16-03-2020 05:20 PM
![]() | ![]() | ![]() |
ஜெய்சங்கருக்கு ஜெயம் கொடுத்த குரல் – 1
அறுபதுகளில் டி.எம்.சவுந்தரராஜன்தான் நட்சத்திரப் பின்னணிப் பாடகர். ஆனால் அந்த இடத்திற்கு அவர் லேசில் வந்துவிடவில்லை. ஐம்பதுகளில், பின்னணிப் பாடகர்கள் மத்தியில் பலமான போட்டியிருந்தது! சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா, ஏ.எம்.ராஜா, திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ் என்று பல பின்னணிப் பாடகர்களுடன் டி.எம்.எஸ். பங்கு பெற்ற ஓட்டம் அது. அதில் டி.எம்.எஸ்.தான் வென்றார்.
ஏனென்றால், அறுபதுகளில் வந்த இசை அலையில் திரும்பிப் பார்த்தால், டி.எம்.எஸ். மட்டும்தான் வெற்றி இலக்கில் இருந்தார். காலம் நடத்திக்காட்டுகிற பந்தயங்களில் இதுவும் ஒன்று. திடீரென்று ஆட்டத்தின் முடிவு இந்த இலக்குக்குக் கொண்டுவந்துவிட்டுவிட்டது. பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்குத் தகுதியில்லையா என்று கேட்டால், நிச்சயமாக அப்படிக் கூறவே முடியாது. அவர்கள் தகுதி மிகுதியாகப் படைத்தவர்கள்!
‘‘வாய்யா ஹீரோ,’’ என்று டி.எம்.எஸ்சை 1950ல் அறிமுகப்படுத்திய எஸ்.எம்.சுப்பையா நாயுடு வழக்கமாக அழைத்ததற்கு ஏற்ப, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய தமிழ் சினிமாவின் இரு துருவங்களுக்கு வெற்றிகரமாகப் பாடக்கூடிய ஒரே பாடகராக அவர் இருந்தார். ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா, அதன் பிறகு பி.பி.எஸ். என்ற நிலையையும் மீறி, சில சமயம் ஜெமினிக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்தார்! தமிழ் சினிமாவில் முதல் தேர்வுக்குரிய ஆண் பின்னணிப் பாடகர் என்ற நிலையை அவர் அடைந்துவிட்டார்.
இந்த நிலை, இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பாவுக்கு ஒரு பிரச்னையை ஏற்படுத்தியது! எம்.ஜி.ஆர், ஜமுனா, கண்ணாம்பா நடித்து, 1959ல் வெளிவந்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ என்ற படத்திற்கு அவர் இசையமைத்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடந்திருந்தது. அதன் பின்விளைவுகள் அவரை அறுபதுகளில் நடுப்பகுதியில் பயமுறுத்திக்கொண்டிருந்தன!
நித்யகலா என்றொரு பாடகி. அவரை ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படத்தில், டி.எம்.எஸ்சுடன் பாடவைத்துவிடவேண்டும் என்ற உறுதியுடன் பாப்பா பாடுபட்டுக்கொண்டிருந்தார்! அது பல டேக்குகளை வாங்கிக் கொண்டிருந்தது. ஒலிப்பதிவு கூடங்களுக்கு இடையில் தொடர்ந்து தாவிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமும் அவசரமும் டி.எம்.எஸ்.சுக்கு இருந்ததால், பாப்பாவின் இசையமைப்பில் இந்த பாடலில் தொடர்ந்து ஏற்பட்ட தாமதம், அவருக்கும் பாப்பாவுக்குமிடையே ஒரு வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. ஒருவரையொருவர் சொல்லம்புகளால் காயப்படுத்திய சம்பவம் நடந்தது.
அந்த அத்தியாயம் எப்படியோ நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அதன் பிறகு பாப்பாவின் இசையில் டி.எம்.எஸ். பாடவில்லை. ஏனென்றால் பாப்பா அவரை மீண்டும் அழைக்கவில்லை!
உதாரணத்திற்கு, ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று சீர்காழி கோவிந்தராஜனை பாட வைத்தார் பாப்பா. மிகவும் சிறப்பாகத்தான் இருந்தது. ‘விஜயபுரி வீரன்’ என்று படத்தின் புதிய நாயகன் ஆனந்தனை, ஏ.எம்.ராஜாவின் குரலில், ‘உள்ளத்திலே உரம் வேணுமடா’ என்று எழுச்சிப் பாடல் பாட வைத்தார் பாப்பா! கலைஞரின் ‘குறவஞ்சி’யில், சிவாஜிக்கான எல்லா பாடல்களையும் சிதம்பரம் ஜெயராமனைப் பாட வைத்தார்.
ஆக, பாப்பாவின் இசை தொடுப்பில் டி.எம்.எஸ். ஒரு நான்கைந்து வருடங்கள் இடம்பெறவில்லை! ஆனால் டி.எம்.எஸ்சுக்கு இதில் பாதிப்பில்லை...ஏனென்றால் விஸ்வநாதன் – ராமமுர்த்தி, கே.வி.மகாதேவன் என்ற இரண்டு நட்சத்திர இசையமைப்பாளர்களுக்கு அவர்தான் முக்கியப் பாடகர்! அங்கொன்றும் இங்கொன்றுமாக பாப்பா இசையமைத்த படங்களில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை டி.எம்.எஸ். கவனிக்கவே இல்லை!
![]() | ![]() |
இந்த காலகட்டத்தில், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் தானே இசை அமைத்து, சவுந்தரராஜனைப் பட்டினத்தாராக நடிக்க வைத்துத் தயாரித்த ‘பட்டினத்தார்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் டி.ஆர்.ராமண்ணா, ராமநாதனின் இசை அமைப்பில் சவுந்தரராஜனை வைத்து ‘அருணகிரிநாதர்’ எடுத்தார். இசையமைப்பின் இடையிலே ராமநாதன் காலமாகிவிட்ட காரணத்தால், டி.ஆர். பாப்பாவை இசையமைப்பில் ஈடுபடுத்தினார் ராமண்ணா.
ஆனால், டி.எம்.எஸ்சை டி.ஆர்.பாப்பா நாடியே தீரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட, இதைவிடப் பெரிய சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.
சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சிட்டாடல் ஸ்டூடியோவையும் நடத்திக்கொண்டிருந்த ஜோசப் தளியத்தின் நட்சத்திர இசையமைப்பாளராக டி.ஆர்.பாப்பா விளங்கினார்.
சிறிய பட்ஜெட்டில் புது நடிகர்களைக்கொண்டு படம் எடுத்து வெற்றி அடைவதில் வல்லவர் தளியத். ஒரு படத்திற்கு அவர் பாப்பாவுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் கொடுப்பார். படத்தின் நாயகன் உட்பட யாருக்கும் கொடுக்கும் சம்பளத்தில் அதுதான் அதிகப்படியான தொகை! ஆனால், 1964ல் அவர் இப்படி ஒரு படம் எடுக்க நினைத்தபோது, தன்னுடைய அபிமானத்திற்குரிய பாப்பாவிடம் ஒரு விஷயத்தை அவர் தெளிவுபடுத்திவிட்டார்: ‘‘நான் எடுக்கப்போகிற அடுத்த படத்தில், ஹீரோவுக்கு டி.எம்.எஸ்.தான் பாடவேண்டும்!’’
என்ன செய்வார் டி.ஆர்.பாப்பா?! ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த மோதல் நினைவுக்கு வந்தது! தன்னுடைய படங்களில் டி.எம்.எஸ்சை பொதுவாக விலக்கியே வைத்த நிலை நினைவுக்கு வந்தது! ஆனாலும், தன்னுடைய சுய அபிமானத்தை அடக்கிக்கொண்டு டி.எம்.எஸ்ûஸ நாடினார்!
பாப்பாவின் அழைப்பிற்குப் பதில் கூறும் வகையில், ‘‘நான் வந்து பாடறேன்... முன்னே நடந்ததெல்லாம் என்னைக்கோ மறந்துட்டேன்,’’ என்றார் டி.எம்.எஸ்.!
தினம் தினம் புதுப்புதுப்பாடல்க ளைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த டி.எம்.எஸ்சுக்கு, ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ ஒரு மாமாங்கத்திற்கு முன்னே நடந்த சம்பவமாகத் தோன்றியது. அதைத்தவிர, பழைய கசப்புகளை ஊதி வளர்த்துக்கொண்டிருக்கும் தன்மை அவரிடம் இல்லை.
இதை டி.ஆர்.பாப்பாவின் இசையில் அவர் பின்னர் பாடிய பாடல் ஒன்றின் பல்லவி எடுத்துக்காட்டியது.
‘‘இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம், இதை எண்ணிப்பாரு தெளிவாகும்’’ என்று பாப்பா இசையமைத்த ‘விளக்கேற்றியவள்’ படத்தில், ஆலங்குடி சோமுவின் வரிகளை டி.எம்.எஸ். பாடினார்.
இந்த வகையில் டி.ஆர்.பாப்பாவும், சவுந்தரராஜனும் மீண்டும் இணைந்தது, சிவாஜியும், எம்.ஜி.ஆரும் தனிக்காட்டு சக்ரவர்த்திகளாக கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு ஜெய்சங்கர் தலையெடுப்பதற்கு வழிவகுத்தது.
திருநெல்வேலியில் பிறந்த சங்கரநாராயணன், சென்னையில் மயிலை பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது, அமெச்சூர் நாடகக்குழுக்களின் நாடகங்களில் நடிக்கும் அனுபவம் கிடைத்தது. நீதிபதியான தந்தையின் உந்துதலால் சட்டக்கல்லூரியில் சேர்ந்தாலும், ஒரு வருடத்திற்கு மேல் சட்டம் பயில முடியவில்லை! தில்லியில் வேலை கிடைத்து அங்கு போனால், அங்கு நாடக வாய்ப்புகளே இல்லை! நடிப்பு இல்லை என்றால் சங்கருக்கு என்னமோ போல் இருந்தது. வேலையை விட்டுவிட்டு மீண்டும் சென்னை வந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பா, தன்னுடைய நெடுநாளைய நண்பரும் முதலாளியுமான
சிட்டாடல் அதிபர் ஜோசப் தளியத்திடம் சங்கரை அறிமுகப்படுத்தினார். தளியத்திற்கு சங்கரை மிகவும் பிடித்துவிட்டது.
‘‘புதுமுகங்களிடம் நாம் விரும்பும்படி வேலை வாங்கலாம். புதிய நடிகர்களைக் கொண்டு திரைப்படம் எடுத்தால் விநியோகஸ்தர்கள் வாங்குவதில்லை என்று கூறமுடியாது. போட்டியின்றித் திரையிட்டால் வெற்றி பெறலாம். பலரை முன்னுக்குக் கொண்டு வருகிறோம் என்ற திருப்தியும் இருக்கிறது’’ என்று எண்ணியிருந்த தளியத், தன்னுடைய படத்தின் நாயகனாக சங்கரை ஆக்கிவிடவேண்டும் என்று முடிவு செய்தார். சங்கரை ‘ஜெய்சங்கர்’ என்று பெயர் மாற்றி, முதல் படத்திலேயே இரு மாறுபட்ட தோற்றங்களுடன் நடிக்க வைத்தார்.
கதாநாயகன் மாறு வேடத்தில் தோன்றி சில மர்மங்களைத் துப்பறிவதாக ‘இரவும் பகலும்’ கதை செல்கிறது. சுருட்டை முடி டோப்பா, கறுப்பு லெதர் ஜாக்கெட், முகத்தில் பெரிய மச்சம் என்ற மாறுவேட ஜெய்சங்கர் வித்தியாசமாக இருந்தார்.
தளியத் சங்கருக்கு சூட்டிய ‘ஜெய்’ என்ற அடைமொழி, அர்த்தமுள்ளதாக ஆயிற்று. ‘இரவும் பகலும்’ ஜெயத்தைப் பெற்றது. அதற்கு உறுதுணையாக இருந்தது சவுந்தரராஜனின் குரல். புதுமுகத்திற்குப் பக்குவமான, கம்பீரமான, சிவாஜி, எம்.ஜி.ஆர். முதலிய நட்சத்திரங்களுடன் இணைத்துப் பார்க்கப்பட்ட பின்னணிக் குரல் அமைய வேண்டும் என்றுதான் தளியத்தும், பாப்பாவும் ஜெய்சங்கருக்கு சவுந்தரராஜனைப் பாட வைத்தார்கள். படத்தில் ஆண்மையும் தன்னம்பிக்கையும் நிறைந்த ஜெய்சங்கரின் தோரணைக்கு, சவுந்தரராஜனின் குரல் அற்புதமாகப் பொருந்தியது. படத்தின் டைட்டில் சொற்கள் அமைந்திருக்கிற பாடல்,
‘இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்’ என்பது.
கதாநாயக நடிகர்கள் படத்தில் ஒரு தத்துவப்பாடல் பாடுவது ஒரு சம்பிரதாயமாகக் கூட இருந்த காலகட்டத்தில், அறிமுக கதாநாயக நடிகருக்கு தத்துவ செறிவுள்ள வரிகள் கொண்ட பாடலை வைப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அறிமுகப்படுத்தப்பட்ட நபரே ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று கூறமுடியாத நிலையில், அவர் வாயிலாக வேதாந்தங்களை வெளியிடுவது ஆபத்தான வேலைதான், அபத்தமாக முடியக்கூடிய சங்கதி அது. ஆனால் பாடலும் நன்றாக இருந்து, படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாக அமைந்ததால், எல்லாம் நலமாக முடிந்தது.
தளியத் தயாரிக்கும் படம் என்றாலே கூடுதல் நாட்டம் காட்டக்கூடியவர் டி.ஆர். பாப்பா. ‘இரவும் பகலும்’ படத்தைப் பொறுத்தவரை, அதன் கதாநாயக நடிகரே அவருடைய சிபாரிசின் பேரில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார் என்கிறபோது,
இன்னும் ஜாக்கிரதையாக தன்னுடைய இசையமைப்பை செய்தார். முக்கியப்பாடகரான டி.எம்.எஸ்சும் அவருடன் சில வருடங்களுக்குப் பிறகு இணைந்திருந்தார். இதனால் பாடல்கள் அனைத்தும் கவர்ந்திழுக்கும் மெலடிகளாக அமைந்தன.
‘இரவு வரும் பகலும் வரும்’ பாடலை எடுத்துக்கொண்டால் கூட, அதன் தொடக்கமே, கேட்பதற்கு
ரம்மியமாகவும் ஆழமான கருத்துக்களை வெளியிடுவதற்கான இனிமையான சூழலை ஏற்படுத்துகிற வண்ணமும் அமைந்தது.
உலக வாழ்க்கையில் விளைவுகள் இரண்டாக இருந்தாலும், எல்லாம் ஒன்றுதான், ஒன்றுதான் என்று அருமையாகச் செல்கின்றன வரிகள். ‘கதிரும் மதியும் வந்துபோனாலும் வானம் ஒன்றுதான், ஒளியும் இருளும் வந்துபோனாலும் உலகம் ஒன்றுதான், வளமையும் வறுமையும் வந்துபோனாலும் வாழ்க்கை ஒன்றுதான், இன்பமும் துன்பமும் வந்துபோனாலும் இதயம் ஒன்றுதான்’ என்ற பாடல் கூறுகிற விஷயம் மட்டும் புரிந்துபோனால், அளவுக்கு மீறிய சோகத்துடன் இதயம் நொந்துபோகுமா?
ஒரு தேர்வில் தோல்வி வந்தது என்பதற்காக மாணவன் உயிரை மாய்த்துக்கொள்வானா, தன்னுடைய பெற்றோரின் பாசத்தையும் பரிவையும் புரிந்து கொள்ளாமல் கொல்வானா? குவிந்த செல்வங்கள் சிதைந்து பறந்துவிட்டன என்பதைத் தாங்க முடியாமல் முன்னணி தொழிலதிபர்கள் தங்களையே மாய்த்துக்கொள்வதைப் பார்க்கிறோம்.
இரண்டு இரண்டாக வரும் வாழ்க்கையின் பகடைக்காய்கள் உருளும்போது, பள்ளத்தாக்கு சிகரமாகும் சிகரம் தகரமாகும் என்பதை உணர்ந்தால், இந்த வேடிக்கை வாழ்வின் மாறாட்டங்களைக் கண்டு உள்ளம் அஞ்சுமா? அடர்த்தியான இத்தனை எண்ணங்களையும் வண்ணங்களையும் பாட்டுச் சிறகில் ஏந்தி வரும் ஜெய்சங்கர் நடித்த முதல் தத்துவப்பாடலை, நானும் டி.எம்.எஸ்சும் சேர்ந்து அவருடைய இல்லத்தில் ஒரு நாள் கேட்டுக்கொண்டிருந்தோம்....
அப்போது, ஒரு புது கதாநாயகனுக்கான முதல் வெற்றிப்பாடலைக் குறித்து, புன்னகைத்தவாறு தான் பாடிய பாடலைக் குறித்து டி.எம்.எஸ். கூறிய விஷயம் சிந்தனையைத் தூண்டுவதாக
இருந்தது.
(தொடரும்)