படித்ததில் பிடித்தது - 8 கலாமுக்கு வந்த காதல் கடிதம்

16-05-2020 12:56 PM

எந்தவித விமர்சனங்களுக்கும் இடமளிக்காமல், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் டாக்டர் அப்துல் கலாம். அக்னிச் சிறகுகளுடன் அன்னப்பறவை அவர். களங்கமில்லா வாழ்க்கை வாழ்ந்து விட்டுப் போனவர். இளைஞர்களின் ஆதர்ச நாயகராக இருந்தவர். அவர் எழுதிய சுயசரிதையான அக்னிச் சிறகுகள், மற்றும் பல்வேறு புத்தகங்கள் தமிழ்பத்தக விற்பனை மரபுகளை மீறி விற்றன. சந்திரனை பிறைச்சந்திரனாகவும் பூர்ண சந்திரனாகவும் பார்க்கிறோம். ஆனால் நமக்குத் தெரியாத இன்னொரு பக்கம் சந்திரனுக்கு உள்ளது. அதே போல நாம் அறிந்த கலாமில் நாம் காணாத கலாமின் பகுதி ஒன்று உள்ளது. 

அந்தப் பகுதியை கலாமுடன் 5 வருடம் கூடவே வாழ்ந்த செயலர் அறிவார். அப்படிக் கலாமின் மற்றவர் காணாத பகுதியைக காட்டும் நூல் தான் THE KALAM EFFECT. இந்த நூல் தமிழில் கலாம் காலங்கள் ஆனது. அதை கண்ணதாசன் பதிப்பகத்திற்கு நான் மொழிபெயர்த்தேன். மொழிபெயர்க்கும்போது மெய் சிலிர்த்தேன். அந்த புத்தகத்திற்கு கலாம் காலங்கள் என்று தலைப்பு கொடுத்தேன். இப்போது கலாம் காலங்களை கொஞ்சம் பார்ப்போம்.

கலாம் காலங்கள்!

2002 ஜூலை 25. இந்தியாவின் பன்னிரண்டாவது குடியரசுத்தலைவராக பதவி ஏற்றபின் டாக்டர் அப்துல் கலாம் ஆற்றிய உரை வெறும் சம்பிரதாயம் அல்ல. ஏக  இந்தியாவின் விஷன் 2020, அந்த லட்சிய இந்தியாவை இந்திய இளைஞர்கள் கனவாக மாற்றுவதில் கலாம் வெற்றி பெற்றார். அதுதான் அவரை இளைஞர்களின் கதாநாயகன் ஆக்கிற்று.

குடியரசுத்தலைவர் மாளிகையை மினி இந்தியா ஆக்கினார். காலை நடைப் பயிற்சியின்போது இந்தியாவின் மரம் செடி கொடி மிருகங்களுடன் ஒரு சந்திப்புக்குப் பின்தான் அவரது நாள் துவங்கும். கலாமுக்கு எல்லாமே முக்கியமானது. ஒரு துண்டு காகிதத்தைக் கூட கவனமாகப் படிக்க வேண்டும். ஏதாவது காகிதத்தை புறக்கணித்துவிட்டு அவரை முட்டாளாக்க முடியாது. அவருடைய நினைவாற்றல் அபாரமானது. புகைப்படம் எடுப்பது மாதிரி, அதில் பதிவு செய்ய ஏராளமான பிரிவுகள் இருக்கும்.

இந்த சம்பவம் அதற்கு ஒரு உதாரணம். குடியரசுத் தலைவர் 2 நாள் சுற்றுப்பயணம் போயிருந்தார். கடிதங்களும், மனுக்களும் குவிந்துவிட்டன. ஒரு நாளைக்கு சராசரியாக 70 லிருந்து 100 கடிதங்கள் வரும். எங்கள் காலை சந்திப்பின்போது அதை வைத்து விவாதிப்போம். அவர் இல்லாத போது வந்த கடிதங்களை இரவு 10 மணிக்கு அவர்  பார்த்துவிடுவார்.

தஞ்சாவூர் ஐஐடியிலிருந்து ஒரு மனு வந்திருந்தது. நான் அந்த மனுவில் உள்ள சாரத்தை விளக்கினேன். அதை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி பிரச்சனையை அவர் எப்படி தீர்க்கப் போகிறாரென்று கேட்போம் என்றேன்.கலாம் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார்'அதுபற்றி இன்னொரு கடிதம் வந்திருக்கிறது'

'இல்லை சார் ஒரே ஒரு கடிதம் தான்'என்றேன் நான். அவர்'இல்லை, இன்னொன்று உண்டு'. நான்'இல்லை ஒன்றுதான். அவர் மறுபடியும்'இல்லை, மிஸ்டர் நாயர் அதில் இன்னொரு கடிதமும் உண்டு'. கடந்த மூன்று நாட்களாக எல்லா கடிதங்களும் என்னிடம் தான் இருக்கின்றன. என்னுடைய நினைவாற்றலில் எனக்கு நம்பிக்கை இருந்ததால், இறுதியாக,'இல்லை சார். நீங்கள் சுற்றுப்பயணத்தில் இருந்தீர்கள்.நான் எல்லா கடிதங்களையும் பார்த்துவிட்டேன். நீங்கள் சொல்வது இந்த கடிதத்தின் நகல் ஆக இருக்கலாம். குடியரசுத் தலைவர் சொன்னார்'சரி, நாம் மற்ற விஷயங்களை பேசலாம்'.

அப்படியே செய்தோம். பிறகு நான் என் அறைக்குத் திரும்பினேன். அவர் இன்னொரு கடிதம் இருப்பதாகச் சொன்னது எனக்கு உறுத்தலாக இருந்தது. எல்லா கடிதங்களையும் மறுபடியும் பார்க்க முடிவு செய்தேன். அப்படிப் பார்க்கும்பொழுது உறைந்து போனேன். அதே தஞ்சாவூர் ஐஐடி மாணவர்களிடமிருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. நான் கூனிக் குறுகிப் போனேன். அவசரமாக அவர் அறைக்கு ஓடினேன்'சார், நான் சொன்னது தவறு. நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எப்படியோ நான் பார்க்கத் தவறி விட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இதுபோல் இனி நடக்காது. கலாம் சிரித்து விட்டுச் சொன்னார்'அது பரவாயில்லை, கவலைப்படாதீங்க. அந்த மனு மீதும் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்'என்றார்.

அவருடைய நினைவாற்றல்'அற்புதம்'. அவருடைய விமர்சனத்திற்காக அவருக்குப் பல புத்தகங்கள் வரும். அந்தப் புத்தகங்கள் பற்றி சில சமயம் விவாதிப்பார். திடீரென்று, 24 வது பக்கம் இரண்டாவது பத்தியை கவனித்தீர்களா? என்ன அருமையான சிந்தனை! அந்த நல்ல சிந்தனைக்கு வாழ்த்துக்களை கூற நான் அந்த புத்தகத்தை வாங்கி பக்கம் 24, பத்தி இரண்டை பார்ப்பேன். உண்மையிலேயே அது அருமையாக இருக்கும்.இப்படி பலமுறை நடந்திருக்கிறது.

கலாமின் ஜனாதிபதி மாளிகை வாழ்வில் சுவாரஸ்யங்கள் இல்லாமலில்லை. அவர் ஒரு பிரம்மச்சாரி! இந்திய மரபுப்படி வீட்டுக்கு வருவோரை கணவனும்

மனைவியும் உபசரிக்க வேண்டும்.  இந்த விஷயத்தை கலாம் எப்படிச்சமாளிக்கப் போகிறார். இந்த விஷயத்தை சுட்டிகாட்டி இந்தியாவின் முதல் பெண்மணியாக கலாம் அருகில் இருந்து விருந்தினரை வரவேற்க நான் தயார் என்று ஒரு கடிதம் வந்தது.

பாட்னாவில் இருந்து ஒரு பெண் எழுதிய கடிதம் அது (அவர் பெயரைச் சொல்ல மாட்டேன் என்று நாயரே கூறிவிட்டார்), அந்தக் கடிதத்தின்  சாரம் இதுதான்.

பொருள்: ஜனாதிபதி மாளிகையின் அதிகாரபூர்வமான பணிப்பெண்ணாக இருக்க நான் தயாராக இருக்கிறேன். (முதல் பெண்மணி)

மிகுந்த மதிப்பிற்குரிய ஐயா,

நான் குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வமான பணிப் பெண்ணாக இருக்க தயாராக இருக்கிறேன். 50 வயதில் நல்ல இனிமையான அழகோடு இருக்கிறேன்.

பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டதாரி நான்.

எனது விருப்பப் பாடம் ஹோம் சயின்ஸ். உபச்சாரத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.அதாவது மிகச் சிறந்த முறையில் விருந்தினர்களை வரவேற்று அவர்களிடம் அன்போடு நடந்து கொள்வது.

தங்களின் மேலான பார்வைக்கு என் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறேன். என் கணவர் பேராசிரியர்......... அவரின் அனுமதியையும் பெற்று விட்டேன். அவரொரு தயாள குணம் கொண்ட சமூக மனிதர். தேவையானவர்களுக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

அதனால் தயவு செய்து உங்கள் எல்லோருக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

'தயாள குணம் கொண்ட ஒரு சமூக மனிதர்'என்று அவர் கணவரைக் குறிப்பிட்டதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவேயில்லை

கலாமுக்கு முதல் பெண்மணி தேவையேயில்லை.

அவருடைய பாணியில் அவருடைய விருந்தோம்பலை யாரும் மிஞ்ச முடியாது. பல விருந்துகளும், சமூக சந்திப்புகளும் முதல் பெண்மணி இல்லை என்பது தெரியாமலேயே கழிந்தது.

கலாம் தான் முக்கியம்.

2003, ஆகஸ்ட் 14. நாங்கள் மழைக்காலத்தில் நடுவே இருந்தோம். ஆனாலும் சூரிய வெட்பம் இருந்தது. தெளிவான வானத்தைப் பார்த்து எனக்கு சந்தோஷம். அடுத்த நாள் குடியரசுத்தலைவர் உயர் பதவியிலி ருப்பவர்களுக்கு,எல்லா தரப்பு மக்களுக்கும் ஒரு விருந்து கொடுக்க போகிறார். ஜனாதிபதி சாதாரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையின் மையத் தோட்டத்தில் இருப்பார். அந்தப் புது வருடத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பதுதான் சுதந்திர தினத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதற்கான அறிகுறி.சுதந்திர தினத்திற்கு 3000 அல்லது 4000 பேர் வருவார்கள் என்று அர்த்தம். அந்த மைய தோட்டம் அத்தனை பேரையும் சுலபமாக உள்ளடக்கிக் கொள்ளும். நான் தூங்கப் போனேன்.

அடுத்த நாள் காலை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. கருமேகங்கள், இன்னும் அதிக மழை வரும் என்பதற்கு அச்சாரம் சொன்னது. வெளியே பார்த்தபோது நான் கலங்கிப் போனேன்.

மழை பெய்தால் மாலை விருந்து எப்படி நடக்கும்? எப்படி சமாளிக்கப் போகிறோம்? எனக்குள் குழப்பம்.

மதியம் 12 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்தேன். அவர் மாடி படுக்கை அறையில் இருந்தார். நான் உள்ளே நுழைந்ததும்'ஓ, மிஸ்டர் நாயர் அங்கே பாருங்கள் என்ன அருமையான நாள்! எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது பாருங்கள்' நான் குளிர்ச்சியை உணரவேயில்லை.'சார், இன்றைக்கு நீங்கள் சில ஆயிரம் பேருக்கு விருந்து கொடுக்கிறீர்கள். இந்த வானிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்?'

'ஓ, கவலைப்படாதீங்க, நாம உள்ள வெச்சுக்கலாம்'அவர் சொன்னார்.

'இல்லை சார்'நான் சொன்னேன்'உள்ளே நாம் 100 அல்லது 200 பேருக்கு தான் விருந்து கொடுக்க முடியும். நாம் எதிர்பார்க்கிற 2 அல்லது 3 ஆயிரம் பேருக்கு அங்கு இடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒரு இரண்டாயிரம் குடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்... ஆனால் அது போதாது.'

ஜனாதிபதி என்னை பார்த்தார். பிறகு கூரையை பார்த்தார். பிறகு பின் வாங்கியபடி சொன்னார்,'சரி, அப்படின்னா நான் என்ன செய்யமுடியும்! மழை பெய்ஞ்சா, நாம் நனைந்து போவோம் அவ்வளவுதானே'

அவர் சொன்னார்,'மிஸ்டர் நாயர், கவலைப்படாதீங்க'அவர் ஒரு கையால் வானத்தை காட்டியபடியே தொடர்ந்தார்'நான் அங்கே பேசிட்டேன். கவலைப்படாதீங்க'.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் அதிசயம். மதியம் 2 மணி சுமாருக்கு மழை நின்றது. சூரியன் வெளியே வந்து பிரகாசமாக ஜொலித்தது. மையத் தோட்டத்தில் விருந்து நடந்தது. விருந்து முடிந்து எல்லோரும் வி டை பெற்றனர். அதன் பிறகு மழை கொட்டியது.

ஒருவர் தன்னுடைய கடிதத்தில்'உலகத் தலைவர்'என்று தன்னை அச்சடித்துக் கொண்டார். தன்னை 'பூமியின் ஜனாதிபதி'என்று அழைத்துக்கொண்டார். அவர் கலாம் எழுதிய கடிதத்தில் அமெரிக்காவை ரஷ்யாவிடமிருந்து வாடிகன், மெக்கா வழியாக எப்படி காப்பாற்ற வேண்டும் என்று எழுதியிருந்தார். அதில்'கடவுளின் தூதுவன்'இன்று கையெழுத்திட்டிருந்தார். ஒருகாலை சந்திப்பின்போது இந்த கடிதம் கூட விவாதத்திற்கு வந்தது.

அவர் பதவி ஏற்ற முதல் வாரத்தில் ஆக்ராவிலிருந்து ஒரு பெண்குழந்தை ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள்'அங்கிள், எங்கள் பகுதியில் ஒரே ஒரு பூங்கா தான் உள்ளது. அந்தப் பூங்காவில் ஒரே ஒரு சீ-சா தான் உள்ளது. அதுவும் கடந்த 10 நாட்களாக பழுதாகிக் கிடக்கிறது. யாருமே அதைப் பற்றி கவலைப்படவில்லை'

சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணிடமிருந்து மீண்டும் ஒரு மின்னஞ்சல்'அங்கிள் நன்றி. அந்த சீ-சா இப்போது வேலை செய்கிறது. அங்கிள் நீங்க ரொம்ப நல்லவர். நான் எப்போ உங்களைப் பார்க்கலாம்.

எங்களுக்கு வரும் அத்தனை கடிதங்களுக்கும், மின்னஞ்சலுக்கும் பதில் அளிக்க வேண்டுமென்பதில் தீவிர அக்கறை கொண்டிருந்தார். அவரின் 'மக்களின் ஜனாதிபதி'.

ஜனாதிபதி பதவிக்கு ஒரு சிறு களங்கம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு பயமுண்டு. எங்காவது ஒரு சிறு விமர்சனம் குடியரசு மாளிகையை பற்றி வந்தால்கூட அவரால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியாது.

ஒரு சம்பவம் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீது விடிந்தது. இந்தப் பாதுகாவலர்கள் குதிரைப் படையை 'குடியரசுத் தலைவர் மாளிகையில் கற்பழிப்பு'அலறியது பத்திரிகைகள். அதுவரையில் அவர் முகத்தில் அப்படி ஒரு கோபத்தை நான் பார்த்ததே இல்லை.

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஒருவர் ஓய்வு நேரத்தில் புத்த ஜெயந்தி பூங்காவில் திரிந்து கொண்டிருந்தபோது ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார். அவர் ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிபவர் என்பது தெரிந்ததும் பத்திரிகைகள் அதையே தலைப்புச் செய்தி ஆகிவிட்டார்கள்.

இந்த விவகாரத்தை கையாளுவதற்கு நான் படாதபாடு பட்டேன்.

சென்னையிலிருந்து ஒரு பத்திரிக்கையாளர் எனக்கு போன். நான் அந்தக் கற்பழிப்பை பற்றிக் கேட்கிறேன். இது நடக்காமல் நீங்கள் பார்த்தது கொண்டிருக்க முடியாதா?'அவர் கேட்டார். அவர் பக்கத்தில் இருந்திருந்தால், அவரை நிச்சயம் அடித்திருப்பேன்.என் கோபத்தை எப்படி கட்டுப்படுத்திக் கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் கோபத்தை அடக்கிக் கொண்டு'ஆமாம் நான் தடுத்திருக்கலாம். அவர் கற்பழிப்பதற்கு  முன்னால் என்னிடம் அனுமதி கேட்டிருந்தால், நான் தடுத்தி ருப்பேன். அல்லது நான் ஒரு பெண்ணை புத்த ஜெயந்தி பூங்காவில் இன்று மதியம் கற்பழிக்க வேண்டும் அதற்காக எனக்கு அரை நாள் லீவு கொடுங்கள் என்று கேட்டிருந்தால் அதை நான் நிராகரித்திருப்பேன். துரதிருஷ்டவசமாக அவர் என்னிடம் அனுமதி நான் வாக்கியத்தை முடிக்கு முன், அவர் போனை கீழே வைத்துவிட்டார்.

கலாம் என்கிற மனிதருக்குள் இன்னொரு ஆழமான பகுதி உண்டு. இதை அவரைப்போல மற்ற விஞ்ஞானிகள் கூட வெளிப்படுத்துவது உண்டு. அவர் ருத்ரவீணை பிரமாதமாக வாசிப்பார். அதை எப்போதுமே அவர் வாசிப்பார்.

அதுமட்டுமல்ல பிரபல பாடகர்கள்,வாத்தியக் கலைஞர்களை அடிக்கடி குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அதனால் தான் அவரை மேடைக்கழைத்து குச்சியைக கையில் கொடுத்த போது கொஞ்சங் கூடத் தய்ங்காமல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கினார்.

விண்வெளிக்கலம், ஏவுகணைகள் இளைஞர்நலம் மீதுஅவருக்கு இருக்கிற அதே அபரிமிதமான ஈர்ப்பு அவருக்கு கலை, கலாச்சாரம் மீது உண்டு.

சோனியா-கலாம் மோதலா?

2004 பொதுத் தேர்தல் ஒரு கலவையான முடிவைத் தந்தது. புதிய அரசு அமைப்பதில் ஜனாதிபதி கலாமுக்கு முக்கியமான பங்கு இருந்தது. யூகங்களையெல்லாம் உண்மை என்று சொல்பவர்கள் பலர் அவர்மீது குறி வைத்தார்கள். உண்மைக்கு தொடர்பில்லாத பல புனைகதைகள்.

தேர்தல் முடிவுகள் வந்தது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேசம் காத்திருந்தது.

ஜனாதிபதியும் நான்கு நாட்கள் காத்திருந்தார். பிறகு நிலைமைகளை ஆராய்ந்து, ஆட்சி அமைக்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கான நேரமும் குறிக்கப்பட்டது. அவரை பிரதமராக்கும் கடிதமும் தயாராகவே இருந்தது.

மே 18, 2004 பகல் 12.15 சோனியா ஜனாதிபதியின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் வந்தார். ஜனாதிபதி மணி அடித்தால் நான் கடிதத்தைக் கொண்டு போய் நீட்ட வேண்டியது தான் பாக்கி. சோனியா பிரதமராகியிருப்பார். ஆனால் அவர் ஆட்சி அமைக்க கோரிக்கை வைக்க வரவில்லை. அரசியல் நிலைமைகளை விளக்க வந்திருந்தார். மேலும் தான் பிரதமராகப் போவதில்லை என்பதை சோனியா தெரிவித்து விட்டார்.

மீண்டும் மாலை சந்திப்பு நடந்தது. சோனியா காந்தி தேவையான ஆவணங்களையும்,கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் பெற்றுக் கொண்டு வந்தார். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.

இதுதான் நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு கிளம்பிய வதந்திகள்! ஒரு இத்தாலியப் பெண் பிரதமராவதை ஜனாதிபதி கலாம் தடுத்துவிட்டார் என்றெல்லாம் எழுதினார்கள். இன்று வரையில் அந்த வதந்திகள் நிலைத்து நிற்கின்றன.

அப்துல்கலாமை போல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்த இன்னொரு ஜனாதிபதி இல்லை. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பயணம் செய்த ஒரே ஜனாதிபதி அவர்தான்.

ஒரு முறை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிக்க வேண்டும் என கலாம் என்னை அழைத்தார்,'வழக்கமாக இதுபோன்று விருந்துகள் கொடுக்கும்போது ஜனாதிபதி மாளிகைக்கு எவ்வளவு செலவாகும்?'என்று கேட்டார்.

'3 லட்ச ரூபாய் ஆகும்'என்றேன்.

இங்கே விருந்து கொடுப்பதற்கு பதிலாக, மிக ஏழையாக இருக்கும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளுக்கு சென்று  நாம்  உணவளித்தால் என்ன?' என்று கேட்டார். அந்த வருடம் ஜனாதிபதி மாளிகையின் மூன்று லட்ச ரூபாய், கலாமின் சொந்த பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் மொத்தம் நான்கு லட்ச ரூபாயில் ஏழைகளுக்கு ஒரு மூன்று நாள் பல பகுதிகளில் விருந் தளிக்கப்பட்டது.

ஒரு முறை அவரது குடும்பத்தினர் டெல்லிக்கு வந்திருந்தார்கள். மொத்தம் 52 பேர். அவர்கள் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்கி இருந்ததற்கான வாடகை, ஒரு கோப்பைத் தேநீருக்குக் கூட பணம், அவர்கள் பயணம் செய்ய வெளியிலிருந்து கார் எல்லாமே கலாமின் சொந்த செலவில் நடந்தது.

'என் குடும்பத்தினர் என்னை பார்க்க வந்திருக்கிறார்கள். இதற்கான செலவை குடியரசு மாளிகை ஏற்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

300 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது குடியரசு தலைவர் மாளிகையின் வளாகம்.. அதன் ஒவ்வொரு பகுதியும் புதுப்பிக்கப்பட்டது. நூலகங்கள் பல புதிய நூல்களோடு புதுப் பொலிவு பெற்றது. ஜனாதிபதி மாளிகை ஊழியர்களின் வீடுகள் இடித்து புதிதாக கட்டப்பட்டது. அவரைப்போல ஒவ்வொரு விஷயத்திலும் முழு அக்கறை கொண்ட ஒரு ஜனாதிபதியைப் பார்ப்பது கடினம்.Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :