நீதியின் குரல் சாத்தான்குளத்தில்.

09-07-2020 10:42 AM

சிறப்புக் கட்டுரை  

ஐஜி. கண்ணப்பன், ஐபிஎஸ்.,பணி நிறைவு

தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் சந்தித்த சவால்களும், சாதித்த சாதனைகளும் எண்ணற்றவை. கைவிரல்ரேகை பதிவுகளைக் குற்ற வழக்குகளில் துப்பு துலக்கப் பயன்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது தமிழ்நாடு காவல்துறை.

* உலக அரங்கில் தலைகுனிந்த தமிழகம்

நம்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள திகார் சிறைச்சாலையின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு பொறுப்பு தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பது தமிழ்நாடு காவல்துறையின் திறமையையும், கடமை உணர்வையும் வெளிப்படுத்துகிறது. 'பழக இனிமை, பணியில் நேர்மை, இதுவே நமக்கு பெருமை' என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவந்த தமிழ்நாடு காவல்துறை கடந்த இரண்டு வாரங்களாக உலக அரங்கில் தலை குனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. உதவி தேடி காவல்நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல்துறை உங்கள் நண்பன்' என்று வாய்நிறையக் கூறி, அவர்களின் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகாணும் காவல்துறை இன்று பொதுமக்களை நேருக்கு நேர் சந்தித்து பேசும் சக்தியை இழந்து நிற்கிறது.


* சாத்தான்குளம் சம்பவம் ஏற்பட காரணம் என்ன?

தமிழ் நாட்டின் தென்கோடியில் உள்ள சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஓர் இரவில் நிகழ்ந்த சம்பவம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு காவல்துறை கட்டிக்காத்து வந்த நற்பெயருக்குக் கலங்கத்தை ஏற்படுத்திவிட்டது. எந்த ஒரு காவல்நிலையத்தையும் நீதிமன்ற ஆணைபடி வருவாய்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலை இதுநாள் வரை இந்திய வரலாற்றில் நிகழவில்லை. அந்த சூழ்நிலை ஏற்படக் காரணம் என்ன?


* காரணமானவர்கள் யார்?

ஊரடங்கு நேரத்தில் சாத்தான்குளம் கடைவீதியில் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்த செயலுக்காகக் கைது செய்யப்பட்ட அப்பா, மகன் இருவரிடமும் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் அவர்களைச் சிறையில் அடைத்தனர். மறுநாள் அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்தனர். அவர்கள் இருவரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது. அதற்குக் காரணமானவர்கள் யார்? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நேரடி மேற்பார்வையில் கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் விசாரணை செய்தார். அதைத் தொடர்ந்து தற்பொழுது சிபிசிஐடி புலன்விசாரணை மேற்கொண்டு வருகிறது. காவல்நிலையத்தில் அப்பாவையும், மகனையும் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் மூர்க்கத்தனமாக அடித்ததின் விளைவாக அவர்கள் இருவரும் ரிமாண்ட் செய்யப்பட்ட மறுதினம் உயிரிழந்துள்ளனர் என்ற புலன் விசாரணையின் சுருக்கம் பொதுவெளியில் கசிந்துள்ளது.


* இந்த காவல் மரணம் கொலையாக மாறியதைத் தொடர்ந்து, பொதுவெளியில் எழுப்பப்படும் கேள்விகள்:

ஊரடங்கு நேரத்தில் கடை திறந்து வைத்திருந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடித்திருப்பார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? அப்பா, மகன் இருவரின் கைது மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் அவர்களை மூர்க்கத்தனமாக அடித்த சம்பவம் சாத்தான்குளத்திலேயே உள்ள டி.எஸ்.பி.க்கோ அல்லது மாவட்ட எஸ்.பி.க்கோ எப்படி தெரியாமல் போனது? ஒவ்வொரு காவல்நிலையத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கொடுக்கும் தனிப்பரிவு போலீசார் உடனடியாகத் தகவல் கொடுக்கத் தவறிவிட்டனரா? மாவட்ட எஸ்.பி.யைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தனிப்பிரிவு போலீசார் இருந்தனரா?

* எஸ்.பி.சி.ஐ.டி உளவுப்பிரிவு போலீசார் எப்படி இந்த சம்பவத்தைக் கோட்டை விட்டனர்? இந்த அசம்பாவித செயல் குறித்து பொதுமக்களில் எவரும் அன்றிரவே உயர் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரியப்படுத்த முயற்சி செய்யவில்லையா? அல்லது அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைந்ததா?

இந்த கேள்விகளுக்கான விடை தேடுவது இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கு அல்ல. மாவட்ட தனிப்பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி என்றழைக்கப்படும் உளவுப்பிரிவு இனிவரும் வருங்காலத்தில் இம்மாதிரியான தலைகுனிவு காவல்துறைக்கு ஏற்பட வாய்ப்பு கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்பதே காவல்துறை மீது மதிப்பு கொண்டுள்ளவர்களின் விருப்பம்.


* நீதித்துறை நடுவரை காவலர் திட்டியது இதுவரை நிகழ்ந்திராத சம்பவம்

உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற நீதிமன்ற நடுவரைத் தரக்குறைவான வார்த்தைகளால் ஒரு காவலர் பேசினார் என்பது ஒன்றரை நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையில் இதுவரை நிகழ்ந்திராத சம்பவம். அந்த தைரியம் அந்த காவலருக்கு எப்படி வந்தது? மன உலைச்சலால் வந்தது என்று கூறுவது ஏற்புடையதா? எந்த காவலரும் நீதித்துறை நடுவரிடம் எந்த சூழலில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். காவலரின் மன உலைச்சலை வெளிப்படுத்தும் இடம் நீதித்துறை நடுவர் அல்ல.

மாலை காவல்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து காவல்நிலையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினசரி நடத்தப்படும் 'ரோல் கால்' எனப்படும் வருகைப் பதிவும், அதைத் தொடர்ந்து காவலர்களுக்கு வழங்கப்படும் அவர்களது பணி தொடர்பான அறிவுரைகளும் கடந்த சில ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, வாரம் தோறும் நடைபெறும் கவாத்து பயிற்சிகளும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டன. ரோல் கால் மற்றும் கவாத்து பயிற்சி நடத்தாமல் இருப்பதை நியாயப்படுத்த காரணங்கள் பல கூறினாலும், அவைகளைப் புறக்கணித்ததே காவல் துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கான முக்கிய காரணங்கள் என்பதை இளம் காவல் அதிகாரிகள் உணருவதில்லை .


* உயர் அதிகாரிகள் கண்காணிப்பு குறைபாடுகளே இதற்கு காரணம்

மாவட்ட எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி.கள் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காவல் நிலையங்களைப் பார்வையிட அடிக்கடி செல்வதும், முக்கிய வழக்குகளில் விசாரணை நடைபெறும் பொழுது அதில் நேரடியாகக் கலந்து கொண்டு, புலன்விசாரணையைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார்கள். காலப்போக்கில், அவர்களின் நேரடி பங்களிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. தொலைபேசியில் காவல்நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை கொடுப்பதுதான் தங்களது பணி என்ற உணர்வு மாவட்ட அதிகாரிகளிடம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. இம்மாதிரியான கண்காணிப்பு குறைபாடுகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.


* அடிப்பது விசாரிப்பது சட்டத்துக்கு முரணானது

காவல்துறையின் செயல்பாடுகளில் நிகழ்ந்துள்ள இம்மாதிரியான மாற்றங்களைப் போன்று பொதுமக்களின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் வெளிப்படுகின்றன. சட்டங்களை மதித்து வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பெரும்பாலானவர்கள் விலகிச் செல்வதைக் காணமுடிகிறது. ஏதோ ஒரு வழியில் தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் தவறு எதுவுமில்லை என்ற உணர்வு பெரும்பாலானவர்களிடம் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

திருட்டு, வழிப்பறி தொடர்பான புகார் கொடுக்கும் பலர் எதிர்பார்ப்பது சந்தேக நபர்களைப் போலீசார் பிடித்து, அடித்து விசாரிக்க வேண்டும் என்பதுதான். அடித்து விசாரிப்பது சட்டத்துக்கு முரணானது என்பதை அவர்கள் உணரமாட்டார்கள். அதே போன்று என்கவுண்டர் செய்வதைக் கொண்டாடும் பழக்கம் இன்னும் நாட்டில் மிக அதிகமாக இருந்து வருகிறது. அதுவும் ஒருவகையான காவல் மரணம் என்பதை அவர்கள் உணருவதில்லை. சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, அமைதியை நிலைநாட்டுவதில் நீதித்துறையின் பங்களிப்பில்லாமல் காவல்துறையால் செயல்பட முடியாது. நீதிமன்றங்கள் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற முணுமுணுப்பு சில சமயங்களில் காவல்துறையினரிடம் வெளிப்படுவதும் உண்டு.

* சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உதவும் நீதித்துறை

ஆனால், காவல்துறையினரின் வேண்டுகோள் இல்லாமலேயே , நீதிபதிகள் பல சந்தர்ப்பங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகளைக் கூறலாம். அவைகளில் ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சாதிக் கொலைகள் அதிக அளவில் நிகழ்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா எவ்வளவு பிரபலமானதோ அதே போன்று அந்த மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் வடிக்கப்படும் சாராயமும் பிரபலமானது.


* நெல்லை கள்ளச்சாராய வழக்கில் சரியான தண்டனை வழங்கிய பெண் நீதிபதி

இந்த சூழலில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். சாராயம் காய்ச்சுபவர்களின் செயல்பாடுகளை முறியடிக்க, அவர்கள் மீது விஷச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்பு வருவதும் வழக்கம். நேர்மைக்கும், திறமைக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் பெண் நீதிபதி அப்பொழுது முதன்மை அமர்வு நீதிபதியாக இருந்தார். 'ஒரு குற்றவாளியிடம் இருந்த போலீசார் எத்தனை லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினார்களோ அத்தனை நாட்கள் அந்த குற்றவாளி சிறையில் இருக்கட்டும். அதன் பிறகு அந்த குற்றவாளிக்கு ஜாமீன் கொடுப்பது குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம்' என்று அவர் நீதிமன்ற விசாரணையின் பொழுது கருத்து தெரிவித்துவிடுவார்.


* சட்டங்களை உருவாக்குவதால் மட்டும் சாதிக்க முடியாது

அவரது அந்த செயல்பாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை வேரோடு அழிப்பதில் காவல்துறைக்குப் பெரிதும் துணையாக இருந்தது வரலாறு. காவல் மரணங்களும், வரம்புமீறிய செயல்பாடுகளும் காவல்துறையில் வெளிப்படும் பொழுதெல்லாம், காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் பொதுவெளியில் எழுப்பப்பட்டு வருகின்றன. சட்டங்களை உருவாக்குவதினால் மட்டும் காவல் மரணங்களையும், அத்து மீறல்களையும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.


* உயர் அதிகாரிகள் முறையான கண்காணிப்பு அவசியம்

காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிபவர்களின் செயல்பாடுகளை முறையாகக் கண்காணிப்பு செய்வதன் மூலமே காவல்துறையின் செயல்பாடுகள் மக்களுக்குப் பயனுள்ளதாகச் செய்ய முடியம். எப்பொழுதெல்லாம் காவல்துறையினர் மீதான உயரதிகாரிகளின் கண்காணிப்பில் தொய்வு ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் காவல்துறையினரின் அத்துமீறல்கள் சமுதாயத்தில் வெளிப்படுவதை உணரலாம். 'நாங்கள் காவல்துறைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கும், காவல் மரணங்களுக்கும் எதிராகப் போர்குரல் கொடுக்க ஒரு போதும் தயங்கமாட்டோம்' என்பது சமூகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது.Trending Now: