அனைவரும் விரும்பி உண்ணும் இறால் முந்திரி பிரியாணி சமையல்

08-03-2020 10:00 AM

தேவைப்படும் பொருள்கள்:

இறால்-500 கிராம், பிரியாணி அரிசி-300 கிராம், பச்சைப்பயறு-50 கிராம், சின்ன வெங்காயம் - 5, இஞ்சி-1 துண்டு, தயிர்-அரை கோப்பை, எண்ணெய்-4 மேசைக் கரண்டி, நெய்-2 மேசைக் கரண்டி, முந்திரிப்பருப்பு-12, மிளகு-1 தேக்கரண்டி, சீரகம்-1 தேக்கரண்டி, கிராம்பு-5, ஏலக்காய்-5, பட்டை-2, மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி, உப்பு-தேவையான அளவு.

தயாரிக்கும் முறை

வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். மிளகையும் சீரகத்தையும் தூளாக்கிக் கொள்ளுங்கள். அரிசியையும் பச்சைப் பயறையும் தனித்தனியாகக் கழுவி நீரை வடிய விட வேண்டும்.

இறாலை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மஞ்சள் தூளையும் உப்பையும் மேலே தூவுங்கள். ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து போதிய நீர் விட்டு அடுப்பில் வைத்து வேக விடுங்கள். பாதி வெந்ததும் தயிரை ஊற்றி தொடர்ந்து வேகவிட வேண்டும்.

முந்திரிப்பருப்பை நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து மீதமுள்ள நெய்யையும் எண்ணெயையும் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தையும் இஞ்சியையும் போட்டு வதக்க வேண்டும். அவை வதங்கியதும் அரிசியையும் பச்சைப் பயறையும் போட்டு வறுக்க வேண்டும்.

 பின்னர் போதிய அளவு நீர் ஊற்றி உப்பையும் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு வேகவிடுங்கள். அடுப்பு சிறு தீயாக எரியட்டும்.

அரிசி முக்கால் பங்கு வெந்ததும் மற்றோர் அடுப்பில் இறால் துண்டுகள் வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் அப்படியே கொட்டுங்கள். எல்லாம் நன்கு வெந்ததும் முந்திரிப் பருப்பைப் போட்டு மிளகுத் தூளையும் சீரகத் தூளையும் மேலே தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைத்துச் சுடச்சுடப் பரிமாறுங்கள்.
Trending Now: