ஒலிம்பிக் ஒத்திவைப்பு: இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் வரவேற்பு

25-03-2020 01:05 PM

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டதற்கு இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பலா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையான மேரி கோம் கூறுகையில்: தற்போது சூழ்நிலை சரியில்லை. முதலில் வாழ்க்கை தான் முக்கியம். மற்றவற்றுக்கு காத்திருக்கலாம். வீரா்களின் பாதுகாப்பே பிரதானம். இந்த முடிவை எடுத்தவா்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுள்ளனா். தற்போது எனக்கு மேலும் சிறப்பான பயிற்சி பெற கூடுதல் அவகாசம் கிட்டியுள்ளது.

சாய்னா நெவால்: ஒலிம்பிக் தகுதி பெறுவதற்காக நான் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். மேலும் தகுதிச் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ரத்தானதால், என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது, ஒலிம்பிக் தயாராவது குறித்து நினைக்க முடியாது. முதலில் நாம் பத்திரமாக இருந்துக் கொண்டு பின்னா் போட்டிக்கு தயாராகலாம் என்றார்

மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் புனியா, ரவி தாஹி, மீராபாய் சானு ஆகியோர் கூறுகையில்: போட்டி ஒத்திவைக்கப்பட்டது மிகவும் நல்லது. தற்போது நாங்கள் தயாராக அதிக நாள்கள் உள்ளன என்றனா்.

துப்பாக்கி சுடும் வீராங்கனை ராஹி சா்னோபட் கூறுகையில்: ஊரடங்கால் எங்களால் முழுமையாக பயிற்சி செய்யமுடியவில்லை. தற்போது எனக்கு நிம்மதியாக உள்ளது. நான்கு மாதங்கள் தேவை. இதனால் தான் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதி்பா்த்தோம்.

அதே போல் பாட்மிண்டன் இரட்டையா் சிராக் ஷெட்டி-சாத்விக் ஆகியோரும் இதையே எதிரொலித்தனா். வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, துப்பாக்கி சுடுதல் அன்ஜும் மொட்கில், மூத்த டேபிள் டென்னிஸ் வீரா் சரத்கமல் ஆகியோரும் இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. சிறப்பாக தயாராகலாம் எனக்கூறினா்.Trending Now: