பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 22–3–2020

18-03-2020 02:50 PM

இந்திய அரசியலில் பல ஆட்சி மாற்றங் களை பல மாநிலங்களில் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் மத்திர பிரதேசத்தில் நடந்திருக்கும் அரசியல் கூத்துக்களை பார்க்கும் போது காங்கிரஸ் தொடர்ந்து தனக்குத் தானே தலையில் மண்தோணை வாரி போட்டுக் கொள்வதாக தோன்றுகிறது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸி லிருந்து வெளியேறி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது, அங்கே  கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டிருப்பதும் காங்கிரஸின் மோசமான கோஷ்டி பூசலின் உச்ச கட்ட அடையாளம். அந்த மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சியின் விலை மதிப்பற்ற இளம் தலைவர்தான் ஜோதிர் ஆதித்ய சிந்தியா என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

குவாலியர் ராஜ பரம்பரையில் வந்தவர் தான் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. ம.பி.யில் இந்த சம்பவங்களின் உண்மையான பின்னணி என்ன?

காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக, ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் மாதவ் ராவ் சிந்தியா. 2001ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடந்த விமான விபத்தில் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து தான் அரசியல் களத்திற்கு வந்தார் அவரது மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும், ஸ்டாண் போர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தவர் இவர்.

2002ம் ஆண்டு தந்தையின் குணா நாடாளு மன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் நாலரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, காங்கிரஸ் கட்சி யின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான எழுந்தார். அதை தொடர்ந்து  2004, 2009, 2014 என தொடர்ந்ந்து பார்லிமெண்ட் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2007, 2009, 2014ல் மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்பு, வர்த்தகம், தொழில், எரிசக்தி துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்தார்.

சோனியா காந்தி குடும்பத்துக்கும், ராகுல்  காந்திக்கும் நெருக்கமானவராக இருந்தவர் சிந்தியா. 2018 நவம்பரில் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல்தான். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் காங்கிரசுக்கும் இடையே முதலில் சிக்கல் ஆரம்பமானது. அந்த மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் அரசு. அதற்கு துருப்புச் சீட்டாக பயன்பட்டவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாதான்.

காங்கிரஸ் கட்சி, சிவராஜ் சிங் சவுகான் என்ற மாமலையை எதிர்த்து நின்று போராடி 114 சட்டமன்றங்களில் வெற்றி பெற்றது.  பா.ஜ. கவிற்கு 117 இடங்களே கிடைத்தது.  தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, சில சுயேச்சைகள் உதவியுடன் 121  பேர் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது காங்கிரஸ்.

முதல்வர் பதவி மூத்த தலைவர் கமல் நாத்திற்கா? அல்லது சிந்தியாவுக்கா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மேலிடத்து ஆசியால் கமல்நாத் முதல்வரானார்.   சிந்தியா சொல்கிற ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க மேலிடம் ஒப்புக்கொண்டது. அதே சமயம் கமல்நாத் ஆதரவாளர் ஒருவரும்  துணை முதல்வராக இருப்பார் என்றது அங்கே தான் சிக்கல் துவங்கியது.

அடுத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாவது தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சிந்தியா ஆனால் அதுவும் நடக்கவில்லை.  மாறாக தண்டனை பதவி போல காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக்கி, கட்சி எங்கே இருக்கிறது  என்று தேடிப் பார்க்கிற நிலையில் இருக்கிற உத்திரபிரதேசத்தில் மேற்கு பகுதிக்கு பொறுப்பாளர் ஆக்கப்பட்டார். அதுவும் சிந்தியாவுக்கு பெருத்த அவமானமாக இருந்தது.

மத்திய பிரதேச காங்கிரஸ் உறையில் மூன்று வாள்கள் இருந்தன.  கமல்நாத், திக்விஜய்சிங், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் தான் அந்த மூன்று பேர். ஆனால் முதல் இருவரும் எப்படியாவது சிந்தியாவை அரசியலில் இருந்து வீழ்த்த துடித்தனர். அதற்கு அவர்களுக்கு ஒரு காரணம் இருந்தது. திக் விஜய் சிங் தனது மகன் ஜெய்வர்த்தன் சிங்கையும், கமல்நாத் தனது மகன் நகுல் கமல்நாத்தையும்  அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் முனைப்பாக இருந்தார்கள்.

 தங்கள் வாரிசுகளை முன்னுக்கு கொண்டு வரத்துடித்த இந்த இரு மூத்த காங்கிரஸ் தலைவர்களின்  தந்தை பாசத்தில் கட்சி இப்போது ஆட்சியை இழுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  அதை தொடர்ந்துதான் இந்த மாதம்

9ந்தேதி சோனியா காந்திக்கு  தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு பாரதீய ஜனதாவில் சேர்ந்தார் சிந்தியா.  பா. ஜ. க  சிந்தியா குடும்பத்திற்கு புதிததல்ல் அவரது பாட்டி அந்த கட்சியில் தான் இருந்தார். அவரது தந்தை மாதவ் ராவ் சந்தியா அங்கிருந்துதான் தன் அரசியலையே துவக்கினார். எது எப்படியே காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டது.

 நான் எப்போதும் அந்த குரலை ரசிப்பேன். அந்த குரலில் மூலம் வெளிவரும் பல பாடல்களின் வரிகளி லிருந்து நான் பல பாடங்கள் படித்திருக்கிறேன்.

அந்த குரலுக்கு சொந்தக் காரர், நம் அன்றாட வாழ்வில் தினமும் காற்றில் கலந்து நமது செவிகளி வந்து மோதும் குரல்தான். அவர்தான் டி.எம்.செளந்தரராஜன் . இன்னும் இரண்டு நாட்களில் அதாவது மார்ச் 24 அவருக்கு பிறந்த தினம்.

 தமிழ் சினிமாவின் இரு திலகங்களின் பாடும் குரலானார். கண்ணதாசன் கவிதைகளின் வாழும் குரலானார். தமிழ் மொழி அழகாய் மகுடம் சூடும் குரலானார். நவரசங்கள் இயல்பாய் கூடும்  குரலானார் என்று இவரை வர்ணிப்பார் எழுத்தாளர் வாமனன்.

மதுரையில் செளராஷ்டிர குடும்பத்தில் மீனாட்சி அய்யங்கார், வெங்கடம்மாள் தம்பதிகளின்  மூன்றாவது பிள்ளைதான் டி.எம். செளந்தரராஜன். டி,எம் எஸ். பிறந்த தினம் 24-3-1923. ரிஷப லக்கின, ரிஷப ராசி, மிருகசிருஷ நட்சத்திரம் தனது ஜாதகத்தை தானே அலசி பார்ப்பார் டி.எம்.எஸ். எதையும் அவர் விட்டு வைத்ததில்லை.  குலதெய்வமான கள்ளழகர் செளந்தராஜ பெருமாளின் பெயர் கொண்டிருந்த இவருக்கு தெய்வம் தந்த வரப்பிரசாதம் சுந்தரமான, சுத்தமான சாரீரம். செளந்தராஜனின் சங்கீதக் காதல் சின்ன வயதிலேயே தொடங்கிவிட்டது.

தந்தையோடு சேர்ந்து பஜனைப் பாடல்களைப் பாடுவர். பிறகு சினிமா பாடல் மூலம் ஈர்த்தவர்கள் வி.ஏ. செல்லப்பா, எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, எம்.கே. தியாகராஜ பாகவதர். அப்போது வந்த பெரும்பாலான படங்கள் புராண படங்கள். பாகவதரின் படம் வந்தவுடன், அதில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து , பள்ளி இறை வணக்கத்தில் பாடி விடுவார் செளந்தரராஜன்.

கார்த்திகை, ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் பஜனை மடங்களில் செளந்தர ராஜனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். ` பாடி முடித்ததும், பஜனை மட நிர்வாகிகள், அருகில் உள்ள காபி ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார்கள். பக்கோடா, காராசேவ், காபி போன்றவற்றை வாங்கித் தருவார்கள். ஒரிரு ரூபாயும் கொடுப்பார்கள். அந்த சின்ன வயதில் அந்த ஒரு ரூபாய் என்பது ஒரு லட்சம் வாங்கியது போலிருக்கும். பாடினால் புகழும் கிடைக்கிறது, பணமும் கிடைக்கிறது என்றவுடன் பெரிய பாடகனாக வேண்டும் என்ற ஆசை என் மனதில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது ‘ என்பார் செளந்தரராஜன். பாட்டில் சுத்தமான தமிழ் உச்சரிப்புடன்  பாடுவது போல், செளந்தரராஜனின் பேச்சிலும், தமிழ் மணக்கும். சங்கீதம், ஜோசியம், சமயம் பற்றி பேச்சு திரும்பினால் அதற்கான பரிபாஷைகள் அவரிடம் விளையாடும்.

பாட்டும் கூத்தும் பள்ளி படிப்புக்கு வேட்டு வைத்துவிட்டது.  சின்ன வயதில் இவரது பாட்டைக் கேட்ட பி.யூ சின்னப்பா அப்போதே இவனுக்கு சங்கீதத்தில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்தாராம்.

 பிறகு சிந்தாமணி படத்திற்காக பாபநாசம் சிவன் இயற்றிய செஞ்சுருட்டி ராகப் பாடலை பாகவதர் பாடிய அதே சுருதியில் செளந்தரராஜன் பாடுவதைக் கேட்ட மக்கள், பாகவதர் தான் பாடுகிறாரோ என்று நினைத்தார்களாம்.

 அவருக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு கிருஷ்ண விஜயம். மொத்தம் நான்கு பாடல்கள்.  முதல் படத்திலேயே நான்கு பாடல்களுக்கான வாய்பு டி.எம்.எஸ்ஸுக்கு கிடைத்தது. கிருஷ்ண விஜயத்தில் பாடிவிட்டு புது வாய்ப்புக்கள் தேடி சேலம் மாடர் தியேட்டர்ஸுக்கு சென்றார்.  1950ல் வெளிவந்த மகத்தான வெற்றி  பெற்ற மந்திரிகுமாரி படத்தில் இவர் குரலில் ஒலித்த பாடல் ` அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே  பாடல்தான்.

 மாடர்ன் தியேட்டர்ஸின் கணபதி பிக்சர்ஸ் தயாரிப்பால உருவான படம் தேவகி. இந்த படம் 1951ல் வந்தது. இதில் செளந்தரராஜனுக்கு  ` தீராத துயராலே பாழாகியே’ என்ற பாடல்தான். ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வருவது போல் காட்சி. அதில் இவரே பிச்சைகாரனாக பாடிக்கொண்டு வருவார். படத்தின் டைட்டிலில் `பிச்சைக்காரன் ‘ செளந்தரராஜன் என்று தான் வரும். தேங்காய்  வியாபாரியாக நடித்த சீனுவாசனுக்கு தேங்காய் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது போல், முதல் படத்தின் டைட்டிலில் நல்லவேளையாக செளந்தரராஜன் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொள்ளவில்லை.

Trending Now: