கரோனா வைரஸ் பாதிப்பு மதுரையில் முதல் உயிரிழப்பு

25-03-2020 07:18 AM

மதுரை

கரோனா வைரஸ் தாக்குதலால் தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கதக்க நபர் சில தினங்களுக்கு முன்பு தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவருக்கு உடலில் ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தன.

இதனால் நேற்று மாலை முதலே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்த நிலையில் நள்ளிரவில் எவ்வித பலனின்றி உயிரிழந்தார். 

இதனை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 54 வயது நபர் அண்மையில் வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று வந்தவர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியான நாள் முதல் அவரது மனைவி மற்றும் மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர் வழக்கமாக செல்லும் மசூதியில் அவருடன் நெருங்கி பழகியவர்கள், நெருங்கிய உறவினர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே நடைபெற்று வந்தது.

கடந்த 9ம் தேதி சுமார் 60 பேர் பங்கேற்று இருந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு இருந்தார். ஆகையால் அந்த 60 பேரையும் அடையாளம் காணும்பணி நடைபெற்று வந்தது.

உயிரிழந்த நபரின் உடல் பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவிலே இறுதிச்சடங்கும் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.Trending Now: