அமெரிக்கா ✔ சீனா X இது சரியா?

06-05-2020 02:20 PM

இந்தியாவில் வீட்டுக் கடன் வழங்குவதில் முதன்மையாக திகழ்வது எச்டிஎப்சி வங்கி. கொரோனா பிரச்னை நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சமயத்தில் அந்த வங்கியின் ஒரு சதவித பங்கை சீனா வாங்கியதை அறிந்ததும் மத்திய அரசு இந்தியாவில் அவை எந்த முதலீடு செய்யவும் தடைவிதித்து விட்டது.. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்கை அமெரிக்காவை சேர்ந்த பேஸ்புக் நிறுவனம் 53 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.

ஒரு நாடு வேறொரு நாட்டில் தொழில் துவங்கவோ இல்லை அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது, அதனால் அந்த நாட்டில் வேலை வாய்ப்பு, உற்பத்தி, வளர்ச்சி காணும் இல்லையா. அப்படியிருக்க சீன முதலீட்டுக்கு தடையும். அமெரிக்க முதலீட்டுக்கு ஆதரவும் என்று இருவேறு நிலைகளை மத்திய அரசு எடுக்கவேண்டிய காரணத்தை அறிய பொருளாதார நிபுணர்களை சந்தித்தோம்.

பொருளாதார நிபுணர் முத்துகிருஷ்ணன்:

நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடு. நாம் உலகளவில் மிகப்பெரிய சந்தையை பெற்றிருக்கிறோம். நம் நாட்டில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடந்தாலும் அவற்றால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான முதலீடு கிடைப்பதாக கூற முடியாது. ஆகையால் வெளிநாட்டு முதலீடு என்பது நமக்கு மிகவும் அவசியம். நாம் வளரும் நாடாக இருந்தாலும், உலகளவில் பொருளாதார சக்திக்கொண்ட நாடுகளின் பட்டியலில் நாமும் அங்கம் வகிக்கிறோம்

ஆரம்பத்தில் அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய தயங்கின. கால மாற்றத்தால் அந்நிய முதலீடுகளின் அருமையை உணர்ந்த நாம் நம் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் பெரும் அளவு மாற்றம் செய்து அவற்றைன் ஈர்க்க வழி அமைத்தோம். அதன் பிறகே பல வெளி நாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய துணிந்தன. அவை நேரடி முதலீடாகவும் மட்டும் வருவதாக்க் கூற முடியாது. இல்லை. வெவ்வேறு வடிவங்களில் இப்பொழுது வருகிறது. தங்கள் கிளையை நம் நாட்டில் நிறுவி அதன் மூலமாக முதலீடு செய்யும் நிலையும் உள்ளது. நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஒன்று நேரடி முதலீடு (எப்.டி.ஐ) மற்றொன்று போர்ட்போலியோ (எப்.பி.ஐ) முதலீடு என்று இரு வகையில் கொண்டு வரப்படுகின்றன.

நேரடி முதலீட்டுக்கும் போர்ட்போலியோ முதலீட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், நம் நாட்டிலுள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை நேரடி முதலீடாகும். அதுவே நம் நாட்டிலுள்ள நிறுவனங்களின் பங்குகளையோ பத்திரங்களையோ வாங்குவது போர்ட்போலியோ முதலீடாகும். நம் நாட்டை பொறுத்தவரை இரு முதலீடுகளும் அவசியமே. ஆனால் இந்த வெளிநாட்டு முதலீட்டு கொள்கைகளில் மத்திய அரசு சமீபத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவை அமெரிக்காவுக்கு சாதமாக உள்ளது.

நம் நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதும் சில மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. அம்மருந்துகளில் ஒன்று அமெரிக்காவுக்கு உடனே தேவை பட்டது. அதனால் அமெரிக்கா மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்தது. அதனால் தன் கொள்கையிலிருந்து மாற்றம் செய்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. அதற்கு பணிந்துதான் அம்மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.

உலகமயமாக்கலை ஏற்றுக்கொண்ட பிறகுதான் நாம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கினோம். நம் நாட்டின் வளர்ச்சிக்கு உலக முதலீடுகள் அவசியம் என்று காத்துக்கொண்டிருக்கிறேம். அப்படியிருக்கையில் சீனாவின் முதலீடுகளுக்கு தடையும் அமெரிக்காவின் முதலீடுகளுக்கு ஆதரவு என்று மத்திய அரசு எடுத்திருப்பது வரவேற்க தக்கதில்லை.

சீனா இந்தியாவிலுள்ள பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளது. சீனா நம் அண்டை நாடு. நாம் அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆசியாவிலேயே பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடு சீனா. அமெரிக்காவிற்கு எதிராக எந்தவிதத்திலும் சீனா சளைத்தது இல்லை. இன்று வேண்டுமானால் சீனாவும், அமெரிக்காவும் பாம்பும், கீரியாகவும் இருக்கலாம். நாளை இருவருக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தங்களுக்குள் பகைமையை மறந்து இருநாடுகளுக்குள்ளும் ஓர் ஒப்பந்ததிற்கு வரலாம். அப்படியொரு நிலை ஏற்பட்டால் நம் நாட்டிற்குதான் பங்கம் விளையும். நாம் அமெரிக்காவுக்கு பல கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். ஆனால். அமெரிக்கா அதற்கு இறக்குமதி தடைவிதித்துள்ளது. 

கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அமெரிக்கா அதற்கான மருந்துகளை வழங்குமாறு நம்மிடம் கேட்டபோது நாமும் அதை அனுப்பி வைத்தோம். இப்படிபட்ட சூழலில் அமெரிக்காவிடம் நமக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையை விலக்குமாறு மத்திய அரசு அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கேட்கவில்லை. இன்றைய சூழலில் உலகிலுள்ள பல நாடுகள் நம் நாட்டில் முதலீடு செய்ய எண்ணிக்கொண்டிருக்கிறது. இதை சாதமாக பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது சீனாவுக்கு தடைவித்திருப்பது சரியல்ல. 

இந்த நாடுதான் முதலீடு செய்யவேண்டும். இந்த நாடு செய்யக்கூடாது என்று தீர்மானித்தால் அவை நம் வளர்ச்சியை பாதிக்கலாம். ஆகவே சீனா விஷயத்தில் மீண்டும் மத்திய அரசு மறு பரிசிலினை மேற்கொள்வது நல்லது என்றார் முத்துகிருஷ்ணன்.

பங்கு ஆலோசகர் சுபாஷ் :

நம் நாட்டிலுள்ள தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியின் ஒரு சதவீத பங்கினைத்தான் சீனா வாங்கி உள்ளது. அந்த வங்கியை பொறுத்த மட்டில் அதை துவக்கியது இந்தியர் மட்டும்தான் .ஆனால் அதன் 75 சதவீத பங்குகளில் வெளி நாட்டினர்தான் முதலீடு செய்துள்ளனர். இப்படி இருக்க சீனா இந்தியாவில் முதலீடு செய்துவிட்டது என்று விவாதிப்பது அவசியமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, நம் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய நம் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி முதலீடு செய்தால்தான் அந்த நிறுவனங்கள் நிதிச் சிக்கல் இல்லாமல் இயங்க முடியும். வளர்ச்சி காண முடியும். ஆனால், நம்மை பொறுத்தவரை, வங்கி வைப்பு நிதி, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில்தான் முனைப்புக் காட்டி வருகிறோம்.

நம் நாட்டு நிறுவனப் பங்குகளில் நாமே முதலீடு செய்ய தவறும் பட்சத்தில், அந்நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அந்த சூழலில், வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கவே செய்வர். அவர்களுக்கு, தொடர்ந்து இயங்க நிதி தேவை. அது எந்த வழியில் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வர்.

சீனா எச்டிஎப்சியின் ஒரு சதவீத பங்கை வாங்கியதை அறிந்ததும் மத்திய அரசு உடனே வெளிநாட்டு முதலீடுக்கொள்கையில் மாற்றம் செய்து அறிவித்தது. நம் நாட்டு எல்லைகளோடு பங்கிர்ந்துக்கொள்ளும் நாடுகள் இனி நாட்டில் நேரடியாக முதலீடு செய்யமுடியாது. அரசின் அனுமதி பெறவேண்டும் என தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகளில் மாற்றம் செய்து அறிவித்திருக்கும் விதி மூலம் நம் நாட்டில் ஆட்டோமேட்டிக் ரூட் வழியாக இனி அண்டை நாடுகள் முதலீடு செய்ய முடியாது.

பொதுவாக ஒரு நாடு மற்றொரு நாட்டில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆட்டோமேட்டிக் ரூட் மற்றொன்று கவர்மென்ட் ருட். இதில் ஆட்டோமேட்டிக் ரூட் முலம் முதலீடு செய்விருக்கும் நாடு முன்கூட்டியே அந்த நாட்டில் எந்தெந்தத் துறைகளில் முதலீடு செய்ய போகிறேன் என்பதை தெரிவித்திடும். பின்னர் தனக்கு ஏற்ற நேரம் கிடைக்கும்போது அத்துறைகளில் முதலீடு செய்யும். இதற்கு அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

கவர்மென்ட் ரூட்டானது. ஒரு நாட்டில் முதுலீடு செய்வதற்கு முன்பாக அந்த நாட்டின் அரசின் கவனத்திற்கு எடுத்துசென்று திட்டத்தை விளக்கி ஒப்புதல் பெறவேண்டும். அதன் பின்னர் அரசிடம் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை அரசு ஆராய்ந்து எல்லா விதிகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவற்றிற்கு அனுமதிக்கும்.

மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக கொண்டுவந்திருக்கும் புதிய விதிமுறைகளால் ஆட்டோமேட்டிக் ரூட் வழியாக நம் அண்டை நாடுகள் இனி நேரடியாக நம் நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது. நம் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க நிறுவனங்களின் பங்குகளில் மக்கள் முதலீடு செய்யவதற்கு ஏற்றாற்போல் மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். நம்மக்களை பொறுத்தவரையில் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதே இல்லை. இதனால் தான் நம் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் நம் நாடு தன் சுய சார்பு நாடாக மாறவேணடும்.. எதற்கு எடுத்தாலும் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. இந்த நிலை மாறவேண்டும் என்றார்.

அரசியல் விமர்சகர் முனைவர் சக்திவேல்: 

நமக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம்தான். அதனால், அவற்றை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கக்கூடாது. அதில் சில நமக்கு பங்கம் விளைவிப்பதாக அமையலாம். ஆகையால் இதில் மத்திய அரசு நன்கு யோசித்து ஒப்புதல் அளிக்கவேண்டும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மத்திய அரசு கண்கொத்திப் பாம்பாக இருந்து செயல்பட வேண்டும்.

ஒரு காலத்திலும் பாகிஸ்தான் நம்மோடு நட்பாக இருந்ததில்லை. நம்க்கு யார் பெரும் எதிரி என்றால் பாகிஸ்தான் தான். அப்படிபட்ட பாகிஸ்தானோடு சீனா மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இருக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் நமக்கு நிறைய குடைச்சல்களை கொடுத்து கொண்டிருப்பவை. சில வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டின் எல்லையில் அத்துமீறி சீனா ராணுவம் அணி வகுப்பு நடத்தியபோது நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை யாராலும் மறக்க முடியாது.

நம் நாட்டு எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளிடம் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனா வெளிநாட்டு நிறுவனங்களில் முதுலீடு செய்யும் காலப்போக்கில் அதை தனதாக்கிக்கொண்டு ஆதிக்க செலுத்த துவங்கும். இப்படிதான் பல நாடுகளில் நடந்துகொள்கிறது. அதற்கு நாம் வழி வகுத்துக் கொடுத்திடக்கூடாது. சீனா விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நமக்கு சீனா, பாகிஸ்தான் ஆகியவைகளால் ராணுவத் தாக்குதல், உயிரியல் போர், பொருளாதார தாக்குதல் என்று முன்று வழிகளில் அபாயம் வரலாம். ஆகையால் சீனாவின் முதலீடு விஷயத்தில் கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது சரிதான். அமெரிக்கா பொறுத்தவரையில் இத்தகைய அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை. அவை மிஞ்சிபோனால் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இப்போதைய சூழ்நிலையில் அவையெல்லாம் ஏற்படபோவதில்லை. அமெரிக்கா நம்மோடு நல்ல நட்புறவுடன் இருக்கிறது. ஆகையால் வணிக உறவை அதனுடன் அச்சமின்றி மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. எனவே, இந்த நேரத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவின் 10 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் வாங்கியிருப்பது வரவேற்கத்தக்கதே. இந்த முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனம் நல்ல முறையில் பயனடைய உள்ளது.

சீனாவின் விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக நடந்துகொண்டது சரிதான். அமெரிக்க முதலீட்டில் சாந்தமான போக்கை கடைபிடித்தது சாலச் சிறந்தது. கொரோனாவிற்கு பிறகு நிறைய அமெரிக்க நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்யன் காத்திருக்கிறது. இது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்து அதிக நிறுவனங்கள் நம் நாட்டை நோக்கி படையெடுக்கலாம் என்றார்.
Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :