ஒரே நேரத்தில் 2 டிகிரிகள் பெற படிக்க அனுமதி

21-05-2020 08:39 PM

புதுடெல்லி

ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு  வகுப்புகளில் சேர்ந்து படிக்க பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் ஒப்புதல் தர முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த இந்திய பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.. இந்த முடிவின் அடிப்படையில் இந்திய பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனின் செயலாளர் ராஜ்னீஷ் ஜெயின் இன்று அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்க பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் அனுமதி வழங்கலாமா என்று முடிவு செய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனின் துணை தலைவர் பூஷன் பட்வர்தன் நியமிக்கப்பட்டார்.

ஓராண்டு காலம் பூஷன் பட்வர்தன் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு செய்து தன்னுடைய அறிக்கையை பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனுக்கு சமர்ப்பித்தது. அந்த குழுவின் அறிக்கையை பல்கலைக்கழக நிதிஉதவி கமிஷன் பரிசீலனை செய்தது.

ஒரு மாணவர் இரண்டு பட்டப்படிப்பு வகுப்புகளில் ஒரே நேரத்தில் படிக்கலாமா?

ஒரே பல்கலைக்கழகத்தில் இரண்டு பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர்ந்து படிக்க அனுமதிக்கலாமா அல்லது ஒரு பட்டப்படிப்பு வகுப்பினை ஒரு பல்கலைக் கழகத்திலும் மற்றொரு பட்டப்படிப்பு வகுப்பினை வேறொரு பல்கலைக் கழகத்திலும் படிக்க அனுமதிக்கலாமா? இரண்டு பல்கலைக் கழகங்களிலும் வழக்கமான வகுப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டுமா அல்லது தொலைதூரக்கல்வியில் படிக்கலாமா அல்லது தொலைதூர கல்வியில் ஆன்லைன் கல்வியிலும் படிக்கலாமா, முழு நேர வகுப்பில் சேர்ந்து படிக்க அனுமதிப்பதா அல்லது பகுதி நேர வகுப்பில் சேர்ந்து படிக்க அனுமதிப்பதா என்ற கேள்விகள் குறித்து பட்வர்தன் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தனது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.

ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்  படிக்க அனுமதிக்கலாம். இரண்டு வகுப்புகளிலும் அவர் தேர்ச்சி பெற்றால் அவருக்கு இரண்டு பட்டங்கள் பெற உரிமை தரப்படலாம் என்ன குழு நிபுணர்குழு பரிந்துரைத்தது.

ஒரு பட்டப் படிப்புக்கான வகுப்பு கல்லூரியில் முழு நேர வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றும் மற்றொரு பட்டப் படிப்புக்கான கல்வியை ஆன்லைன் முறையில் படிக்கலாம் என்றும் பட்வர்தன் குழு பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் தற்பொழுது ஏற்றுக் கொண்டுள்ளது என ராஜ்னீஷ் ஜெயின் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க அனுமதிப்பது என்றும் அவர்கள் இரண்டு பட்டங்களைப் பெற அனுமதிப்பது என்றும் பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் ராஜ் ஜெயின் குறிப்பிட்டார்.

கடந்த 2012ம் ஆண்டு இதே போல ஒரு மாணவர் இரண்டு பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கலாமா என்ற பரிசீலனையை பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் மேற்கொண்டது.

அப்பொழுது பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் இந்த பிரச்சனையை பரிசளிப்பதற்காக ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்பொழுது இருந்த பர்கான் குவாமர் தலைமையில் கல்வித்துறை பிரமுகர்கள் குழுவொன்றை நியமித்தது. அந்தக் குழுவும் ஒரே நேரத்தில் ஒரு மாணவர் 2 பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர்ந்து படிக்க அனுமதிக்கலாம் என்று பரிந்துரை வழங்கியது.

ஒரு பட்டப்படிப்புக்கான வகுப்பு முறையான கல்லூரியில் முழுநேர கல்வி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் மற்றொரு பட்டப்படிப்புக்கான கல்வி தொலைதூரக்கல்வியாக இருக்கலாம் அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமான கல்வியாக இருக்கலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளையும் அங்கீகரிக்கப்பட்ட 2 கல்லூரிகளில் முழுநேர வகுப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வாய்ப்பில்லை ஏனென்றால் அதனால் பல நிர்வாக குழப்பங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது என்று ஐதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழு பரிந்துரை வழங்கியது.

அதன் பிறகு சட்டபூர்வமாக இயங்குகின்ற கல்வி கவுன்சிலர்களின் கருத்தை அறிய அந்தப் பரிந்துரை அனுப்பப்பட்டது ஆனால் கல்வி கவுன்சில்கள் ஐதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை அதனால்  அந்த திட்டம் 2012ம் ஆண்டு கைவிடப்பட்டது.

ஆனால் இப்பொழுது சட்டப்படி இயங்கும் கல்வி கவுன்சிலுக்கு இந்தப் பரிந்துரையை அனுப்ப தேவையில்லை என்று பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனர் கருதுகிறது. பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் எடுக்கும் இறுதி முடிவு சட்டபூர்வமானதாக அமையும் என்று பல்கலைக்கழக நிதி உதவி கமிஷன் கருதுகிறது. அதனால் விரைவில் பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனின் அறிவிப்பு வெளியாகும் என்று பல்கலைக்கழக நிதி உதவி கமிஷனின் செயலாளர் ராஜ்னீஷ் ஜெயின் தெரிவித்தார்.Trending Now: