திருச்சியில் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 4 பேர் பலி; விபத்தா? தற்கொலையா? திணறும் போலீஸ்

01-06-2020 01:45 AM

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியில் மகன் இறந்த துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருந்த தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் சிலிண்டர் வெடித்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என நவல்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சோகச் சம்பவம் குறித்த விபரம் வருமாறு;

   திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் ஜெயகௌரி. இவர் தனியார் பள்ளியில்  தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி (28) விஜய்வாணி(26), என இரு மகள்களும்  விஜயகுமார் என ஒரு மகனும் உண்டு. மகன் மகள்களுடன் ஜெயகௌரி ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

   இவர்களில் ஒரு மகள் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராகவும், ஒரு மகள் தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்தார்.

மகன் விஜயகுமார் டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு விஜயகுமார் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கொரொனோ நோய் - ஊரடங்கு காரணமாக விஜயகுமார் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று பிற்பகல் விஜயகுமாருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனே ஜெயகௌரி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

108 ஆம்புலன்ஸ் ஜெயகெளரி விட்டுக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்சில் வந்தவர்கள் விஜயகுமாரை பரிசோதனை செய்து பார்த்தனர். விஜயகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.   இதனால் வீட்டிலேயே மனமுடைந்த தாய் ஜெயகெளரி, விஜயலட்சுமி, விஜயராணி ஆகிய 3 பேரும் விஜயகுமார் உடலின் அருகேயே இருந்து அழுது கதறியுள்ளனர். விஜயகுமார் இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுத இவர்கள் யாருக்கும் வெளியே சொல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்திருக்கின்றனர்.

சிலிண்டர்கள் வெடிப்பு

 இந்த சூழலில் இன்று இரவு 7.30 மணி அளவில் விஜயகுமார் வீட்டிலிருந்த சமயலறையிலிருந்து முதல் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது. பின்னர்  வீட்டில் இருந்த இரண்டாவது சிலிண்டரும் வெடித்துள்ளது. அடுத்தடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் நவல்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயகௌரி, விஜயகுமார், விஜயலட்சுமி, விஜயவாணி ஆகிய நான்கு பேரின் உடல்களும் கருகிய நிலையில் இருந்ததை கண்டு, அவற்றை மீட்டெடுத்துள்ளனர்.

   பின்னர் அந்த நான்கு உடல்களையும் நவல்பட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நவல்பட்டு போலீஸார், விபத்தா, தற்கொலையா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் திருச்சி மக்களிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.Trending Now: