மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –26

16-03-2020 06:03 PM

‘பாவத்தைப் போக்குவதும், வேதங்களுக்கு நிகரானதும், பரிசுத்தமானதுமான ராமருடைய சரித்திரத்தை எவன் படிக்கிறானோ, அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும், விடுதலை அடைகிறான். நோய் நொடியற்ற, நீண்ட ஆயுளைக் கொடுக்கவல்ல ராம சரித்திரத்தை படிக்கிற மனிதன், மக்கட்பேறுடனும், செல்வத்துடனும் கூடியவனாக வாழ்ந்து, தனது உடலை விட்ட பின் மேலுலகத்தில் ஏற்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறான்’ என்று சொல்லி முடித்தார்.

 தர்ம சிந்தனை உடையவரும், சொல்வன்மை மிக்கவருமான வால்மீகி முனிவர், நாரதரை முறைப்படி பூஜித்து, அவருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, ‘தமஸா’ நதிக் கரையை நோக்கிச் சென்றார். தன்னுடைய ஜபதாபங்களுக்கு உரிய ஒரு இடத்தை நாடி, அவர் சென்று கொண்டிருந்தபோது, அந்தக் காட்டில் ஆண், பெண் ஜோடியாக இரண்டு ‘க்ரவுஞ்ச’ பட்சிகள் விளையாடிக்கொண்டி ருந்தன.  நீர்நிலைகளின் அருகில் காணப்படக் கூடிய, ஒரு பறவை இனத்தைச் சேர்ந்தவை – க்ரவுஞ்ச பறவைகள். அப்போது அங்கே வந்த  ஒரு வேடன், அந்த இரு பறவைகளில், ஆண் பறவையை ஓர் அம்பு எய்திக் கொன்று வீழ்த்தினான். பெண் பறவை பரிதாபமாக அலறியது. இன்புற்றிருந்த இரண்டு பறவைகளை பிரித்து, அதில் ஒன்றைக் கொன்று, மற்றொன்றைப் பரிதவிக்க விட்ட வேடனின் செயலைக் கண்டு, முனிவர் பெரும் அதிர்ச்சியுற்றிருந்தார். அந்தக் காட்சி அவருடைய மென்மையான உள்ளத்தை  பெரிதும் வருத்தியது. வேடன் செய்தது தர்மத்திற்கு முற்றிலும் விரோதமான செயல் என்று அவருடைய மனம் கூற – நடந்த நிகழ்ச்சி அவருடைய உள்ளத்தை உறுத்த – பெண் பறவையின் பரிதாப நிலை அவருடைய நெஞ்சத்தை உலுக்க -  வால்மீகி முனிவர் வேடனைப் பார்த்து, ‘வேடனே! இன்புற்றிருந்த பறவைகளில் ஒன்றை கொன்று வீழ்த்திய நீ, நிலையான வாழ்க்கையை அடைவது என்பது கிடையாது’ என்று சபித்து விட்டார். அந்தச் சாபமே கவிதைநயத்துடன் ஒரு ஸ்லோகம் போல அமைந்தது.

 வால்மீகி முனிவரின்  இந்தச் சாபம் ஒரு கவிதையாக வெளிவந்தது. இதுவே அவர் இயற்றிய ‘ராமாயண’த்திற்கும் ஆரம்பமாக அமைந்தது. இந்த ஸ்லோகத்திற்கு மேலே சொன்ன அர்த்தத்தைத் தவிர, வேறொரு அர்த்தமும் கூறப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியில், பதங்களைப் பிரிக்கும்பொழுது, இந்த ஸ்லோகத்திற்கு வரும் அர்த்தம் ‘லட்சுமியின் உறைவிடமாகிய ஸ்ரீனிவாசனே! ராட்சஸ இன்பத்தில் புத்தி மயங்கிய ஒருவனைக் கொன்று, நீண்ட நெடுங்காலத்திற்கு நிலைத்து நிற்கும் கீர்த்தியை நீர் அடைந்தீர்’ என்பது. முனிவர் வாக்கில் வந்த சாபம், ஒரு ஸ்லோகமாக அமைந்தது மட்டுமல்லாமல், ‘ராமாயண’த்தில் தொடக்கமாகவும் அமைகிற வகையில் இரு பொருளை உடையதாகக் கொண்டது. இந்த இரண்டாவது அர்த்தம் அந்த ஸ்லோகத்திற்கு இருந்தாலும் கூட, இப்படிப் பதத்தைப் பிரித்து அர்த்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வேடனுக்கு வால்மீகி முனிவரிட்ட சாபமே ‘ராமாயணத்’ தொடக்கம் என்பார்கள் சிலர். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, பிரம்ம தேவன் வந்து, வால்மீகி முனிவரைச் சந்திக்கும்போது, ‘நீர் வேடனுக்கு இட்ட சாபமே ஒரு ஸ்லோகம்தான்’ என்று அவர் வால்மீகி முனிவரிடம் கூறியது நினைவில் கொள்ள வேண்டும்.

 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வால்மீகி முனிவரின் மனதிலொரு எண்ணம் மீண்டும், மீண்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.  ‘ஒரு பறவைக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக, என் வாக்கிலிருந்து ஒரு சாபம் வெளிப்படுவானேன்? எனது சொல்லாக வந்த அந்த  சாபம், எழுத்து மற்றும் பதங்களின் அமைப்பினால் ஒரு ஸ்லோகம் மாதிரி தெரிகிறதோ! நடந்த நிகழ்ச்சிக்கு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும் போல் இருக்கிறதே’ என்ற சிந்தனையில் ஆழ்ந்து, தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்த வால்மீகி முனிவரின் முன்பு, அப்பொழுது பிரம்மதேவன் தோன்றினான்.

‘முனிவரே! உமது சொல் எனது அருளினால்தான் பிறந்தது. ராமருடைய வரலாற்றை நீர் முழுமையாக இயற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தொடக்கம் செய்யப்பட்டது. நாரதரிடமிருந்து ராமரின் சரித்திரத்தை கேள்வியுற்ற நீர், அந்தச் சரித்திரத்தில் பலரும் அறிந்த விவரங்களை மட்டுமல்லாமல், பலரும் அறியாத விவரங்களை அறிவீராக! அதே போல சீதையின் வரலாறு முழுமையாக உமக்குத் தெரிவதாக! நீர் இயற்றப் போகும் ராம சரித்திர காவியத்தில், உமது ஒரு சொல் கூட மெய்யிலிருந்து விலகியதாக இருக்காது. மனதிற்கினிய ஸ்லோகங்களைக் கொண்டதாக ராமருடைய வரலாற்றை இயற்றுவீராக! உலகில் மலைகளும், நதிகளும் எதுவரை நிலைத்திருக்குமோ, அதுவரை நீர் இயற்றப்போகும் புனித சரித்திரமான ‘ராமாயண’மும் நிலைத்திருக்கும். அந்தப் புண்ணிய வரலாறு எப்படி நிரந்தரமானதோ, அதே போல நீரும் நிரந்தரத் தன்மை அடைவீர்.’

 இப்படிச் சொல்லிவிட்டு, திடீரென்று தோன்றிய மாதிரியே பிரம்ம தேவன் அந்த இடத்திலிருந்து மறைந்தான்.

 வியப்பும், மகிழ்வும் எய்திய வால்மீகி முனிவர் பிரம்மா கூறியபடியே, சோகத்தில் எழுந்த ஸ்லோகத்தையே ஆரம்பமாகக் கொண்டு ‘ராமாயண’ காவியத்தை இயற்றத் தீர்மானித்தார்.

 தான் இயற்ற இருந்த காவியத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி அவர் ஆழமாக சிந்தித்தார். ராமருடைய வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவருக்குத் தெளிவான தெரிந்தன. பேசப்பட்ட வார்த்தை, உதிர்க்கப்பட்ட சிரிப்பு, நடத்தப்பட்ட பயணம், செய்யப்பட்ட காரியம் என, ஒன்றும் விட்டுப் போகாமல் உள்ளங்கை நெல்லிக்கனி போல் முனிவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.Trending Now: