தமிழகத்தில் 4 ரயில்கள் விட ரயில்வே வாரியத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

23-05-2020 09:08 PM

திருச்சி

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்து முடங்கிய நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி 200 ரயில்களை ரயில்வே துறை இயக்க முடிவு செய்துள்ளதால், தமிழ்நாட்டிற்கும்  4 ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

  கொரோனா தொற்றால் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டது. அதன்படி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரயில், பேருந்து போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்கள் எங்கே சென்றனரோ அங்கேயே தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

   பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் . ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 200 ரயில்கள் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். 

அதன்படி வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் விதமாக ரயில்கள் சேவை துவக்கப்படும் என இந்திய ரயில்வேயால் அறிவித்துள்ளது.

  இந்த நிலையில் தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசுக்கும், ரயில்வே வாரியத்திற்கும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

   அதன்படி தமிழகத்தில் ஏ.சி.வசதியின்றி

1. கோவை - மயிலாடுதுறை சதாப்தி விரைவு ரயிலையும்,

2. மதுரை - விழுப்புரம் வைகை அதி விரைவு ரயிலையும்,

3.  நாகர்கோயில் வழியாக திருவனந்தபுரம் அதிவேக ரயிலையும் மற்றும்

4. கோவை - காட்பாடியை இணைக்கும் வகையில் ஒரு ரயில் சேவையையும் 

இயக்க ரயில்வே வாரியத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

   இதனை ரயில்வே அமைச்சகம் தென்னக ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது

   இதன்படி வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் தென்னக ரயில்வே இந்த ஏ.சி.பெட்டிகள் இல்லாத 4 ரயில்களை இயக்கும் எனத் தெரிகிறது.

இந்த 4 ரயில்களும் திருச்சியை மையமாக வைத்து இயக்கப்பட உள்ளன. 

ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 நாட்களுக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க வாய்ப்பு கிடைத்ததையொட்டி திருச்சி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர்.Trending Now: