ஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்

11-07-2020 09:02 PM

ஹைதராபாத்,

பிளாஸ்மா தானம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் ஒருமுறை பிளாஸ்மா தானம் செய்வதற்கு ரூ. 60,000 முதல் ரூ .3 லட்சம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

“பிளாஸ்மா தானம் மீதான அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு குறைவாக இருப்பதால் நன்கொடையாளர் – நோயாளிகள் இடையேயான தொடர்பு அரசின் கட்டுப்பாட்டை விட்டு விலகி சென்றுள்ளது. நீங்கள் ரூ .3 லட்சம் ரூபாய்க்கு 400 மில்லி லிட்டர் பிளாஸ்மாவைப் பெறலாம்” என்று தெலுங்கானா, வாரங்கலை சேர்ந்த வழக்கறிஞர் அகில் என்னாம்செட்டி செய்தியாளர்களிடம் கூறினார்.

அகில் என்னாம்செட்டி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர் பிழைத்தவர். மேலும் தெலுங்கானாவில் பிளாஸ்மா தானம் செய்த முதல் நபரும் இவர்தான். தற்போது பிளாஸ்மா சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்காக பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவோரை கண்டுபிடித்து தரும் முயற்சியில் என்னாம்செட்டி ஈடுபட்டு வருகிறார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று என்னாம்செட்டி மாநில அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

‘‘கொரோனா நோயாளியை காப்பாற்ற வேண்டும் என பரிதவிக்கும் குடும்ப உறுப்பினர்கள் பிளாஸ்மாவுக்காக எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக உள்ளனர். இதனால் ஏழை நோயாளிகள் தகுதியான நன்கொடையாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு பறிபோகலாம். இதனால் பிளாஸ்மா தானம் செய்வோரின் விவரங்கள் அடங்கிய தரவுதளம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் பிளாஸ்மா தானத்தை அரசு நெறிப்படுத்தலாம்" என அகில் என்னாம்செட்டி தெரிவித்துள்ளார்.Trending Now: