குஜராத்தில் 16 வயது பழங்குடியின சிறுமி கட்டைகளால் அடித்து சித்ரவதை

29-05-2020 11:06 AM

வதோதரா,

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்திலுள்ள பில்வந்த் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பலர் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுமி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் ஓடி போனதால் அவரது உறவினர்கள் இவ்வாறு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மே 21ஆம் தேதி நடந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான பின்புதான் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிந்து சிறுமியை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த சிறுமியை இளைஞரின் வீட்டில் கண்டுபிடித்த அவளது உறவினர்கள் அங்குள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு அவளை இழுத்து வந்துள்ளனர்.

அங்கு ஒருவர் அவளது கையை இறுக்கமாக பிடித்துக்கொள்ள மற்றவர்கள் அந்த சிறுமியை கட்டைகளால் சரமாரியாக அடித்து  துன்புறுத்தினர்.

சமூக வலைதளங்களில் வைரல் ஆன வீடியோவில் அந்த நபர்கள் தங்கள் கையில் இருக்கும் கட்டை உடையும் வரை அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்துகிறார்கள். பின்பு அவளது தலைமுடியை பிடித்து அவளது கழுத்தில் பலமாக தாக்குகிறார்கள். வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி கீழே விழுந்தவுடன் அனைவரும் அவளை காலால்  உதைக்கிறார்கள்.

சிறுமி வலியில் துடித்துக் கதறியபோதும் அவர்கள் யாரும் தாக்குதலை நிறுத்தவில்லை.

இந்த வீடியோ கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வலம் வந்தும் போலீஸார் செவ்வாய்க்கிழமை தான் நடவடிக்கை எடுத்தார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த சிறுமியை துன்புறுத்தும் போது அருகில் சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தும் யாரும் அந்த கொடுமையை தடுக்க முன்வரவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த சிறுமியை கடத்தி சென்றதாகவும் அந்த சிறுமியை துன்புறுத்தினார்கள் என்றும் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்திருந்தார் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு கண்டிருக்கலாம் என கிராமத்து சர்பஞ்  துண்டிபெண் ரத்வா தெரிவித்துள்ளார்.

வீடியோவில் சிறுமியை துன்புறுத்திய அவளது உறவினர்கள் மற்றும் கிராமத்தை சேர்ந்த பிற ஆண்கள் என 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சிறுமி மைனர் என்பதால் அவளை கடத்தி சென்றதாக சம்பந்தப்பட்ட இளைஞன்  மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞன் தற்போது தலைமறைவாக உள்ளார் என சப்-இன்ஸ்பெக்டர் டி.எம்.வசவா செய்தியாளர்களிடம் கூறினார்.Trending Now: