திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது

23-05-2020 09:54 AM

சென்னை

 திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி  சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ். பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் கண்டனம்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- 

கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த ஆர்.எஸ் பாரதி மீதான மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது” 

என்று மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

திமுக அமைப்பு செயலாளர் அண்ணன்கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கோவையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது பற்றி நேற்று ஆர்.எஸ். பாரதி அவர்கள் புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக கனிமொழி ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

திமுக அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கோவையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது பற்றி நேற்று ஆர்.எஸ். பாரதி அவர்கள் புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுகவை அச்சுறுத்த நினைத்தால், அது நடக்காது.

என கனிமொழி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.  பாரதி பேட்டி

 சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது;  என்னை கைது செய்வதால் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி ஊழல் செய்துவரும் அதிமுக அமைச்சர்கள் தப்பிவிட முடியாது" என ஆர்.எஸ். பாரதி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி ஆர்எஸ் பாரதி கைதும் -  இடைக்கால ஜாமினில் விடுவிப்பும்

தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு எழும்பூர் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த ஆதித்தமிழர் கட்சி நிறுவனர் கல்யாணசுந்தரம் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘பிப்ரவரி மாதம் 14ம் தேதி சென்னை தேனாம்பேட்டை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான ஆர்.எஸ். பாரதி தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக பேசியுள்ளார். ஹரிஜன நீதிபதிகளை நியமனம் செய்தது திமுகதான். நீதிபதி பதவி திமுக போட்ட பிச்சை, திமுகதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது என தலித் மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய அவர் மீது  வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.  அதன்பேரில் சென்னை தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. ஆர்எஸ் பாரதி மீது 3(1)(யு), 3 (1) (5) (தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக பேசுதல்) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு  செய்தனர். அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலையில் நங்கநல்லுாரில் உள்ள ஆர்எஸ் பாரதியின் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட அவர் விசாரணைக்குப் பின்பு 8 மணியளவில் சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிபதி செல்வகுமார் வீட்டில் அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்எஸ் பாரதியின் மகன் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் டாக்டராக இருப்பதாகவும், அதனால் ஆர்எஸ் பாரதிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது நீதிபதியிடம் தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்றும் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் வாதாடி ஜாமின் கோரினார்கள். 

அதனை பரிசீலித்த நீதிபதி இம்மாதம் 31ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஜுன் 1ம் தேதியன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.Trending Now: