேவை பிடிக்க தீவிரமாக களமிரங்கிய போலீசார் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் வைத்து விகாஸ் துபேவை பிடித்தனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்த போது, விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விகாஸ் துபேவை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

விகாஸ் துபே சுட்டுக்கொன்றதை அவரது கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். போலீசாருக்கு இனிப்புகளை வழங்கி மாலை அணிவித்து கவுரவித்தனர்.

இந்நிலையில் விகாஸ் துபேவின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் விகாஸ் துபேவின் மனைவி ரிச்சா துபே மற்றும் அவர்களது மகன் பங்கேற்றனர்.

இறுதி சடங்குக்கு பின் அங்கிருந்து வெளியே வந்த ரிச்சா துபே மிகவும் பதற்றமாக காணப்பட்டார்.

செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது ஆம், ஆம் என் கணவர் தவறான காரியங்களை செய்தார். அதனால் அவர் இந்த தண்டனைக்கு தகுதியானவர் தான். போலீசார் செய்தது சரிதான் என ஆவேசமாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்ளை நோக்கி ‘‘உங்களால் தான் என் கணவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு நீங்கள் தான் காரணம்” என சாடினார்.

அதன் பின் ரிச்சா துபே மற்றும் அவரது மகனை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர்.

விகாஸ் துபேவின் இறுதி சடங்கில் அவரது தந்தை, உறவினர்கள், அண்டை வீட்டார் என யாரும் கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையில் விகாஸ் துபேவின் மரணத்திற்கு பழிவாங்க துப்பாக்கியை எடுக்க தயார் என ரிச்சா துபே கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.Trending Now: