ஆர்.எஸ். பாரதி கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானதே: ஜி.கே. வாசன்

23-05-2020 03:08 PM

சென்னை,

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்,  தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதாக எழுந்த புகாரின்பேரில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

பிற்பகலில் ஆர்.எஸ். பாரதி  இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

கைது நடவடிக்கைக்கு ஆதரவாக அது சரியான நடவடிக்கைத்தான் என. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை விட்டுள்ளார். 

ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது சட்ட ரீதியானது. தமிழக அரசின் மீது இது சம்பந்தமாக எதிர்கட்சியினர் வீண்பழி போடும் வகையில் குற்றம் கூறுவது தவறானது. ஏற்புடையதல்ல

திமுக அமைப்புச் செயலாளர். ஆர்.எஸ். பாரதி பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அரசியல் சாயம் பூசுவதற்கோ, உள்நோக்கத்திற்கோ இடம் இல்லை.

காரணம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் ஆர்.எஸ். பாரதி பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தான் அவர்கைது செய்யப்பட்டார். அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக - வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது சட்ட ரீதியானது.

எனவே அவரை கைது செய்தது சட்ட ரீதியான நடவடிக்கையே. அரசியல் ரீதியான நடவடிக்கை அல்ல. காழ்ப்புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும் அல்ல.

குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பும், உதவிகளும் செய்வதற்கு சரியான நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசின் மீது இது சம்பந்தமாக எதிர்கட்சியினர் வீண்பழி போடும் வகையில் குற்றம் கூறுவது தவறானது. ஏற்புடையதல்ல.

தமிழக அரசு இப்போதைய அசாதாரண சூழலில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளுக்கு இடையில் எதிர்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எடுபடாது. எனவே சட்டம் தன் கடமையை செய்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.Trending Now: