படித்ததில் படித்தது – 5 தி மேன்” --_ இர்விங் வாலஸ்

08-05-2020 12:06 PM

எத்தனை முறை படித்தாலும் சில  புத்தகங்கள் அலுப்பதில்லை.  ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அந்த புத்தகங்கள் நமக்கு புதிய பார்வையையும் கொடுக்கும்.  அப்படிப்பட்ட புத்தகம் இது.

அப்படி ஒரு எழுத்தாளர் இர்விங் வாலஸ் (IRVING WALLACE)  அமெரிக்க எழுத்தாளரான இவர் 17 நாவல்களும், கதையில்லாத பல உண்மை சம்பவங்கள் கொண்ட தொகுப்புக்களையும் எழுதியவர்.

எங்கள் கல்லூரி நாட்களில் இவர் எங்களுக்கு ஒரு ஆதர்ச கதாசிரியர். அவரது அத்தனை நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அதில் மிகச்சிறந்தது என்று பல வாசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாவல் தி மேன் (THE MAN). அமெரிக்காவில் கறுப்பர்கள் அதாவது நீக்ரோக்களுக்கும், வெள்ளை அமெரிக்கர்களுக்கும் ஜென்ம பகை. பொது இடங்களில் கறுப்பர்களை பார்த்தாலே வெள்ளையர்கள் அவர்களைத் தாக்குவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் ஒரு கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதியாவதைப் பற்றி கற்பனை செய்ய முடியுமா?

செய்தார். இர்விங் வேலஸ். அந்தக் கதைதான் தி மேன். மிக அற்புதமான நாவல்.      

 

                          தி மேன் – THE MAN

                         இர்விங் வேலஸ் -  irving Wallace

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன். வெள்ளை மாளிகையில் ஒர் அவசரக் கூட்டம்- குடியரசு தலைவர் ஆணைப்படி கூட்டப்பட்ட முக்கியமான கூட்டம்[A1] [A2] [A3] .

அந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் இல்லை. அவர் மேற்கு ஜெர்மனியில் பிராங்க்பர்ட் நகரில் இருக்கிறார். சோவியத் ரஷ்யாவ்ன் அதிபருடன் உச்சி மாநாட்டில் (SUMMIT CONFERENCE).  கலந்துகொள்ளப் போயிருந்தார்.

அப்போது சரியாக தொலைபேசி மணி ஒலிக்கிறது. குடியரசுத் தலைவர் பேசுகிறார். மாநாட்டில் நடந்த விஷயங்களை சுருக்கமாக விளக்க ஆரம்பித்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே பட்டென்று குரல் நிற்கிறது. எந்த சப்தமும் இல்லை. வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு  அமைப்பில்தான் எங்கோ கோளாறு ஏற்பட்டதோ என்று அத்திரத்துடன் அதிகாரிகளைத் தொலைபேசியில் விரட்டுகிறார்.

 பின்னர் கோளாறும் ஜெர்மனி போனில் தான் என்பது தெரிந்தது.  ஒரு மணிநேரம் கழிந்தது. குடியரசுத் தலைவர் தனிச்செயலாளர் எட்னா பாஸ்டரின் அறை. தொலைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் ` நான் மேற்கு ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தூதர் பேசுகிறேன். பயங்கரமானதோர் நெருக்கடி. முக்கிய நெருக்கடி.. முக்கியமானவரை வரச்சொல்லுங்கள்.’ என்றார்.

 அவர் வந்தார் மறுமுனையில் வந்த தகவல் இதுதான். அமெரிக்க குடியரசுத் தலைவர் தங்கி இருந்த கட்டடம் மிகப் பழைய அரண்மனையாம்.  அதன் ஒரு பகுதி மேலிருந்து அப்படியே இடிந்து விழுந்து நொறுங்கியதால் அமெரிக்க அதிபர் கொல்லப்பட்டார்.

 வெள்ளை மாளிகையில் மயான அமைதி குடியரசு தலைவர் பதவி சில நிமிடங்கள் கூடக் காலியாக இருக்க முடியாது. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டபோது  விமானத்திலேயே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்து உடனே செய்ய வேண்டியது என்ன ? அமெரிக்க ராஜாங்க செயலாளர் (secretary of state)  ஆர்தர் ஈட்டன். அவர் ஆளுநனர் வெயிண்டேலியை அழைக்கிறார்.

` அடுத்த குடியரசுத் தலைவர் யார் ? அமெரிக்க சட்டம் என்ன சொல்கிறது ? அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் ( இந்தியாவின் மக்களவையைப் போன்றது) சபாநாயகர்தான் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கலாம். அவர் மேக்பியர்சன். அவரும் பிராங்க்பர்ட்டில் இருந்தார். உடனே ஜெர்மனிக்கு ஒரு போன் செல்கிறது. ஆனால் அவரும், படுகாயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார். அவர் வந்ததும் பதவியேற்பு நடத்தலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில், அவரும் இறந்த செய்தி வருகிறது. அப்படியானால் அடுத்து நடக்கப் போவது என்ன ? அடுத்த குடியரசுத் தலைவர் யார் ? அமெரிக்க நாட்டுச் சட்டம் இந்த சூழலுக்கு சொல்வது என்ன ? குடியரசுத் தலைவர் இறந்தால் அடுத்து துணை குடியரசுத் தலைவர் வருவார். அவர் இல்லாவிட்டால் சபாநாயகர். அந்தப் பதவியும் காலியாக இருந்தால் அடுத்து செனட் சபையில் தாற்காலிக பொறுப்புத் தலைவர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க வேண்டும். இந்த நிலையை யோசித்தபோது பலரின் முகத்தில் இருள்! மனதில் ஒரு பதட்டம். காரணம் என்ன ? கற்போது செனட பொறுப்புத் தலைவர் ஒரு நீக்ரோ! கறுப்பர்! அவரது பெயர் டக்ளஸ் டில்மன்.

 நடப்பவைகளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார் டக்ளஸ் டில்மன். அவர் தான் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர். சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அவருக்கு பதவியேற்பு நடக்க வேண்டும். அவர் குடும்பத்தினரை வரச் சொல்கிறார்கள். அவர் மனைவி இறந்துவிட்டார். மகள் வெள்ளை நிறத்தில் பிறந்ததால் வீட்டைவிட்டு கண்காணாமல் போய்விட்டார். ஒரே மகன் ஜூலியன். டிராபோர்ட் பல்கலைக்கழக மாணவன்.

பதவிப் பிரமாணம் நடக்கிறது. அமெரிக்காவின் முதலாவது நீக்ரோ குடியரசுத் தலைவர் ஆனால் டக்ளஸ் டில்மன்.

 வெள்ளையர்களால் தாங்க முடியவில்லை. கறுப்பர்கள் நம்ப முடியாமல் திகைத்தனர். கூடவே இனக்கலவரம் வெடிக்குமோ என்கிற பயமும் இருந்தது.

பதவிப் பிரமாணம் நடந்த நேரம் இரவு 10 மணி. இரவு தான் வசிக்கும் கறுப்பர்கள் பகுதிக்குச் செல்கிறார். அடுத்த நாள் வெள்ளைமாளிகையில் குடியேறுகிறார். முந்தைய குடியரசுத் தலைவரின் வெள்ளை நிற உதவியாளரான அந்தப் பெண்மணி, ராஜினாமா செய்ய முடிவு செய்கிறார். ராஜினாமா கடிதத்தை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் அறைக்குள் நுழைகிறார். கதவை சாத்த முயல்கிறார். ` மிஸ் பாஸ்டர் , கதவை மூடாதீர்கள்,  ஐசன் ஹோவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது அரசில் முக்கிய பதவியில் இருந்த நீக்ரோ ஒருவரின் அறைக்கு செல்லும்போதெல்லாம் அவரது உதவியாளரான வெள்ளை இனப் பெண்மணி கதவைத் திறந்தே வைத்து இருப்பாராம். கறுப்பன் ஆயிற்றே அத்துமீறி விடுவானோ என்ற அச்சமாம. அது என் நினைவில் இருக்கிறது. எனவே ` கதவுகள் திறந்தே இருக்கட்டும்’ என்கிறார் டிக்ஸன். இதைக் கேட்டவுடன் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அந்தப் பெண்மணி எட்னா பாஸ்டர். குடியரசுத் தலைவரின்  அறைக்கதவும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறி கதவுகளை மூடுகிறார். ராஜினாமா கடிதத்தைத் தன் கைப்பைக்குள் திணிக்கிறார். அவரையே தன் தனிச்செயலாளராக்கும் தன் முதல் உத்தரவில் கையெழுத்திடுகிறார் டக்ளஸ் டில்மன்..

 ஆனால் மற்றவர்கள் சும்மா இருக்கவில்லை. ஒரு கறுப்பர் இந்த நாட்டின் குடியரசுத் தலைவரா ? மனம் கொதித்தார்கள். சதி வேலைகள் ஆரம்பமானது. கூடியது ஒரு நிறவெறிக்கூட்டம். அவர்களுடன் சேர்ந்து கொண்டார் ஒரு  பத்திரிகை அதிபர். கூடவே சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

சதித்திட்டம் உருவாகிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ` அநீதியை அகற்ற ஆயுதம் ஏந்துவதே சரியாகும்’ என்று ஒரு நீக்ரோ தீவரவாதக் குழ இயங்குகிறது.` ஆயுதப் போராட்டமும், கலகமும்தான் நாம் இனி நாடவேண்டிய வழிகள் என்று `டர்ன்ரைட்’ என்கிற அந்தக் குழு தீர்மானிக்கிறது.  மிஸ்ஸிஸிப்பி நகரில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிகிறது. நீதிமன்றக் குற்றக் கூண்டில் இப்போது கலகக்காரர்கள்! `போட்டது பொய் வழக்கு. அதனால் இதில் குடியரசுத் தலைவர் தலையிடவேண்டும்’ என்கிறார்கள் டர்ன்ரைட் அமைப்பினர். உள்ளுக்குள் நம் கறுப்பு இன குடியரசுத் தலைவர், நமக்கு ஆதரவாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது.

கலகக்காரகளுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறார் நீதிபதி எவரெட் கேஜ்! அந்த அமைப்பையே தடை செய்யவேண்டும் என்று வாதிடுகிறார் அட்டர்னி ஜெனரல் கெம்ளர்.  குடியரசுத் தலைவரிடம் விவகாரம் வந்தது. ` அவசரப்படமாட்டேன். தக்க ஆதாரம் வேண்டும் என்றார் டக்ளஸ் டிக்மன்.

 நீதிபதி எவரெட் கேஜ் கடத்தப்படுகிறார். கடத்தலின் நடந்த கைகலப்பில் நீதிபதி கொலை செய்யப்படுகிறார். கொன்றவர் டர்ன்ரைட் அமைப்பின் தலைவர் ஜெபர்சன் ஹார்வி! தன் மகன் ஜூலியன் படிக்கும் டிராபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்த செல்கிறார் டக்ளஸ் டில்மன்.  நீதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அதே மேடையில் டர்ன்ரைட் அமைப்பைத் தடை செய்யும் உத்தரவை வாசிக்கிறார். அந்த கூட்டத்தில் இருந்த கறுப்பர்கள் ` கருங்காலி! இனத்துரோகி! வெள்ளையனின் கைக்கூலி ‘ என்று கூச்சலிடுகின்றனர். டில்மனின் முகத்தில் முட்டைகள் வீசப்படுகின்றன. அவமானத்துடன் திரும்புகிறார் டில்மன்.

 டில்மனின் ராஜாங்கச் செயலாளர் ஆர்தர் ஈட்டன். கவர்ச்சிகரமான நடுத்தர வயதுக்காரர். மனைவியை பிரிந்து தனியாகக் இருக்கிறார். தெற்கு மாநிலம் ஒன்றின் புகழ்பெற்ற செனட்டர் ஹாய்ட் வாட்சன் என்பவரின் மகள் சாலி வாட்சன் என்கிற  அழகி அவருடைய அந்தரங்கக் காதலி. அவளுக்குள் திட்டம்! டில்மனை அப்புறப்படுத்திவிட்டால் தன் காதலர் தானே அடுத்த குடியரசுத் தலைவர் என்கிற கனவு அவளுக்கு! வெள்ளை மாளிகையில் காலியாக இருந்த ` சமூகச் செயலாளர்’ (social secretary) பதவிக்கு விண்ணப்பிக்கிறார். ஆர்தர் ஈட்டன் பரிந்துரை செய்ததால் அவளுக்கு அந்த வேலை கிடைக்கிறது. பின்னால் இருக்கும் சதி தெரியாமல் இந்தப் பெண்மணியை நியமிக்கிறார் டில்மன்.

மனைவியை விட்டுப் பிரிந்த டில்மன் ஒரு அழகான பெண்ணை நேசிக்கிறார். அந்தப் பெண்ணும் விரும்புகிறார். ஆனாலும் உறவு எல்லை தாண்டவில்லை. தன் பதவியேற்புக்கு அந்தப் பெண்ணை அழைக்கிறார் டில்மன். வதந்திகளுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று அழைப்பை நிராகரிக்கிறார் அந்தப் பெண்மணி வாண்டா கிப்சன்.இவர் ஒரு வணிக நிறுவனத்தில் பணிபுகிறார்.

ஆளும் கட்சியினர் `` கறுப்பின மக்களுக்குப் புதுவாழ்வு தரும் திட்டத்தைத் தயாரித்துவிட்டோம். விபத்தில் இறந்து போன தலைவரின் கனவுத் திட்டம் அது. அதுதான் சிறுபான்மையினர் மறுவாழ்வுத் திட்ட மசோதா ( minorities rehabilitation programme bill)  எனக் கொட்டி முழங்குகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறுகிறது. பல்லாயிரம் கோடி டாலர்கள் செலவும் ஆகும் திட்டம்.

இதில் கொழுத்த லாபம் காணத்துடிக்கும் ராட்சச நிறுவனங்கள் நாக்கைத் தொங்குவிட்டுக் காத்து இருக்கின்றன. மசோதா சட்டமானால் பெருத்த ஒப்பந்தங்களை கையகப்படுத்தலாமே !

 இந்த மசோதா குடியரசுத் தலைவர் டில்மனின் ஒப்புதலுக்காக செல்கிறது. ஒப்புதல் கிடைத்தால் அதை பெரிய விழாவாக நடத்தத் திட்டமிடுகிறார் ராஜாங்கச் செயலாளர் ஆர்தர் ஈட்டன். செய்தியாளர்கள்,  தொலைக்காட்சியினர் மூலம் நாட்டு மக்களுக்கு டில்மன் படித்திட சொல்லிட உரை ஒன்று தயாரித்து அனுப்புகிறார். மதியம் இரண்டு மணிக்கு இந்த சந்திப்பு. அன்று காலை முதல் டில்மன் யாரையும் சந்திக்கவில்லை. ஆளுனர் வெயிண்டேலி உட்பட! என்ன தான் செய்கிறார்? கேள்வி. ஏதோ உரை தயாரிக்கிறார். எழுதுகிறார். பதில் உரை தயாரிக்கிறாரா? நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை அப்படி நடந்ததில்லையே! சம்பந்தப்பட்ட இலாகாவினர் தயாரிப்பதுதானே உரை!  நான் அவரை சந்தித்தே ஆகவேண்டும். போய்க் கேட்கவும் ‘ என்கிறார் ஈட்டன்.

அறைக்குள் சென்று விட்டுத் திரும்பி வருகிறார் தனிச் செயலாளர் எட்னா பாஸ்டர், ` நீங்கள்  கொடுத்த உரையை திருப்பிக் கொடுத்துவிட்டார் ஜனாதிபதி. அவரது உரையை அவரே தயாரிக்கிறாராம்’ என்றார். தலைசுற்றுகிறது ஈட்டனுக்கு ! நீட்டிய இடத்தில் கையெழுத்திடுவார் என்று அல்லவா நினைத்தோம். வில்லங்கப் பேர்வழிதானோ இந்த டில்மன் ‘ குழம்பித் தவிக்கிறார் ஈட்டன்.

அடுத்த நாள் மக்கள் தொலைக்காட்சி, வானொலி முன்பு ஆவலாக உட்கார்ந்திருக்கிறார்கள். ` சிறுபான்மையினர் மறுவாழ்வுத் திட்டம் மசோதா பல்லாயிரம் கோடி டாலரை வாரி இறைக்கலாம். நீக்ரோ மக்கள் ஏங்கிக் கிடப்பது எலும்புத் துண்டுகளுக்காகவோ, ரொட்டித் துண்டுகளுக்காகவோ அல்ல! சமவாழ்வு பெற்றிட! கல்விக் கூடங்களில் வாய்ப்புப் பெற்றிட ! சமூக வாழ்வில் சம அந்தஸ்து பெற்றிட! அதற்கு எந்தவித உத்திரவாதமும் இந்த மசோதாவில் இல்லை. அவர்களை நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் செயலாகவே முடியும். இன்னும் பல ஆண்டுகளுக்குத் தங்களின் நரகத்தில் இருந்து அவர்கள் மீளமுடியாமலே போகும். எனவே இந்த மசோதாவை இரத்து செய்கிறேன். எனது விட்டோ (veto)  அதிகாரத்தை பயன்படுத்தித் தள்ளுபடி செய்கிறேன்.

டில்மன் சொல்லி முடிப்பதற்குள், தங்கள் கண் முன்னாலே இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை உதைத்தோர் பலர், ` வேசி மகன்! கறுப்புப் பன்றி! பிச்சைக்கார நாய்! இழிவான மிருகம்!’ இப்படியெல்லாம் கூச்சல். வெள்ளைக்கார் எம்.பிக்கள். கோபத்தின் உச்சத்தில் ராஜாங்கச் செயலாளர் ஆர்தர் ஈட்டன். இனி வேலையை காட்ட வேண்டியதுதான் முடிவெடுக்கிறார்.

முக்கியமான கோப்புக்கள் குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பாமல் மறைக்கப்படுகிறது.  சிஐஏ தலைவர் அனுப்பிய முக்கிய செய்தி உட்பட!

 அவரது சினேகிதி வாண்டா கிப்சன் அனுப்பிய முக்கிய ரகசிய குறிப்பு உட்பட! இனி முக்கிய கோப்புகள் நேரடியாக தனக்கு வரவேண்டும்’ என்கிறார் டில்மன்.

அடுத்தடுத்து சதி வேலைகள். ஒரு விருந்து முடிந்து தன் அறைக்குத் திரும்பிய அவரது அறையில் சாலி வாட்சன்.மயங்கி விழுந்ததைப் போல் நடிக்கிறார். அவரை கடிந்து வெளியே அனுப்புகிறார் டில்மன். அந்தப் பெண் தன் உடைகளை கிழித்துக்கொண்டு ஈட்டனின் வீட்டுக்குப் போய் தன்னை டில்மன் மானபங்கம் செய்ய முயற்சித்ததாக பொய்யாக சொல்கிறார். இதற்குள் டில்மனை கொல்ல வெள்ளை மாளிகையிலேயே சதி! அதிலிருந்து தப்பிக்கிறார்.

பிறகு அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள். பிரபல நாளிதழின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி!` டக்ளஸ் டில்மன் ஒரு குடிகாரர்! காமுகர்; கள்ளக் காதலி மூலம் அரசாங்க ரகசியங்களை வெளியிடும் ராஜ துரோகம். சமூகச் செயலாளர் சாலி வாட்சனைக் கற்பழிக்க முயன்ற கொடூரம்; தனது மகன் ஜூலியன் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினர்;  அதனால் குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்ய ஆளும் கட்சியே நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்  தலைக்குற்றச்சாட்டு ( impeachment) ;  இவையெல்லாம்  பிரதிநிதிகள் சபை  வாக்கெடுப்பில் நிறைவெற்றப்பட்ட தலைக்குற்றச்சாட்டு செனட் சபைக்கு அனுப்பப்படுகிறது.. வாக்கெடுப்பு நடந்து  65 பேர் அவருக்கு எதிராகவும், 32பேர் அவருக்கு ஆதரவாகவும் வாக்களிக்க, அவரை நீக்க இன்னும் இரு வாக்குகள் தேவைப்படும் நிலையில் டில்மன் எப்படி வென்றார் என்பதுதான் இந்த நாவல்.

 இந்த நாவல் ஒரு கதை மட்டுமல்ல, அமெரிக்க அரசியல், அதன் நிர்வாகம்,அதில் நடக்கும் திரைமறைவும் சதிகள் எல்லாவற்றையும் துல்லியமாக வெளிப்படுத்தும் படு சுவாரஸ்யமான நாவல் !
Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :