கட்டிங் – சேவிங் செய்ய ஆதார் அவசியம்; தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

02-06-2020 06:28 PM

சென்னை 

கட்டிங் – சேவிங்குக்கு செய்துகொள்ள அழகு நிலையங்கள் மற்றும் முடித்திருத்தங்களுக்கு செல்வோருக்கு ஆதார் அட்டை அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 1 ம்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது அப்போது ஜவுளிக்கடைகள் முடித்திருத்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் குளிர்சாதன வசதிகள் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றை இயக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் முடித்திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு தனி வழிகாட்டு நெறிமுறைகள்  வகுக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது அதனை தமிழக அரசு இன்று வெளியிட்டது, அதன் விபரம் வருமாறு:

அழகு நிலையம் மற்றும் முடித்திருத்தும் கடைகளின் நுழை வாயிலில், சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும். சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விபரங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக் கொள்ளவேண்டும்.

வாடிக்கைகாளருக்கு அழகூட்டும் பணியினை, சேவையினை துவங்கும் முன்னர், சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவவேண்டும். அழகு நிலையங்கள், ஸ்பாக்களில் பணிபுரியும் பணியாளருக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின், அவர்கள் அரசு மருத்துவரை அணுகி, பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றவேண்டும். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியில் ஈடுபடக்கூடாது. மேலும் இதனை ஒவ்வொரு அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் உரிமையாளர் கட்டாயமாக உறுதி செய்யவேண்டும்.

காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும்போது, அழகு மற்றும் பிற சேவைகளுக்கு அழகு நிலையம், ஸ்பார்க்களுக்கு வாடிக்கையாளர்கள் வரக்கூடாது. சமூக விலகலை பின்பற்றும் வகையில், அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் ஒரே நேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்கும் வகையில் இயன்றவரை, முன்பதிவு அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நேரம் ஒதுக்கி அழகூட்டுதல் மற்றும் இதர சேவைகள் வழங்கவேண்டும்.

மேலும் அழகு நிலையம், ஸ்பாக்களில் உள்ள மொத்த இருக்கைகளுள், 50 சதவீதத்திற்கு மேலான இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்வதை தவிர்ப்பதோடு, ஒருவொருக்கொருவர் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர வேண்டும்.குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே காத்திருக்க அனுமதிக்க வேண்டும். காற்றோட்டத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஜன்னல்களும் திறக்கப்பட்டிருக்க வேண்டும். குளிர் சாதன இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது. ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்பட்ட பிளேடினை மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தக்கூடாது. களையக்கூடிய  மேலங்கியை  மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதுபோல அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் அனைத்து அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களுக்கு வழங்கப்படவேண்டும். இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ளவற்றை அழகு நிலையம் மற்றும் ஸ்பார்க்கள் பின்பற்றுவதை மாவட்ட நிருவாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம நிருவாகங்கள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.  

இவ்வாறு தமிழ்நாடு அரசு வகுத்துள்ள விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,Trending Now: