சென்னைக்கு பதில் திருச்சிக்கு விமான சேவை?

24-05-2020 04:50 PM

திருச்சி

   நாடு முழுக்க விமான சேவைக்கான புக்கிங் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு பயணிகள் விமான சேவை நாளை முதல் தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னைக்கு பதிலாக திருச்சியில் எல்லா விமானங்களும் தரையிறங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொற்று அதிகரித்ததை தொடர்ந்து 4-வது முறையாக வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

   இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.  இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.  அதன்படி, பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை பதிவிட வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      நாளை முதல் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்க உள்ளது. இதற்கான புக்கிங் தொடங்கிவிட்டது. இதற்கான டிக்கெட் விலையும், பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கும் விமான சேவைக்கான புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது.

  கர்நாடகாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் கண்டிப்பாக 7 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கேரளாவில் எல்லா விமான பயணிகளும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

   தமிழகத்தில் சென்னைக்கு பயணிகள் விமான சேவை நாளை தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னைக்கு விமான சேவைக்கான புக்கிங் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தமிழக அரசு விமான சேவையை தொடங்க இன்னும் அனுமதி வழங்கவில்லை.

   இது தொடர்பாக தமிழக அரசு மத்திய விமான போக்குவரத்து துறைக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் அதுவும் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் வரும் மே 31 வரை விமான சேவையை தொடங்க வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தது.
   ஆனால மத்திய அரசு இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. விமான சேவையில் மாநில அரசுகளே முடிவு எடுக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு நினைக்கிறது என்று கூறப்படுகிறது.

   அதேபோல் விமானத்தில் வரும் பயணிகளை எப்படி தனிமைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் தமிழக அரசு முடிவு எதையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் இந்தியா முழுக்க சென்னை வருவதற்காக டிக்கெட் புக் செய்தவர்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். எப்படி சென்னை செல்வது, சென்னைக்கு புக் செய்த விமானம் செல்லுமா என்று குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

  அதேநேரம் சென்னையில் விமானங்களை தரை இறக்காமல் திருச்சியில் தரையிறக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விமானங்களை இயக்க கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

   இதனால் சென்னைக்கு இணையான வசதிகளை கொண்ட திருச்சி விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கலாம் என்ற முடிவுக்கு மத்திய மாநில அரசு வந்துள்ளதாக தெரிகின்றது. திருச்சியில் அதற்கான ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருக்கின்றன.

   முழுமனதுடன் தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவையை ஏற்காத நிலைதான் இந்தநிமிடம் வரை என்றாலும் வெளிநாட்டு விமான சேவைகளும் வரும் 26-ம் தேதி துவக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. விமான நேர கால அட்டவணைகளும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Trending Now: