சீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி!!

09-07-2020 02:20 PM

பெய்ஜிங்,

போலி தங்க கட்டிகளை சீனாவின் 14 நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்து 2.8 பில்லியன் டாலர் அளவிற்கு கிங்கோல்டு ஜூவல்லரி கடன் பெற்று மோசடி செய்து இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மோசடியை கிங்கோல்டு ஜூவல்லரி செய்து இருப்பது ஜீரோ ஹெட்ஜ் ரிப்போர்ட் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனாவில் இதுபோன்ற மோசடிகள் நடப்பது புதிதல்ல. வழக்கமாக நடப்பது தான். ஆனால், தற்போது நடந்து இருப்பது மிகப்பெரிய மோசடி. இதற்கு முன்பும் கடன் பெறுவதற்காக அடமானமாக மெட்டல்களை சீன நிறுவனத்தினர் வைத்து கடன் பெற்று நிதி நிறுவனங்களை, வங்கிகளை ஏமாற்றியுள்ளனர். இதை ஆங்கிலத்தில் கோஸ்ட் கொலட்ரால் என்று கூறுவார்கள். தற்போது போலி தங்கக் கட்டிகளை கிங்கோல்டு ஜூவல்லரி அடமானம் வைத்து கடன் பெற்று இருப்பது அந்த நாட்டில் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலேயே இதுதான் பெரிய மோசடி என்று கருதப்படுகிறது.

உலகிலேயே தனிப்பட்ட நபர்கள் வைத்து இருக்கும் பெரிய நிறுவனங்களில் வுகானில் இருக்கும் கிங்கோல்டு ஜூவல்லரியும் ஒன்று. இதன் தற்போதைய மார்க்கெட் கேபிடல் 8 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்த தலைவராக முன்னாள் ராணுவ வீரர் ஜியா ஜிஹாங்க் இருக்கிறார். பங்குகள் அனைத்தையும் இவரது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.

கிங்கோல்டு ஜூவல்லரி நிறுவனம் 83 டன் அளவிற்கு போலி தங்கக் கட்டிகளை அடமானம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமிரத்தால் ஆன கட்டிகளை தங்கம் என்று பொய் கூறி அடமானம் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டாங்க்குவான் டிரஸ்ட் லிமிடெட்டில் கிங்கோல்டு ஜூவல்லரி கடன் பெற்று இருந்தது. கடனை கட்டவில்லை. இதன்பின்னரே, கிங்கோல்டு ஜூவல்லரி தங்கக் கட்டிகள் என்று கூறி அடமானம் வைத்தவை போலி என்பது தெரிய வந்துள்ளது.

கிங்கோல்டு ஜூவல்லரியை ஜியா 2002ல் துவக்கி உள்ளார். மத்திய வங்கியுடன் இணைந்து கிங்கோல்டு ஜூவல்லரி ஹூபேயில் தங்க தொழிற்சாலை வைத்து இருந்தது. மறுகட்டமைப்பு செய்யும்போது. மத்திய வங்கியில் இருந்து பிரிந்து தனியாக கிங்கோல்டு ஜூவல்லரி செயல்படத் தொடங்கியது. நாஸ்டாக் பங்குச் சந்தையிலும் இடம் பெற்றுள்ளது கிங்கோல்டு ஜூவல்லரி.

உலகிலேயே தங்க இருப்பில் சீனா ஆறாவது இடத்தில் உள்ளது. மார்ச் 31, 2020 தேதி வாக்கில் சீனாவிடம் 1,948.30 டன் தங்கம் இருப்பாக உள்ளது. அமெரிக்கா 8,134 டன் இருப்புடன் முதல் இடத்திலும், ஜெர்மன் 3,364 டன் இருப்புடன் இரண்டாம் இடத்திலும், இத்தாலி 2,452 டன் இருப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 642 டன் தங்க இருப்புடன் இந்தியாவும் முதல் பத்து இடங்கள் நாடுகள் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.Trending Now: