தினம் ரூ. 1 லட்சம் கட்டணம் கேட்டு பெண் டாக்டரையே சிறை வைத்தனர் - கொரோனாவில் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனை

06-07-2020 04:37 PM

ஐதராபாத்

கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் டாக்டரிடம் தினம் ரூ.1 லட்சம் கட்டணம் கட்டவேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகமே சிறை வைத்தது. இப்படி ஒரு கொடுமை ஐதராபாத்தில் நடந்துள்ளது.

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரிபவர் டாக்டர் சுல்தானா. இவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி  தும்பே மருத்துவமனையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கெனவே, ரூ. 1.9 லட்சம் கட்டணமாக செலுத்தினார். தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்ய அவர் தயாரானார். அப்போது, நாள் ஒன்றுக்கு கட்டணமாக ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால் டாக்டர் .சுல்தானா கட்டணத்தை கட்ட மறுத்தார்.

இதனால் அவரை ஒரு தனி அறையில் மருத்துவமனை நிர்வாகம் சிறை வைத்தது. 'பணம் கட்டினால்தான் வெளியே விடுவோம் 'என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. 

இது குறித்து அவர் வாட்ஸ் அப்பில் கண்ணீர் மல்க ஒரு வீடியே வௌியிட்டார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. உடனடியாக சந்தர்காட் போலீசார் அந்த மருத்துவமனைக்கு சென்று சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சுல்தானா பணி புரிந்த மருத்துவமனை டாக்டர்களும் தும்பே மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து, டாக்டர். சுல்தானா விடுவிக்கப்பட்டார்.

இது பற்றி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. டாக்டர்  அப்துல்லா சலீம் கூறுகையில், 

' டாக்டர். சுல்தானா டீலக்ஸ் வார்டில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கும் அவர் உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை. இதனால், அவரை அறையில் வைத்து பூட்டினோம்.  போலீசுக்கே நாங்கள் தான் தகவல் தெரிவித்தோம் என்றார்.

இதுபற்றி சுல்தானா பணியாற்றும் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்கர் கூறுகையில், 

கோவிட் போராளிகளுக்கு   மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் டாக்டர் சுல்தானா  எங்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் இந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதனால், ஏற்பட்ட குழப்பம்தான்  என்றார்.Trending Now: