கண்ணதாசனின் திரு(வார்த்தை)விளையாடல்!

01-04-2020 01:27 PM

கண்ணதாசன் என்றாலே பலருக்கும் தினமும் வானொலியில் கேட்கும் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.

 ஆனால் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கு போக நினைப்பவர்கள் பலர் முதலில் எதைப் படிப்பது என்று குழம்புவார்கள்

 என் இளவயதில் புராணப் படங்களையும், கண்ணதாசன் பாடல்களையும் கேட்டுத்தான் நம் பக்தி இலக்கியங்களிலிருக்கும் தமிழின் மேன்மையை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுத்திக்கொண்டேன்.

 1965ம் வருடம் வந்த படம் திருவிளையாடல். அந்தப் பாடல் வந்த சமயத்தில் தமிழகத்தில் நாத்திக பிரச்சாரம் தலைவிரித்தாடிக்கொண்டிர்ந்த நேரம்.

 அந்த நேரத்தில் இயக்குனர் ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் வந்த படம் தான் திருவிளையாடல். நாத்திக  வீச்சு இருந்த அந்த நாட்களிலேயே படம் 250 நாட்களுக்கு மேல் தமிழகமெங்கு ஓடியது.

 திருவிளையாடல் என்பது சிவபெருமானின் சில விளையாட்டுக்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்

படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள்

 ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனம். கே.வி. மகாதேவன் இசை. கண்ணதாசன் பாடல்கள் எல்லாமே ரசிகர்களைக் கட்டிப் போட்டது.

 பெரும்பாலும் கண்ணதாசன் பாடல்களை அப்போதெல்லாம் வானொலியில் கேட்டாலே, மக்களுக்கு படத்தின் கதை, ஓரளவுக்கு புரிந்து விடும்.

 எப்படியெல்லாம் விளையாடியிருப்பார் கவியரசர்?

 எண்களை வைத்துக் கொண்டு ஒருவரால் பாட்டு எழுத முடியுமா ?

 தமிழ்த் திரையில் எண்களை வைத்துக்கொண்டு பாடல் எழுதிய ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்.

 படத்தில் சிவனும் பார்வதியும் இருக்கும் போது ஒளவை பிராட்டி வருவாள்.

 அப்போது பார்வதி ஒளவையிடம் ` ஒளவையே, ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்தி ஈசனைப் பாடு ‘ என்பாள்

 ஒளவை பாடுவாள்

 ஒன்றானவன், உருவில் இரண்டானவன்

 உருவான செந்தமிழில் மூன்றானவன்

நன்றான வேதத்தில் நான்கானவன்

 நமசிவாய என ஐந்தானவன்

 இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்

 இன்னிவை ஸ்வரங்களில் ஏழானவன்

 சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்

 தித்திக்கும் நவரச வித்தானவன்

 பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்

 பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்

 முற்றாதவன் மூல முதலானவன்

 முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

 ஆணாகி பெண்ணாகி நின்றானவன்

 அவையொன்று தானென்ரு சொன்னானவன்

 தான்பாதி உமைபாதி கொண்டானவன்

காற்றானவன் – ஒளியானவன்

நீரானவன் நெருப்பானவன்

 நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான

 ஊற்றாகி நின்றானவன் – அன்பின் ஒளியாகி நின்றானவன்

 ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை ஈசனை வரிசைப் படுத்திவிட்டு, பிறகு ஈசனின் பெருமைகளை இதை விட உயர்த்தி ஒரு கவிஞனால், அதுவும் நிகழ்கால கவிஞனால் முடியுமா ?

 அப்பர். மாணிக்கவாசகர், சுந்தரர், திருஞான சம்பந்தர் மற்றும் சித்தர்கள் இறைவனை புகழ்ந்து பாடியதை பதிகங்களில் படித்திருக்கலாம்

 ஆனால் ஒரு திரைப்படப் பாடல் எழுதும்போது அதில் எத்தனை வித சோதனைகள் ஒரு படைப்பாளிக்கு உண்டு.மெட்டுக்குள் பாட்டு இருக்க வேண்டும். அதுவும் பாடல் அதிகபட்சம் ஆறு நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். பாடல் வரிகள்  அந்தக் காட்சிக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இத்தனை போராட்டங்களுக்கு நடுவே கவிஞன் தன் மேன்மையை, தன் ஆழந்த அறிவை புலப்படுத்த வேண்டும்.

 இந்த இடத்தில் கண்ணதாசனின் வாழ்க்கையை தெரியாதவர்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும்.

எட்டாம் வகுப்பு கூட படிக்காத கண்ணதாசனுக்குள் இப்படி இத்தனை ஞானம் புகுந்தது.

அவர் எழுதிய மிக அற்புதமான புத்தகம் அர்த்தமுள்ள இந்துமதம்.

 அந்த நூலின் முன்னுரையில்

 என் இனிய நண்பர்களே

 இந்து மதத்திற்கு புதிய பிரசாரகர்கள் தேவையில்லை

 ஆகவே, ` புதிய பிரசாரகன் கிளம்பி இருக்கிறான்’ என்ற முறையில், இந்த தொடரை படிக்க வேண்டும்

 நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே

அதுவும், நாத்திகத்திற்கு ஒரு போலித்தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக்காலத்திலேயே

 நான் எப்படி ஆத்திகனானேன் ?

கடவுளையும்,புராணங்களையும் கேலி செய்வதற்காக கந்தபுராணம், பெரியபுராணம், கம்பனின் ராமகாதை, திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை அதை உள்ளிட்ட நாலாயிர திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

அறிஞர் அண்ணா  கம்பனை விமர்சித்து ` கம்பரசம்’ எழுதியதற்குப் பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று.

 படித்தேன். பல பாடல்களை மனனம் செய்தேன் விளைவு?

 கம்பனைப் படிக்க படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன்.

 புராணங்களிலுள்ள தத்துவங்களைப் படிக்க படிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன்.

நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன்.

 ( மீண்டும் சந்திப்போம்)Trending Now: