மனித இனத்தை காப்பதே இன்று முக்கியம்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உருக்கமான உரை

27-03-2020 01:15 AM


புதுடெல்லி

கோவிட்- 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து உலக நாடுகளை, குறிப்பாக ஏழை எளிய நாடுகளையும் மனித இனத்தையும் காப்பதே இன்று முக்கியமான இலக்காக கொள்ளப்படவேண்டும். பொருளாதார இலக்குகளை அடைவதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்று ஜி- 20 மாநாட்டில் பேசும்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

கோவிட்- 19 வைரஸ் உலக நாடுகள் நாடுகளில் பரவி மக்களை பெரும் அபாயத்தில் தள்ளியுள்ள சூழ்நிலையில் அதிலிருந்து மீள்வதற்காக கூட்டு நடவடிக்கைகளையும் கூட்டுத் திட்டத்தையும் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் ஜி-20 விடியோ மாநாடு இன்று மாலை துவங்கியது.

 ஜி-20 அமைப்பின் தலைவரான சவுதி அரேபியா அரசர் சல்மான் மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டில் கலந்து கொண்டு புது தில்லியிலிருந்து விடியோ போனில் உரையாற்றினார்.

அவரது உருக்கமான உரை விவரம்:

உலக அளவில் மிகவும் வலிமை வாய்ந்த அமைப்பாக உள்ள ஜி-20 மனித இனத்தை காப்பதை முக்கியமான இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். உலகில் நலனுக்காக ஜி-20 நாடுகள் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம். ஜி20 நாடுகள் மனித இனத்தை காப்பதை முதலிடத்தில் வைத்து பிரச்சனைகளை அணுக வேண்டும். அதற்கு மாறாக பொருளாதார இலக்குகளை அடைவதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

 கோவிட்- 19 வைரஸ் உலகு தழுவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்- 19 வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கும் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை சிகிச்சை மூலம் காப்பாற்றவும் புதிய சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிர்வாக நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

இதற்காக உலக நாடுகளின் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வுகளை ஒருநிலைப்படுத்தி, மனித இனத்தை காப்பாற்றுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை உருவாக்குவதற்கும் உலக சுகாதார நிறுவனம் போன்ற தகுதிவாய்ந்த சர்வதேச அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது அவசியம்.

இந்த இலக்குகளை அடைவதற்கு புதிய உலகமயமாக்கல் அணுகுமுறை மிகவும் அவசியம்.

புதிய உலகமயமாக்கல் மூலம் உருவாக்கப்படும் மனிதகுல சுகாதார காப்பு முறை உடனடியாக உலகு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும்.

புதிய உலகமயமாக்கல் நடைமுறைகள் முழுக்க முழுக்க மனித இனத்தைக் காப்பதாகவும் அதன் நலனுக்காக பாடுபடுவ தாகவும் அமையவேண்டும். கோவிட்- 19 வைரஸ் பாதிப்புக்கு எதிராக நடைபெறும் ஆய்வுகள், அதன் பயன்கள் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் கிடைப்பதாக அமையவேண்டும். கோவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 21000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே ஜி-20 அமைப்பைச் சேர்ந்த நாடுகள் இணக்கமாகவும் ஒருங்கிணைந்த வகையிலும் உழைப்பது மிகவும் அவசியம்.

 இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் உருக்கமாக பேசினார்.Trending Now: