தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ்கள் அதிரடி மாற்றம்! * நெல்லை, குமரிக்கு புதிய எஸ்பிக்கள் நியமனம்

10-07-2020 08:20 PM

சென்னை, ஜுன், 11–

தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ஏஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பியாக இருந்த 14 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி எஸ்பிக்கள் மாற்றப்பட்டு அங்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச்செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:–

சென்னை விபசாரத்தடுப்புப்பிரிவு போலீஸ் உதவி எஸ்பியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டார். மத்தியக்குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் ராஜேந்திரன் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப்பிரிவு எஸ்பியாகவும், அங்கிருந்த ஸ்டீபன் ஜேசுபாதம் எஸ்பிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பியாகவும், அங்கு எஸ்பியாக உள்ள எஸ். அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை எஸ்பி சிபிச்சக்கரவர்த்தி சென்னை நிர்வாகப்பிரிவு உதவி ஐஜியாகவும், அங்கிருந்த முத்தரசி ஆட்டோமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு எஸ்பியாகவும், அடையாறு துணைக்கமிஷனர் பகலவன் கரூர் எஸ்பியாகவும், அடையாறு துணைக்கமிஷனராக விக்ரமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னேரி சப்டிவிஷன் உதவி போலீஸ் எஸ்பி ஐபிஎஸ் அதிகாரி அலட்டிப்பள்ளி பவன்குமார் ரெட்டி, எஸ்பியாக பதவி உயர்ந்து திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த நிஷா சென்னை அம்பத்துார் துணைக்கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். அம்பத்துார் துணைக்கமிஷனர் ஈஸ்வரன் எஸ்டாபிளிஷ்மென்ட் உதவி ஐஜியாகவும், அங்கிருந்த பாலகிருஷ்ணன் மாதவரம் துணைக்கமிஷனராகவும்,மாதவரம் துணைக்கமிஷனர் ரவாளிப்ரியா திண்டுக்கல் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாகவும், நெல்லை வள்ளியூர் ஐபிஎஸ் அதிகாரி ஏஎஸ்பி ஹரிகிரன் பிரசாத் சென்னை திநகர் துணைக்கமிஷனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தி.நகர் துணைக்கமிஷனர் அசோக்குமார் சென்னை பாதுகாப்புப்பிரிவு துணைக்கமிஷனராகவும், கவர்னர் பாதுகாப்புப்பிரிவில் ஏஎஸ்பியாக உள்ள டோங்கரே பிரவீன் உமேஷ் அங்கேயே எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மேலும் விருதுநகர் ஏஎஸ்பி சிவபிரசாத், எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்த கார்த்திக், சென்னை பூக்கடை போலீஸ் துணைக்கமிஷனராகவும், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜவஹர் சென்னை அண்ணாநகர் துணைக்கமிஷனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கரூர் பெண்கள் குற்றத்தடுப்புப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை எஸ்பியாக பதவி உயர்ந்து தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகசாமி எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை போலீஸ் பயிற்சிக்கல்லுாரி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் பெண்கள், குழந்தைகள் தடுப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சுரேஷ்குமார் திருப்பூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனராக பதவி உயர்ந்துள்ளார். அங்கிருந்த பத்ரிநாராயணன் கன்னியாகுமரி எஸ்பியாகவும், கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாதா சென்னை சிபிசிஐடி 2 எஸ்பியாகவும். ராமநாதபுரம் தலைமையிட ஏடிஎஸ்பி தங்கவேலு பதவி உயர்த்தப்பட்டு சேலம் சமூக நீதி, மனித உரிமைகள் எஸ்பியாக அமர்த்தப்பட்டுள்ளார்.

மேலும் சிபிசிஐடி ஏடிஎஸ்பியாக இருந்த ரவி பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி 3 எஸ்பியாகவும், திருப்பூர் மதுவிலக்கு அமல்பிரிவு ஏடிஎஸ்பி குணசேகரன் கோவை நகர தலைமையிட துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த செல்வகுமார் திருப்பூர் நகர தலைமையிட துணைக்கமிஷனராகவும், திருப்பூர் தலைமையிட துணைக்கமிஷனர் பிரபாகரன், மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும், அங்கிருந்த ஸ்டாலின் கோவை சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த பாலாஜி சரவணன் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி குமார் பதவி உயர்ந்து சென்னை தெற்கு போக்குவரத்து துணைக்கமிஷனராகவும், சேலம் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி சந்திரசேகரன் எஸ்பியாக பதவி உயர்ந்து சேலம் சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராகவும், சேலம் நகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனர் தங்கதுரை ஈரோடு மாவட்ட எஸ்பியாகவும், ஈரோடு எஸ்பி சக்திகணேன் நாமக்கல் எஸ்பியாகவும், அங்கிருந்த அர அருளரசு  கோவை எஸ்பியாகவும், கோவை எஸ்பி சுஜித்குமார் மதுரை எஸ்பியாகவும், மதுரை எஸ்பி மணிவண்ணன் நெல்லை எஸ்பியாகவும், அங்கிருந்த ஓம்பிரகாஷ் மீனா சைபர்கிரைம் எஸ்பியாகவும், சைபர் பிரிவில் இருந்த சண்முகப்ரியா காஞ்சிபுரம் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை நகர போக்குவரத்துப்பிரிவு துணைக்கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா சென்னை நகர நிர்வாகப்பிரிவு துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த செந்தில்குமார் போக்குவரத்து போலீஸ் கிழக்கு துணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னை கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனர் மனோகரன் காவலர் நலன் உதவி ஐஜியாகவும், அங்கிருந்த அதிவீரபாண்டியன் கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி எஸ்பி ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி எஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி எஸ்பி ஜெயச்சந்திரன் திருச்சி எஸ்பியாகவும், சைபர்கிரைம் எஸ்பி சஷாங்சாய் மயிலாப்பூர் துணைக்கமிஷனராகவும், மயிலாப்பூர் துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் தஞ்சாவூர் எஸ்பியாகவும், அங்கிருந்த மகேஷ்வரன் துறைமுக அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவை உள்பட மொத்தம் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Trending Now: