தமிழக கொரோனா சாதுவா?

04-05-2020 09:18 AM

 கொரோனா பற்றிய புதிய புதிய தகவல்கள் பளிச்சிட்டுப் பறக்கின்றன. முதலில் கொரோனா கண், வாய், மூக்கு வழியாக பரவுவதாகச் சொன்னார்கள். இப்போது மனிதனின் மலவாய் வழியாக வெளியேறும் வாயு மூலமாகவும் கொரோனா பரவுகின்றது என்கின்றனர். வெப்பமானது 35 டிகிரிக்கு மேல் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போது காற்றிலுள்ள ஈரபதம் குறைந்தால் கொரோனா பரவும் வேகமும் குறைவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்போது நம் நாட்டில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு உண்டாகுவதற்கு காரணம் அமெரிக்காவில் பரவியுள்ள எல் வகை கொரோனா வைரஸ்தான்  இந்த மாநிலங்களில் வலம் வருகிறது. அதனால்தான் இவ்வளவு உயிரிழப்பு என்கின்றனர்.

தமிழகத்திற்கு வந்துள்ள அமெரிக்க வகை எல் வகை கொரோனா அல்ல. இங்கு இருப்பது சாது  கொரோனா. எஸ் வகை.  அதனால்தான் உயிரிழப்பு குறைவாக உள்ளது என்கிறார்கள். கொரோனா சார்ஸ் வகை குடும்பத்தை சேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது  கொரோனாவை எல், எஸ் என்று இன்சியல் போட்டு  புதிதாக கூறுகிறார்கள்.

கொரோனாவில் சாது என்றும் உயிர் குடிக்கும் குரூரம் என்றும் வகைகள் உள்ளதா?

இதை பற்றி அறிந்துகொள்ள வைரலாஜிஸ்ட் மற்றும் மருத்துவர் அனுஷாவிடம் கேட்டோம்...

"முதலில் கொரோனா விஷயத்தில் பெரும் தவறொன்றை சீனா செய்துள்ளது. அது கொரோனா வைரசின் உடற்கூறுகளை ஆராயமலும், அதோடு வெறும் 103 கொரோனா பாதித்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட கொரோனா  வைரசை வைத்தும் அதன் ஆர் என் ஏ அமைப்பை  வகைப்படுத்தியது மிக பெரும் அபத்தம்.

ஒரு விவாதத்துக்கு வேண்டுமானால் எல் வகை கொரோனா புதியது என்றும் எஸ் வகை பழையது என வைத்துக் கொள்ளலாம்.

கொரோனாவிலுள்ள எல், எஸ் என்ற இரண்டு வகைகளுக்கு இடையே மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவற்றில் இரண்டுவகைதான் உள்ளது.

கொரோனாவின் மரபணு ரீதியாக பார்த்தாலும் நான்குதான் இருக்கிறது. ஆகவே,  கொரோனாவுக்கான தடுப்பூசி ஒன்றை  இந்த இரண்டு வகைக் கொரோனாவையும் மனதில் வைத்துக் கொண்டுதான் தயாரிக்க வேண்டும். அதுதான் பலன் தரும்.

கொரோனாவால் உலகில் அதிக பாதிப்பு மற்றும் இறப்புகள் இடம் பெறுவது  நியூயார்க், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில்தான். எல் வகை கொரோனா வைரஸ் இங்கு பரவியுள்ளதால் இவ்வளவு இழப்பு ஏற்படுகிறது என்று எண்ணுகிறோம்.  நம் நாட்டில் குஜராத்தில்இறப்பு  4.57 சதவிகிதம்.  மத்திய பிரதேசம் இந்தூரில் இறப்பு 4.97 சதவிகிதம். இவற்றை வைத்து ஆராயும்போது மேற்சொன்ன மேலை நாடுகளில் காணப்படும் எல் வகை கொரோனா வைரஸ் இங்கும் பரவியிருக்குமோ என்ற சந்கேம் தோன்றுகிறது.

தமிழகத்தில் கொரோனா ஏற்படுத்திய உயிரிழப்பு 1.2 சதவிகிதம்தான். ஆகையால் தமிழக கொரோனா சாது கொரோனா  எஸ்  கொரோனா வைரஸ் என்ற சந்தேகம் இருக்கிறது. தமிழகத்திற்கு வந்திருப்பது எல் கொரோனாவா? எஸ் கொரோனாவா? என்பது பற்றி இதுவரை எந்த ஆய்வும் தமிழகத்தில் மேற்கொள்ள படவில்லை.

அப்படி ஒரு ஆய்வு நடந்து  முடிவு வரும்வரை நமது கருத்துகள் எல்லாம் புத்திசாலித்தனமான யூகமாகத் தான் இருக்க முடியும்.

எதையுமே  தீர ஆராய்ந்து நிரூபணம் ஆகும் வரையில், இது இருக்குமோ, அது இருக்குமோ என்று சொல்லிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

இப்போதுதான் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் 3 ஆயிரத்து 600 கொரோனாவால் பாதித்த நோயாளிகளின் தரவுகளை வைத்துக்கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. 

அதன் முடிவு கிடைக்கும் போதுதான் தெளிவான முடிவுக்கு வர முடியும். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது " என்றார்.

கொரோனா தன் உருவத்தை பத்து வகைகளாக மாற்றிக்கொள்வதாக மேற்கு வங்காளத்திலுள்ள தேசிய உயிரியல் மரபணுவியல் ஆராய்ச்சிக் கழகத்ததை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக 55 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 667 கொரோனா நோயாளிகளின் உடலிலுள்ள கொரோனா வைரசின் மூலக்கூறுகளான ஆர்.என்.ஏவை சுக்கு நூறாக்கி அலசி இம் முடிவுக்கு வந்துள்ளனர். அதோடு பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனா ஏ2ஏ வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் என்றும் உறுதியாக கூறுகின்றனர்.

இதை குறித்தும் மேலும் மருத்துவர் அனுஷா கூறியது:

"கொரோனாவை மரபணு ரீதியாக பார்த்தோமானால் அது ஆர்.என்.ஏ., வகையை சேர்ந்த வைரஸ். இது மனிதனின் செல்லிலுள்ள சவ்வை துளைத்துக்கொண்டு உள்ளே செல்ல  முயற்சிக்கும். அம் முயற்சியில்  வெற்றி பெற்று செல்லின்  உள்ளே போனதும் அந்த செல்லை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திடும். பின்னர் அதன் பின்னர் அது அங்கு பல்கி பெருகும்.  அதாவது அதன் ஆர் ர்.என்.ஏ எண்ணிக்கை பல மடங்கு பெருகும்.

ஒரு ஆர்.என்.ஏ நூற்றுக்கணக்கில்  பெருகுவதைத்தான் பிரதியெடுத்தல் என்று கூறுவார்கள். அந்த செயல்பாடு நடக்கும்போது, சில நேரங்களில் வைரசின் ஆர்.என்.ஏவை அப்படியே அச்சு அசலாக பிரதியெடுக்க இயலாமல் சில தவறுகள் நடக்கும். அதைத்தான் வைரஸ் மாற்றமடைகிறது என்கிறோம்.

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓ வகை சார்ந்தது. இதைதான் கொரோனா என்ற கோவிட்19 வைரசின் மூதாதையர் என்று சொல்லப்படுகிறது. இந்த ஓவிலிருந்ததான் இதுவரை பத்து வகையான கொரோனாவாக மாற்றமடைந்து உலகம் முழுவதும் பரவி நிற்கிறது.

இந்த பத்து வகை கொரோனாவை ஆராய்ந்தால் அதன் உருவத்தில் பெரும் மாற்றம் இருக்காது. மிகச்சிறிய வித்தியாசமே அவற்றின் உருவத்தில் காணப்படுகிறது.

கொரோனாவிலுள்ள பத்து வகைகளில் பொதுவான  ஏ2ஏ என்ற வகை வைரஸ்தான் பரவலாக காணப்படுகிறது. இந்த ஏ2ஏ எளிதாக நுரையீரலைத் தாக்கக்கூடியது. அதோடு அது செல்லின் சவ்வை எளிதாக துளைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிடும் திறன் கொண்டது. அவ்வாறு உள்ளே சென்றதும் அதன் ஆர்.என்.ஏ.,  பல்கிப் பெருக ஆரம்பிக்கும் போது அது தனது தாக்கும் திறனை இழக்கிறது. அதாவது கொரோனா தனது வீரியத்தை இழக்க துவங்கி விடுகிறது.

ஆரம்பத்தில் எய்ட்சை கண்டு உலகமே அச்சம்கொண்டது. இதுவரை எய்ட்சை குணப்படுத்த மருந்தே இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதை கட்டுப்படுத்தும் மருந்துகளே உள்ளன. எப்படி எய்ட்ஸ் சமுதாயத்தில் ஒர் அங்கமாகி போனதோ, அதேபோல கொரோனா தொற்றுநோயும்  ஆகலாம்" என்றார்.

மனித சமுதாயம் கொரோனாவுக்கானா போரில் நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். ஆனால், கொரோனாவுக்கு முன்பாக இருந்த உலகத்தை இனிப் பார்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.
Trending Now:
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :