சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் ஜப்பான் பயணத்துக்கு ஜப்பானிய எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

04-07-2020 05:29 PM

டோக்கியோ

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சீன அதிபரின் பயணத்துக்கு ஜப்பானிய ஆளுங்கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜப்பானிய பயணத்தை ரத்து செய்யும்படி ஜப்பானிய பிரதமர் ஜின்ஜோ அபே அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆளுங் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு சீன தலைவர்கள் யாரும் ஜப்பானுக்கு வரவில்லை. இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஜப்பானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்தப் பயணம் ஒத்தி போடப்பட்டது.

தெற்கு சீனக்கடல் பிரச்சனையில் சீனாவை கடுமையாக குறைகூறி வந்த ஜப்பான். இப்பொழுது ஹாங்காங் பிரச்சனையையும் சேர்த்து சீனாவை சாடி வருகிறது .

ஹாங்காங் நகரில் ஜப்பானியக் கம்பெனிகள் 1400 உள்ளன.

ஜப்பானில் இருந்து மிகவும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக ஹாங்காங் உள்ளது.

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஹாங்காங் நகரில் உள்ள மற்ற நாடுகளின் கம்பெனிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை கட்டுப்படுத்த  தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா இயற்றி அமுல்படுத்த துவங்கி இருப்பதாக ஜப்பான் கருதுகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் பரவலைக் காரணமாக கொண்டு தன்னுடைய ஆக்கிரமிப்பு கொள்கைகளை சீனா சத்தமில்லாமல் அமல் செய்து வருவதாக ஜப்பானிய ஆளுங் கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் ஹாங்காங் நாட்டுக்கு என தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா இயற்றி அமல்படுத்துவது ஹாங்காங்கிலுள்ள மற்ற வெளிநாட்டு கம்பெனிகளை அங்கிருந்து வெளியேற்ற வகுத்துள்ள திட்டம்  என ஜப்பானிய மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ,

மேலும் தென் சீனக்கடல் பிரச்சனையில் நாளுக்கு நாள் சீனாவின் நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன.

 இப்பொழுது இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கையும் சீனா ஆக்கிரமித்து உள்ளது. இவை எல்லாம் சீனாவின் ஆக்கிரமிக்கும் போக்கை அம்பலப்படுத்துகின்றன. இந்த நிலையில் ஜப்பானியக் கம்பெனிகளின் நலனைப் பாதுகாக்கவும் சீனாவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை குறை கூறவும் சீன அதிபரின் ஜப்பானிய பயணத்தை ஜப்பான் தவிர்த்துவிடலாம் என்று ஜப்பானிய ஆளுங்கட்சி எம்பிகள் வலியுறுத்துகின்றனர். சீன அதிபரிடம் ஜப்பானிய பிரதமர் அபே உங்கள் பயணம் ஜப்பானுக்கு தேவையற்றது என்று நேரடியாக கூறிவிடலாம் என்று ஆளும் கட்சி எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சீனாவில் உள்ள ஜப்பானிய கம்பெனிகளை வெளியேற்றி மீண்டும் அவற்றை ஜப்பானுக்கு அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்ப உதவும் திட்டம் ஒன்றை ஜப்பானிய நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றி அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா இயற்றி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய விஷயமாகும்.

 அதற்கு உரிய கண்டனத்தை பதிவு செய்ய சீன அதிபரின் வருகையை நிராகரிப்பது தான் சரியான வழி என்று ஆளும் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.Trending Now: