போலீஸார் கையிலும் லத்தி இருக்கக்கூடாது: வாக்கிடாக்கியில் பூக்கடை துணைக்கமிஷனர் அறிவுரை

26-03-2020 07:32 PM

சென்னை,

‘‘பொதுமக்களை அடித்து துன்புறுத்தாதீர்கள், யார் கையிலும் லத்தி இருக்கக்கூடாது. பொறுமையாக எடுத்து சொல்லி புரியவையுங்கள்’’ என்று ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சென்னை பூக்கடை துணைக் கமிஷனர் ராஜேந்திரன் வாக்கிடாக்கியில் அறிவுரை கூறினார்.

சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இருசக்கர வாகனங்களில் வெளியில் வருவோரை போலீசார் லத்திக் கம்பால் தாக்குவது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. 

சென்னையில் பணிமுடித்து விட்டு வந்த அரசு டாக்டர் ஒருவரை எஸ்ஐ ஒருவர் லத்திக்கம்பால் தாக்குவது வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தயங்கி நிற்கின்றனர். 

144 தடை உத்தரவைப் பயன்படுத்தி போலீசார் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்களுக்கு கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன சோதனையின் போது லத்திக் கம்பை கையில் வைத்திருக்கக்கூாடாது, பொதுமக்களிடம் கனிவாக நடக்க வேண்டும்’’ என்று சென்னை பூக்கடை துணைக் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று போலீஸ் மைக் மூலம் வாக்கி டாக்கியில் அறிவுரைகள் கூறினார்.

‘‘வாகன சோதனையில் ஈடுபடும் காவலர், எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் யாரும் கையில் லத்திக்கம்பு வைத்திருத்தல் கூடாது.

பொதுமக்களை அடிக்கக் கூடாது. 

காவல்துறையின் நோக்கம் குற்றவியல் நடைமுறைச்சட்டமான 144 தடை உத்தரவின் விதிகளை எந்த அளவுக்கு மக்களுக்கு புரிய வைப்பதே ஆகும். அதை விட்டு பொதுமக்களை துன்புறுத்துவதோ, அவர்களை அடிப்பதோ வேண்டாம்.

இவ்வாறு ராஜேந்திரன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு அறிவுரைகள் கூறினார்.

இணைக் கமிஷனர் சுதாகர்

‘‘55 வயதுக்கு மேல் உள்ள போலீசாருக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள், அவர்களை காவல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்’’ என சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சர்க்கரைவியாதி உள்ளிட்ட நோய்களால் பாதிப்படைந்தவர்களும் பணிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. உடல் நலனில் அக்கரை செலுத்துங்கள். முகக் கவசம், கையுறை கண்டிப்பாக வைத்திருத்தல் அவசியம்.’’ இவ்வாறு இணைக் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
Trending Now: