சென்னை தவிர 33 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகளை இயக்கலாம்: முதலமைச்சர் அறிவிப்பு

01-06-2020 09:34 AM

சென்னை,

5ம் கட்ட பொது ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கத்தொடங்கின.

தமிழ்நாட்டில் ஜூன் 30-ம் தேதி வரை கொரோனா வைரஸ் தடுப்பு பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் (1.6.2020)  நடைமுறைப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன.


மண்டலம் 1 :  கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்


மண்டலம் 2 :  தருமபுரி, வேலுர், திருப்பத்துhர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி


மண்டலம் 3:  விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி


மண்டலம் 4:  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை


மண்டலம் 5 :  திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்


மண்டலம் 6:  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி


மண்டலம் 7:  காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு


மண்டலம் 8:  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி


மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும்

மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.  

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

பேருந்தில் பயணிப்போர் அனைவரும் முகக் கவசம் (மாஸ்க்) அணிந்திருக்க வேண்டும்.

மண்டலத்திற்குள் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது என்று தமிழ்நாடு அரசின் உத்தரவில்  அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஜூன் 30ம் தேதி வரை பல தளர்வுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவையில் 539 பஸ்கள், திருப்பூரில் 280, ஈரோட்டில் 334, நீலகிரியில் 173 என, 1,326 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கத்தொடங்கின.

நீலகிரியில் பேருந்து இயக்கம்

நீலகிரி மாவட்டம் உதகமண்டல கோட்டத்தில்  சுமார் 60 நாட்களுக்கு பின் அரசு பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 160 பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருப்பூர்

திருப்பூரில் 197 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன, இருப்பினும் பொதுமக்கள் குறைவான அளவிலேயே பயணம் செய்கின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு அளித்துள்ள விதிமுறைகளின்படி குறைவான நபர்களே கொண்டு பேருந்து இயக்கப்படுகின்றன.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை முதல் அரசு பேருந்து இயக்கம் தொடங்கியது..

வேலூர்

வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர். தருமபுரி. கிருஷ்ணகிரி. ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரகப் பகுதி மற்றும் நகர்ப்புறங்களுக்கு 50 சதவிகித பேருந்துகள்,குறைந்த பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.


Trending Now: