முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்ற 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணி ஓய்வு பலம் இழக்கிறதா தமிழக காவல்துறை

30-06-2020 10:08 AM

நமது சிறப்பு நிருபர்

தமிழக காவல்துறையில் சட்டம், ஒழுங்கு ஐஜிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் வி. வரதராஜு, கே.பி. சண்முகராஜேஷ்வரன் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். இந்த இருவரும் தற்போது தமிழகத்தின் முக்கிய பகுதிகளான திருச்சி நகரம் மற்றும் தெற்கு (மதுரை) மண்டலங்களில் பதவியில் உள்ளனர். சண்முகராஜேஷ்வரன், வரதராஜு இருவரும் தங்களது பணித்திறமை மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை என்கின்றது தமிழக காவல் வட்டாரம். மேலும் துாத்துக்குடி, திருநெல்வேலியில் இவர்களது காவல் பணி தனி முத்திரை பதித்துள்ளது எனலாம்.

காவல்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அதிகாரிகள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவர்களின் பணித்திறமைகள் பேசப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய பணி அனுபவங்கள் தொடர்பாக காவல்துறை தரப்பில் பரபரப்பாக பேசப்படும் சுவாரஷ்யமான விஷயங்கள் குறித்த சிறிய அலசல் இதோ!

கே.பி. சண்முகராஜேஷ்வரன்:

சண்முகராஜேஷ்வரன், ஐபிஎஸ்.,

சண்முகராஜேஷ்வரன், வரதராஜு இருவரும் தமிழக காவல்துறையில் பயணித்த காவல் பயணம் அனைத்தும் கரடுமுரடானவைகள்தான். துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சினையால் துப்பாக்கி சூடு நடந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியான போது சண்முகராஜேஷ்வரன் நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய உள்பட தென்மண்டல ஐஜியாக அங்கு கொண்டுவரப்பட்டார்.


* துாத்துக்குடி காவல்துறையில் சீர்திருத்தங்கள்

அதன் பின்னர் துாத்துக்குடி காவல்துறையில் பல சீர்திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்பட்டதால் அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. அதற்கு முன்னதாக சண்முகராஜேஷ்வரன் சட்டம், ஒழுங்கு பிரிவுகளில் சென்னை மயிலாப்பூர் துணைக்கமிஷனர், தென்சென்னை இணைக்கமிஷனர், நெல்லை டிஐஜி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்தவர்.

* திரிபாதி தலைமையில் ரவுடிகள் ஒழிப்பு

சண்முகராஜேஷ்வரன் சென்னை நகரில் ரவுடிகள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டவர். 2012ம் ஆண்டு அவர் தென்சென்னை இணைக்கமிஷனராக இருந்த போது வேளச்சேரியில் வங்கிக்கொள்ளையர்கள் 5 பேர் ஒரே சமயத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் மூலம் சமூக விரோதிகள் மத்தியில் போலீசாரின் சிங்கமுகத்தை காட்ட வைத்தது. தற்போது தமிழக டிஜிபியாக உள்ள திரிபாதி அப்போது சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சண்முகராஜேஷ்வரன் எம்ஏ முதுகலைப் பட்டம் மற்றும் எம்பில், எம்பிஏ மற்றும் சட்டத்துறையிலும் எம்எல் மேற்படிப்பு படித்தவர்.


வி. வரதராஜு:

வரதராஜு, ஐபிஎஸ்.,

தமிழக காவல்துறையில் மத்திய மண்டல ஐஜியாக பதவி வகித்தவர் வரதராஜு. பழக இனிமை, பணியில் நேர்மை, தன்னடக்கம், அமைதியான, ஆர்ப்பாட்டம் இல்லாத நேர்த்தியான நிர்வாகத்திறமை. இவை இவருக்கு பிளஸ்பாய்ண்ட்கள். தற்போது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக உள்ளார். தமிழக காவல்துறையில் 1997ம் வருட பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. எம்ஏ பட்டம் பெற்றதும் குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று சிதம்பரம் டிஎஸ்பியாக தமிழக காவல்துறையில் 1991ம் ஆண்டு கால் பதித்தார் வரதராஜு.


* துாத்துக்குடியில் வெளிப்பட்ட  திறமை

இப்போதும், எப்போதும் பதட்டம் நிறைந்த துாத்துக்குடி மாவட்டத்தில்தான் டிஎஸ்பியாக வரதராஜுவின் பணித்திறமை வெளிப்பட்டது. 1999ம் ஆண்டு துாத்துக்குடியில் ஜாதிக்கலவரம் வெடித்த போது அங்கு எஸ்பியாக இருந்த ஜாங்கிட் (தற்போது ஓய்வு பெற்ற டிஜிபி) வழிகாட்டலில் வரதராஜுவின் நுண்ணறிவான அணுகுமுறை அங்கு அமைதியை நிலை நாட்ட வழிவகுத்தது.


* ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்

அதன் பின்னர் பதவி உயர்ந்து வரதராஜு ஜெயலலிதாவின் பாதுகாப்புப்பிரிவில் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகள் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடிக்க வைத்தது. பின்பு அவர் வகித்ததெல்லாம் அதி முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளான சென்னை அடையாறு துணைக்கமிஷனர், மதுரை எஸ்பி, திருவள்ளூர் எஸ்பி, சிபிசிஐடி, சென்னை நகர உளவுப்பிரிவு துணைக்கமிஷனர், சென்னை பரங்கிமலை துணைக்கமிஷனர், நெல்லை டிஐஜி, சென்னை நகர உளவுப்பிரிவு இணைக்கமிஷனர் (டிஐஜி), அதே பிரிவிலேயே கூடுதல் கமிஷனர் (ஐஜி) என வரதராஜுவின் காவல் பணிகள் தொடர்ந்தன.


* கூடங்குளம் போராட்டம் கையாண்ட விதம்

கூடங்குளத்தில் போராட்டம் வெடித்த போது அமைதியான முறையில் போராட்டக்கார்களை கையாண்டு அதில் வெற்றியும் கண்டவர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிஜிபி ராமானுஜம் ஆகியோரிடம் சபாஷ் வாங்கியது யாருக்கும் தெரியாது. மேலும் நெல்லை டிஐஜியாக வரதராஜுவின் கூடங்குளம் போராட்டத்தை கையாண்ட நுண்ணறிவான, பொறுமையான செயல்பாடுகள் இன்னும் அங்கே போற்றப்படுவதாக கூடங்குளம் மக்கள் கூறுகின்றனர்.


* உளவுப்பிரிவில் 8 ஆண்டுகள் அனுபவம்

தமிழக காவல்துறையில் சென்னை நகர உளவுப்பிரிவில் 8 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் வாய்ந்த பெருமை இவர் ஒருவரையே சாரும். கடந்த 2016ம் ஆண்டு திருச்சி ஐஜியாக சென்ற வரதராஜு, காவிரி டெல்டா பகுதிகளில் நடந்த ஹைட்ரோ கார்பன் போராட்டத்தின் போதும் பொதுமக்கள் மீது எந்த வித பலப்பிரயோகமும் இன்றி, அமைதியாக நுண்ணறிவுடனும் கையாண்டதும் ஆட்சியாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


* பலமிழக்கும் தமிழக காவல்துறை

இந்த வகையில் தமிழக காவல்துறையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணிபுரிந்து பழுத்த அனுபவம் வாய்ந்த வரதராஜுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 4 ஆண்டுகளும் அவர் பணிபுரிந்த திருச்சி மண்டலம் சட்டம், ஒழுங்கில் சிறந்து விளங்கியதே அதற்கு உதாரணம். வரதராஜு, சண்முகராஜேஷ்வரன் இருவரது ஓய்வு தமிழக காவல்துறையின் மிகச்சிறந்த பலத்தை இழக்கிறது என்றுதான் விமர்சிக்கின்றனர் ஓய்வு பெற்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள்.Trending Now: