சென்னை மாநகராட்சி தவிர பிற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அரசு அனுமதி

23-05-2020 11:09 AM

சென்னை,

சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் நாளை முதல்  (24.5.2020) தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் சலூன்களைத் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடைகளைத் திறப்பது, தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த 4-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது.

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்

தற்போது,  முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள்  பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் 24.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி  முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு  அனுமதிக்கப்படுகிறது.  எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் (Containment Zones) உள்ள முடிதிருத்தும்  மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது.  தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரக பகுதிகளில் தற்போது அழகு நிலையங்களும் 24.5.2020 முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு  அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.    

இந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நிலையங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. 

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி (Hand Sanitiser)  கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில்  ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.  மேலும், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும்.

இவ்வாறு, தமிழ்நாடு  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.Trending Now: