30 வருடங்கள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்

27-06-2020 10:27 PM

கொல்கட்டா,

கொல்கட்டாவில், கணவருடன் வாழும், 30 வயது பெண் ஒருவர் தான் உண்மையில் ஒரு ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றபோது இந்த உண்மை அவருக்கு தெரியவந்துள்ளது.


கொல்கட்டாவின் பிர்பும் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், வயிற்றுப்பகுதியில் கடும் வலி காரணமாக, அங்குள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக வந்தார்.

மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை நடத்திய போது அவர் உண்மையில் பெண் அல்ல ஆண் என தெரியவந்தது. அவர் உடலில் மறைந்திருந்த சினைப்பையில் புற்றுநோய் வந்துள்ளதும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறித்து, மருத்துவர்கள் கூறுகையில் :

உருவம், குரல், மார்பகத்தின் வளர்ச்சி, பிறப்புறுப்பு உள்ளிட்ட அனைத்திலும், அவர் முழுமையாக பெண்ணாக உள்ளார். ஆனால், அவரது உடலில், பெண்ணுக்கான கருப்பை மற்றும் கரு முட்டைகள் உருவாகும் 'ஓவரி' இல்லை. இதனால், அவருக்கு இதுவரை மாதவிடாய் வந்ததில்லை.

பெண்களுக்கு, குரோமோசோம்கள் 'எக்ஸ் - எக்ஸ்' என, இருக்கும். அவரது குரோமோசோம்கள், ஆண்களுக்கான 'எக்ஸ் - ஒய்' அமைப்பில் உள்ளன. அவருக்கு, வளர்ச்சி அடையாத, விந்தணுக்களின் உற்பத்தியும் இருக்கிறது.ஆனால் அவர் உடலில் ஆண்களுக்கான டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சுரக்கவில்லை. அதேசமயம் பெண்ணுக்கான ஹார்மோன்கள் முழுமையாக சுரந்ததால் அவர், பெண்ணாக தோற்றம் அளிக்கிறார்.

இதற்கு ஆண்டிரோஜென் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் (Androgen Insensitivity Syndrome) என்று பெயர். உலகில், 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு, இதுபோன்ற நிலை ஏற்படும்.

அவரது புற்றுநோய் பாதிப்பிற்கு, 'கீமோதெரபி' முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், நலமுடன் உள்ளார். பிறந்தது முதல் பெண்ணாக வளர்ந்த அவர், ஒன்பது ஆண்டுகளாக கணவருடன் வாழ்கிறார்.அவர்கள் இருவரும் இதேபோல் தங்கள் வாழ்க்கையைத் தொடரலாம் என அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். ஆனால்,அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் தாய்வழி உறவினர்கள் இரண்டு பேருக்கு இதே பிரச்சனை உள்ளது தெரியவந்துள்ளது. இந்த உண்மை தெரிந்த பின்னர் அந்த பெண்ணின் 28 வயது சகோதரி தன் உடலை பரிசோதனை செய்த போது அவரும் ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குடும்பத்தில் உள்ள மரபணு பிரச்சனையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.Trending Now: