தொழிலாளர்கள் ஊர் திரும்புவதை தடுக்க இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

30-03-2020 08:27 PM

புதுடெல்லி

கரோனா வைரஸ் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இடம்பெயர்ந்து வரும் லட்சக் கணக்கான தொழிலாளர்களால் கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதை தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் செயல்பாடுகளில் தலையிடப்போவதில்லை என அறிவித்தது.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதை தடுக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைத்துவித போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கும்பல் கும்பலாக, மனைவி குழந்தைகளுடன் பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். சமூக இடைவெளியை பின்பற்றாமல் இவர்கள் மேற்கொள்ளும் நடை பயணத்தால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் ராஷ்மி பன்சால் மற்றும் அனுஷா குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.

இடம்பெயரும் தொழிலாளர்களால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளதால் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் அனைவரும் தூய்மைப்படுத்த வேண்டும். மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கரோனா தொடர்பான அச்சத்தைப் போக்க இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.

அந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரித்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா

வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு இடம்பெயரும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதே சிறந்த வழியாகும்.

மத்திய அரசு இடம்பெயர்வு ஊக்குவிப்பதாக எந்த ஒரு தோற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது. தொழிலாளர்கள்  இடப்பெயர்வை தடுப்பதே ஒரே வழி என துஷர் மேத்தா நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக எந்த உத்தரவையும் இப்பொழுது பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதால் தற்போது இதில் நீதிமன்றம் தலையிடாது என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், வைரஸைவிட பயம் மற்றும் பதற்றம் மிக ஆபத்தான நோயாகும். அதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதியாக வழக்கு விசாரணை நாளை, செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.Trending Now: