உலகப் பொருளாதாரத்தை காக்க 5லட்சம் கோடி டாலரை விடுவிக்க ஜி-20 நாடுகள் உறுதி

27-03-2020 01:22 AM

ரியாத்

கோவிட்- 19 வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பேரிடரில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற ஒரு ஐக்கிய முன்னணி போல இணைந்து செயல்பட ஜி-20 அமைப்பைச் சேர்ந்த நாடுகள் வியாழனன்று உறுதி எடுத்துக்கொண்டன. அதேபோல கோவிட்- 19 வைரஸ் கொள்ளை நோயினால் ஏற்பட்டுள்ள அபாயத்திலிருந்து உலகை மீட்கவும் கடும் தேக்க நிலையில் இருந்து உலகப் பொருளாதாரத்தை காக்கவும் ஐந்து இலட்சம் கோடி டாலரை உலகப் பொருளாதாரத்தில் விடுவிக்கவும் ஜி-20 நாடுகள் உறுதி எடுத்துக்கொண்டன.

கோவிட்- 19 வைரஸ் உலக நாடுகளை பேரபாயத்தில் தள்ளி உள்ள சூழ்நிலையில் உடனடியாக ஜி-20அமைப்பை கூட்டி இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சீனாவும் பிரான்ஸ் நாடும் வலியுறுத்தின. இதைத்தொடர்ந்து ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவரான சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமையில் ஜி-20அமைப்பின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மாநாடு வியாழனன்று மாலை நடந்தது.

சவுதி அரசர் தலைமை

ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் விடியோ மாநாட்டுக்கு சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமை வகித்தார் .

வீடியோ கான்பரன்சிங் நடைமுறைகளை சவுதிஅரேபியா நிர்வாகம் ஒருங்கிணைத்தது.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய சவுதிஅரேபியா அரசர் சல்மான், உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரபாயத்துக்கு எதிராக கூட்டணி அமைத்து ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை இந்த மாநாட்டின் மூலம் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மாநாட்டில் ஜி-20 அமைப்பின் உறுப்பினர்களான அர்ஜென்டைனா, ஆஸ்திரேலியா, பிரேசில் ,கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தெற்கு ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

 சிறப்பு அழைப்பாளர்களாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற வகையில் இந்த வீடியோ மாநாட்டில் ஸ்பெயின், சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர ஐநா சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் விடியோ மாநாட்டில் பங்கு கொண்டன.

கூட்டறிக்கை

 மாநாட்டின் இறுதியில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை விவரம்:

உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக்கும் பரவலுக்கும் எதிராக ஒருங்கிணைந்த ஐக்கிய முன்னணி போல செயல்பட ஜி-20 அமைப்பு உறுதி பூண்டு உள்ளது.

கோவிட்- 19 வைரஸ் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பேரபாயத்தை களையவும் உலக பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தேக்கநிலையைப் போக்கவும் 5 லட்சம் கோடி டாலர் உலக பொருளாதாரத்தில் பயன்படுத்த இறக்குவதென்று ஜி-20 அமைப்பைச் சேர்ந்த நாடுகள் தீர்மானித்துள்ளன.

வளரும் நாடுகளுக்கும் மிக மிகக் குறைந்த வளர்ச்சியைப் பெற்று உள்ள நாடுகளுக்கும் உதவிக் கரம் நீட்டுவது நம்முடைய பொறுப்பாகும் என்று ஜி-20 மாநாடு என்று கருதுகிறது. எனவே பன்னாட்டுச் செலாவணி நிதியம், உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வளரும் நாடுகளுக்கும் மிகக்குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் உதவ பொருளாதார திட்டம் ஒன்றை வகுத்துப் பயன்படுத்த ஜி-20 உறுதி பூண்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

எதிர்பார்ப்புகள்

ஜி-20 மாநாடு வியாழனன்று கூடுகிறது என்ற செய்தி பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி துறையில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜி-20 அமைப்பில் அங்கம் வகிக்கும் ரஷ்யா எண்ணெய் உற்பத்தி எண்ணெய் விற்பனை குறித்து எந்த விவாதத்திற்கும் ஜி-20 ல் இடம் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது. அதனால் எந்த எண்ணெய் உற்பத்தி தொடர்பான எந்த பிரச்சனையும் விவாதிக்கப்படவில்லை.Trending Now: